Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அங்கே டைட்டானிக் இங்கே கூடங்குளம்( அணு உலை அரசியல்: தொடர்-16)

‘முயற்சி என்பது விதை போல. அதை விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லை என்றால் - அது மண்ணுக்கு உரம்!’  - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

அப்துல்கலாம் கூடங்குளத்துக்கு வருகை தந்ததுடன், அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என சர்டிபிகேட் கொடுத்ததும், அணு உலை நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு புத்துணர்வு பிறந்தது. அப்துல்கலாம் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்ட கோடிக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது நிலையினரிடமும் அணு உலை குறித்த பார்வையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இது அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

தங்களின் தொடர் போராட்டத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி தள்ளிவிட்டு சென்ற அப்துல்கலாம் மீது போராடும் மக்கள் வருத்தம் அடைந்தனர். அதைத் தவிர அவர்களால் என்ன செய்து விட முடியும்?

ஆனாலும், தங்களின் போராட்டத்தை தொடர்ந்தபடியே இருந்தார்கள். நாடு தழுவிய அளவில் அணு சக்தி குறித்த விவாதம் மேலெழுந்த சமயத்தில் மரியாதைக்குரியவரான அப்துகலாமால் இப்படி ஒரு சரிவா என வருத்தப்பட்டார்கள். வெண்ணை திரண்டு வந்த சமயத்தில் தாழி உடைந்தது போன்ற நிலை.

ஆனால், அவர்களே எதிர்பாராத வகையில் தேசிய அளவில் ஆதரவுக் குரல்கள் கேட்கத் தொடங்கியதில் உற்சாகம் அடைந்தனர். அப்துல்கலாம் வருகை ஒருபக்கம் இருந்தாலும் திருவனந்தபுரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 3000 பேர் திரண்டு அணு உலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அத்துடன் டெல்லியில் இருந்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான குரல் கேட்கத் தொடங்கியது.

அதுவும், சுவாமி அக்னிவேஷிடம் இருந்து அந்த குரல் வரும் என்பதை போராடும் மக்களே எதிர்பார்க்கவில்லை. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக தமிழக முதல்வருக்கு மெயிலில் தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், ‘திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நான் இடிந்தகரையில் போராடும் மக்களை சந்திக்க செல்கிறேன். நான் சட்டத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு கருதுமானால் என்னை இடிந்தகரைக்கு செல்லும் வழியிலேயே கைது செய்து கொள்ளலாம்’ என தெரிவித்து இருந்தார்.

கேரளாவுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், திருவனந்தபுரம் ஆர்ச் பிஷப் சூசை பாக்கியத்தை சந்தித்து பேசினார். இருவரும் கூடங்குளம் அணு உலையால் சுற்றுப்புற மக்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். போராடும் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், அவர்களுக்கு துணை நிற்பது பற்றியும் விரிவாக விவாதித்தார்கள்.

அத்துடன், கேரளாவின் முன்னாள் முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தனை சந்தித்த சுவாமி அக்னிவேஷ், இடிந்தகரையில் போராடும் மக்களுக்கு கேரள மக்களும் துணை நிற்க வேண்டும் என்பதையும்,  கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அருகில் இருக்கும் கேரளாவும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதையும் விளக்கினார். அதனை ஒப்புக் கொண்ட அச்சுதானந்தன், போராடும் மக்களிடம் தனது ஆதரவை தெரிவிக்குமாறு கூறியதுடன், விரைவில் அந்த மக்களை நேரில் வந்து சந்திக்க இருக்கும் தகவலையும் கூறுமாறு தெரிவித்தார்.

இந்த சூழலில், போராட்டம் நடக்கும் இடிந்தகரையை காவல்துறை தனித்தீவு போல மாற்றி இருந்தது. அங்கிருந்து வெளியே வரக்கூடிய மக்களை பிடித்து, மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அத்துடன், இடிந்தகரைக்கு செல்லும் வழிகள் அனைத்திலும் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு இருந்தன. வெளியாட்கள் உள்ளே சென்றால் விசாரிக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டன. அங்கு செல்வதற்கு வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் கூட இந்த சோதனைச் சாவடிகளை கடந்து மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டிய நிலை.

அத்துடன், திருவனந்தபுரத்தில் இருந்து போராடும் மக்களை சந்தித்து, அவர்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்க வந்த மக்கள், போலீஸாரால் மறிக்கப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அழைக்கழிக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் சிலரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

டெல்லி மாணவர்கள் சிலர் இந்த போராட்டம் பற்றி கேள்விப்பட்டு அதில் பங்கேற்க வந்தனர். அவர்களை போலீஸார் பிடித்துச் சென்று மாலை வரை காவல்நிலையத்தில் வைத்திருந்து, மிரட்டியும் எச்சரித்தும் அனுப்பி வைத்தனர். 

அதனால், சுவாமி அக்னிவேஷ் வருகையின் போதும் இதே நடவடிக்கையை போலீஸ் மேற்கொள்ளக்கூடும் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. அப்படி ஒரு நிலை உருவானால் அதன் எதிரொலிப்பு டெல்லியில் பாராளுமன்றத்திலும் ஏற்படும் நிலைமை உருவானது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுவாமி அக்னிவேஷ் இடிந்தகரைக்கு புறப்பட்டு வந்தார்.

அவரது வருகை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை வரவிடாமல் திரும்பிச் செல்லுமாறு பல வழிகளிலும் தூது விட்டது போலீஸ். ஆனால், அவரோ எதையும் சட்டை செய்யாமல் உறுதியுடன் போராட்ட களத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது வருகையை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.

பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு இருந்த அந்த லூர்துமாதா தேவாலய வளாகத்தில், பலத்த கரகோஷத்துடன் சுவாமி அக்னிவேஷ் வரவேற்கப்பட்டார். காவி உடையுடனும் காவியிலான தலைப்பாகையிலும் வந்த சுவாமிஜியை அனைத்து மதத்தினரும் உற்சாகமாக வரவேற்றது அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டக் குழுவை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் போராடும் மக்களிடம் பேசினார். அவரது பேச்சை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் மொழிபெயர்த்தார்.

‘‘நான் இங்கே ரகசியமாக வரவில்லை. முதல்வருக்கு மெயில் மூலமாக தகவல் தெரிவித்துவிட்டே வந்திருக்கிறேன். நான் இங்கே வருவதைத் தடுக்க பல முயற்சிகள் நடந்தது. குறிப்பாக, இங்கே சட்ட விரோதமான கும்பல் குழுமி இருப்பதாக தகவலை பரப்பினார்கள். சமூக விரோதிகளும் தீவிரவாதிகளும் இங்கே கூடியிருப்பதாகவும் டெல்லியில் செய்திகளை பரப்பினார்கள்.

எதுவாக இருந்தாலும் பார்த்துவிட்டு வருவோமே என்றுதான் இங்கே வந்தேன். இங்கே பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இளைஞர்கள், விவசாயிகள், மீன்பிடி தொழில் செய்பவர்கள் என பல்வேறு தொழில்களை செய்பவர்களும் உங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதாலும் ஆபத்து சூழந்த அணு உலை வேண்டாம் என்கிற நியாயமான கோரிக்கைக்காக போராடி வருவதை பார்க்கிறேன்.

இங்கே அறவழியில் அமைதியாக உங்களின் நியாமான கோரிக்கைக்கு போராடும் நிலையில், உங்களின் உணர்வுகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது வருத்தத்துக்கு உரியது. இந்தியாவே வியக்கும் வகையில் உங்களின் அகிம்சை போட்டம் நடக்கிறது. இந்த அகிம்சை போராட்டத்திலும் பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க அரசு மறுப்பது ஏன் என்பது புரியவில்லை. இந்த அகிம்சை போராடத்தில் பங்கேற்கும் உங்கள் மீது தேசத்துரோகம், தேசத்துக்கு எதிராக போர் புரிவது போன்ற செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் புதிராகவே இருக்கிறது. அரசின் இத்தகைய செயல்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்றவர் தொடர்ந்து பேசினர்.

‘‘இங்கே சமீபத்தில் அப்துல்கலாம் வந்துள்ளார். அவர் எனது மரியாதைக்குரிய நண்பர். அவர் கூடங்குளம் அணு உலையை ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றிப் பார்த்து விட்டு, ‘அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு சென்று இருப்பது சரியான செயல் அல்ல. 2004-ல் ஏற்பட்டது போன்ற சுனாமி இனிமேல் வராது என்று சொல்லியிருக்கிறார். இந்த பகுதியில் பூகம்பம் ஏற்படும் சாத்தியம் இல்லை என்று கூட அவர் பேசியிருக்கிறார். இதெல்லாம் எப்படி அவரால் சொல்ல முடிகிறது? இன்றும் கூட பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தை எந்த அறிவியல் அறிஞராவது முன்கூட்டியே கணித்து சொல்ல முடிந்ததா?

இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டு அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து தப்புவது எப்படி என்பது பற்றி இந்த பகுதி மக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறதா... எதையுமே செய்யாமல் இருப்பது நியாயமான செயலா? இந்த அணு உலை அமைந்து இருக்கும் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் இந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமே சுடுகாடாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்கள், உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான சொகுசுக் கப்பலில் பயணிப்பதாகவே நம்பினார்கள். ஆனால், பனிப்பாறையில் மோதியதும் அந்த கப்பல் உடைந்து கடலில் மூழ்கியது. கூடங்குளம் அத்தகைய நிலையில் தான் இருக்கிறது. இந்த அணு உலை உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டால் டைட்டானிக் கப்பலை போல பேரிழப்பை உருவாக்கிவிடும். அதனால் கூடங்குளம் அணு உலையை இந்தப்பகுதி மக்கள் கோருவதைப் போல உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஷ்யாவில் உருவான இந்த அணு தொழில்நுட்பத்தை எதற்காக இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்? செர்னோஃபில் விபத்து ஏற்பட்ட பிறகு அந்த நாட்டில் ஒரு அணு உலை கூட புதிதாக தொடங்கப்பட வில்லை. ஆனால், அதே தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வந்து செயல்படுத்துகிறது. போபால் விபத்து ஏற்பட்ட பிறகு அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. அவர்கள் இப்போது வரையிலும் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள்.
 
அதனால், இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன். டெல்லிக்கு சென்றதும் பிரதமரையும், சோனியாவையும் சந்தித்து பேசுவேன். அத்துடன், மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரையும் சந்தித்து உங்களது போராட்டத்தில் இருக்கும் உண்மையையும்ம் நியாயத்தையும் எடுத்து சொல்வேன். உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

அப்துல்கலாம் வருகைக்கு பின்னர், அணு உலைக்கு எதிரான் போராட்டத்தில் இருந்த தொய்வானது, சுவாமி அக்னிவேஷின் பிரவேசத்தால் மறையத் தொடங்கியது. மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் தனது ஆதரவை போராட்டக் குழுவுக்கு தெரிவித்தார். ஏற்கெனவே, மேத்தா பட்கர் இடிந்தகரைக்கு வந்து சென்ற நிலையில், பிரஷாந்த் பூஷனின் வருகையும் போராட்டத்தை உத்வேகம் அடைய வைத்தது. அத்துடன் மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்திலும் அணு உலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இப்படி சட்டப் போராட்டம், சாத்வீக போராட்டம் என போராட்டக் குழுவினர் செயல்பட்ட நிலையில், அவர்களை முடக்கும் வழி தெரியாமல் தவித்த மத்திய அரசு, தன் அடக்குமுறையை வேறு புதிய வகையில் செயல்படுத்தியது.....அது என்ன?

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்       

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ