Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆய்வுக்கு வராத அமைச்சர்கள்... நிவாரணம் கொடுப்பதற்கு மட்டும் ஓடி வருகிறார்கள்!

'பட்ட காலிலே படும்' என்பது போல 'தானே' புயலுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தை இந்த முறையும் மழை புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இருக்கும் காட்டுமன்னார்குடி துவங்கி, கடலூர் வரை… பயிரிடப்பட்ட நிலங்கள் எல்லாம் வெள்ளநீர் சூழ்ந்து தீவுகளாய் காட்சி அளிக்கிறது.

கடந்த வாரத்தில் பெய்த மழைக்கு 35க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டுமில்லாமல் நுற்றுக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் மழைநீரில் மூழ்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்துள்ளன. மழையால் கடலூர் மாவட்டமே, சோகம் நிறைந்த மாவட்டமாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா, பிள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் பேசும்போது, "எங்க கிராமத்த சுத்தி சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீர்ல மூழ்கி இருக்கு. இந்தப் பகுதியில நெல் பயிர்தான் அதிகம் பயிரிட்டிருந்தோம். எல்லாம் தண்ணில மூழ்கி போச்சு. எனக்குச் சொந்த நிலம் இல்லாம, குத்தகைக்கு நாலு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். எல்லா பயிர்களும் தண்ணில அஞ்சு நாட்களா மூழ்கி கிடக்குது" என்றார் வேதனையுடன்.

ஆடூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன் பேசும்போது, "இந்த ஊர்ப் பக்கம் பெரியளவுல வெள்ளம் வந்து 20 வருஷத்துக்கு மேல ஆகுது. வழக்கமா வெள்ளம் வந்தா, பயிர் மூழ்கிப் போகும் அவ்வளவுதான். ஆனா, இந்த வருஷம் ரோட்டுக்கு மேல நெஞ்சளவு தண்ணீர் ஓடுச்சு.

இந்த தண்ணில ரெண்டு பேரை வெள்ளம் அடிச்சிட்டு போய்டுச்சு. பிறகு கயிறுகட்டி இழுத்து காப்பாற்றினோம். இந்த அளவுக்கு பாதிப்பு வர்றதுக்கு காரணம், எங்க கிராமத்துல இருக்கிற வடிகால் வாய்க்கால் முறையா தூர்வாராததுதான். சரியான முறையில வாய்க்கால்களை பராமரிப்பு செஞ்சிருந்தா வாய்க்கால் தண்ணீர் வெளியேறி போயிருக்கும்.

இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. இப்போ 3 ஏக்கர் பயிர்கள வெள்ளத்துல இழந்துட்டு தவிக்கிறேன்" என்றார் சோகமாக.

அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் பேசும்போது, "அமைச்சர்கள் எல்லாம், ஏதோ சம்பிரதாயத்துக்கு வந்து பாத்துட்டுப் போறாங்க. பக்கத்துல கொத்துவாச்சேரினு ஒரு கிராமம் இருக்கு. முழுக்க தண்ணீர்ல தத்தளிக்குது. மக்கள் மாடி மேலயும், தண்ணீர் டேங்க் மீதும் ஏறி உக்காந்திருக்கிறாங்க. இரவு முழுக்க சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க. சாப்பாட்டை படகு மூலமா கொண்டுப்போய் கொடுக்க சொல்லி அதிகாரிங்ககிட்ட கேட்டோம். இரவு நேரம்னு சொல்லி ஒத்துக்கல. இந்த லட்சணத்துலதான் மீட்புப்பணி நடக்குது" என ஆதங்கப்பட்டார்.

மழைப் பாதிப்புகள் பற்றிப் பேசிய இந்திய விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் விருதகிரி, "நெல், கரும்பு, வாழை என எல்லாப் பயிர்களும் மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவார்கள் என்பது தெரியவில்லை.

மழை பாதிப்புகள் பற்றிச் சரியான வல்லுநர்களைக் கொண்டு கணக்கிட்டு, உரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்படி இல்லாமல், கண்துடைப்பு நாடகமாக விதை கொடுப்பது, உரம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் விவசாயத் தற்கொலைகள் கடலூர் மாவட்டத்திலும் நடக்க வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை செய்தார்.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் இளங்கீரன், "புயல் மழையால் மக்கள் பாதிக்கப்படும்போது, நிவாரணம் கொடுப்பதோடு கடமை முடிந்தது என நடந்துக் கொள்கிறது தமிழக அரசு. இதுவரைக்கும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக… நிரந்தரத் தீர்வுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளாறு, மணிமுத்தாறு, பரவணாறு, கெடிலம், தென்பெண்ணையாறு, கொள்ளிடம் என ஆறு ஆறுகள் ஓடிட்டு இருக்கு. சேலம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், திருச்சி எனப் பல மாவட்டத்திலிருந்து வரும் தண்ணீர் இந்த ஆறுகள் மூலமாகத்தான் கடலில் கலக்கிறது. இந்த ஆறுகளை முறையாகப் பராமரிப்பு செய்தாலே மழைப் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

இதுபோல மழைப் பாதிப்புகளால் சேதத்தைக் குறைக்க ராஜேந்திர ரத்னு மாவட்ட ஆட்சியராக இருந்தப்போது, உலக வங்கி நிதி உதவியுடன் 'கருவாட்டு ஓடை' தண்ணீரை கொள்ளிடத்தில் கொண்டு விடுவதற்கு 'அருவா மூக்கு' என்ற ஒரு திட்டத்தை உருவாக்கினார். அவர் மாற்றலாகிப்போன பிறகு, அந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் இருக்கிறது. இப்போது வீராணம் ஏரியிலும் மண் அதிகமாகச் சேர்ந்துவிட்டது. இதை முறையா தூர்வாரினால், அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியும்.

காவிரி டெல்டா பகுதியின் எல்லைக்குள் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, கீரப்பாளையம் ஆகிய மூன்று தாலுக்காக்கள் இருக்கு. ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு தூர்வாருவதற்காக மொத்த டெல்டாவிற்கும் 10 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதில் இந்த மூன்று தாலுக்காவிற்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரப்படும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகாலமாகச் சரியான முறையில் நிது ஒதுக்கீடு இல்லாமல், தூர்வாரும் பணிகளைச் செய்யாததால் வாய்க்கால் முழுக்க ஆகாயத் தாமரையும், புற்களும், நெய்வேலி காட்டாமணக்கு செடிகளும் மண்டிக் கிடக்கிறது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் நிலத்தில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

'கண் கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம்' செய்த கதையாக… இதுவரை ஆய்வுக்கு வராத அமைச்சர்கள், மழைப் பாதித்த பிறகு பார்வையிட வருகிறார்கள். அதுவும் கடிவாளம் கட்டிய குதிரைகளைப் போலக் கட்சிக்காரர்கள் கைகாட்டும் இடங்களை அதிகாரிகள் படையுடன் சென்று பார்வையிடுகிறார்கள். அங்கு 5 கிலோ அரிசியும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கி போட்டோவுக்குப் போஸ் கொடுத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்குச் சரியான முறையில் நிவாரணமும், நிரந்தரத் தீர்வும் ஏற்படுத்தினால்தான் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்" என்று குமுறினார்.

ஏற்கனவே பெய்த மழைக்கு பாதிப்புகள் பெரியளவில் இருந்து வருகிறது. அடுத்ததாக ஒரு மழை பெய்ததால், அதன் பாதிப்புகள் எப்படி இருக்குமோ…? ஆனால், 'நிவாரணம் வழங்கிவிட்டோம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டோம்' என்ற செய்திகள் மட்டும் வந்தவண்ணம் இருக்கின்றன.

காசி.வேம்பையன்

படங்கள்: எஸ்.தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close