Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹலோ... மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ- 4 (தீப்பொறி ஆறுமுகம்)

துரை ஆரப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழக அரசைப் பற்றியும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பற்றியும் மேடையில் பேசிவிட்டு, சைக்கள் ரிக்‌ஷாவில் இரவு 10.30 மணிக்கு வீட்டுக்குச் செல்கிறார் அந்த பேச்சாளர். தங்கம் தியேட்டர் வழியே ரிக்‌ஷா சென்று கொண்டிருக்கிறது. ரிக்‌ஷா ஓட்டுனர் அந்த பேச்சாளரின் உறவினர். எனவே, அவரிடம் சொந்த விவகாரங்களைப் பற்றி பேசியபடி செல்கிறார்.

அப்போது திடீரென எதிர்திசையில் ஒரு கும்பல் வருகிறது. எதிர்முகாமை சேர்ந்த ரவுடிக்கும்பல் என்று பேச்சாளருக்குத் தெரிந்து விடுகிறது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், 'இறங்குடா...' என்று ஒருமையில் கூப்பிட்டபடியே அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்குகின்றனர். உருட்டுக்கட்டைகளால் அவரை தாக்கியவர்கள் ஒரு கட்டத்தில், அவரது வாயிற்குள் கையை விட்டு நாக்கை இழுத்து அறுக்க முயற்சிக்கின்றனர்.

அப்போது, அந்த பேச்சாளருக்கு எங்கிருந்துதான் அந்த சக்தி வந்ததோ  தெரியவில்லை. தமது நாக்கை பிடித்து இழுந்தவர்களை பலமாக ஓங்கித்தள்ளிவிட்டு, நாக்கை உள் இழுத்துக்கொள்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அந்தப் பேச்சாளரின் முகத்தில் பலமாகத் தாக்கியது. இன்னமும் அந்த தழும்பு  ஆறவில்லை.

தழும்பை சுட்டிக்காட்டியபடி நம்மிடம் பேசுகிறார் அதிரடிக்கு பெயர் போன தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம். அவரது மேடைப்பேச்சைக் கேட்க இளைஞர்கள் திரண்டு வருவார்கள்.

உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த பேச்சாளர் எப்போது வெளிப்பட்டார்?

மதுரை மேலச்சித்திரை வீதியில் அன்னக்குழி மண்டபம் என்று ஒன்று இருக்கிறது. அந்தக் காலத்தில் அங்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. நான் அந்த காலத்தில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். வறுமை காரணமாக மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை. வேலையின்றி சும்மா இருந்தபோது, நாளிதழ்களில் அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை படித்துத் தெரிந்து கொள்வேன். நாளடைவில் எனக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.

மதுரையில் தெருமுனைகளில் நடக்கும் கட்சிக்கூட்டங்களில் தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்கச் சென்று விடுவேன். அப்போதுதான் உள்ளூர் தி.மு.க.வினர் மத்தியில் அறிமுகம் கிடைத்தது.

எனது 23-வது வயதில், மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், சமயநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் கூட்டங்களில் பேச்சாளராக அறிமுகம் ஆனேன். நமக்கு முன் மேடையில் பேசியவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என கவனிப்பேன். இப்படியே 5 வருடங்கள் போனது. 1967-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி,  தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக விழுப்புரம் சென்றேன். விழுப்புரத்தில் மந்தக்கரை மைதானத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணா விடியற்காலை 3 மணிக்குத்தான் வந்தார். எனவே அதற்கு முன்பாக, நான் உட்பட பல பேச்சாளர்கள் காங்கிரஸ் ஆட்சி பற்றி விமர்சனம் செய்து பேசினோம். அண்ணா பங்கேற்க உள்ள மேடையில் பேசியது எனக்கு பெருமையாக இருந்தது. எனது பேச்சுக்கு கட்சிக்காரர்கள் ரூ.100, ரூ.200 என பணம் கொடுப்பார்கள். எனது குடும்பத்தின் வறுமை கொஞ்சம் மாறியது.

இந்திரா காந்திக்கு எதிராக கடுமையாக பேசினீர்களாமே?

ஆமாம். 1976ல் மிசா சட்டம் அமலுக்கு வந்த போது, மு.க.ஸ்டாலின் உட்பட 135 பேரை கைது செய்தனர். என்னையும் கைது செய்தனர். 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்தனர். அப்போதும் மிசா சட்டம் அமலில் இருந்தது. மிசா காலத்தில் தெருக்களில், மைதானங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேச முடியாது. எனவே, மணப்பாறை இந்திரா திரையரங்கில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் நான், பிரதமர் இந்திரா காந்தியை கடுமையாக தாக்கிப் பேசினேன். பேச்சுரிமை, எழுத்துரிமையை அடக்க முடியாது என்று கூறினேன். இந்த கூட்டம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். விடுதலை பெற்று வந்த சில நாட்களிலேயே, மீண்டும் 6 மாதங்கள் சிறையில் இருந்தேன்.

எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் ஆகியோரை விமர்சித்து பேசியதற்காக தி.மு.க.வில் இருந்தே சஸ்பெண்ட் ஆனீர்களாமே?

ஆமாம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பற்றி விமர்சனம் செய்து பேசினேன். எனது பேச்சு அப்போது 'துக்ளக்' இதழில் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே, என்னை தி.மு.க.வில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார்கள். இன்னொரு முறை ரஜினிகாந்த் பற்றி பேசினேன். அவர் அடிக்கடி, 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு..!' என்று பேசுவார். இது குறித்து நான் மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்தேன். இதுவும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. மீண்டும் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். இந்த விமர்சனங்கள் காரணமாக கலைஞர் கருணாநிதி என்னை கண்டித்தார். 'கை தட்டுறவன் தட்டிட்டுப் போய்டுவான்... பேசுறதுக்கு உனக்குக் கட்டுப்பாடு வேண்டாமா? பார்த்து நிதானமா பேசு!" என்று அறிவுறுத்தினார்.
 
'புரிஞ்சவன் புரிஞ்சுக்க... புரியாதவன் எங்கிட்டாச்சும் போ' என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் ஆபாசமாக பேசுகிறீர்கள் என்று உங்கள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறதே?

நான் உண்மையில் சீரியஸ் பேச்சாளராகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். எதிர் அணியின் தலைவர்களைக் கடுமையாக தாக்கிப் பேசுவேன். விமர்சனங்களை முன் வைப்பேன். 35 வயதுக்குப் பிறகு என்னுடைய பேசும் பாணியை மாற்றினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நகைச்சுவை கலந்து மக்களுக்குப் பிடிப்பது போல பேசினேன். எனக்கு திரைப்படம் பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அனைத்து திரைப்படங்களையும் விடாமல் பார்த்து விடுவேன். திரைப்படங்களில் வரும் ஜோக்குகளை வைத்து மேடையில் கூடுதலாக கொஞ்சம் நகைச்சுவையாக பேசுவேன்.

என்னுடைய பேச்சு முடியும் வரை பார்வையாளர்கள் கூட்டத்தில் இருப்பார்கள். என்னுடைய பேச்சு அவர்களுக்கு பிடித்திருந்தது. பெண்களுக்கு என் பேச்சு பிடிக்கவில்லை என்று கூறமுடியாது. இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு திரைப்படம் வந்த சமயம். முருங்கைக்காய் குறித்த நகைச்சுவையை மேடைதோறும் பேசினேன். என் கூட்டத்துக்கு வரும் பெண்கள் இதனை விரும்பி ரசித்தனர். இதனால் அந்த காலத்தில் முந்தானை முடிச்சு கதை வசனம் வந்த கேசட்டுகள் அதிகமாக விற்பனை ஆயின. பாக்யராஜே என்னிடம் இது குறித்து சொல்லியிருக்கிறார். 'நீங்கள் மேடையில் பேசியதால் முந்தானை முடிச்சு கேசட் அதிகமாக விற்பனை ஆனது' என்றார். என் பேச்சை கேட்கும் பார்வையாளர்கள்,  விசில் அடித்து உற்சாகப்படுத்துவார்கள். இது போன்ற என் பேச்சுக்களுக்கு பார்வையாளர்கள் கைதட்டி, கைதட்டி என்னை உசுப்பேற்றி விட்டனர்.

உங்களால் மறக்க முடியாத மேடை பேச்சு என்பது எது?

18 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, என்னை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேச வருமாறு கூப்பிட்டார். இதுவரை அப்படி ஒரு கூட்டத்தில் பேசியதில்லை. தலைப்பு என்ன என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் தலைப்பு சொல்லவில்லை. 'கடைசி நிமிடத்தில்தான் தலைப்புக் கொடுக்கப்படும்' என்றார். சரி நமக்கு பேச்சு என்பது புதிதல்ல என்பதால் வருவதாகச் சொன்னேன். அதன்படி கூட்டத்துக்குச் சென்றேன். மைக் முன்பு நிற்கும் போதுதான், சாலமன் பாப்பையா என்னிடம் தலைப்பைச் சொன்னார். 'பேசும் கலை வளர்ப்போம்' என்பதுதான் அந்த தலைப்பு. அந்த தலைப்பில் மாணவர்கள் மத்தியில் ஒன்றரை மணி நேரம் பேசினேன். மாணவர்கள் எனது பேச்சை கைதட்டி வரவேற்றனர். இந்த பேச்சைக் குறிப்பிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா என்னைப் பாராட்டினார். அவர் மாணவராக இருந்தபோது அந்த கூட்டத்துக்கு வந்திருந்ததாகக் கூறினார். எனது இந்த பேச்சு பல மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மேடை பேச்சுக்காக உங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?

என் மீது ஜெயலலிதா ஆட்சியில் 18 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது அவை வாபஸ் பெறப்பட்டன. திருப்பூர், தாராபுரம், கோவை ஆகிய இடங்களில் நான் பொதுக்கூட்டங்களில் பேசியபோது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மட்டும் இப்போது நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. தாராபுரத்தில் வழக்கு ஒன்றுக்காக ஆஜர் ஆகிவிட்டு , நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தேன். என் மீது இன்னொரு வழக்கு இருப்பதாகச் சொல்லி போலீசார் என்னை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

தி.மு.க.வில் இருந்து அதிருப்தி காரணமாக திடீரென அ.தி.மு.க.வுக்கு போனீர்களே?

ஆமாம். என் மகன், மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தான். அவனுக்கு ஒரு வேலை கொடுங்கள் என்று கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இடையில் சிலர் புகுந்து அதைத் தடுத்து விட்டனர். இதனால் அதிருப்தியில் கட்சியில் இருந்து வெளியேறி, அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். ஆனால், அ.தி.மு.க.வில் மேடைப்பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேடைகளில் குத்தாட்டம் போட்டார்கள். இதனால் எனக்கு மேடை வாய்ப்புகளும் அவ்வளவாக இல்லை. எனவே மீண்டும் தி.மு.க.வில் இணைந்து விட்டேன். அ.தி.மு.க எனும் சிறையில் இருந்து அப்போது விடுதலை பெற்றது போல உணர்ந்தேன்.

உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார்?

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆகியோரின் பேச்சுக்கள் எனக்கு பிடிக்கும். நன்னிலம் நடராஜன் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். சிங்காரம் சடையப்பன், கவிதை நடையில் பேசுவதில் சிறந்தவர். கடையநல்லூர் திராவிட மணி, சென்னை குடியரசு என பல பேச்சாளர்களின் பேச்சுக்கள் என்னை கவந்தன.

இப்போது மேடை பேச்சு என்பது எப்படி இருக்கிறது?

இப்போது தொலைகாட்சி, ஸ்மார்ட் போன் என்று வந்து விட்டதால் ரசனை மாறி விட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடத்தினால் மட்டுமே பார்வையாளர்கள் அதிக அளவில் வருகின்றனர். இப்போதும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்கின்றேன். கடந்த 31-ம் தேதி கூட சின்னாளபட்டியில் பேசினேன். சிலர் எனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், என்னால் பேச முடியாது என்றும் வதந்தியைப் பரப்புகின்றனர். எனக்கு 76 வயதாகிறது. மது, சிகரெட் என்று எந்த கெட்டபழக்கமும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கின்றேன். மேடையில் நீண்ட நேரம் சளைக்காமல் என்னுடைய பாணியில் பேசி வருகின்றேன்.

- கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ