Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மன்மோகன் பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்பு! ( அணு உலை அரசியல்- 13 )

‘அதிகாரபூர்வ மற்றும் தாராளவாத அறிவியல் என்பது எப்போதுமே ஊதிய அடிமைத்தனத்தையே பாதுகாக்கிறது’ - லெனின்
 
கூடங்குளம் அணு உலை பிரச்னை மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்த சூழலில், அதனை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தரவில்லை. போராட்டக் களத்தில் இருந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் அணு உலை குறித்து தினமும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

அணு உலைக்கான ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே உருவாக்கப்பட்டபோது, அணு உலையில் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை ரஷ்யாவே வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பின்னர் இதில் மாற்றம் செய்து ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இழப்பீட்டு தொகையை ரஷ்ய நிறுவனம் வழங்காது என முடிவு செய்யப்பட்டது. இந்த விவரங்களை எல்லாம் மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் போராட்டக் குழுவினர் வெற்றி பெற்றனர்.

ஏற்கெனவே, போபாலில் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தால் அந்த பகுதி மக்கள் உயிரிழப்பையும் நிரந்த ஊனங்களையும் இப்போது வரையிலும் சந்தித்து வரும் சூழலில், அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்காத நிலையில், கூடங்குளம் அணு உலை தொடர்பான இந்த விவரங்களை சாமான்ய மக்கள் விவாதிக்க தொடங்கினார்கள். அத்துடன், அணு உலைக்கான பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்கள் தரமற்றவை என்கிற ‘பகீர்’ குற்றச்சாட்டை போராட்டக் குழு கிளப்பியது.

அது மட்டும் அல்லாமல் கட்டுமானப் பணிகளில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் தரமற்ற கட்டுமானம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. இவற்றுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அணு உலை நிர்வாகத்தினர், ‘இவை அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு’ என்று மட்டுமே சொன்னார்கள். இந்த சூழலில், அறிவியல் அறிஞர்கள், பேராசியர்கள் மற்றும் நிலத்தியல், கடலியல், சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய 21 பேர் கொண்ட வல்லுனர் குழுவை போராட்டக்குழு அமைத்தது.

எந்த அமைப்புகளையும் சாராத சுயச்சார்பு கொண்ட இந்தக் குழுவானது, அணு உலைக்குள் சென்று அங்குள்ள கட்டுமானம், அணு உலை அமைக்கும் பணிகள், அதில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அணு உலை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் குழுவினர் சென்று உண்மை நிலையை கண்டறிந்து, ‘அணு உலை பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு அவரவர் வேலைகளுக்கு செல்லத் தயார் என போராட்டக்காரர்கள் பகிரங்க சவால் விட்டார்கள். ஆனால், மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

மக்களின் அச்சத்தை போக்குவதற்காகவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் மத்திய, மாநில, அரசுகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் விஞ்ஞானியான முத்துநாயகம் தலைமையில் 15 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. தமிழக அரசின் குழுவில் ஆறு பேர் இடம்பெற்றனர். இதில், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி.யான விஜயேந்திர பிதரி, அரசின் பிரதிநிதியாக தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ், யாக்கோபுரத்தை சேர்ந்த தங்கராஜ், போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த இரு குழுக்களும் 2011 நவம்பர் 8-ம் தேதி சந்தித்தது. மத்திய வல்லுனர் குழுவைச் சேர்ந்த 10 பேர் பங்கேற்றனர். மாநில அரசு அமைத்த குழுவில் இடம்பெற்று இருந்த தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இவான் அம்புரோஸ், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ‘அணு மின் உலையை குறித்து எனக்கு எதுவும் தெரியாத நிலையில் இந்த குழுவில் இடம்பெறுவது சரியாக இருக்காது. அத்துடன், என்னிடம் கேட்காமலே என்னை குழுவில் சேர்த்துவிட்டார்கள். அதனால் குழுவில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என அவர் கடிதம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால், அவரது விலகலுக்கு மத்திய அரசின் நெருக்கடியே காரணம் என அப்போது பேசப்பட்டது. அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பாதிரியார்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அத்துடன், தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்க சென்ற குழுவிலும் ஆயர்கள், பாதிரியார்கள் இடம் பெற்று இருந்தார்கள். தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் பாதிரியார்கள் இந்த போராட்டங்களில் பங்கெடுப்பதை மத்திய அரசு விரும்பாததால், டெல்லியில் உள்ள போப்பின் தூதரகம் மூலமாக நெருக்கடி கொடுத்து, ஆயரான இவான் அம்புரோஸை இந்த குழுவில் இருந்து விலக வைத்ததாக பேச்சுக் கிளம்பியது.

இது தவிர, தமிழக அரசின் குழுவில் இடம் பெற்ற தங்கராஜ் என்பவர் எப்படி சேர்க்கப்பட்டார் என்பது புரியாமல் போராட்டக் குழுவினர் குழம்பினர். அணு உலை குறித்து எதுவுமே தெரியாதவரும், 10வது வரை படித்தவருமான அவர் எப்படி சேர்க்கப்பட்டார் என்பதும் விவாதத்துக்கு உள்ளானது. மத்திய, மாநில அரசுகளின் குழுக்கள் சந்தித்தபோது, போராட்டக் குழுவை சேர்ந்த புஷ்பராயன், அணுக் கதிர்வீச்சு தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்கள், அணு உலை குறித்த அச்சங்கள், வாழ்வாதாரப் பிரச்னைகள் என மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை 50 கேள்விகளாக தொகுத்து கொடுத்து எழுத்துப்பூர்வமாக பதில் தருமாறு கேட்டனர்.

அத்துடன், விபத்து இழப்பீடு தொடர்பான சந்தேகங்கள் இருப்பதால் இந்தியா-ரஷ்யா இடையேயான ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன? என்பதையும் கேட்டனர். அத்துடன், மத்திய வல்லுனர் குழுவினர், போராடும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் சந்தேகத்தை போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், மக்களின் சார்பாக அமைக்கப்பட்ட 21 பேர் கொண்ட வல்லுனர் குழுவினரையும் மத்தியக் குழு சந்தித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த இரு குழுக்களும் மூன்று முறை சந்த்தித்து பேசியது. ஆனால், போராட்டக் குழுவின் கோரிக்கைகள் எதுவுமே ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. மத்திய வல்லுனர் குழுவினர், ‘அணு உலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாட்டு நலனுக்கு அணு உலை அவசியமானது’ என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தனரே தவிர, போராடும் மக்களை சந்திக்கவோ, அவர்களின் சந்தேகங்களை போக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு சென்றார். அங்குள்ள அணு உலைகளை பார்வையிட்டார். அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய மன்மோகன் சிங், "ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் அமைக்கப்பட்டு வரும் அணு உலை தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. அணு உலைக்கு அருகில் வசிக்கும் மக்களை ஒரு சிலர் சுயநலத்துக்காக தூண்டி விடுவதால் சிறிய சலசலப்புகள் ஏற்படுகிறதே தவிர, உண்மையில் போராட்டமே நடக்கவில்லை. அணு உலைப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் இன்னும் இரு வாரத்தில் அணு உலை செயல்படத் தொடங்கும்" என்று அதிரடியாக பேசி கைதட்டலை வாங்கினார்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? அணு உலையில் சோதனை ஓட்டமே முழுமையாக நடந்து முடிக்கப்படவில்லை. இந்திய அணு சக்தி வாரியம் அணு உலையை இயக்க ஒப்புதல் அளிக்கவில்லை. அதனையும் மீறி, சர்வதேச அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இவை எல்லாம் நடக்கவே பல மாதங்கள் ஆகலாம் என்கிற சூழலில், பிரதமரின் இந்த பேச்சு முழுப்பூசணியை கட்டுச்சோற்றுக்குள் மறைப்பது போலவே அமைந்து இருந்தது.

போராடும் மக்களிடம், பிரதமரின் பேச்சு கடுமையான அதிருப்தியை உருவாக்கியது. இங்குள்ள அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை நாள்தோறும் பேசி வந்தார்கள். அதனைக் கூட போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நெருக்கடி காரணமாக அதிகாரிகள் ஆளாளுக்கு தவறான தகவலை பரப்புகிறார்கள் என விட்டு விட்டார்கள். ஆனால், ஒரு நாட்டின் பிரதமரும், மிகுந்த மரியாதைக்கும், கௌரவத்துக்கும் உரிய நிலையில் இருப்பவர் வெளிநாட்டுக்கு சென்று பொய் பேசுவதை ஏற்கும் மனநிலை மக்களுக்கு இருக்கவில்லை.

‘இந்த விஷயத்திலேயே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் பொய்யான தகவலை சொன்னால், வருங்காலத்தில் ஒருவேளை அணு உலையில் ஏதாவது விபத்து அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் உண்மையை எப்படி வெளியே சொல்வார்கள்’ என அஞ்சினார்கள். இந்த அச்சம் அவர்களின் போராட்ட உணர்வை மேலும் தூண்டுவதாக அமைந்தது. பிரதமரின் பேச்சை கண்டித்து இடிந்தகரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

போராட்டத்துக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், அதனை முறியடிக்கும் முயற்சியில் அணு உலை நிர்வாகமே களம் இறங்கியது. இதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு நடைபெற்றதாகக் கூட விமர்சனங்கள் எழுந்தன. அணு உலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பலன் அளித்தது என்பது பற்றி அடுத்த வாரம் விரிவாக பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன் 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close