Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சியரை சந்திக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! (அணு உலை அரசியல்: தொடர் -14)

‘அறிவியல் என்பது பத்துக்கும் அதிகமான சிக்கல்களை உருவாக்காமல் தனிப்பட்ட ஒரு சிக்கலுக்கான விடையை எப்போதுமே தீர்ப்பது கிடையாது!’ - அறிஞர் பெர்னாட்ஷா

அணு உலையை விரைவாக திறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிய அணு மின் கழக அதிகாரிகள், பல்வேறு நகரங்களுக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் அணு சக்தியின் அவசியம் குறித்தும், அதனால் அச்சம் எதுவும் கிடையாது என்பது பற்றியும் விளக்கங்கள் கொடுத்தனர். அங்கு மாணவர்களால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் சூழலும் உருவானது.

இதனால் அணு உலைக்கு ஆதரவான அமைப்பு, கூட்டமைப்பு, இயக்கம் என்கிற பெயர்களில் நாள்தோறும் புதிய இயக்கங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்த இயக்கங்களை ஆரம்பித்து, அரசுக்கு ஆதரவான கருத்துக்களை பரப்பு, குழுக்களுக்கு அணு உலை நிர்வாகம் மறைமுக உதவிகளை செய்தது. இந்த இயக்கங்கள் மக்களிடம் செல்வாக்கு கொண்டவையாகவோ அல்லது மக்களால் ஆரம்பிக்கப் பட்டதாகவோ இருக்கவில்லை.

சென்னையை சேர்ந்த நபர்கள் அல்லது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே இதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்களால் மக்களை திரட்டி அணு உலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்த இயலவில்லை என்கிற போதிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ‘அணு உலையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய வேண்டும்' என்கிற கோரிக்கை மனுக்களை அளித்து குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், இதற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

அதனால், அடுத்த அஸ்திரமாக தொண்டு நிறுவனங்களை மிரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய உள்துறை அதிகாரிகள் குழு, நெல்லையை சுற்றிலும் உள்ள சில தொண்டு நிறுவனங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது. தூத்துக்குடி கத்தோலிக்க பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் இயங்கும் பல்நோக்கு சமூக சேவை சங்கம், போராட்டக் குழுவை சேர்ந்தவரான புஷ்பராயனின் கடலோர மக்கள் கூட்டமைப்பு, கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம், மக்கள் கரங்கள் உட்பட ஆறு தொண்டு நிறுவனங்களில் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இதிலும் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் குழு ஏமாற்றத்துடனேயே திரும்பியது.

ரஷ்யா சென்ற அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், அங்கு செய்தியாளர்களிடம்,  "இரு வாரங்களில் அணு உலை செயல்பட ஆரம்பித்துவிடும்" என்று சொன்னதை தமிழக அரசும் குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவும் ரசிக்கவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட அவர், பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், ‘மக்களின் அச்சத்தை போக்குவதற்கு முன்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது’ என குறிப்பிட்டார்.

"அணு மின் நிலையத்தை திறப்பதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் மத்திய அரசே நேரடியாக களத்தில் இறங்கிவிட்டது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் கிடைக்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி அசிங்கப்படுத்தும் முயற்சியே இது" என வெடித்துக் குமுறினார்கள், போராட்டக்காரர்கள். போராடும் மக்களை பார்த்து, அணு சக்தி கழகமும் மத்திய அரசும் பயப்படுவதால் ஏற்படும் விளைவு இது என போராட்டக்காரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

போராட்டக் குழுவினர் நடத்தும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிய நிலையில், பெருமளவு செலவு செய்து அணு உலைக்கு ஆதரவாக நடத்தப்படும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் சொற்ப எண்ணிக்கையிலேயே மக்கள் கூடினார்கள். இந்த ஆத்திரத்தில்,  மத்திய அரசு தங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கொந்தளிப்புடன் பேசியது,  வெகுஜன மக்களை சிந்திக்க தூண்டியது.

அணு உலையை திறப்பதற்கு முன்பு,  பாதுகாப்பு விளக்கங்களை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து போராட்டக்காரர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், அணு உலை நிர்வாகத்திடம் இருந்து எந்த பதிலும் வந்தபாடில்லை. போராட்டத்தை ஒடுக்குவதில் அணு உலை நிர்வாகமும், அணு உலையை மூட வேண்டும் என்பதில் போராட்டக்காரர்களும் தீவிரம் காட்டினார்களே தவிர, ஒருவரும் எதற்கும் சமரசமாக நினைக்கவே இல்லை.
 
இந்த நிலையில், சென்னை மற்றும் காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அபோதைய பிரதமர் மன்மோகன்சிங் தமிழகம் வந்தார். அவரது தமிழக பயணத்துக்கு அரசியல் கட்சியினரிடம் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த இடிந்தகரை போராட்டக் களத்திலும், அவரது வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியது.

அணு உலை விவகாரத்தில் ரஷ்யாவில் கருத்து தெரிவித்த பிரதமரின் தமிழக வருகையை கண்டித்து, கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் கண்டன பேரணி நடத்தினர். கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பேரணியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். அத்துடன், குழந்தைகள் சார்பில் பிரதமருக்கு மனு அனுப்பப்பட்டது. அதில், ‘உங்களது 30, 40 வருட மின் தேவைக்காக எங்களுடைய வருங்காலத்தை சீரழிக்க முடிவு செய்திருப்பது எந்தவகையில் நியாயமானது?’ என மிகவும் உருக்கத்துடன் பிரதமருக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கிடையே அணு உலை போராட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட மக்கள் மட்டும் அல்லாமல்,  வெளியூர்களை சேர்ந்த சிலரும் முழு ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். குறிப்பாக நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கும் போராட்டம், பெருந்துறையில் பன்னாட்டு குளிர்பான நிறுவனம் தொடங்க இருந்ததை எதிர்த்து நடந்த போராட்டம் உள்ளிட்டவற்றில் முன்னின்று பங்கெடுத்த சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் போராளியுமான முகிலன், அணு உலைக்கு எதிரான இந்த போராட்டக் களத்தில் பங்கேற்றார்.

அவரது ஆர்வமும், தன்னலமற்ற போராட்ட யுக்தியும் போராட்டக்காரர்களிடம் கூடுதல் உத்வேகத்தை கொடுத்தது. அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்க வைப்பதாக அவரது செயல்கள் அமைந்தன. அதனால், வெகு விரைவிலேயே அவரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ஆக்கப்பட்டார். போராட்டக் களத்தில் அவரது பங்கேற்பும் அணு உலை நிர்வாகத்துக்கு பெரும் சவாலாகிப் போனது.
 
இந்த நிலையில், அணு உலைக்கு ஆதரவான குழுவினர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர். அவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு நெருக்கடியாக அமைந்தது. அதனால் போராடும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்த திட்டமிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இடிந்தகரையில் இருந்து பெண்களும், அவர்களோடு சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோரும் வந்தனர்.  அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கியதும், தயாராக காத்திருந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் அவர்களை பாய்ந்து வந்து தாக்கத்துவங்கினர்.

ஒருவர் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் முகிலனின் தலையை குறிவைத்து தாக்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் குனிந்து கொண்டதால் தலை தப்பியது. வேறு சிலர் காலால் உதைத்தனர். என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பாக காரில் இருந்து இறங்கிய புஷ்பராயனை, காரின் கதவை வைத்து இறுக்கி முச்சுத்திணறச் செய்தனர்.

இந்த செயல்களை எல்லாம் முன்கூட்டியே உளவுத்துறை கவனிக்கவோ, கண்டுகொள்ளவோ இல்லை. அத்துடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்காக நின்ற காவல்துறையினரும், இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்து, இடிந்தகரை பெண்கள் மட்டுமே அரணாக நின்று சுப.உதயகுமாரனை அந்த கும்பல் நெருங்கவிடாமல் தடுத்தனர். இதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்து வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்டோர் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்திய அளவில் இந்த விவகாரம் பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது.

இத்தகைய களேபரங்களுக்கு மத்தியில், அணு உலை குறித்து மக்களின் அச்சத்தை தீர்ப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட முத்துநாயகம் தலைமையிலான வல்லுநர் குழு, 'கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. அணு உலையில் சிறிய விபத்து நடப்பதற்கு கூட வாயப்பே கிடையாது' என்கிற கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், போராட்டக் குழுவினரால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவினர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான லால்மோகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. அத்துடன், மத்திய வல்லுநர் குழுவானது அணு உலையால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது.

அதிலும் குறிப்பாக இந்த குழுவில் இடம் பெற்று இருக்கும் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவ வல்லுநரான டாக்டர் சாந்தா, இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது வேதனை தருகிறது.

யுரேனியத்தில் இருந்து வெளியேறும் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சால் கேன்சர் வரும் என்பது அவருக்கு தெரிந்திருந்தும், எதற்காக இப்படி ஒரு கருத்தினை சொன்னார் என்பது புரியவில்லை. அத்துடன், கதிர்வீச்சை கண்டுபிடித்த மேரிகியூரி கூட அதே கதிர்வீச்சு பாதிப்பால் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததை டாக்டர் சாந்தா எப்படி மறந்துபோனார்?" என காட்டமாக தெரிவித்து இருந்தார்.  

இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில்,  அணு உலை நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக அப்துல் கலாமை இந்த விவகாரத்தில் களம் இறக்கியது. கூடங்குளம் அணு உலைக்கு நேரில் வந்தார் அப்துல் கலாம்.

அதன் பின் நடந்தது என்ன? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன் 

 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close