Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுந்தராம்பாளை நேரில் தேடிவந்த கிட்டப்பா ( தமிழ் சினிமா முன்னோடிகள்: தொடர்-16)

லங்கையில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த அந்த இசைக்குயிலுடன் எஸ்.ஜி. கிட்டப்பா இணைந்து நடிப்பார் என அப்போது யாரேனும் சொல்லியிருந்தால், அவர்களே அதை நம்பியிருக்கமாட்டார்கள். தனித்தனியே புகழ் பெற்றிருந்த அவர்கள் இருவரையும் இணைந்து நடிக்கவைத்தால், நாடகத்திற்கு இன்னும் புகழும் வசூலும் கிடைக்குமே என காண்ட்ராக்டர்கள் திட்டமிட்டதன் பலன் அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதன்படி இரு தரப்பிலும் பேசி, அதற்கு சம்மதம் பெறப்பட்டது.

கிட்டப்பாவுக்கு ஈடான புகழுடன் அன்று இலங்கையில் முகாமிட்டிருந்த அந்த கந்தர்வ கானக் குயில் யார் தெரியுமா? எட்டுக்கட்டை சுருதியிலும் வேட்டுச்சத்தமாக வெளிக் கிளம்பும் அவரது நாதத்தை, இசைப்புலமை இல்லாதவர் கேட்டாலும் அவரது காதுகள் புடைத்துக்கொள்ளும். அத்தகைய திறமைப் பெற்றவர், அந்த பெண்மணி. தன் பாட்டு திறமையால், நாட்டு விடுதலைக்கு மக்களைத் தூண்டிய, நீதிக் கட்சியை தன் வெண்கலக் குரல் பாட்டுப் பிரசாரத்தால் வீட்டுக்கு அனுப்பி, காங்கிரஸ் கட்சியை சென்னை ராஜதானியில், ராஜாஜி தலைமையில் ஆட்சியில் அமர்த்திய அந்த தேசபக்தை வேறு யாருமல்ல...கே.பி.சுந்தராம்பாள்!

கொடுமுடி கோகிலம்

தமிழ் மேடை நாடக ராணியாக வலம் வந்த கே.பி.சுந்தராம்பாள் பிறந்தது, கொடுமுடி. 1908 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுமுடியில் பிறந்ததால் கொடுமுடி கோகிலம் என்ற பெயரும் இவருக்குண்டு.

சிறு வயதில் ஓடும் ரயிலில் இவர் ஒருமுறை பாட, அது அதே ரயிலின் இன்னொரு பெட்டியில் பயணம் செய்த F.G. நடேசன் என்கிற ரயில்வே அதிகாரியை கிறங்க வைத்தது. கானமழையில் நனைந்த அவர், கே.பி. சுந்தராம்பாளை P.S. வேலு நாயர் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். நாடக உலகிற்கு ஒரு இசை பொக்கிஷம் கிடைத்தது.

இளம் சிறுமியாக நாடக் கம்பெனியில் சேர்ந்த சுந்தராம்பாள்,  ''பாலபார்ட் வேடத்திலிருந்து வெகு சீக்கிரத்தில் புரொமோஷன் பெற்று, 'ஸ்திரிபார்ட் நடிகையாக முன்னேற்றம் கண்டார். கொட்டகையில் அமர்ந்திருக்கும் கடைசி ரசிகனின் காதுக்குள் பாயும் உச்சஸ்தாயி குரல் வளம் சுந்தராம்பாளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அக்கால நாடக மேடைகளில் அரங்கேறிய 'வள்ளி திருமணம்' , 'நந்தனார்', 'பவளக்கொடி', ''சாரங்கதாரா', 'ஆண்டாள் திருக்கல்யாணம்' போன்ற நாடகங்கள் சுந்தராம்பாளின் ஸ்திரிபார்ட் வேடத்துக்கு நல்ல விருந்தாக அமைந்தன. தமிழ் நாடக மேடையில் தன் இனிய சாரீரத்தாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்திக் கொண்டு நாடகமேடை ராணியானார் சுந்தராம்பாள்.

1926-ம் ஆண்டு இரண்டு வருட காண்ட்ராக்ட்டில் நாடகத்தில் நடிக்க இலங்கைக்கு சென்றார். அப்பொழுது அவருக்கு வயது 18. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கொழும்பு (Colombo) நகரத்தில் நாடகங்களில் கல்திரிபார்ட்டாகவும், ராஜபார்ட்டாகவும் வேலன், வேடன், விருத்தன், நாரதர், நந்தனார் போன்ற வேடங்களில் நடித்தார்.

இலங்கை கொழும்பு நகரில்,  சுந்தராம்பாள் வெற்றிக் கொடி நாடக மேடையில் பறந்து கொண்டிருந்த சூழலில்தான் கிட்டப்பாவின் இலங்கைப் பயணம் அமைந்தது.

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடிக்கவுள்ள செய்தி, இலங்கை முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஒரே நாளில் 'ராஜபார்ட் கிட்டப்பா- சுந்தராம்பாள் இணைந்து நடிக்கும்...' என கொழும்பு நகர் முழுவதும் விளம்பர தட்டிகள் முளைத்தன. ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்திருக்கத் துவங்கினர். அந்த நாளுக்கு முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது. கொழும்புவில் தங்கியிருந்த கிட்டப்பா, திடீரென ஒருநாள் சுந்தராம்பாள் தங்கியிருந்த இடத்திற்கு தேடி வந்தார்.

திடீர் சந்திப்பு


அந்தக் காட்சியை கே.பி. சுந்தராம்பாள் பின்னாளில் ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

“ ராஜா மாதிரி ஒரு ஆள் உன்னைப் பார்க்க வந்திருக்கிறான் என்று என் தாய் பாலம்பாள் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளும் முன்பே, சத்தமில்லாமல் ஒருவர் வந்து என் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். நான் பிரமித்துப் போய் நின்று கொண்டிருந்தேன். 'சிறிதும் கூச்சமில்லாமல் என் கட்டிலின் மேல் வந்து உட்காருவதாவது..!' என்று கோபத்துடன் எண்ணினேன். ஆனால் அதற்குள் அவர் பேசத் தொடங்கி விட்டார். என்ன கம்பீரமான தோற்றம்...என்ன தெளிவான வாக்கு... 'எனக்குரிய சுந்தரபுருஷன் வந்து விட்டார்' என்று எனக்கு அசரீரிபோல் தோன்றியது.

வந்தவர், ''நாடகத்துக்கு முன் ஒத்திகை வேண்டும்" என்றார். "வேண்டாம்" என்றேன் நான். என் பாடல்கள் ஒரு புதுவிதம் என்றார். எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்கிறேன் என்றேன்.  ''நீ ஏமாந்து போவாய்" என்றார். "யார் ஏமாந்து போகிறவர் என்பது பின்னாலே தெரியும் என்றேன். என் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். நானும் சிலைபோல் நின்று கொண்டு அவர் முகத்தை அப்படியே மனதுக்குள் விழுங்கி கொண்டிருந்தேன். இதுதான் எங்கள் முதல் சந்திப்பு“

1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கிட்டப்பா - சுந்தராம்பாள் நடித்த 'வள்ளித்திருமணம்' நாடகம் கொழும்புவில் நடந்தது. நாடகத்தின் குறிப்பிட்ட பாடலை கிட்டப்பா தன்னுடைய பாணியிலேயே அற்புதமாக பாட, அந்த குரலுக்கு ஈடுகொடுத்து தன் கம்பீர குரலால் மயக்கினார் சுந்தராம்பாள். கொழும்பு ரசிகர்கள் இருவரின் நடிப்பையுமே சமமாக பாவித்து பாராட்டினர். 'நாடக வாழ்வுக்கு ஏற்ற சரியான ஜோடி!' என்று இருவரது நடிப்பையும் சிலாகித்துப் பேசினர்.

எஸ்.ஜி.கிட்டப்பா, சங்கராபரணம் ராகத்தில் பாடுவதில் தனி நிபுணத்துவம் பெற்றிருந்தார். வெண்கலக் குரலில் தமிழை உச்சரிப்பவர் கே.பி.சுந்தராம்பாள். தமிழ் உச்சரிப்பில் நறுக்கு தெரித்தாற் போல் தமிழை உச்சரிப்பதில் சமர்த்தர். கிட்டப்பாவிற்கும் சுந்தராம்பாளுக்குமுள்ள ஒற்றுமை- இருவருமே வறுமை பின்னணியில் மேடைக்கு பாட வந்தவர்கள். தொழிலில் சரிசமமாக புகழ்பெற்றவர்கள்.

இந்தியாவில் நடந்த இரண்டாவது சந்திப்பு


1927- ல் காரைக்குடியில் இருவரும் சேர்ந்து வள்ளித்திருமணம் நாடகத்தில் நடித்தனர். இங்குதான் அவர்களின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது அங்கு நடந்த நாடகத்தில் கிட்டப்பா வேலன் - வேடன் - விகுத்தன், வேடங்கள் ஏற்று நடித்தார். கிட்டப்பா, தியாகராய கீர்த்தனையை உச்சிஸ்தாயில் பாடிக்கொண்டே மேடைக்கு வந்தால், குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். அவ்வளவு நிசப்தம். சில சமயங்களில் வள்ளி நாடகத்தில் ''அம்மா ராவம்ம" என்று கல்யாணி ராகத்தில் கிட்டப்பா பாடிக்கொண்டே வருவார். சுந்தராம்பாள் ''சாக்ஷாத்காரணி பாடிக்கொண்டே வருவார். ரசிகர்கள் உற்சாகத்தில் எழுப்பும் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். அவ்வளவு ரம்மியமான பாடல் காட்சி அது.

இதன்பின் இருவரும் பர்மா சென்று ரங்கூனில் நாடகங்களில் நடித்து நல்ல வருவாய் பெற்றனர். சில மாதங்கள் கடந்து இந்தியா திரும்பினர். இதன் பின்னர் கிட்டப்பா மீண்டும் கண்ணையா கம்பெனியிலேயே சேர்ந்து விட்டார். அங்கு நடைபெற்ற 'ஆண்டாள் திருக்கல்யாணம்' நாடகத்தில்,  கிட்டப்பா அசல் ஆண்டாளாகவே தோன்றி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்துவார். கிட்டப்பா, கண்ணையா கம்பெனியில் நடித்து வந்தபோது, சுந்தரம்பாள் தனியாக ஸ்பெஷல் நாடகங்களில் நடித்து வந்தனர். நாளோரு மேனியும் பொழுதொரு  வண்ணமுமாக அவர்களின் மானசீக காதல் வளர்ந்தது.

திருநெல்வேலியில் நந்தனார் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது கே.பி.எஸ் நாடகத்தில் வேதியராக நடித்து வந்தார். வேதியர் வேடத்திற்கான பாடலையும், பாடத்தையும் கிட்டப்பா, சுந்தராம்பாள் வீட்டிற்கே வந்து சொல்லிக் கொடுத்தார். பாட வாத்தியார் என்ற பெயரில் சுந்தராம்பாள் மீதுள்ள தனது மையல் அவ்வப்பொழுது சைகைகள் மூலம் தெரிவித்தார்.

சுந்தராம்பாளின் திருநெல்வேலி வீட்டிற்கு கிட்டப்பா வந்தார். அவர் உள்ளத்தில் கள்ளம் இருப்பதை அவருடைய பார்வை காட்டிக் கொடுத்து விட்டது. ''எங்கே வந்தீர்கள்?" என்றார், சுந்தராம்பாள். பதில் சொல்லமால் மௌன சிலையாக அங்கேயே நின்று கொண்டிருந்தார் கிட்டப்பா. அவர் எண்ணம்  கே.பி. சுந்தராம்பாளுக்கு புரிந்தது. தன்னை கடைசி வரை காப்பாற்றுவதாக அவரிடம் உறுதிமொழி வாங்கி கொண்ட பின்னரே, அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

திடீர் சிக்கல்


சுந்தராம்பாள் வீட்டிலிருந்து இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றியது. தாய்மாமன் மலைக் கொழுந்து இந்த திருமணத்தை விரும்பவில்லை. கடும் எதிர்ப்பையும் மீறி கிட்டப்பா- சுந்தராம்பாள் திருமணம் 1927 -ம் ஆண்டு நடந்தது. கிட்டப்பாவை காந்தர்வ மணம் செய்து கொண்டார். மாயவரம் கோயிலில் இறைவன் சன்னதியில் இருவரும் கணவன் மனைவியாக இணைந்தனர். திருமணத்திற்கு பின்னர் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து 'ஶ்ரீகானசபா' என்ற நாடக கம்பெனி தொடங்கி தமிழ் நாடெங்கும் சுற்றி நாடகங்களை நடத்தினர்.

அரங்குக்கு வெளியேதான் தம்பதியர். மேடை ஏறிவிட்டால் அவர்கள் நடிப்பில் அனல் பறக்கும். நாடக பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள். ஒரு நாடகத்தில் சத்யபாமாவாக தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ணனாக தோன்றிய கிட்டப்பா வேடிக்கையாக, ''என்ன பாமா இது? உனக்கு எந்த நகையை எங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையே? சுத்த மக்காக இருக்கிறாயே என்று பேசி கிண்டல் செய்தார். நாடகத்தில் இல்லாத வசனம் இது.

பதிலுக்கு சுந்தராம்பாள், “பெண்கள் அணியும் நகையைப் பற்றி உமக்கு என்ன தெரியும். சுத்த அசடாயிருக்கீங்களே நீங்க! என்று சொல்ல பதிலுக்கு கிட்டப்பா 'அடி அசடே! என் தாய் நான் பிறக்கும் போதே எனக்கு அணிவித்து அழகு பார்க்க ஆண்கள் நகை ஒரு செட்டும், பெண்கள் அணியும் நகை ஒரு செட்டும் வாங்கியிருந்தார். அதனால் எனக்கு அதெல்லாம் அத்துப்படி என்று சொல்ல, நாடக அரங்கமே கை தட்டலாக அதிர்ந்தது.

என்னதான் காதல் கிளிகளாக இருவரும் வலம் வந்தாலும் அவர்களின் வாழ்க்கைக் கூட்டை சிதைக்கவும் மனித உருவில் சிலர் வலம் வரத்தான் செய்தனர். கிட்டப்பா-சுந்தராம்பாள் வாழ்க்கையில் மூன்றாம் நபர்கள் மூக்கை நுழைக்க ஆரம்பித்தனர். என்ன ஆனது...?

-தொடரும்

பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close