Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தம் சரணம்! (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 14)

டல் முழுவதும் தீ ஜுவாலைகள் ஆக்கிரமித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும், எந்தவிதமான சிறு அசைவோ கதறலோ இல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார் இந்த புத்த மதத் துறவி. மதங்களின் பெயரினாலான அடக்குமுறைக்கு எதிராக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தன் உடலையே போராட்டக் கருவியாக முன்னிறுத்திய இவரின் பெயர் ”திக் குவாங் டுக்” (Thích Quảng Đức).

சம்பவம் நடந்து ஆண்டுகள் பல கடந்துவிட்ட போதிலும் பார்ப்பவர்களின் நெஞ்சை இன்றளவும் உறைய வைத்துக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம், தெற்கு வியட்நாமில் தலைவிரித்தாடிய மதப்போரின் ஆவணம்.

’’உலக வரலாற்றிலேயே எந்த ஒரு பத்திரிக்கை புகைப்படமும் இந்த அளவிற்கு தாக்கத்தையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தியதில்லை’’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியால் வர்ணிக்கப்பட்ட இந்தப் புகைப்படம் மால்கம் ப்ரவுன் என்ற போட்டோகிராபரால் (Malcolm Browne) எடுக்கப்பட்டது.

1954-ல் ஜெனீவா மாநாடு மூலமாக தெற்கு வியட்நாமின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிக்கு வந்தவர் ”நெகோ தின் திம்” (Ngo Dinh Diem). கத்தோலிக்க கிறிஸ்துவரான இவர் தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். இந்த ஒரு காரணம் போதாதா அமெரிக்காவிற்கு...

உடனே களத்தில் இறங்கியது. அவர் வெற்றிக்கான மறைமுக உதவிகளை செய்து 'நெகோ தின் திம்'மை ஆட்சியில் அமர வைத்து வழக்கம்போல தனது நாரதர் வேலையை தொடங்கி வைத்தது சி.ஐ,ஏ.

வியட்நாமின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரான இவர், சுமார் 90 சதவீதம் புத்த மதத்தால் நிரம்பியிருந்த நாட்டை தன்னுடை சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அமெரிக்கா பின்னணி கொடுத்த ஆணவத்தால் புத்த மதத்தினரின் மீது கடுமையான அடக்குமுறைகளை பிரயோகிக்கத் தொடங்கினார்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பதவிகளில் தன்னுடைய கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களையே அமர வைத்தார். ராணுவம், போலீஸ் போன்ற பதவிகளிலும் இந்த போக்கையே கடைபிடிக்கத் தொடங்கினார். கல்வி, வர்த்தகம் போன்றவற்றிலும் இவரது கொள்கைகள் அனைத்தும் கத்தோலிக்க மதத்தினைச் சார்ந்ததாகவே இருந்தது. விளைவு... பெரும்பான்மை சமூகமான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதோடு, அரசுக்கும் புத்த மதத்தினருக்குமான இடைவெளியும் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், 1963 மே மாதம், கௌதம புத்தரின் பிறந்த நாளை முன்னிட்டு 'வேசாக்' (vesak) பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் புத்த பிட்சுகளும், புத்த மடங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் புத்த மதக் கொடிகளுக்கும் வழிபாடுகளுக்கும் தடை விதித்தது 'நெகோ தின் திம்'மின் அரசு. மேலும் நகரம் மற்றும் கிராமங்கள்தோறும் கத்தோலிக்க மதத்தின் கொடிகளை மட்டுமே பறக்கவிட ஆணை பிறப்பித்ததோடு அவர்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.

இப்படியான செயல்கள்தான் மதக் கலவரம் உருவெடுக்கக் காரணமாகவும் அமைந்தது. இதனால் தங்களுக்கெதிரான அரசு ஆணைகளை எதிர்த்துப் போராட்டதில் குதித்தனர் புத்த மதத்தினர். தடைகளை மீறி புத்தமதக் கொடிகளை அனைத்து வீடுகளிலும் வெகுவாகப் பறக்கவிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயலில் இறங்கினர் துறவிகள்.

இதனை தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் எரிச்சலுற்ற அரசு அவர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது புத்தத் துறவிகள் இறந்ததோடு பதினான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த செயலுக்கு பொறுப்பேற்று இருக்க வேண்டிய மத்திய அரசோ, கம்யூனிஸ்டுகள் மீதே குற்றம் சுமத்தியது. ஏற்கனவே கொதிப்பில் இருந்த பொதுமக்களையும் புத்தமதத் துறவிகளையும் அரசின் இந்தக் குற்றச்சாட்டு மேலும் கோபமூட்டியது.

இதனால், மே 10-ம் தேதி இந்தப் படுகொலைகளுக்கு எதிராகவும், மத சுதந்திரம், சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தியும் போராட்டத்தில் இறங்கினர். சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடர் போராட்டம் வலுவடைந்தததால் திணறியது தெற்கு வியட்நாம் அரசு.

போராட்டத்தை கட்டுப்படுத்த செய்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போன நிலையில், ஜுன் 3-ம் தேதி ரசாயன குண்டுகளை வீசியது போலீஸ். இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 67 பேர் படுகாயமடைந்தனர். அரசின் ரசாயன குண்டுகளை எதிர்கொள்ள முடியாததால் போராட்டக்கார்கள் பின்வாங்கினார்கள்.

இந்நிலையில்தான், புத்த மதத்தினர் குறி வைத்துத் தாக்கப்படுவதையும், அவர்களின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் ஜூன் 11-ம் தேதி அன்று “திக் குவாங் டுக்” என்ற துறவி சயகான் (Saigon) என்னுமிடத்தில் தன்னைத் தானே எரித்து கொண்டார். இந்தக் கொடூரமான சம்பவத்தின் புகைப்படம் அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளிலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு உலக நாடுகளின் பார்வையும் வியட்நாமை நோக்கித் திருப்பியது. பின்னர் 1963 நவம்பர் 2-ம் தேதி அன்று நடந்த ராணுவப் புரட்சியும் அதிபர் நெகோ தின் திம்மின் படுகொலையையும் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் புகைப்படத்தை எடுத்த மால்கம் ப்ரவுன் ஏப்ரல் 17, 1931-ல் பிறந்தார். அமெரிக்கரான இவர் அசோசியேட் பிரஸ் (AP) எனும் நிறுவனத்தில் பணியாற்றியவர். போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் ப்ரவுன் தெற்கு வியட்நாமில் இருந்த புத்தத் துறவிகளை தனது புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தார். இதன்மூலம் ப்ரவுனுக்கும் துறவிகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டிருந்தது. அப்படியான ஒரு தருணத்தில்தான் சில புத்தத் துறவிகள் ப்ரவுனிடம் தாங்கள் ஒரு நூதனமான போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அதனை உங்கள் புகைப்படத்தின் மூலம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதைப்பற்றி போட்டோகிராபர் ப்ரவுன் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், “என்னிடம் தெரிவித்த இந்தத் தகவலை மற்ற உலக நாடுகளில் இருந்து வந்திருந்த அனைத்துப் புகைப்பட பத்திரிக்கை யாளர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். ஆனால் மற்ற பத்திரிகையாளர்கள் இப்படியான தகவல்களை பலமுறை கேட்டு சலிப்பில் இருந்ததால் அனைவரும் புறக்கணித்துவிட்டனர்.

ஆனால் என்னுடைய மனம் மட்டும் ஏதோ ஒரு பெரிய செயல் நடக்கப்போவதாக சொன்னது. சம்பவம் நடந்த அன்று காலையில் இருந்தே சயகான் பகுதி முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. அன்றைய தினம் பெண் புத்தத் துறவிகளும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். பிறகு நகரின் நடு வீதிக்கு வந்த துறவிகள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்தனர். சற்று நேரத்தில் அங்கே வந்த ஒரு காரில் இருந்து இரண்டு இளம் புத்தத் துறவிகளுடன் வந்து இறங்கிய ஒரு வயதான துறவி, வேறு எங்கும் பார்க்காமல் நேராக சென்று வீதியின் மையத்தில் வரையப்பட்டிருந்த வட்டத்திற்குள் அமர்ந்தார்.

பின் அந்த இளம் துறவிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனை காரில் இருந்து எடுத்து வந்து உடனடியாக வட்டத்தில் நடுவில் இருந்த துறவியின் மீது ஊற்றினர். உடனே அந்த வயதான துறவி தான் வைத்திருந்த தீப்பெட்டியை உரசி தனக்குத் தீ வைத்துக்கொள்ள, அசுர வேகத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. ஆனால் அந்த சமயத்திலும் கூட எந்த ஒரு அசைவையும், சத்தத்தையும் அவர் எழுப்பாமல் அமைதியாகவே தீயில் கருகினார். அவர் எப்போது இறந்தார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

உடல் முழுவதும் கருகிய நிலையில் கரிக்கட்டையாக அவர் கீழே சாய்ந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தவுடன் மற்ற துறவிகள் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இந்த துயரமான அதேசமயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தினை பதிவு செய்த ஒரே போட்டோகிராபர் நான் மட்டுமே. மேலும் விலை மலிந்த, ஜப்பான் தயாரிப்பான பெட்ரி (Petri) என்ற கேமராவில்தான் இதைப் பதிவு செய்தேன். மொத்தம் பத்து ரோல்கள் பயன்படுத்தி 310 படங்களைப் பதிவு செய்தேன் என்றதுடன், இந்த சம்பவம் வேறு ஒரு சமூகத்தில் நடந்திருக்குமானால் அது பெரிய மதக் கலவரமாகவோ குண்டு வெடிப்பாகவோ மாறியிருக்கும்" என்று பதிவு செய்திருக்கிறார்.

ப்ரவுனின் இந்தப் புகைப்படத்திற்கு அதே வருடத்திற்கான புலிட்சர் விருதும், வேர்ல்டு பிரஸ் போட்டோ உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் கிடைத்தன.

புகைப்படம் பேசும்...

- ஜெ.முருகன்


Displaying World-shocking-Photos_11.jpg

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close