Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'7 மணி நேர நரகமாக மாறிய போக்குவரத்து நெரிசல்!' - ஃபேஸ்புக்கில் கொதிக்கும் சென்னைவாசிகள்

டந்த 10 நாட்களாக தினமும் கொட்டிவரும் வடகிழக்குப் பருவமழை இதற்கு முன்பு சென்னையில் பெய்ததா என்பது சந்தேகமே. ஒட்டுமொத்த சென்னையே மழைநீரின் வடிகாலாக மாறிவிட்டதோ என்று கூறுமளவிற்கு உள்ளது.  

மழை அவசியமான ஒன்றே... யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் 'மா மழை போற்றுதும்....' என்றும்,  'பெய்யெனப் பெய்யும் மழை என்றும்...'   நமது இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அளவுக்கு மிஞ்சிய மழை என்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகத்தையே ஏற்படுத்தும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்த நிலை சென்னைக்கு  வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று(திங்கள்) பெய்த கனமழையால் சென்னை வாகன ஓட்டிகள் பட்ட அவஸ்தை, மாலை தொடங்கி இரவு முழுக்க நீடித்தது பெரிய துயரமே. அண்ணாசாலை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி நூறடி சாலை, அடையாறு -  திருவான்மியூர் சாலைகள் என்று மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழைவெள்ளக்காடாய் மாறிப்போயின. அதே போல சென்னைப்  புறநகர்ப் பகுதிகளும் இந்தத் துயரத்திலிருந்து தப்பவில்லை.

இது குறித்து ஃபேஸ்புக் , ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மழை வெள்ள பாதிப்பு அத்தியாயங்கள் பரபரப்பாக ஷேர் ஆகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள். அப்படி சமூக வலைத்தளங்களில் பதிவான சில ஸ்டேட்டஸ் இங்கே....

விநாயக முருகன்

" வாழ்க்கையில் ஒரு சில இரவுகளை மறக்க முடியாது. நேற்றைய இரவு நரகம் போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுக்கொண்டே செல்வதுபோல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலக பேருந்தில் இருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். எட்டரை மணிக்கு சோழிங்கநல்லூர் சிக்னல். பிறகு ராஜீவ் காந்தி சாலையில் நத்தைபோல பேருந்து சென்றது. பத்து மணிக்கு கந்தன்சாவடி.

பதினோரு மணிக்கு எஸ்ஆர்பி டூல்ஸ். பன்னிரண்டு மணிக்கு டைடல் பார்க். ஒரு மணிக்கு மத்திய கைலாஷ், அண்ணா பல்கலைக்கழகம். இரண்டு மணிக்கு கிண்டி. மூன்று மணிக்கு போரூர் வந்தேன். வழிநெடுக மழைநீர் சாலையில் இடுப்பளவு ஓடுகிறது.

பேருந்திலேயே உறங்கினேன். நாங்கள் யாரும் இரவு உணவு சாப்பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கெட் கொடுத்தார். சிறு உறக்கம் வந்து உறங்கிவிட்டோம். கொடும்கனவு கண்டு திடுக்கிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நிற்கிறார்கள்.

பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடக்கிறார்கள். இயற்கை உபாதையை கூட அடக்கிக்கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கிக்கொண்டார். இயற்கை சீற்றங்களை பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவதுபோல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்துள்ளது. பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும், அவரவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அலைபேசியில் பேசினார்கள். தில்லை கங்கா நகர் சப்வே மூடிவிட்டார்கள்.

வேளச்சேரி சுத்தம். தயவு செய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன. நடைபாதை வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை கூட செய்யமுடியவில்லை.
இந்த மழை மனிதர்களின் மனஉறுதியை சமன்குலைத்துப்போட்டு விட்டது.கோவனை கைதுசெய்ய ஆர்வம் காட்டிய போலீஸ்காரர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர்கள், கல்லூரி மாணவர்களை பின்னியெடுத்த போலீஸ்காரர்கள் எல்லாரும் சாலையோரமாக கைகட்டி அமைதியாக நிற்கிறார்கள்.

இளைஞர்கள் நின்றுபோன தங்கள் பைக்கை தலைகுனிந்து இடுப்பளவு நீரில் நகர்த்தி சென்றார்கள். சிலர் வாகனத்தை பாலத்துக்கு அடியில் நிறுத்தி பூட்டிவைத்துவிட்டு நடந்தே சென்றார்கள். ஒரு மணி நேர பயணம் என்பது ஏழு மணி நேர நரகமாக மாறியுள்ளது. சென்னையில் சர்வேதேச தரம் வாய்ந்த சாலை என்று சொல்லும் இங்கேயே முறையான வெள்ளநீர் வடிகால் இல்லை. வேறு எங்கு இருக்கும்?
சென்னை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடலை பார்த்து சரிந்து நிற்கும் பகுதி செங்கல்பட்டு. நீர் மேட்டிலிருந்து பள்ளத்துக்கு செல்ல வேண்டும்.

சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம்  ஆகிய  மாவட்டங்களுக்கு முதன்மை நீர் வடிகால் பள்ளிக்கரணை சதுப்புநிலம். இங்கு இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப்பெரிய பிழை. இந்த பகுதியை சுத்தமாக அழித்து,  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் கட்டியதன் விளைவு...  அனுபவிக்கிறோம். மீண்டும் இந்த கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியை பழையபடி கொண்டுவரமுடியுமா? வளர்ச்சி என்பது நூற்றில் தொண்ணூறு பேரை அழித்துவிட்டு பத்து பேருக்கு இருக்கக்கூடாது.

அது தொண்ணூறு பேர்களுக்காக இருக்க வேண்டும். ராஜீவ் காந்தி சாலை நாவலில் இறுதி அத்தியாயத்தில் ஒரு வரி வரும். 'வளர்ச்சி என்பது ஒரு வழி பாதை. அது திரும்பி வரமுடியாத முன்னேறி மட்டும் செல்லக்கூடிய பாதை.  முறையான வடிகால் வசதி இல்லாத,  திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னை,  இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது!"

பாரதி வாசன்

இங்கிலீஷ்காரன் பாடின மாதிரி ”மழையே மழையே போ போ..” (ரெயின் ரெயின் கோ..) பாடவெச்சுட்டியே மாமழையே....!?

பிரகாசம், பழனி

சென்னைக்கு வந்து 12 வருஷம் ஆகுது. ஆனா, நான் இன்னிக்கு பார்த்த ட்ராபிக் ஜாம் மாதிரி என்னிக்கும் பார்க்கல...ஆபீஸ்ல 8 மணி நேரம் ஷிப்ட், ரோடு ட்ராபிக்ல 3 மணி நேரம் ஷிப்ட்...யப்பா...முடியல!

வெங்கடேசன், காஞ்சிபுரம்

2005 லும் இப்படித்தான் நடந்தது. அன்றிரவு போலீசார் ஒருத்தர்கூட தெருவில் இல்லை. இரவு எட்டு மணிக்கு அறிவாலயத்திலிருந்து புறப்பட்டவர்கள், விடியற்காலைதான் வீடுபோய் சேர்ந்தார்கள். சென்னை அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டது. போலீஸ் கமிஷனரை காலை எட்டுமணி செய்தியில் அப்படி போட்டு கிழிகிழியென கிழித்தேன். வரம்பு மீறிய தாக்குதல் என்றுகூட சிலர் சொன்னார்கள். மக்கள் சாகும்போது தடவிக்கொடுக்கவா முடியும்..?

யாரோ...

சென்னையில் புதிய வீடோ, வீட்டு மனையோ வாங்கும் போது..

ரயில் நிலையம் வரும்..
விமான நிலையம் வரும்..
பஸ் நிலையம் வரும்..
பள்ளிக்கூடம் வரும்..
கல்லூரி வரும்...
IT கம்பெனி வரும்னு சொன்னீங்களே.. யாராவது "வெள்ளம் வரும்"னு சொன்னீங்களாடா?


            

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close