Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றிய பெரியார்! ( மைக்..டெஸ்ட்... ஒன் டூ த்ரீ - பழ.கருப்பையா)

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், சமூகப் பிரச்னைகளைப் பற்றி பேசினால் கொந்தளிப்பு ஏற்படுகிறது என்று அரசு கருதியது. ஒரு முறை குடிநீர் பஞ்சம் குறித்த அவரது பேச்சு, மக்களின் போராட்டத்துக்கு வித்திட்டது. 'அந்த பேச்சாளர் காரைக்குடியில் இருக்கக்கூடாது. வெளியூரில் தங்கியிருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்குச் சென்றது.

அந்த அதிரடி பேச்சாளர் பழ. கருப்பையா. இப்போது அ.தி.மு.க., துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. அவரிடம் பேசியதில் இருந்து....
   
மேடை பேச்சு, அரசியல் என்ற பாதையை எப்போது தேர்ந்தெடுத்தீர்கள்?   


காரைக்குடியில் பள்ளி படிக்கும் போது விளையாட்டில்தான் ஆர்வம். பள்ளி அளவிலான கால்பந்து, ஹாக்கி போட்டிகளில் விளையாடுவது என்று தீவிரமாக இருந்தேன். விளையாட்டு ஆர்வம் காரணமாக படிப்பு அவ்வளவாக ஏறவில்லை.

அப்போதைய காலத்தின் எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை 3 முறை முயற்சி செய்த பிறகே பாஸ் ஆனேன்.  ப்ரி யுனிவர்சிட்டி எனப்படும் அந்த காலத்து மேல்நிலை படிப்பையும் 3 முறை முயற்சி செய்துதான் பாஸ் ஆனேன்.

இதன் பின்னர், தந்தையின் நிதி நிறுவனத்தைக் கவனிக்க மதுரை சென்றுவிட்டேன். மதுரையில் ஓய்வு நேரத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒருமுறை, லூயி பிஷர் எழுதிய 'லைஃப் ஆஃப் காந்தி' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்க நேர்ந்தது.

தி.ஜ.ரங்கநாதன் மொழிபெயர்த்திருந்தார். காந்தி, எப்படி மகாத்மா ஆனார் என்று அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது. சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் இன்றி வாழ்ந்து வந்ததால்தான் அவர் மகாத்மாவாக உருவானார் என்று கூறப்பட்டிருந்து. அந்த புத்தகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. காரைக்குடியில் காங்கிரஸ் கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தேன். கட்சிக்காரர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

காரைக்குடியில் அப்போது 'குறளரசர் மன்றம்' என்ற அமைப்பு செயல்பட்டது. அதன் ஆண்டு விழாவில் பேசினேன். தொடர்ந்து அதன் ஆண்டு விழாக்களில் பேசி வந்தேன். இப்படித்தான் என் மேடை பேச்சு தொடங்கியது.

காமராஜர் முன்பு பேசிய அனுபவம் உண்டா?


காங்கிரஸ் கட்சியில் ஈடுபாட்டுடன் இருந்ததன் காரணமாக,  25-வது வயதிலேயே காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டேன். அப்போது 'கே' பிளான் என்ற திட்டத்தின்படி இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. 1972-ம் ஆண்டில் காமராஜர் காரைக்குடி வந்திருந்தார். மேடையில், அவருக்கு முன்பு நான் பேசினேன். காமராஜரை புகழ்ந்து தள்ளினேன். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில்தான் பேசிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு நீளமான கை. எனவே அவர் உட்கார்ந்த இடத்தில் இருந்து என் சட்டையைப் பிடித்து இழுத்து, 'ஏய்... போதும்.. போதும்.... நிப்பாட்டுன்னேன்...!' என்று சொன்னார்.

ஆனால், நான் என் பேச்சை நிறுத்தவில்லை. மாறாக, மைக்கை தூக்கி கொண்டு அவர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவரது கைக்கு எட்டாத வகையில், மைக்கை தூக்கி தூரத்தில் வைத்துக் கொண்டு பேசத்தொடங்கினேன். நான் நினைத்ததை பேசிய பின்னர்தான் முடித்தேன். முதலில் என்னை அதட்டிய காமராஜர், நான் தொடர்ந்து பேச ஆரம்பித்ததும்  சிரித்துக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தார். 

உங்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டதாமே..?


1980-ம் ஆண்டில் காரைக்குடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. அது தொடர்பான போராட்டக் கூட்டங்களில் பேசி வந்தேன். நான் பேசினால் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படுகிறது என்று சொல்லி, என் மீது போலீசார் வழக்குப் போட்டார்கள். இந்த வழக்கில் காரைக்குடி நீதிமன்றம், என்னை காரைக்குடியில் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இதனால் நான் கட்சிக்காரர்களுடன் புதுவயலில் தங்கி இருந்தேன்.
 
இளம் பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே போலீசாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து காரைக்குடி இடையர் தெருவில் பொதுக்கூட்டம் போட்டோம். அதில், 'காவல் நிலையமா... காம நிலையமா?' என்று பேசினேன். கூட்டத்துக்கு வந்திருந்த போலீசாருக்கு என் மீது கடுமையான கோபம். டி.எஸ்.பி., தடியடி நடத்த உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் வலம்புரி ஜான் சிறப்பு பேச்சாளராக பேசினார். தடியடி போன்ற சம்பவங்களை எல்லாம் என் பேச்சுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.

இப்போது மேடை பேச்சு என்பது எப்படி இருக்கிறது?

பட்டிமன்றங்கள் இப்போது தமிழை நாசமாக்கி விட்டன. இதன் தாக்கத்தால் மேடைப்பேச்சு நீர்த்துப் போய்விட்டது. மேடை பேச்சு என்பது மக்களை ஒரு சமூக மாற்றத்துக்கு மடை மாற்றம் செய்வதாக இருக்க வேண்டும். முந்தைய காலங்களில் மேடை பேச்சு என்பது, ஒவ்வொரு ஊரிலும் பொட்டல்களில், மாலைநேரக் கல்லூரி நடப்பது போல இருக்கும். மேடைகள் என்பது, படிக்காத பாமரமக்களின் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தன. ஆனால் இப்போதைய மேடை பேச்சுகள் படித்த மக்களை முட்டாளாக்குகின்றன.

உங்களுடைய மேடை பேச்சு பாணி என்ன?


என்னுடைய மேடை பேச்சு என்பது இலக்கிய நடையில் இருக்கும். இலக்கணப் பிழையில்லாமல் பேசுவேன். தனித் தமிழ் இயக்கத்தில் இருந்ததால், அதன் தாக்கம் என் பேச்சில் எதிரொலிக்கும். என்ன பேசுவது என்பது குறித்து முன்கூட்டியே மனதில் தயார் செய்து கொள்வேன். சிறிய குறிப்புகளையும் வைத்துக்கொள்வேன். தவறு இல்லாமல் பேச வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். தொடர்ந்து பல்வேறு புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். எனது மேடைப் பேச்சுக்கு புத்தகங்கள் உதவியாக இருக்கின்றன.

உங்களுக்கு பிடித்த பேச்சாளர்கள் யார்?


ஜே. கிருஷ்ண மூர்த்தியின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை ஜே.கே.யின் உரை இருக்கும். அவரது உரையைக் கேட்பதற்காக நான் ஆண்டுதோறும் சென்னை வந்து விடுவேன். அவரது ஆழமான, சிந்தனையுள்ள பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அதேபோல ஓஷோவின் பேச்சும் எனக்கு பிடிக்கும். அவரது உரையை கேட்பதற்காக, நானும் இன்னொரு நண்பரும் சென்னையில் இருந்து கார் மூலம் புனே சென்றோம். ஒருவாரம் புனேயில் இருந்து, அவரது பேச்சைக் கேட்டோம். அதன் பின்னர் சில மாதங்களில் அவர் இறந்து விட்டார். புனே பேச்சுத்தான் அவரது கடைசி பேச்சு. அவரது கடைசிப் பேச்சை கேட்டவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பெரியாரின் பேச்சும் எனக்குப் பிடிக்கும். பெரியார் பேச்சை பலமுறை கேட்டிருக்கின்றேன். தர்க்கரீதியாகப் பேசுவார். அவரது பேச்சைக் கேட்கும்போது அவர் நம் மனதை அசைத்து விடுவார். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்  பெரியார். வேதம், சமஸ்கிருதம், பகவத் கீதை ஆகிய மேல் ஜாதி அழுத்தத்தில் இருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் விடுவித்தவர் பெரியார்.

பெரியார் தமிழகத்தில் பிறந்திருக்காவிட்டால், தமிழ்நாடு ஒரு ஒடிசா மாநிலம் போல வழக்கமான, சாதாரணமான மாநிலமாக இருந்திருக்கும் என்பது என்கருத்து.  எனினும் கொள்கை ரீதியாக அவரது சில பேச்சுக்களை விமர்சனம் செய்துள்ளேன்.

உங்களுடைய கருத்துக்காக நீங்கள் எதிர் அணியினரால் தாக்கப்பட்டிருக்கிறீர்களா?

தி.மு.க.ஆட்சியின் போது செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போது ஜெயா டி.வி.யில் ரவிபெர்னார்ட் என்னை நேர்முக பேட்டி எடுத்தார். அதில் சில பகுதிகளை திரும்ப, திரும்ப ஒளிபரப்பினார்கள்.

அந்த பேட்டியில், 'ஈழத்தை சுடுகாடு ஆக்கிவிட்டு செம்மொழிக்கு என்ன மாநாடு?' என்று கேள்வி எழுப்பி இருந்தேன். 'மொழி என்பது என்ன, வெறும் மொழி மட்டுமா? இனத்தின் முகம் அல்லவா? இனத்தை அழித்துவிட்டு, மொழிக்கு என்ன மாநாடு?' என்று கூறியிருந்தேன். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் எனது வீட்டுக்கு வந்த சமூக விரோதிகள் சிலர், வீட்டை அடித்து நொறுக்கினர். என் தலையை சுவரோடு வைத்து அழுத்தி, முகத்தில் குத்தி தாக்குதல் நடத்தினர். இது போன்ற எதிர்ப்புகள் எனக்கு புதிது அல்ல என்பதால், இதை நான் பெரிதுபடுத்தவில்லை” என புன்னகையை தவழவிட்டபடி பேட்டியை முடிக்கிறார் பழ. கருப்பையா.

அரசியல் மேடைகள் தவிர, இலக்கிய கூட்டங்களிலும் பழ.கருப்பையா பேசி வருகின்றார். அவரது பேச்சைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

அடுத்ததாக...

"பேசினால் வெடிகுண்டு வீசுவோம்" என்ற அச்சுறுத்தலுக்கு இடையே அந்த கூட்டம் நடக்கிறது. "எதையும் எதிர்கொள்வோம்" என்று மேடையில் முழங்குகிறார் அந்தப் பேச்சாளர். துணிச்சலான பேச்சுக்குச் சொந்தக்காரரான அந்த பேச்சாளர் யார்? அது அடுத்தவாரம்...

- கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவம்...

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close