Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆரை நனைத்த 'மழை' க.சுப்பு! ( மைக் டெஸ்ட்... ஒன் டூ த்ரீ: தொடர்-5)

1980களில் எம்.ஜி.ஆர். ஆட்சியில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஆளும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தனர். சட்டசபையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் செய்து எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பற்றி அதிரடியாக பேசி வந்தனர் அந்த மூவரும். இடி, மின்னல், மழை என்று அந்த அணி அழைக்கப்பட்டது.

அந்த அணியில் மழையாக அதிரடி விமர்சனங்களை முன் வைத்தவர் க.சுப்பு. சுப்பு இப்போது நம்முடன் இல்லை. ஆனால், தமிழக அரசியலில் அவரது பேச்சு நிலைத்திருக்கிறது.

மதுரை திருமங்கலத்தையடுத்த பிள்ளையார் நத்தத்தில் 1941-ல் பிறந்தவர் க.சுப்பு. கல்லூரி நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளராக விருது பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக தன் அரசியல் வாழ்வை துவக்கிய சுப்பு ராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்களில் பேச்சாளராக பங்கேற்றார். 1971ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஆலைகளுக்கு எதிராக பேச்சு

ராஜபாளையத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, ஆலை அதிபர்களுக்கு எதிராக, மேடைகளில் பேசி வந்தார். இதனால், ஆலை முதலாளிகளிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார்.

ஒரு கட்டத்தில் க.சுப்புவின் பேச்சுக்களால், ஆலை அதிபர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் வரத் தொடங்கியது. அந்த அளவுக்கு  துணிச்சலான பேச்சாளராகத் விளங்கினார்.

சென்னை வந்த அவர், கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான மணலி கந்தசாமியோடு இணைந்து கட்சிப் பணியாற்றினார். மணலி கந்தசாமியின் மாணவரைப் போல. அவரின் சுக துக்கங்களில் சுப்பு பங்கு கொண்டார்.  கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக ஒருகட்டத்தில் தி.மு.க.வில் க.சுப்பு சேர்ந்தார்.

எம்.ஜி.ஆருக்கு எதிராக பிரச்சாரம்


1977 -ம் ஆண்டு, வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிராக தி.மு.க., எம்.எல்.ஏ.க்களான க.சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் மூவரும் அதிரடி கருத்துக்களை எடுத்து வைத்தனர். 'இடி, மின்னல், மழை' என்ற தலைப்பில் அவர்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்து, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைப் பற்றி விவாதித்தார்கள்.

"இடி' என்ற தலைப்பில் ரகுமான்கான், 'மின்னல்' என்ற தலைப்பில் துரைமுருகன், இறுதியில் 'மழை' என்ற தலைப்பில் க. சுப்பு ஆகியோர் பேசினார்கள். க.சுப்பு எடுத்து வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆளும்கட்சி திணறியது. ஆளும் அரசாங்கத்தைக் கேள்விகளாலும், பேச்சாலும் கதிகலங்க அடித்தார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பேச்சு


1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு நடந்தது. அந்த சமயத்தில் ஈழத்தில் இலங்கைச் சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் 37 பேர் சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால் ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே தி.மு.க. மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் க.சுப்பு சிறப்பு பேச்சாளராகப் பேசிய பேச்சு ஈழ இன விடுதலைப்போராட்டம் குறித்து, ஆழமாகப் பேசினார்.

அவரது உரையில் இருந்து ஒரு பகுதி

"வை.கோபால் சாமி நாடாளுமன்றத்தில் பேசியதை பிரசுரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, “He Spoke With blooding heart ” என்று போட்டிருந்தது. இதயத்தில் ரத்தம் கசியப் பேசினார் என்று போட்டார்கள். ரத்தம் கசியப் பேச வேண்டிய பேச்சு ஏன் வந்திருக்கிறது என்பதை இந்த நாடு முழுவதும் அறியும்.

நமக்கும், இலங்கைக்கும் இடையில் இருப்பது கடல். இந்த கடல் நம்மைப்பிரித்து வைக்கலாம். இருந்தாலும் இதயத்திலே ஒன்றாக இருக்கக்கூடிய இலங்கைத் தமிழனையும், இந்தியாவில் உள்ள தமிழர்களையும், உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற தமிழ் இனத்தையும் எந்த சக்தியாலும் பிரித்து வைக்க முடியாது என்ற உணர்வால் நாம் எல்லாம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மையினால்தான் உலகத்தில் மூலை முடுக்கெல்லாம் வாழக்கூடிய தமிழனாக இருந்தாலும் அவன் இதயத்தால் அழுதுகொண்டிருக்கின்றான். உணர்வால் உந்தப்பட்டிருக்கின்றான்.

நம் சகோதரர்கள் தாக்கப்படுவதைக் கேட்டு, கவலையோடு இருக்கின்றான்....” என்று பேசியவர்,  "வீரச் சிங்கங்களே! எழுங்கள்! ஒன்று சேருங்கள்! என கலைஞர் குரல் கொடுத்தால், தங்கள் இன்னுயிரைத் தர லட்சக்கணக்கான தொண்டர்கள் தயார்" என்று க.சுப்பு உணர்ச்சிகரமாகப் பேசி முடித்தார்.
 
அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் தி.மு.க. தொண்டர்களை உசுப்பியது. கருணாநிதி சுப்புவை பாராட்டினார். மறுநாள் முரசொலி நாளிதழில் ஒன்றரைப் பக்கம் அளவுக்கு க.சுப்புவின் பேச்சு மட்டும் இடம்பெற்றது. சுப்புவின் அந்த பேச்சு இன்றளவும் சிறந்த பேச்சாகக் கருதப்படுகிறது.

அப்போது தான் நடத்தி வந்த இதழ் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கத்தின் பேட்டியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திமுகவுடன் முரண்பட்டபோது அ.தி.மு.க வில் இணைந்து மேல்சபை உறுப்பினரானார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் 1991-ம் ஆண்டு இணைந்தார். அப்போது காங்கிரஸ் பேச்சாளர்கள் எப்படி பேச வேண்டும் என்று க.சுப்பு வகுப்பு எடுத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இதுபோல வகுப்பு நடத்தினார். அவரது அனுபவம் புதிய பேச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தது.

அடுத்துவந்த சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து க.சுப்பு களம் இறக்கப்பட்டார். கருணாநிதிக்கு எதிராக பிரச்சார மேடைகளில் பல்வேறு விமர்சனங்களை எடுத்து வைத்தார். ராஜிவ் காந்தி படுகொலையால் எழுந்த அலையால் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றபோதிலும், துறைமுகம் தொகுதியில் க.சுப்பு தோல்வியடைந்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு கருணாநிதிக்கு வாழ்த்து

1996-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அங்கு ஐக்கியமானார். பின்னர் 2001- ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். 2007-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற ஆலோசகராக இருந்த க. சுப்பு, கருணாநிதியை  வாழ்த்திப் பேசினார். இதனால்  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா க.சுப்பு மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

2007-ம் ஆண்டு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில், " மாற்றுக் கட்சியில் இருந்தாலும், ஒருவரோட சாதனையை வாழ்த்திப் பேச வேண்டியது நல்ல மரபு. முதல்வரைப் பற்றி ஜெயலலிதா வாழ்த்துவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. அதனால, அந்தக் கட்சி சார்பா நான் பேசினேன். பொன்விழாவு பாராட்டு நடக்குற அன்று, ஜெயா டி.வி-யில் கருணாநிதியின் சர்க்காரியா ஊழலைப் பத்தித் திட்டிப் பேசச் சொன்னாங்க. ஒரு கல்யாணம் நடக்குது... அந்தக் கல்யாணம் உங்களுக்குப் பிடிக்கலைன்னா போகாதீங்க. ‘எனக்குப் பிடிக்கலை. அதனால அந்தக் கல்யாணத்துல போய் நான் ஒப்பாரி வைப்பேன்’னு சொன்னா, நல்லாவா இருக்கு? அதனால அன்னிக்கு முதல்வரை எதிர்த்துப் பேச முடியாதுன்னு சொல்லிட்டேன்.

எதிர்பார்த்த மாதிரியே கட்சிக்குள்ள எதிர்ப்பு!  ஒதுக்கினாங்க. ஒதுங்கி இருந்தேன். வேற எனக்கு என்ன தெரியும்? மீண்டும் தலைவர் கருணாநிதிகிட்ட போனேன். ‘என்னய்யா... நல்லா இருக்கியா? நீ முதன்முதலா கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வந்து சேர்ந்தது இன்னும் ஞாபகத்துலயே நிக்குதுய்யா! நீயும் வரப் போகத்தான் இருக்கே!’னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு!’’ என்று நடந்ததைச் சொன்ன சுப்பு, நிமிட நேர மௌனத் துக்குப் பிறகு, ‘‘சில சமயம் தோணும்...

இந்த 65 வயசுல எதுக்கு இந்தப் பாடுன்னு! ஆனா, கையும் வாயும் சும்மா இருக்க மாட்டேங்குதே! அ.தி.மு.க-வுல இருக்குறப்ப கருணாநிதியைத் திட்டி எழுதுறதுக்காகவே தனியா சம்பளம் கொடுத்தாங்க. ‘ஜெயலலிதாவை இவர் திட்டாத திட்டா? இப்ப, வெட்கமில்லாம அங்கேயே போய்ச் சேர்ந்துக்கிட்டாரு பாரு’னு கேலி பேசினாங்க. ஆரம்பத்துல ஒரு மாதிரிதான் இருந்துச்சு. இப்ப பழகிருச்சு.

எனக்கு எது சரின்னு தோணுதோ, பாதுகாப்பானதோ... அதும்படி நடக்க வேண்டியதா இருக்கு. ஒவ்வொரு முறையும், ‘இனிமே இடம்மாறக் கூடாது. சாகுறவரைக்கும் இங்கேயே தான் இருக்கணும்’னு தோணும். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனுமதிக்க மாட்டேங்குதே! சர்க்கரை நோய் அதிகமாகி, என் இடது காலை ஆபரேஷன்ல எடுத்துட்டாங்க. ஒரு விபத்துல சிக்கிட்டோம்னா, அந்த வேதனையிலேயே வாழ்நாள் பூரா உழண்டுகிட்டு இருக்க முடியுமா? மனசளவில் அந்த வேதனையிலிருந்து மீண்டு வரணும்தானே? நான் கட்சி மாறுறது சிலருக்கு வேணா கேலியாவோ ஆச்சர்யமாவோ தெரியலாம். எனக்கு அது வாழ்க்கைப் போராட்டம்!’’- நினைவுகளை எங்கோ நழுவவிட்ட சுப்பு, சுதாரித்து சின்ன சிரிப்போடு விடை கொடுத்தார்!     

எதிர்காலம் குறித்து வேதனை

கடைசியாக க.சுப்பு தி.மு.க.வில் இருந்தார். சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் எடுக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் இருந்தார். 2010ம் ஆண்டு தி.மு.க.வில் சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சொற்பொழிவாளர்கள் ஆளுக்கு ஒரு கருத்துச் சொன்னார்கள். அப்போது சுப்பு உட்கார்ந்திருந்த இடத்துக்கே 'மைக்' வந்தது. அப்போது வேதனையுடன் பேசிய சுப்பு, "ஒரு காலத்தில் மேடைப் பேச்சுக்கு மகத்துவம் இருந்தது. மாதம் 30 நாளும் நாங்கள் கூட்டம் பேசினோம். இன்றைக்கு அவ்வளவாக கூட்டங்கள் நடப்பதில்லை. நடந்தாலும் மக்கள் கூடுவதில்லை. எல்லோரும் டி.வி. முன்னால் உட்கார்ந்துவிட்டார்கள். இந்த நிலையில் பேச்சாளர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது...'' என்றவர், ''நான் தி.மு.க-வுக்கு வந்து சேர்ந்ததும் சென்னையில் மூன்று கூட்டங்களுக்குக் கூப்பிட்டார்கள். அதற்குப் பிறகு யாருமே என்னை அழைக்கவில்லை!'' என்று வருத்தப்பட்டார்.

அது தனிப்பட்ட ஒரு பேச்சாளரின் வேதனை அல்லாமல் பேச்சாளர்களின் எதிர்காலம் குறித்த ஒட்டுமொத்த கவலையாக இருந்தது.

சுப்புவின் பேச்சு பாணி

ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஆழமான கருத்துக்களை எடுத்து வைப்பது சுப்புவின் பாணி. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு அது குறித்து முன்பே தயாரித்திருப்பார். மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக ஒரு விஷயத்தைப் பற்றி உரையாற்றுவார். நகைச்சுவையாக கருத்துக்களை எடுத்து வைப்பதிலும் வல்லவர். அரசியல் நையாண்டியில் அவர் சிறந்து விளங்கினார்.

2011-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக க.சுப்பு உயிரிழந்தார். சுப்புவுக்கு மனைவி பேபி ரமணி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

க.சுப்புவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய கருணாநிதி, " சுப்பு ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்றைக்கும் அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி வேடிக்கையாகவும், அதே நேரத்திலே அறிவுப் பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பேசக் கூடியவர்.

தோழர் சுப்புவின் மறைவு, பாட்டாளி வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு. அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி களை நேரடியாகவே அறிந்தவன் நான். அவருடைய பேச்சாற்றலும், வாதத் திறமையும் பகைவர்களை யும் வசீகரிக்கக் கூடியவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். அவருடைய மறைவு தொழிலாளர் வர்க்கத் திற்கும், சாதாரண சாமான்ய மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகும்" என்றார்.


- கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ