Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ... மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ- 6 (அருள்மொழி)

மூன்றரை வயது சிறுமி, பாரதிதாசன் பாடல்களை மனப்பாடம் செய்து மழலை மொழியில் ஒப்புவிக்கிறாள். பெற்றோர், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வியந்து பார்க்கின்றனர். சேலத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் முன்பு முதன்முதலாக அந்த சிறுமி மேடையேறினாள்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று தொடங்கி தொடர்ச்சியாக புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கவிதைகளை ஒப்பிக்கத் தொடங்கினாள்.

"கணக்கன் சொல் ஓவியமே கடவுள்.
இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என,
ஒருவன் குறித்ததை அடுத்தவன் ஒப்பான்
ஆதலின் தெய்வம், நிலையிலது ஆகும்.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்வதும்
ஒருத்தி ஐவரை மணந்து உயிர் வாழ்வதும்,
பெருகும் பொய்மையை மெய்யென பிதற்றலும்,
பிறநூற்கொள்கை அதை ஒப்பிடான் தமிழன்"

பாரதிதாசனின் பாடலை முழுவதுமாக ஒப்புவித்தாள். பின்னாளில் பேச்சாளராகவும், வழக்கறிஞராகவும் புகழ்பெற்ற அருள்மொழிதான் அந்த சிறுமி.

மிகச் சிறிய வயதிலேயே பேச்சாளராக ஆனதற்கு என்ன காரணம்?

எனது தந்தை அண்ணாமலை, திராவிடர் இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டவர். தமிழ் புலவர். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். எனவே, என்னை மற்றும் என் உடன் பிறந்தவர்களையும் தமிழ் பற்றுடன், திராவிடப் பாரம்பரியத்தை ஊட்டி வளர்த்தார். ழ, ல போன்ற தமிழ் எழுத்துக்களை அழகாக உச்சரிப்பது, நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது என் பேச்சு இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம் என் தந்தைதான். 

சிறுவயதில் மேடையில் பேசும் போது அச்சம் ஏதும் ஏற்படவில்லையா?

இல்லை. நான் பெரியார் முன்பு பேச வேண்டும் என்பதற்காக எனக்கு என் தந்தை நிறைய பயிற்சிகள் கொடுத்தார். ஒரு குச்சியை எனக்கு முன்பாக நிறுத்தி, குச்சியின் முனையில் ஒரு தேங்காய் சிரட்டையைக் கவிழ்த்து மைக் போல செய்தார். அதை மைக்காக பாவித்து நான் பேச வேண்டும் என்று அப்பா சொன்னார். 

என் அண்ணன், அக்காக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என் எதிரே பார்வையாளர்களாக இருப்பார்கள். இப்படித்தான் எனக்கு என் அப்பா பேசுவதற்கு பயிற்சி கொடுத்தார். இதனால் எனக்கு மேடை கூச்சம் அறவே இல்லை. பாரதிதாசன் பாடல்களை 10 வரி அல்லது 15 வரி கொடுத்து மனப்பாடம் செய்யவும் அப்பா கூறினார்.

பள்ளியில் படிக்கும் போது பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறீர்களா?

ஆம். அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்புப் படிக்கும் போது, அங்கு இலக்கிய மன்றம் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அதில் கூட்டங்கள் நடக்கும். அதில் நான் தவறாமல் கலந்து கொண்டு பேசி வந்தேன். பள்ளிகளில் மாவட்ட அளவில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கின்றேன்.  நான் கல்லூரியில் படிக்கும்போது, சென்னையில் பெரியார், பாரதியார் நூற்றாண்டு விழாக்கள் நடந்தன. அதில் பங்கேற்று பேசியிருக்கின்றேன். ஆனால், எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. இரண்டாவது, 3வது பரிசுகள்தான் கிடைத்தன.

முதல் பரிசு வாங்கியவர்களின் பெற்றோர், என்னிடம் வந்து, உனக்குத்தான் முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். நீதான் நன்றாக பேசினாய் என்று பாராட்டினர். தேர்வு குறித்து சந்தேகம் எழுந்ததால் இது போன்ற பேச்சுப்போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன்.

மறக்க முடியாத நிகழ்வுகள் என்று எதைச் சொல்வீர்கள்?

தமிழக அரசின் சார்பில் 1978-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் நான் பேசினேன். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் இந்த விழாவில் பங்கேற்றார். ஆனால், நான் பேசும் போது அவர் வெளியே சென்றிருந்தார். பேசிய உரையின் ஒலிப்பதிவை கேட்ட அவர், என்னை பாராட்டியதாக திருவாரூர் தங்கராசு உள்ளிட்டோர் என் தந்தையிடம் கூறினர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் நூற்றாண்டு நடைபெற்றபோது, அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி முன்பு நான் பேசினேன். இதுவும் என்னால் மறக்க முடியாத நிகழ்வு. ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு தொடக்கவிழாவில் 'பெரியாரின் பிஞ்சுகளில்' என்ற தலைப்பில் ஒரு அரங்கம் நடைபெற்றது. அதில் பேசினேன். தஞ்சையில் நடைபெற்ற நிறைவு விழாவிலும் பேசினேன்.

1987-ம் ஆண்டு சென்னை தொலைகாட்சியில் கொடைக்கானல் ஒளிபரப்புத் தொடங்கியது. அப்போது முதல் நாள் நிகழ்ச்சியில் பட்டிமன்றம் இடம் பெற்றது. கனசிக்.சபேசன் தலைமையில் 'பெற்றோரிடம் நீண்டகாலம் வாஞ்சையுடன் இருப்பது மகனா? மகளா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் மகளே என்ற தலைப்பில் நானும் பேசினேன். தொலைகாட்சி மூலம் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சென்று சேர்ந்தது பெருமையாக இருந்தது.

இது தவிர, தமிழ்க்குடிமகன், சத்திய சீலன் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து நடத்திய பட்டிமன்றங்களிலும் பல்வேறு தலைப்புகளில் நான் பேசியிருக்கின்றேன்.

2002-ம் ஆண்டு வட அமெரிக்காவில் சிகாகோ நகரிக் தமிழ் சங்க ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது என்னுடன் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழகம் திரும்பியபோதுதான் பொடா வழக்கில் வைகோ கைது செய்யப்பட்டார். 

சிகாகோ நகரில் மாநில கவர்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தேவநேய பாவாணர் நூற்றாண்டு விழாவில் பேசினேன். எனக்கு பேசுவதற்கு 20 நிமிடம் கொடுத்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவில்லை. 3 நிமிடங்கள் கூடுதலாக பேசி, அதன் பின்னர் முடித்தேன்.

அப்போது பார்வையாளர்களாக இருந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள், என்னை இன்னும் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மறுநாள் விழாவில் பேசலாம் என்று சொன்னார்கள்.

மறுநாள், கனடா வாழ் ஈழத்தமிழர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எனக்காக அந்த நேரத்தைக் கொடுத்து அதில் பேசும்படி ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு என் தந்தையின் நண்பர் புலவர் வேல் நம்பி வந்திருந்தார். அப்போது அவர் தொலைபேசி மூலம் சேலத்தில் இருந்த என் தந்தையைத் தொடர்பு கொண்டு “உன் இடத்தில் நான் இருக்கின்றேன்" என்றார். இது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இது என்னால் மறக்க முடியாத நிகழ்வு.

இது தவிர, செம்மொழி மாநாட்டில், 'போரைப் புறந்தள்ளி பொருளை பொதுவாக்குவோம்' என்ற தலைப்பில் ஈழப்போர் பற்றி பேசினேன். ஈழப்போரின் சோகம் முடியாத நிலையில் செம்மொழி மாநாட்டில் நான் பங்கேற்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இருந்தும் அதில் பங்கேற்றேன்.

வழக்கமாக நான் பேசுவதற்கு திட்டமிடமாட்டேன். ஆனால், செம்மொழி மாநாட்டுக்காக நான் என்ன பேச வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டேன். பேசி முடித்தவுடன், எப்படி எனக்கு இதுபோன்ற தலைப்பை கொடுத்தீர்கள் என்று கலைஞரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே, நன்றாக பேசினாய் என்று பாராட்டினார். இதுவும் என்னால் மறக்க முடியாத சம்பவம்.

பொதுக்கூட்ட மேடைகளில் உங்கள் பங்கேற்பு பற்றிச் சொல்லுங்கள்?

1983-ம் ஆண்டு இலங்கை வெலிக்கடைச் சிறையில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கின்றேன். இதனைத்தொடர்ந்து ஈழப்பிரச்னை குறித்த பொதுக்கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்றிருக்கின்றேன். தமிழ்நாடு முழுவதும் தி.க சார்பில் நான் பல பொதுக்கூட்டங்களில்  பேசியிருக்கின்றேன். தேனி மாவட்டத்தில் மட்டும்தான் நான் பொதுக்கூட்டங்களில் பேசவில்லை. ராமேஸ்வரத்தில் தொடங்கினால், தென்மாவட்டங்கள் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடக்கும். சென்னையில் தொடங்கினால், வடமாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து பேசி வருவேன். பகுத்தறிவு தொடர்பாகவும், மத மூட நம்பிக்கைகள் குறித்தும் தான் நான் பேசுவேன்.

உங்களை கவர்ந்த பேச்சாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?

பேராசிரியர் க. அன்பழகன் மேடை பேச்சு எனக்கு பிடிக்கும்.  தி.மு.க.வில் அடுத்த தலைமுறை பேச்சாளர்களில் திருச்சி சிவாவின் பேச்சும் எனக்குப் பிடிக்கும். நாஞ்சில் சம்பத்தின் பேச்சும் எனக்கு பிடித்த ஒன்றுதான்.

பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீங்கள் தாக்கப்பட்டிருக்கிறீர்களா?

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முன்பெல்லாம் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் போடுவது என்பது இயலாத காரியமாக இருந்தது. எனினும் அவ்வப்போது ஏதாவது ஒரு கூட்டம் நடக்கும். 1982-ம் ஆண்டு களியக்காவிளை அருகில் ஒரு ஊரில் கூட்டம் நடைபெற்றது.    

அந்த கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்தேன். மேடைக்கு எதிரே பார்வையாளர் வரிசையில் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்த பக்தர் ஒருவர் அமர்ந்திருந்தார். என்ன நடக்கப்போகிறதோ? என்று நினைத்தேன். 

மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு கொள்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இருந்த அந்த பக்தர், எனது பேச்சை ரசித்துக் கேட்க ஆரம்பித்தார். மறுபடியும் இதே போன்ற கூட்டத்தை போட வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

திருப்பாச்சேத்தியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலர் முதுகுப் பகுதியில் சட்டைக்கு உள்ளே  ஏதோ லத்தி வைத்திருப்பது போல, குச்சியின் முனை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உள்ளூர் கட்சிக்காரரிடம் என்னவென்று கேட்டேன். அது லத்தி இல்லை. அரிவாள் என்று கூறினர். திருப்பாச்சேத்தியில் பலர் அவ்வாறுதான் இருப்பார்களாம்.

1991-ம் ஆண்டு தியாகராயர் நகரில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் எங்களை கொலை செய்யும் நோக்கத்தில் ஜீப்பை பொதுக்கூட்ட மேடையை நோக்கி ஓட்ட ஆரம்பித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி அடித்துக்கொண்டு ஓடினர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விட்டனர்.

2013-ம் ஆண்டு காவேரிப்பாக்கத்தில் பேசிக்கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்க முயன்றனர்.

பொதுக்கூட்டம் நடக்கும்போது சில இடங்களில் எதிர் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். எங்களின் நிலைப்பாட்டை அவர்கள் வரவேற்கவும் செய்திருக்கின்றனர். பெரும்பாலும் நான் எதிர் கருத்துக்களைத்தான் முன்வைப்பது உண்டு. எதிரியாகக் கருதி யாரையும் தாக்கிப் பேசுவதில்லை.

பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்குப்பிறகு, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இறந்தவர்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். தனுவும் இறந்து போனவர்தானே அவரைப் பற்றி ஏன் விமர்சிக்கின்றீர்கள்? என்று கேள்வி எழுப்பினேன்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழருவி மணியன், அருள்மொழி பேசியது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனால், என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்து வந்த மாநில அரசால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

உங்களுடைய பேச்சு பாணி என்பது என்ன?

என்னுடைய பாணியை நானேதான் உருவாக்கிக் கொண்டேன். பெரியாரின் எழுத்துக்களைப் படிக்கும்போது, எப்படியெல்லாம் விளக்கம் அளிக்கிறார் என்ற தாக்கம் என்னுள் எழுந்துள்ளது. மக்களுக்கு புரிய வேண்டும் என்பதுதான் பெரியார் நோக்கம்.    

அதேபோல மக்களுக்கு புரிய வேண்டும் என்பதால் எளிமையாக புரியும்படி என் பேச்சு பாணி இருக்கும்.

பொதுக்கூட்டம் என்பது இப்போது எப்படி இருக்கிறது?

இப்போதும் திராவிடர் கழகக்கூட்டங்களுக்கு பார்வையாளர்கள் வருகின்றனர். பெரியார், கருணாநிதி ஆகியோர் பேசுகிறார்கள் என்றால் பல மைல் தூரம் இருப்பவர்கள் கூட பஸ், ரயில் பிடித்து கூட்டம் நடக்கும் இடத்துக்கு வருவார்கள்.

தொலைகாட்சி நேரலையில் மக்கள் இப்போது பொதுக்கூட்டத்தை காண்கின்றனர். தொலைகாட்சி விவாதங்களும் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துச் செல்கின்றன.

மக்கள் இப்போது அலங்காரப் பேச்சுக்களை விரும்புவதில்லை. முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத பேச்சைத்தான் விரும்புகின்றனர்.

அடுத்ததாக...

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், சமூகப் பிரச்னைகளைப் பற்றி மேடையில் பேசினால், கொந்தளிப்பு ஏற்படுகிறது என்று அரசு கருதுகிறது. ஒரு முறை குடிநீர் பஞ்சம் குறித்து மக்களின் போராட்டத்துக்கு வித்திட்டது. அந்த பேச்சாளர் காரைக்குடியில் இருக்கக்கூடாது. வெளியூரில் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்குச் சென்றது. யார் அந்த அதிரடிப் பேச்சாளர்? அது அடுத்தவாரம்...

-கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close