Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹலோ...மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ- 3 ( ஆர்.பி.வி.எஸ். மணியன்)

''இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும், மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்'' என்று விவேகானந்தர் கூறியதை படித்த அந்த இளைஞருக்கு, உள்ளம் உணர்ச்சியால் துடித்தது. விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர், அதன்பின் விவேகானந்தரை தேடிப் படிப்பதிலும், அதுபற்றி பிறரிடம் விவாதிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்த அவருக்கு, தமிழக அரசின் வணிக வரித்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், அரசு வேலையில் அவரது கவனம் செல்லவில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகள் அவரை தட்டி எழுப்பின. திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆனநிலையில் வேலையை உதறிவிட்டு, முழு நேரமும் விவகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைக்கும் பிரச்சாரகராக மாறிவிட்டார். அந்த பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன்.

ஒரு மாலை நேரத்தில் தமது பேச்சு அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்.
 
எப்படி பேச்சாளர் ஆனீர்கள்?

பேச்சாளர் ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு இல்லை. அரசு வேலையில் இருந்த போது எனக்கு திருமணம் ஆனது. ஆனால், விவேகானந்தர் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எனவே, திருமணம் ஆன 2 மாதங்கள் கழித்து வேலையை விட்டுவிட்டேன். அப்போது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் இதற்காக நன்கொடை திரட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசி தலா ஒரு ரூபாய் நன்கொடை வசூலிப்போம்.

அப்போது மாணவர்களை திரட்டி, அவர்களின் பள்ளி அல்லது கல்லூரி மைதானத்தில் உரையாற்றுவேன். விவேகானந்தரின் கருத்துக்களை அவர்கள் மத்தியில் பேசுவேன். 1969-ம் ஆண்டிலிருந்து 1972-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவேகானந்தர் பற்றி பல இடங்களில் உரையாற்றினேன்.

தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் உரையாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்... 

1974-ம் ஆண்டு டெல்லியில் 'விவேகானந்தர் கேந்த்ரா' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் சார்பில் வடகிழக்கு மாநிலங்களில் பல முகாம்கள் நடத்தப்பட்டன. அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் உரையாடினேன். 1980-ம் ஆண்டு வரை மாணவர்களிடம் நமது கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசினேன். மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தில்தான் பேசுவேன். எனவே இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பேசியபோது கூட ஆங்கிலத்தில்தான் பேசினேன்.

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரத்தில், விவேகானந்தா கேந்திரம் சார்பில் ஒரு பயிற்சி மையம் இருந்தது. அதில், பல்வேறு மாநில மாணவர்கள் பயிற்சி பெற்றனர். அதில் நானும் பங்கேற்றேன். அப்போது வெளிமாநில மாணவர்களுடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். என்னால் அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேச முடிந்தது. இப்படித்தான் என்னுடைய ஆங்கிலத்திறனை வளர்த்துக்கொண்டேன்.

தமிழக மேடைகளில் சந்தித்த சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கிறதா?


தமிழகத்தில் 1980-ம் ஆண்டு முதல் வி.எச்.பி. அமைப்பின் சார்பில் பேசி வருகிறேன். பெரும்பாலும் மதமாற்றம் குறித்தும், தீண்டாமை குறித்தும், சமூக வாழ்வியல் குறித்தும் பேசியிருக்கின்றேன். தக்கலையில் 1970-ம் ஆண்டு பேசியபோது, இந்துக்கள் தங்கள் தாய் மதத்துக்கு திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினேன். அந்தக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது. வேம்பத்தூரிலும் இதுபோல எனது பேச்சுக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பொதுவாக இதுபோன்று பொது இடத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு, நாங்கள் சார்ந்த அமைப்புகளைத் தவிர, நான் என்ன பேசுகிறேன் என்பதைக் கேட்பதற்காக எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள்தான் பெரும் எண்ணிக்கையில் வருவார்கள். நான் பேசும்போதை எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். இதனால் பல இடங்களில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதனைத் தவிர்பதற்காக பெரும்பாலும் நான் அரங்க கூட்டங்களிலேயே கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

பேச்சுக்காக உங்களை எப்படி தயார் செய்துகொள்கிறீர்கள்?


பேச்சுக்கான தகவல்களை திரட்டுவதற்கு அதிக நேரம் செலவிடுகின்றேன். எனது பேச்சில் நான் சுட்டிக்காட்டும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவன். அதற்கான புத்தகங்கள், மேற்கோள்களை முன்கூட்டியே சேகரித்து விடுவேன். முக்கியமான விஷயங்களை பேசும் போது அதில் தவறு இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். 

உங்களைக் கவர்ந்த பேச்சாளர்  யார்?

இலக்கியம், அரசியல், ஆன்மீகம் என அனைத்து தளங்களிலும் பேச்சாளர்களின் உரைகளை ரசித்துக்கேட்பேன். அனைத்துமே எனக்குப் பிடித்தமானவைதான். தலைமை செயலகத்தில் நான் அரசுப் பணியில் இருந்த போது என்னைவிட சீனியராக இருந்தவர், புலவர் கீரன். அவருக்கு சொந்த ஊர் ஶ்ரீரங்கம். அங்கு அவர் ராமாயணம் தொடர் சொற்பொழிவு நடத்துவார். அவரது பேச்சு என்னை கவர்ந்த ஒன்று. அவரை சென்னையில் பேச வரும்படி அழைத்தேன். ஆனால் முதலில் அவர் வரத்தயங்கினார்.

1968-ம் ஆண்டு அவரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்து பேச வைத்தேன். முதல்நாள் சொற்பொழிவுக்கு 200 பேர்தான் வந்தனர்.

சொற்பொழிவு முடியும் நாளில் ஆயிரம் பேர் வந்தனர். சென்னையில் அவர் பேசியதன் விளைவாக அவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. அரசு வேலையை விட்டு விலகி முழு நேரப் பேச்சாளராகவே மாறிவிட்டார்” என்று புன்னகையுடன் முடிக்கிறார் ஆர்.பி. வி.எஸ் மணியன்.

இந்து அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோதும், இந்து மதத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி வரும் மணியன், கோவில்களில் பால் அபிஷேகம் செய்வதைப் பற்றி இன்றும் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். பாலாபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படும் பாலை எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே என்கிறார்.

அறிவுசார்ந்த ஆன்மீகம் என்பதே தமது கருத்து என்றும் அவர் வலியுறுத்துகிறார். ராமாயணத்தில் ராமன், சீதையை தீக்குளிக்க சொல்லவில்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார். பலர் நிறைந்த சபையில் சீதையை அவமானப்படுத்தியது ராமன் என்றும் அதிரடிக் கருத்துக்களை மேடையில் கூறி வருகிறார். ஆச்சர்ய மனிதர்தான் இந்த பேச்சாளர்!

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்; சதானந்த்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ