Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணு உலைக்கு ஆதரவாக அப்துல் கலாம்; அணு உலை அரசியல் (தொடர்-15)

றக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. ஆகவே அந்த கனவோடு, நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய முடியும்!

- ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் வலுத்து வந்ததுடன், போராட்டக் குழு வினருக்கு ஆதரவாக நடுநிலையாளர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள், முன்னாள் அணு விஞ்ஞானிகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவுக்குரல் கொடுத்து வந்தனர். இதற்கிடையில், உண்ணாவிரதப் பந்தலில் சுற்றுப்புறங்களை சேர்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து தினமும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நிலையை மாற்றிய போராட்டக் குழுவினர், ‘நாள்தோறும் ஒரு கிராமம்’ என்னும் அடிப்படையில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களை திரட்டி அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர்.

கேரளாவிலிருந்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கலகக் குரல் கேட்கத் தொடங்கியது. அந்த மாநிலத்தின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் பகிரங்கமாக இந்த அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். திருவனந்தபுரத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி கேரள அரசை இந்த விஷயத்தில் தலையிட வலியுறுத்தின. தமிழகத்திலும், ‘அச்சுறுத்தும் அணு உலைகள் அவசியம் தானா?’ என்கிற கேள்வி சாமன்ய மக்களிடம் இருந்து எழத்தொடங்கியது.

இத்தகையை நெருக்கடிகள் சூழந்த நிலையில், அணு உலை நிர்வாகம் கடைசி அஸ்திரமாக கையில் எடுத்த விஷயம் அப்துல் கலாம்!

அவரைப் போறுத்தவரை, நாட்டு மக்கள் அனைவரிடமும் அபிமானம் பெற்றவர். அத்துடன், பொக்ரான் அணு குண்டு வெடிப்பை நிகழ்த்தி காட்டி இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறியச் செய்தவர். இளைஞர்கள் மாணவர்களிடம் மிகுந்த மரியாதையை பெற்றவர். சிறந்த மனிதாபிமானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அவரை அழைத்து வந்தால் மட்டுமே இந்த சிக்கலை தீர்ப்பது சுமுகமாக இருக்கும் என நம்பினார்கள்.

அவர் ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானியாக இருந்தபோதிலும் பொக்ரான் அணு குண்டு பரிசோதனையின் போது அவரும் உடன் இருந்ததால் அவரை அணு மின் நிலையத்துக்கு அழைத்து வந்தது நிர்வாகம். அவர் கூடங்குளத்துக்கு அதிகாலை வந்தபோதே அவரது ஒரு பக்க கட்டுரைகள் சில நாளிதழ்களில் பிரசுரமாகி இருந்தது. அதில், அணு உலை மிகவும் பாதுகாப்பானது. எந்த ஆபத்தும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அணு உலையில் இல்லை. அதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்கிற ரீதியில் எழுதி இருந்தார்.

கூடங்குளம் அணு உலையை நேரில் பார்க்காமல் அங்குள்ள தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யாமல் அவரால் எப்படி எழுத முடிந்தது? இப்படி எழுதும்படி அணு உலை நிர்வாகம் ஆலது மத்திய அரசாங்கம் அப்துல்காலாமை நிர்பந்தம் செய்ததா? என அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அவரின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்தனர்.

பின்னர், அணு உலைகள் அமைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு சென்ற அவர், அணு உலையை குளிர்விக்க செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகள், கட்டுமானத்தின் தன்மை, கடலில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் வழிகள், யுரேனியத்தை பாதுகாத்து வைத்திருக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பார்வையிட்டார்.

இடையில் அவருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீரும் வரைக்கும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார். இதற்கிடையில், கூடங்குளத்தை சுற்றிலும் இருக்கும் 17 கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அல்ல. அதிகாரிகளால் அழைத்து வரப்பட்ட சில பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்தார். அவர்கள் அணு உலைக்கு ஆதரவானவர்கள் என்பதால் எந்த சிக்கலும் இல்லாமல் சந்திப்பு முடிந்தது.  கடைசிவரையிலும் போராடும் மக்களை சந்தித்து அவர்களின் சந்தேகத்தை போக்கும் நடவடிக்கையில் மத்திய வல்லுனர் குழு எந்த முயற்சியும் எடுக்காதது போலவே, அப்துல்காலம் வருகையும் அவர்களை சந்திக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

போராட்டக் குழுவினரும் அவரை சந்தித்து தங்களின் சந்தேகங்கள் குறித்து கேட்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரவர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதால், ஓரிரு கிலோ மீட்டர் இடைவெளியில் போராட்டம் ஒருபக்கம் நடந்த நிலையில், அப்துல் கலாம் பயணம் மறுபக்கம் முடிந்தது.

அணு உலையை சுற்றிப் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்திக்க வந்த அப்துல்கலாம், ‘நான் கேள்வி கேட்கட்டுமா? அல்லது நீங்கள் கேட்கிறீர்களா..?’ என்றவாறு அமர்ந்தார். ஆங்கில, மலையாள சேனல்கள் பலவும் பேட்டிக்காக காத்திருந்தன. ஆனால் மிகவும் உற்சாகத்தில் இருந்த அவர் தமிழில் மட்டுமே பேசினார். இடையில் சில ஆங்கில சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுக் கொண்டாலும் அவர் தமிழிலேயே தொடர்ந்து பேசினார்.

‘‘நான் கூடங்குளத்துக்கு இரண்டாவது முறையாக வந்திருக்கேன். இங்கே அமைக்கப்பட்டு வரும் இரு அணு உலைகளும் மூன்றாம் தலைமுறைக்கான பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கிறது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிரூட்டி, செயல் இழந்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தானியங்கி குளிரூட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது தானாக இயங்கி அணு உலைகளை குளிரூட்டும் திறன் பெற்றவை. இந்த பாதுகாப்பு அம்சம் உலகில் வேறு எங்குமே கிடையாது. இந்தியாவில் முதல் முறையாக அதுவும் கூடங்குளத்தில்மட்டுமே இத்தகைய சிறப்பான பாதுகாப்பு அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

எரிபொருள் அதிக வெப்பத்தால் உருகி அதன்மூலம் கதிர்வீச்சு ஏற்பட்டல் என்ன செய்வது? என்பதற்கும் இங்கே நவீன பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதன்படி, ‘கோர் கேட்சர்’ என்கிற சிஸ்டம் உலையின் அடியில் பூமியில் இருப்பதால் அதில் இந்த உருகிய எரிபொருள் சேமிக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும். கட்டுமானமும் மிக உறுதியாக இருக்கு. அதாவது ரெட்டை சுவர் மூலம் அணு உலை அமைக்கப்பட்டு இருப்பதால் எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.

இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்களை நான் பார்வையிட்டதிலும் இங்கிருக்கும் அணு சக்தி வல்லுனர்களிடமும் பேசியதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. முழுதிருப்தியும் சந்தோசமாகவும் இருக்கு. இங்கு வேலை செய்பவர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அணு உலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்றார் திட்டவட்டமாக.

செய்தியாளர்கள் அவரிடம், ‘போராடும் மக்களுக்கும் அரசுக்கு இடையே மீடியேட்டராக இருப்பீர்களா?’ என கேட்டதற்கு, ‘‘அணு உலைப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சயின்டிஸ்ட் டீமை சந்திக்க வந்திருக்கிறேனே தவிர, யாருடனும் சமரசம் செய்து வைக்க நான் வரவில்லை. ஆனாலும் மக்களிடம் எப்படி அச்சம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவர்களின் போராட்டம் வேண்டாத விஷயம். மின்சாரம் என்பது அடிப்படையானது. வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்’’ என்றார்.

‘அணு உலையில் இருந்து கிடைக்கும் அணுக்கழிவை என்ன செய்யப் போகிறார்கள்?’ என அவரிடம் கேட்டதற்கு, ‘‘நியூக்ளியர் வேஸ்ட் எனப்படும் அணுக்கழிவை புதிய திட்டம் மூலம் மறுசுழற்சி செய்து மின் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம். அதன்படி 75 சதவிகித கழிவு மறுபடியும் பயன்படுத்தப்படும். மீதி இருக்கும் 25 சதவிகித கழிவை கடலில் கொண்டு போய் கலக்கப் போவதில்லை. பத்திரமாக பூமிக்கு அடியில் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் ஆறு அணு மின் நிலைய விபத்துக்கள் மட்டுமே ஏற்பட்டு இருக்கு. இந்தியா வில் ஒன்றுகூட நடந்ததில்லை. நெல்லையப்பர் கோவில் கட்டப்பட்டு ஆயிரம் வருடம் இருக்கும். தஞ்சை கோவிலை சோழ மன்னன் கட்டி ஆயிரம் வருடம் ஆகி இருக்கும். இப்போதும் அவை பாதுகாப்பாக இருக்கத்தானே செய்கிறது? கரிகாலன் கல்லணையை கட்டுகையில், வெள்ளம் வந்தால் இடிந்துவிடுமோ, உடைந்து விடுமோ என நினைத்து இருந்தால் அதனை கட்டி இருக்க மாட்டான். நமக்கு கல்லணை கிடைத்து இருக்காது. அதனால் பயப்படக் கூடாது.

கூடங்குளம் பகுதியில் நிறைய அணு உலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது எனது கனவு. இந்தபகுதி முழுவதும் அணு உலை பூங்காவாக மாறி நிறைய அணு உலைகள் அமைக்கப்பட்டு உலகத்துக்கே மின்சாரம் வழங்கும் நிலையை எட்ட வேண்டும். அதன்மூலம் சுற்றுப் பகுதி மக்களின் சந்ததி அருமையாக வாழ வழிவகுக்கும்’’ என்றார் நிறைவாக.
 
இதுதவிர, அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில், ‘இந்தியா ஒரு வல்லரசு நிலையை அடைவதை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் பாமர மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனை இறையாண்மையில் நம்பிக்கை உள்ள எந்த ஒரு இந்தியனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என் தவறான கருத்தை பரப்பி மக்களை அச்சப்படுத்தி வருகின்றனர். அப்படி எதுவும் நடக்காது.

அணு உலை அமைந்துள்ள பகுதியில் பூகம்பம் ஏற்படும் வாய்ப்பே இல்லை என்பதை அணு மின் நிலையை அதிகாரிகள் தெரிவித்தார்கள். அது தொடர்பான அறிக்கைகளையும் என்னிடம் காட்டினார்கள். ஜப்பானில் பூகம்பத்தால் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதை நினைத்து இங்கே பயப்படத் தேவையில்லை. அங்கே அணு உலையானது கடல் மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில் மட்டுமே இருந்ததால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த அணு உலையானது 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை சுனாமி வந்தபோது கூட 9 மீட்டர் உயரம் வரை மட்டுமே அலை வந்துள்ளதால் இங்கே எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 2020&க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். 2030-க்குள் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை அடைய வேண்டும். அதனை இலக்காக வைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்துல் கலாமின் வருகை மற்றும் அவரது வெளிப்படையான அணு சக்திக்கு ஆதரவான கருத்துக்கள் போன்றவை தமிழகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சரவெடியாக பதிலடிக்கு தயாரானது போராட்டக் குழு. அதற்கு ஏற்ற வகையில் திருவனந்தபுரத்தில் அணு உலைக்கு எதிரான கருத்துக்களை கொளுத்திப்போட்டார், சுவாமி அக்னிவேஷ்!
சுவாமி அக்னிவேஷ் என்ன சொன்னார் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close