Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேவரை தியேட்டருக்கு வரவழைத்த வாசன்! ( தமிழ்சினிமா முன்னோடிகள்: தொடர் -14)

ஔவையார்

முருக பக்தர், இந்திய தேசிய போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தென்னிந்திய தலைவர்களில் ஒருவரான அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நண்பராகவும் திகழ்ந்தவர். தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் நிரம்பிய தேவர், ஒரு சினிமாவை விரும்பி பார்த்தார் என்றால் ஆச்சரியம் இல்லையா? ஆம்! முத்துராமலிங்கத் தேவர் பார்த்த சினிமா, ஜெமினி தயாரிப்பில் வெளியாகி பெரும்புகழ் கொடுத்த “ஒளவையார்“.

சந்திரலேகா
வின் வெற்றிக்களிப்பிற்கு  நேர் எதிராக  அமைந்தது,  சந்திரலேகாவுக்கு அடுத்த ஓரிரு மாதங்களுக்குப்பின் வெளியான ஜெமினியின் ஞானசவுந்தரி'. எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதேபெயரில் அப்போது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. காரணம் ஜெமினியின் தயாரிப்பில் நேட்டிவிட்டி விடுபட்டிருந்ததே. தனது திரைப்படம் மக்களிடையே எடுபடாததும், விமர்சனத்திற்குள்ளானதும் எஸ்.எஸ். வாசனை சிந்திக்க வைத்தது.

நேர்மையான முறையில் அந்த தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர், முத்தாய்ப்பாக தனது உதவியாளரை அழைத்து, “ நம் படத்தை மக்கள் ரசிக்காதபோது, இனி எந்த காலத்திலும் இந்தப்படம் திரையரங்கில் வெளியாகக் கூடாது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் எல்லா திரையரங்குகளிலிருந்தும் படத்தை உடனடியாக திரும்பப்பெற்று விடுங்கள்” என உத்தரவிட்டார்.

'ஞானசவுந்தரி' யினால் ஏற்பட்ட தோல்வியை அதே ஆண்டின் (1948) இறுதியில் வெளியான சக்ரதாரி படத்தின் வெற்றியின் மூலமாக மீட்டெடுத்தார். வி.நாகையா, புஷ்பவல்லி, ஜெமினிகணேஷ் நடித்த அந்தப்படம் ஜெமினிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953-ல் ஔவையார் படத்தை வாசன் தயாரித்தார். பொழுதுபோக்கு அம்சங்களால் மக்களை மகிழ்வித்து, படங்களை வெற்றிகரமாக்கி வந்த அந்த நேரத்தில், சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத ஔவையார் வரலாற்றை எடுக்க முனைந்தார் வாசன். ஜெமினி நிறுவனம் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே அடையாளப்படுத்தும் நிறுவனம் அல்ல என்பதுபோல, அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும்படியாக 'ஔவையார்' படத்தை ஒரு வெற்றிப்படமாக்கினார் வாசன்.

'ஔவையார்' படம் ரசிகர்கள், ஆன்மிகவாதிகளை மட்டுமில்லாமல் அதுவரை சினிமா பக்கம் தலைவைத்து படுக்காத பல பெரும் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. 

'ஔவையார்' பாத்திரத்தில் அந்நாளைய நாடக கலைஞரும்' பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளை அவர் தேர்ந்தெடுத்தார். தனது படத்தில் ஔவையாராக கே.பி.எஸ் நடிக்கவேண்டும் என வாசன் ஆர்வப்பட்ட அதே நேரம், தன் கணவரின் மறைவு மற்றும் சொந்த வாழ்க்கை சோகங்களினால் நாடகம் மற்றும் சினிமாவிலிருந்து முற்றாக விலகி ஒதுங்கியிருந்தார் கே.பி.எஸ்.

எதிர்பார்த்ததுபோல அவரை அணுகியபோது ஒரே குரலில் மறுத்துவிட்டார். ஆனால், 'ஔவையார் திரைப்படம் எடுத்தால் அதில் கே.பி.எஸ்.தான் ஔவையார்; இல்லையேல் படத்தை எடுப்பதில்லை' என்பதில் உறுதியாக இருந்தார் வாசன்.

கே.பி.எஸ். பெற்ற 1 லட்சம்

மரியாதைக்குரிய ஒரு தயாரிப்பாளரின் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை. அதே சமயம் நடிக்கவும் விருப்பமில்லை. இந்தநேரத்தில் கே.பி.எஸ். ஒரு உபாயம் செய்தார். 'வாசனின் படத்தில் நடிப்பதற்காக பெரும்தொகை ஒன்றை கேட்போம். அவர் அதிர்ச்சியாகி இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என வேறு ஒரு நடிகையை அணுகுவார். நாம் பிரச்னையிலிருந்து விடுபடலாம்' என திட்டம் தீட்டினார். ஆனால் நடந்தது வேறு.

கே.பி.எஸ். கேட்ட தொகையை வாசன் எந்த மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார். இப்போது அதிர்ச்சி கே.பி.எஸ்.க்கு. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் தனக்கு கேட்ட தொகையை தரும் அளவுக்கு வாசன் 'ஔவையார்' படத்தில் தீவிர ஆர்வம் கொண்டிருப்பதை உணர்ந்த கே.பி.எஸ்.,  சிறு புன்முறுவலோடு ஔவையாராக நடிக்க ஒப்புக்கொண்டார். கே.பி.எஸ். கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா. 1 லட்சம்.
(1950 களில் பிரபல நடிக, நடிகையர்களே சில ஆயிரங்களில்தான் சம்பளம் பெற்றனர்)

'ஔவையார்' படம் வெளியானபோது வாசனின் தீர்க்க தரிசனமும், தேர்ந்த சினிமா சிந்தனையும் வெளிப்பட்டது. ஆம்!  'ஔவையார்' வேடத்தில் அற்புதமாக பாடி, அருமையாக நடித்திருந்ததோடு வயதிலும், தோற்றத்திலும் கே.பி.சுந்தராம்பாள் கனக் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.

கே.பி.சுந்தராம்பாளின் நடிப்பு தமிழகமெங்கும் சிலாகித்து பேசப்பட்டது. சங்க காலத் தமிழ் மூதாட்டியான ஔவையாரின் வரலாற்றை 'செல்லுலாய்டில்' பதிவு செய்த பெருமை பெற்றார் வாசன்.

ஔவையார் திரைப்படத்திற்கு தமிழறிஞர்களிடமிருந்தும் ஆன்மிகவாதிகளிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், ம.பொ.சி., 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் வாசனுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

தேவரை சினிமா பார்க்க வைத்த எஸ்.எஸ். வாசன்

அதுவரை எந்த சினிமாப் படத்தையும் பார்த்திராத தேவர், சிவகங்கையிலுள்ள ஶ்ரீராம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்.  தியேட்டர் பால்கனியில் தன் நண்பர் ஒருவருடன் அமர்ந்திருந்த தேவரைப் பார்த்த தியேட்டர் முதலாளி, திக்குமுக்காடிப் போய் விட்டார். இரண்டாவது முறையும் இந்தத் தியேட்டருக்கு வந்து 'ஔவையார்' படத்தை தேவர் ரசித்துப் பார்த்தார். அதுவரை தேவர் எந்த சினிமாவுக்கும் சென்றதில்லை என்பார்கள். தேவரை சினிமா பார்க்க வைத்து சாதனை படைத்தவர் எஸ்.எஸ்.வாசன். தனது படத்தை 2 முறை பார்த்ததற்காக தேவருக்கு கடிதம் எழுதியும் நன்றி தெரிவித்தார் வாசன்.

தனது திரைப்படங்கள் பாமர மக்களின் ரசனையிலிருந்து விலகித் தெரிய கூடாது, அதே சமயம் கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் அமைந்து விடக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்ட வாசன், ஜெமினியில் ஒவ்வொரு படமும் எடுத்து முடிந்ததும், ஸ்டுடியோவின் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடுவார். காட்சி முடிந்தபின் அவரவர் தங்கள் கருத்துக்களை எழுதி அலுவலகத்தில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும்.

மறுதினம் அவற்றில் ஒன்றுவிடாமல் படித்து, படத்தின் நிறை, குறைகளைத் தெரிந்து கொள்வார். 

படம் குறித்து ஏதாவது எதிர்மறை விமர்சனம் வந்தாலும் அவற்றை கருத்தில்கொண்டு அந்த மாற்றத்தை செய்ய உத்தரவிடுவார். அதன் பிறகே படத்தின் இறுதிப் பிரதிகள் எடுக்கப்படும். ஜெமினியின் வெற்றிக்கு அடித்தளமாக வாசன் கையாண்ட வழக்கம் இது.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடும் வாசனின் பங்கேற்பும்


காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட வாசன், காங்கிரஸ் அனுதாபியாக இருந்தாலும் எல்லா கட்சியினரிடமும் அன்பு பாராட்டினார். தமது இதழில் தனது கட்சி சார்பு, எந்த காரணம் கொண்டு எதிரொலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆதரவு, எதிர்ப்பு கருத்து எதுவானாலும், அது எந்த கட்சியினுடையது என்றாலும், நடுநிலையாக ஆனந்தவிகடனில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 

ராஜாஜி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோடு  நெருக்கம் பாராட்டினாலும், காங்கிரசுக்கு எதிர் அணியில் நின்ற அண்ணாவுக்கும் அவர் நண்பராகவே விளங்கினார். 1968-ம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டை நடத்தியது அண்ணா அவர்களின் தலைமையிலான அரசு. இந்த மாநாட்டு ஏற்பாடுகளில் வாசன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மாநாட்டையொட்டி சென்னை மவுண்ட் ரோடில் ஒரு பிரம்மாண்ட அலங்கார ஊர்தி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பட அதிபர்கள் நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், எ.வி.மெய்யப்ப செட்டியார் ஆகியோருடன் இணைந்து வாசன் செய்து கொடுத்தார். இந்த ஊர்வலத்தில் இடம் பெற்ற ஊர்திகளில் சிலப்பதிகாரக் காட்சிகள் மற்றும் கம்பர், பாரதி, பாரதிதாசன் போன்றோர் உருவங்கள் அழகாக அமைக்க பெற்றிருந்தன. முத்தாய்ப்பாக இந்த மாநாட்டிற்கான இலச்சினையை (logo) தயாரித்துக் கொடுத்தவரும் வாசனே.

இம்மாநாட்டை ஒட்டி தமிழ்ப் புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் சிலைகள் நிறுவப்பெற்றன. இந்த சிலைகளை அமைத்தவர்கள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் 02.01.1968 -ம் நாள் ஔவையாரின் திருவுருவச் சிலையை எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். இச்சிலை அமைவதற்கான  நிதி உதவி செய்தவர் எஸ்.எஸ்.வாசன்.

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த வாசன் என்ற மாமேதையின் கலைப்பயணம், 1969 ஆகஸ்ட்டில் முடிவுக்கு வந்தது. இயற்கையின் இலக்கிற்கு அவரும் தப்பவில்லை. பத்திரிக்கை, சினிமா, பொதுவாழ்க்கை என வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கிவந்த அந்த மேதை, தன் உடல்நிலையை கவனிக்கவில்லை. விளைவு, வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர்,  தம் 65-வது வயதில் 1969 ஆகஸ்ட் 26 ம்-தேதி சினிமா மற்றும் பத்திரிகை உலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு  மறைந்தார்.

அவரது மறைவிற்கு சர்வகட்சித் தலைவர்களும் சினிமா உலகத்தினரும் கண்ணீர் வடித்தனர். மதன காமராஜனில் துவங்கிய வெற்றிகரமான அவரது கலைப்பயணம், எல்லோரும் நல்லவரே படத்துடன் முடிவடைந்தது. எம்.ஜி.யாரை வைத்து ஒளிவிளக்கு படத்தையும், சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தையும் தயாரித்தார்.

மத்திய அரசு கவுரவம்

வாசனின் சேவையை பாராட்டி, கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசு, எஸ்.எஸ்.வாசனின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு கவுரவப்படுத்தியது. 

தனது 32-வது வயதில், ஓர் எளிய கதாசிரியராக சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்து, தம் உழைப்பால் வெற்றிகரமான இதழாளராகவும் தயாரிப்பாளராவும் ஒருங்கே விளங்கிய வாசன் என்ற பெருமகனாரின் புகழ், சினிமாவை நேசிக்கிற கடைசி ஒரு ரசிகன் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close