Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெப்சி, கோக்கிடம் இருந்து தாமிரபரணியை மீட்போம்!

மேலே இருக்கும் மீம் சொல்லும் செய்தி... அவ்வளவும் உண்மை!

தமிழ்நாட்டின் இப்போதைய தலையாய பிரச்னை...

தாமிரபரணி! தமிழர்கள் அனைவரும் கையிலெடுக்க வேண்டிய பிரச்னை... தாமிரபரணி!

தமிழர்கள் இன்றே சுதாரிக்காவிட்டால் நாளை அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கும் ஜீவ நதி... தாமிரபரணி!

தமிழகத்தில் உருவாகும் ஒரே ஜீவநதியான தாமிரபரணி ஏற்கெனவே மணல் கொள்ளை, ஆலைக் கழிவு மாசுகள் என பலவிதங்களில் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அத்தனை சிக்கல்களிலிருந்தும் ஒருவாறு தப்பிப் பிழைத்துப் பாய்ந்து  விவசாயிகளின் வயிற்றில் ஈரத்தைத் தக்க வைத்திருக்கிறாள்.

ஆனால், இப்போது அவள் கழுத்தையே இறுக்கி நெறிக்கும் முயற்சியை அரசாங்கமே மேற் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் கங்கை கொண்டானில் அமைந்திருக்கும் சிப்காட்டில், ஏற்கெனவே கோகோ கோலா ஆலை செயல்பட்டு வருகிறது. குளிர்பானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கென தினம் சராசரியாக 9 லட்சம் தண்ணீரை தாமிரபரணி படுகையிலிருந்து அந்த ஆலை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அந்த ஆலையின் செயல்பாட்டுக்கு எதிராகவே விவசாயிகள் பல்லாண்டு காலமாகப் போராடி வரும் நிலையில், அதே பகுதியில் பெப்சி நிறுவனமும் தன் ஆலையை அமைக்கவிருக்கிறது.

’ஏற்கெனவே  செயல்படும் ஆலையை இழுத்து மூடச் சொன்னால், இன்னொரு ஆலையைத் திறக்கப் போகிறீர்களா?’ என இருக்கும் மிச்சசொச்ச சக்தியையும் திரட்டி விவசாயிகள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ஆனாலும், எந்தப் பலனும் இல்லை. பெப்சி ஆலை அமைக்கும் வேகத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை. போதாதற்கு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளையும் அரசியல் கட்சியினரையும் போலீஸ் அடித்து விரட்டிக் கொண்டிருக்கிறது.

தாமிரபரணி நீரைக் காக்க, ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால், அவர்களைப் பற்றிய, தாமிரபரணி பற்றிய எந்தக் கவலையும் பரபரப்பும் இல்லாமல் தன் வழக்கமான அலுவல்களில் மூழ்கியிருக்கிறது தமிழ்நாடு! 

 

 தினம் பல லட்சம் லிட்டர்!

ஒப்பந்தப்படி தினம் தாமிரபரணியில் இருந்து பெப்சி நிறுவனம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுமாம். அதற்கென ஒரு லிட்டருக்கு 3.75 பைசா வழங்கும். அதனை குளிர்பானமாகவோ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ மாற்றி 1 லிட்டர் குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கு விற்கும்.

இடி மேல் இடியாக இன்னொரு செய்தியும் காத்திருக்கிறது. தற்போது  கோக் நிறுவனம்  தாமிரபரணியில் இருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வருகிறது. அதனை 18 லட்சம் லிட்டராக உயர்த்திக் கொள்ளவும் அனுமதித்திருக்கிறார்கள். சிப்காட் வளாகத்தில் பெப்சி ஆலைக்கு 36 ஏக்கர் நிலத்தை, வருடத்துக்கு ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் வீதம் 99 வருடக் குத்தகைக்கு அளித்திருக்கிறார்கள். ஆக, 99 ஆண்டுகளுக்கு கோலா, பெப்சி இந்த இரு நிறுவனங்களும் தினம் தாமிபரணியில் இருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கப் போகின்றன. ஆனால், 99 வருடங்கள் தாமிரபரணி இருக்குமா?

 

தமிழகத்தில் குடிக்க தரமான குடிநீர் இல்லை... அத்யாவசிய மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதில் தட்டுப்பாடு... சின்ன மழைக்கே சல்லி சல்லியாகும் சாலை வசதிகள்... என ஏகப்பட்ட கோளாறு குளறுபடிகள் இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் நம் மக்கள் பெப்சியும் கோலாவும் இல்லையென்றால் உயிர் வாழ மாட்டார்கள் என்பது போல தமிழக அரசு தீவிரமாக பெப்சி ஆலையை அமைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது! 

 தட்டிக் கேட்பானா தமிழன்?

 

அரசாங்கம் எப்போதும் இப்படித்தான் என நாம் ஒதுங்கிச் செல்ல முடியாது. அதைத் தட்டிக் கேட்கும் உரிமையும் துணிச்சலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். ‘அட... தாமிரபரணி எங்கேயோ ’டெளன் சவுத்’ல ஓடிட்டு இருக்கு. நான் ஏன் அதைப் பத்திக் கவலைப்படணும்?’ என்று யோசனை ஓடுகிறதா? சரி... உங்களுக்கென ஒரு லாஜிக் சொல்கிறோம். நீங்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், ஐந்தே நிமிடங்களுக்குள் ஒரு கோக் அல்லது பெப்சி வாங்கி அருந்த முடியும். நாம் தினம் தினம் அப்படி அருந்திக் கொண்டும் இருக்கிறோம். ஒரு கோலா பானம் நம் உடலுக்கு எவ்வளவு தீங்கிழைக்கிறது தெரியுமா? அதில் நிரம்பியிருக்கும் சர்க்கரை, நம் உடல் இயக்கத்தில் எவ்வளவு அபாயகர மாறுதல்களை உண்டாக்குகிறது தெரியுமா? 

கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்...

 

’ஆறாம்திணை’ நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு என்னவெல்லாம் தீங்கு விளைவிக்குமென இப்படிச் சொல்கிறார். ’சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்!’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாய்கிறது. இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு சுமார் 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர்.

இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.

சமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக்கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் தொல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல்.

இவை அனைத்துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங்களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்!’ ஒரு நிமிட உற்சாகத்துக்காக இவ்வளவு வம்பை விலைக்கு வாங்குவானேன்! 

ஒரு கோலா பானம் குடித்தவுடன், உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு கிட்டதட்ட தடாலடியாக அதிகரிக்கும் என்பது ஆரோக்கியமா? நம் இயற்கை வளத்தைச் சீரழித்து, நம் உடல் நலத்தை சிதைக்கும் கோலா பானங்களுக்கு எதிராக நாம் நமது எதிர்ப்பை எப்போதுதான் பதிவு செய்வது? கோலா பானங்களுக்குப் பதிலாக நாம் அருந்த இளநீர், பதநீர், மோர், பழரசங்கள் என எத்தனையோ மாற்று இருக்கின்றன.

ஆனால், தாமிரபரணிக்கு என்ன மாற்று...? 

நாளை நம் தாமிரபரணிக்காக இப்படி கலங்க வேண்டிய நிலை வராமல் இன்றே தவிர்ப்போம்

  

கோலா நிறுவனங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வந்த மீம் வீடியோ...

 

 

 

நாளை நம் தாமிரபரணிக்காக இப்படி கலங்க வேண்டிய நிலை வராமல் இன்றே செயல்படுவோம்

தாமிரபரணியை காப்பதற்கு உங்கள் குரலை #SaveThamirabarani என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்யுங்கள்..!

 - ஆண்டனிராஜ், கார்க்கி பவா

ஓவியம்: ஹாசிப் கான்  

படங்கள்: எல்.ராஜேந்திரன்

 

 *********************** தொடர்பு செய்திகள்...

  # # அபாயகர பொதிகை மலைகளில் ஊற்றெடுக்கும் தாமிரபரணியின் கதையைத் தெரிந்து கொள்ள... 

 # #கங்கையின் தங்கை தாமிரபரணி!. ஏன்? 

# # தாமிரபரணியில் 125 டன் துணிக் கழிவுகள்! பதைபதைக்கச் செய்யும் நிலவரம்... 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close