Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசுக்கு பணிந்த மாநில அரசு; அணு உலை அரசியல் (பாகம் 17)

‘எப்போதும் எதற்காகவும் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள். அது மிகவும் முக்கியமானது’  - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ணு உலையை மூடும் வரை போராட்டம் என்கிற ஒரே கோரிக்கையுடன் போராட்டம் இடிந்தகரையில் நடைபெறும் போராட்டத்தை முடக்க வழி தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் திண்டாடின. அணு உலை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் உள்ள கிராமங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்க முன்வந்தது. இதன் மூலமாக போராடும் மக்களை பிரித்துவிட முடியும் என்பது அரசின் திட்டம்.

இதற்கு பலன் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் போராட்டத்தில் தீவிரம் காட்டிய கூடங்குளம், விஜயாபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதே சமயம் போராட்டத்துக்கு துளியும் சம்பந்தமே இல்லாத கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடையாக நடந்து, ‘எங்களது கிராமத்தையும் அந்த 500 கோடி திட்டம் செலவிடப்படும் கிராமங்களுக்குள் சேர்க்க வேண்டும்’ என வலியுறுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த பணம் ஒதுக்கப்பட்டதற்காக ராதாபுரம் யூனியனில் அரசுக்கு நன்றி தெர்வித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இதனையும் கவுன்சிலர்களான சகாய இனிதா, பிச்சை, சுந்தரலிங்கம் ஆகியோர் எதிர்த்தனர்.

அணு உலையை சுற்றிலும் 30 கிராமங்கள் இருக்கின்றன. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் அணு உலை அமைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அவசரகாலத்தில் செயல்பட வேண்டிய வழிமுறைகளை விளக்கும் பேரிடர் மேலாண்மை பயிற்சி கூட கொடுக்கப்படவில்லை. அதனால் அந்த பணத்தை பெறவும் கூடாது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை என காட்டமாக யூனியன் சேர்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்படி ஆளுக்கு ஆள், ‘பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கப்படவில்லை’ என்பதையே பேசி வருவது மத்திய, மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது. சர்வதேச விதிமுறைப்படி பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அத்துடன், போராட்டக் குழுவின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் அங்கும் இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டுவார்கள் என்பதை அணு உலை நிர்வாகம் அறிந்து வைத்து இருந்தது.

மக்களின் அச்சம் தீர்க்கப்படாமல் அணு உலைக்கான பணிகளை தொடங்கக்கூடாது என அறிவித்ததோடு, அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவின் போக்கிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

மத்திய அரசு கொடுத்த நெருக்கடிக்கு பணிந்ததுடன், உள்ளாட்சித் தேர்தல் முதலாக நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரை முடிந்து போனதால் அவருக்கு போராடும் மக்கள் பொருட்டாக தெரியவில்லை. அதனால் தான், ‘கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே கொடுக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழகம் தொடர் மின்வெட்டு காரணமாக தத்தளித்தது. அதனை சமாளிக்க வழி தெரியாமல் தமிழக அரசு திணறியது. அதனை திசை திருப்பும் வகையிலும், ஏதோ இந்த போராட்டம் நடப்பதால் தான் கூடங்குளம் மின்சாரம் கிடைக்காமல் தமிழகமே இருளில் இருப்பது போலவும் முதல்வரின் அறிக்கையால் மக்களிடம் சிந்தனை ஏற்படும் என்பது தமிழக அதிகாரிகளின் கணிப்பாக இருந்தது.

அரசியல் நிலவரங்கள் இப்படி மாறியதை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றார்கள். முதல்வரின் இந்த முடிவு சரியானது தான். அவர் கோரியபடி 1000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துகே கொடுக்க வேண்டும் என்று பேசினார்கள்.
 
ஆனால், மத்திய அமைச்சர் அதனை ஒப்புக்கு கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவித்தபடி 500 மெகாவாட் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் 350 மெகாவாட் மின்சாரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு எஞ்சிய 150 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் சேர்க்கப்படும் என்று உறுதியாக தெரிவித்து தமிழக அரசுக்கும் உள்ளூர் காங்கிரஸாருக்கும் கடுப்பை கிளப்பினார்.   

ஆனால், போராட்டக் குழுவினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இடிந்தகரையில் ‘அணு உலைக்கு எதிரான எழுச்சி மாநாடு’ நடத்தி அரசுக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்தனர். தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன் மற்றும் மதிமுக மல்லை சத்யா, தியாகு, வடிவேல் ராவணன் என பல்வேறு அமைப்பினரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டு அணு சக்திக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அணு உலைக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு போராட்டக்காரர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மாநாட்டில் பேசிய பழ.நெடுமாறன், ‘‘கூடங்குளம் அணு உலை அமைக்கப் பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

முதல்வர் ஜெயலலிதா இந்த மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் பிரச்னை என்ன என்பது தெரியவருமே தவிர, அதிகாரிகள் தெரிவிக்கும் தவறான தகவல்களை கேட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க கூடாது’’ என்றார் காட்டமாக.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ‘‘அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் கேட்ட ஆவணங்களை தர மறுத்த மத்திய அரசாங்கமும் அணு சக்தி கழகமும் இப்போது அந்த ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்கள். எங்கள் போராட்டம் சரியான இலக்கில் செல்வதற்கான அத்தாட்சியாக இதனை கருதுகிறோம்.

எங்களது போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் சக்திகள் சமீப காலமாக, ‘இடிந்தகரையில் போராட்டம் முடிவுக்கு வந்துருச்சு. மக்களிடம் சோர்வு வந்து விட்டது. தொய்வு ஏற்பட்டு விட்டது’ என்றெல்லாம் பொய்யான வதந்திகளை பரப்பினார்கள். அதை முறியடிக்கும் வகையில் இந்த மாநாடு நடந்திருக்கு. இதில் ஆண்களும் பெண்களுமாக பத்தாயிரத்துக்கும் அதிகமாக திரண்டு வந்த பொதுமக்கள், நாங்கள் இன்னும் அசரவில்லை துடிப்போடு இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.
 
போராட்டக் குழுவினர் உற்சாகம் அடைந்தாலே அரசுக்கும் அணு உலை நிர்வாகத்துக்கும் பொறுக்காது. அடுத்து என்ன செய்வது என நினைத்தவர்கள், பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக குடைச்சலை கொடுத்தனர். கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள மக்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டுவதால் அந்த பகுதியில் இருந்து யார் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு கிடைக்காத வகையில் போலீஸார் பார்த்துக் கொண்டார்கள்.

போராடும் மக்கள் மீது தினமும் போடப்படும் வழக்குகளில் போராட்டக் குழுவை சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட சிலரது பெயர்களை மட்டும் எழுதி விட்டு மேலும் ஆயிரம் பேர் என்றும் அல்லது மேலும் பத்தாயிரம் பேர் என்றும் சாமர்த்தியமாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். பாஸ்போர் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் பெயரை, ‘மேலும் சிலர்’ என குறிப்பிட்ட வழக்கில் சேர்த்து விடுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

படித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைத்தவர்கள், குடும்ப வறுமையின் காரணமாக நிலத்தை விற்று விட்டு ஏஜெண்டுகள் மூலம் வெளிநாட்டுக்கு செல்ல நினைத்தவர்கள் என பலரும் பாஸ்போர்ட் கிடைக்காமல் அல்லாடும் நிலைமையை உருவாக்கியதில் தமிழக காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஆனாலும், மக்கள் பொறுமை காத்து போராட்டத்தில் பங்கெடுக்கவே முன்வந்தார்கள். அதனால் பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக சுப.உதயகுமாரனுக்கும் நெருக்கடி வந்தது. அவர் வெளிநாட்டு பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றியவர் என்பதோடு வெளிநாடுகளுக்கு சென்று அணு உலைக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டு இருக்கலாம்.

அதன் காரணமாக அவருக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ‘நீங்கள் எங்களது அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்று இருக்கிறீர்கள். ‘உங்கள் மீது கூடங்குளம் மற்றும் பழவூர் காவல் நிலையங்களில் 98 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதனால் உங்களது பாஸ்போர்ட்டை எங்கள் அலுவலகத்தில் வந்து ஒப்படைக்க வேண்டும். 15 தினங்களுக்குள் இது தொடர்பான உங்களது விளக்கத்தையும் அளிக்கவும். அப்படி செய்ய தவறினால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்’ என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்து இருந்தார்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது போன்ற நெருக்கடிகளை எதிர்பார்த்தே இருந்ததால் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து அணு உலை எதிர்ப்பு பற்றி பேசியும் எழுதியும் வந்தார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கும் அரசுக்கு நெருடலாகவே இருந்தது.


போராட்டம் முடிவும் வந்தால் மட்டுமே நிம்மதி என்கிற மனநிலைக்கு சென்றவர்கள், ஏற்கெனவே அறிவித்து இருந்த 500 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டப் பணிகள் மூலமாக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
 
காவல்துறையில் பணியாற்றிய உள்ளூர் அதிகாரி ஒருவருக்கு விடுமுறை கொடுத்து இடிந்தகரையில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். சுமார் ஆறு மாதங்களாக அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையே நீடித்தது. அந்த அளவுக்கு மக்கள் மிகுந்த உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ச்சியான போராட்டத்தால் ஏற்படும் அயற்சி, உள்ளூர் போலீஸ் அதிகாரியும் தொடர்ச்சியான திசை திருப்பும் கருத்துக்கள், அதிகார நெருக்கடி, பண உதவிகள் என பல்வேறு காரணங்களால் உள்ளூரில் ஓரிருவரை கையில் எடுத்தது, காவல்துறை. 

அவர்கள் மூலமாக நடந்தது என்ன, சுப.உதயகுமாரன், புஷ்பராயன் மீது கொலை வழக்கு பதிவு செய்ததன் பின்னணி உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன் 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்..

 

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close