Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வந்த அதிர்ச்சி கடிதம் ; அணு உலை அரசியல் (பாகம் 18)

‘அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒருமுறை சந்திப்பது நல்லது’ - பாவேந்தர் பாரதிதாசன்

பாம்பும் சாக வேண்டும், கம்பும் உடையக்கூடாது என்கிற ரீதியிலான நடவடிக்கையை கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கையாண்டதால் குழப்பங்கள் கூடியதே தவிர குறையவில்லை. தொடர்ந்து நடந்த போராட்டத்தை தடுக்க, முறையான வழிமுறைகளை கடைபிடிக்க அரசு நிர்வாகம் தவறியதால், மக்களிடம் கோபமும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது.

இந்த நிலையில், கூடங்குளம் மற்றும் அதனை சுற்றிலும் இருந்த மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி,  அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டன. இது இளைஞர்களிடம் அணு உலை மீதான எதிர்ப்பை அதிகரிக்க வைத்தது. அத்துடன், தினந்தோறும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிலும் தேசத்துரோகம், தேசத்துக்கு எதிராக போரிடுதல் ஆகிய பிரிவுகளில் ஆயிரத்துக்கும் ஏற்பட்ட வழக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், போராட்டம் நடக்கும் இடிந்தகரை அமைந்துள்ள விஜயாபதி பஞ்சாயத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. குறிப்பாக, அரசு அறிவித்த 500 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக, பஞ்சாத்து தலைவர்களுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சில பஞ்சாயத்து தலைவர்கள்,  அந்த நிதியை பெற்று கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதனை விரும்பவில்லை. 'தாங்கள் மாதக்கணக்கில் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுக்கும் அரசு நிர்வாகம் வழங்கும் பணம் தங்களுக்கு தேவையில்லை' என்பது அவர்களது கருத்து.

இந்த சூழலில், விஜயாபதி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான சகாய பெட்லின் எஜித்தின் கருத்து வேறுபாடு காரணமாக போராட்டக் குழுவில் இருந்து ஒதுங்கினார். மக்களின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கி இருக்கும் நிதியை பெறுவதில் தவறு இல்லை என்றும், இதற்கு போராட்டக்குழு தடையாக இருப்பதாகவும்  தெரிவித்து விட்டு போராட்டத்தில் இருந்து ஒதுங்கினார். அவரின் இந்த பின்வாங்கல் போராட்டக் குழுவினருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உளவுத்துறையினர் நம்பினர். ஆனாலும், எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அதனால் அடுத்த அதிரடியில் காவல்துறை இறங்கியது.

தங்களுக்கு சாதகமாக இருந்த பஞ்சாயத்துத் தலைவரின் மூலமாக அடுத்த காய் நகர்த்தலில் ஈடுபட்டனர். அதன்படி, பஞ்சாயத்து தலைவரின் கணவர் சகாயராஜ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கூடங்குளம் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். அதில், சுப.உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோரின் தூண்டுதலில், இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களை தாக்கி விட்டதாக குறிப்பிட்டனர். அந்த புகாரின் அடிப்படையில் உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது கூடங்குளம் போலீஸ்.

இருக்கும் வழக்குகள் போதாது என்று கொலை முயற்சி வழக்கும் பதிவானதால் போராட்டத்தை முடக்கிவிடலாம் என்பது காவல்துறையின் நம்பிக்கை. ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை.

அடுத்ததாக, கூடங்குளம் அணு உலையின் முகவரிக்கு சில கடிதங்கள் வந்தன. அதில், ‘திட்டமிட்டபடி அணு உலைக்கு வெடி வைக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதங்கள், போராட்டம் நடக்கும் இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த ஒரு காண்ட்ராக்டர், இரு ஊழியர்கள் பெயரில் வந்திருந்தது. போராட்டம் காரணமாக இவர்கள் அணு உலைக்கு வேலைக்கு செல்லாமல் இடிந்தகரை கிராமத்திலேயே முடங்கிக் கிடந்தனர்.  இவர்களின் பெயரில் அணு உலைக்கு வெடி வைக்க வேண்டும் என்கிற கடிதம் வெளிவந்ததால் அவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதனிடையே, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதும்,  பல்வேறு பஞ்சாயத்து தலைவர்களும் தங்களது கிராமத்துக்கு மருத்துவமனை வேண்டும், இலவச வீடுகள் கட்டித்தர வேண்டு, குடிநீர் திட்டம் வேண்டும், சாலை மேம்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் தினமும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்தனர். அணு உலைக்கு அருகில் உள்ள 18 கிராமங்களுக்கு மட்டுமே இந்த நிதி மூலமாக பணிகள் செய்யப்படும் என அறிவித்த போதிலும், சற்று தூரத்துல் இருக்கும் இருக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் தங்களுக்கும் நிதியை பகிர்ந்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

‘அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதற்காக எங்களுக்கு நிதி கொடுக்க மறுப்பது நியாயமா? இப்படி செய்தால் நாங்களும் அணு உலையை எதிர்த்து போராடுவோம். அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டால் எங்கலையும்தானே பாதிக்கும்?’ என ஆதங்கப்பட்டதோடு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்திய அணு சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அப்போது ஆவரைகுளம் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர் தலைமையில், 32 பஞ்சாயத்துகளின் தலைவர்கள் அவரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில், 'அணு சக்திக் கழகம் இந்தப் பகுதியில் அடுத்த இரு அணு உலைகளை அமைக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை வைத்து அவரை அசர வைத்தனர். மிகுந்த உற்சாகமான அவர், ‘இந்த பகுதி மக்களுக்காக அணு சக்தி கழகம் சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன்’ என நம்பிக்கை அளித்தார்.

இத்தகையை சூழலில், இந்தியாவுடன் அணு உலைக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ரஷ்யாவின் ஆட்டம்ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவரான லிமெரிகோ வெலரி, கூடங்குளம் வந்தார்.

அணு உலைகளை சுற்றிப் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அணு உலைகளை உருவாக்குவதில் எங்கள் கம்பெனி சிறப்பு வாய்ந்தது. ஃபுகுஷிமா விபத்து நடந்த பிறகும் சீனா, வியட்நாம், பெலாரஸ், துருக்கி, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் 20 அணு உலைக்கான பணிகளை செய்கிறோம். இங்கே விரைவில் மூன்றாவது அணு உலைக்கான பணியை தொடங்குவோம்’ என்றார் அசாத்தியமான நம்பிக்கையுடன்.

ஆனால் போராட்டக் குழுவினரின் சந்தேகம் வேறு மாதிரியாக இருந்தது. ‘அணு உலையில் மாதிரி எரிபொருளை வைத்து சோதனை நடத்தியதில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கு. அந்த எரிபொருளை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ரஷ்ய விஞ்ஞானிகளை அவசரமாக கூப்பிட்டிருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள் வந்து அந்த கோளாறை சரி செஞ்சிருக்காங்க. யுரேனியம் வைத்த பின்பு இது போன்ற சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?’ என கோபப்பட்டார்கள், போராட்டக் குழுவினர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆந்திராவில் விஜயவாடா அருகில் நம்பூர் என்கிற கிராமத்தில் அணு உலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை அங்குள்ள மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 11 பேர் கூடங்குளம் வந்தனர். கூடங்குளத்தில் தங்கி இருந்து போராட்டத்தை பார்வையிட்டு அதே உத்வேகத்தை தங்கள் பகுதியில் காட்ட திட்டமிட்டனர்.

அந்த குழுவைச் சேர்ந்த ஷைலேந்திரா, ‘‘நாங்கள் இந்த போராட்டத்தை பார்த்து பாடம் படிக்கவே வந்தோம். ஆனால் மக்களின் கஷ்டத்தை நேரில் பார்த்ததும் அவர்களோடு இணைந்து நாங்களும் போராட வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டோம். அதனால் நாங்களும் 72 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டு இடிந்தகரை மக்களுக்கு எங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினோம்’’ என்றார். இப்படியே தொடரும் போராட்டத்தின் விரிவை கண்டு அஞ்சியது கூடங்குளம் தரப்பு.
 
இந்த சூழலில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியது அரசு. தடியடி, துப்பாக்கிச் சூடு என நடந்த வன்முறை பற்றிய தகவலை அடுத்த வாரம் பார்க்கலாம்...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close