Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேசினால் வெடிகுண்டு வீசுவோம் ! (மைக்...டெஸ்ட்...ஒன் டூ த்ரீ- நன்மாறன்)

"பேசினால் வெடிகுண்டு வீசுவோம்" என்ற அச்சுறுத்தலுக்கு இடையே கூட்டம் நடக்கிறது. "எதையும் எதிர்கொள்வோம்" என்று மேடையில் பேசுகிறார் அந்த பேச்சாளர். துணிச்சலான பேச்சுக்குச் சொந்தக் காரர் என். நன்மாறன். மதுரையைச் சேர்ந்த நன்மாறன், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பேச்சாளராக இன்றும் மேடைகளில் வலம் வருகிறார். அவரை சந்தித்தோம்... 

எப்போது உங்களுக்குள் இருந்த பேச்சாளரை அடையாளம் கண்டு கொண்டீர்கள்?

மதுரை அழகரடியில் தொந்தி வாத்தியார் பள்ளியில்தான் நான் படித்தேன். வகுப்புக்கு வாத்தியார் வராத சமயங்களில் அல்லது மழை பெய்யும் போது வகுப்பறை ஒழுகும் என்பதால் பாடங்கள் எதுவும் நடக்காது. அப்போது சக மாணவர்கள் மத்தியில் சினிமா பாடல்களைப் பாடுவேன். குறிப்பாக 'தை பிறந்தால் வழிபிறக்கும்' திரைப்படத்தில் வரும் 'எளியோரை தாழ்த்தி, வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் மாறாதா?' என்ற பாடலை பாடுவேன். நான் பாடும் சினிமாப் பாடல்கள் மாணவர்களிடம் வரவேற்பை பெற்றது. 

என் தந்தை ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. அவர், என்னை நூலகத்துக்கு அழைத்துச் சென்று பல நுால்களை அறிமுகப்படுத் தினார். நூலகத்தில் வாண்டுமாமா, அப்புசாமி கதைகளை படித்தேன்.  புத்தகங்களைப் படித்து வந்து அப்படியே சக நண்பர்களிடம் சொல்வேன். ஒரு கதை சொல்லியாகவும் நான் வளர்ந்து வந்தேன்.

ஒரு முழு பாடத்தையும் ஒப்பிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. மதுரையில் தொழிலாளர் நல உரிமைக் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது மாணவர் மன்றச் செயலாளராக இருந்தேன். இவையெல்லாம் என் பேச்சுக்களனுக்கு உதவியாக இருந்தது. எனக்குள் பேச்சாளருக்கு உரிய மனப்பயிற்சியும் ஏற்பட்டது.

அரசியல் மேடையை பற்றிய புரிதல் எப்போது ஏற்பட்டது?


மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் இருந்த என் வீட்டின் அருகே பொதுக்கூட்டங்கள் நடக்கும். பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், தோழர் ராமமூர்த்தி, பேரறிஞர் அண்ணா, என பல அரசியல் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு தவறாமல் சென்று விடுவேன். அதேபோல திலகர் திடலில் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, ஜீவா போன்ற தலைவர்கள் பேசுவார்கள். அதையும் கேட்கச் செல்வேன். இந்த பேச்சுக்கள் எல்லாம் என்னையறியாமல் என்னுள் உரமாக மாறிவிட்டது என்று கருதுகின்றேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கே.பி.ஜானகியம்மாள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மதுரையைப் பற்றி, மதுரையை சுற்றி உள்ள கிராமங்களைப்பற்றி அவர் பேசுவதை கேட்பது அத்தனை சுவாரஷ்யமாக இருக்கும். 

முதன்முதலில் மேடையில் பேசிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

பள்ளியில் 3-ம் வகுப்புப் படிக்கும்போது, கீரைத்துறையில் திராவிடர் கழகம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் நான் பங்கேற்றுப் பேசினேன். முதன் முதலாக அப்போதுதான் மைக் முன்னால் நின்று பேசினேன். இதுதான் என் முதல் மேடை அனுபவம்.

திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றேன். வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி.படிக்கும் போது கல்லூரிப் பேரவைத் தலைவராக இருந்தேன். அப்போது நான் பல பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றிருக்கின்றேன். என்னுடைய பேச்சுக்களை கேட்ட, முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். 'சந்திரமண்டலத்தில் மனிதர்கள் குடியேறும்போது ராமலிங்கம் (அப்போது இதுதான் என்பெயராக இருந்தது.) தான் பேச வேண்டும். அந்த அளவுக்கு தமிழில் மிக அழகாக ராமலிங்கம் பேசுகின்றான் என்று கூறினார். இந்த பாராட்டை இன்றளவும் நான் நினைத்துப் பார்க்கின்றேன்.

புட்டுத் தோப்பு பகுதியில் அப்போது காவல்துறை சார்பில் பாய்ஸ் கிளப் என்று வைத்திருந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள பாய்ஸ் கிளப் உறுப்பினர்களுக்காக மாநில அளவிலான பேச்சுப்போட்டி வேலூரில் நடைபெற்றது.  இதில் நான் பங்கேற்று பேசினேன். எனக்கு முதல் பரிசு கிடைதது. இந்த தொடர்புகள் காரணமாக எனக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. 

ஆனால், நான் வேலைக்குச் செல்வதை அப்பா விரும்பவில்லை. ' ஒரு தொழிலாளியின் மகனாக இருக்கும் நீ இப்படி ஒரு வேலைக்குப் போகிறாராயே?' என்று எதிர்ப்புத் தெரிவித்தார். எனவே, என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். 

மேடையில் பேசுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?


பயிற்சிகள் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டு. 1968-ம் ஆண்டு 'குறிஞ்சி' என்ற இதழை நடத்தி வந்த நெடுமாறனுடன் தொடர்பு  ஏற்பட்டது. அவரது பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்வேன். அந்த பத்திரிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய தொடர் வந்து கொண்டிருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. வியட்நாமில் நடக்கும் கொடுமைகள் குறித்தும் அதில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அவற்றையெல்லாம் படித்தபோது, அந்த தகவல்கள் என் மனதில் பதிந்தன.

அதேபோல, 'குறிஞ்சி' அலுவலகத்தில் கண்ணதாசன் நடத்தி வந்த 'தென்றல்' பத்திரிகை வரும். அதில் கடைசிப்பக்கங்களில் வரும் வெண்பா போட்டியில் வெளியாகும் வெண்பாக்களைப் படிப்பேன். அது போல வெண்பா-க்களும் எழுதி வந்தேன்.  இவையெல்லாம் பின்னாளில் என் பேச்சுகளுக்கு மிகவும் உதவியாக இருந்தன. இன்றளவும் தொடர்ந்து புத்தகங்கள் படித்து வருகின்றேன். அவ்வப்போது என்னைப் புதுப்பித்துக் கொள்கின்றேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேடைகளில் பேசிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவாக, 'ஊழியர் கலை எழுச்சி மன்றம்' என்ற அமைப்பு முன்பு இருந்தது. இதில் எம்.ஆர்.எஸ்.மணி, புலவர் ராஜா மணி போன்றவர்கள் இருந்தனர். இந்த அமைப்பின் சார்பில் இலக்கிய கூட்டங்கள் நடத்தப்படும். இதில் தவறாமல் கலந்து கொள்வேன்.

1971- ம் ஆண்டில் நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தோழர் ராமமூரத்தி போட்டியிட்டார். மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சங்கரய்யா, மத்திய தொகுதியில் வி.கார்மேகம், ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது, தேர்தல் பிரச்சார மேடைகளில் முதன் முதலாகப் பேச ஆரம்பித்தேன். நான் ஈ.வி.கே.சம்பத் பாணியில் பேசுவேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பேச்சாளர் பாலசுப்பிரமணியன் எனக்கு சில அறிவுரைகள் வழங்கினார். சில திருத்தங்களைச் சொன்னார். பேசும் போது அடுத்தவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது என்று கூறினார். அவர் கூறிய கருத்துகளை ஏற்றுக்கொண்டு, மேடையில் அடுத்துவரை புண்படுத்தும் வகையில் பேசுவதை முற்றிலும் தவிர்த்தேன்.

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநில செயலாளராக இருந்தேன். அப்போது, இளைஞர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொண்டேன். வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனால் கைது செய்யப்பட்ட நான் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.  அப்போது சிறையில் இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு நாள், ஏதாவது ஒரு விஷயம் குறித்து பேசுவோம். இளைஞர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல நான் பேசுவேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்த்தின் சார்பில் கலை இலக்கிய இரவுகளிலும் நான் பங்கேற்று பேசி வருகின்றேன்.

உங்களுடைய மறக்க முடியாத மேடை பேச்சு என்று எதைக் கருதுகின்றீர்கள்?


இரண்டு சம்பவங்களை என்னால் மறக்க முடியாது. முதல் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது. பாபு, செல்லையன் என்ற வாலிபர் சங்க இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாங்கள் பொதுக்கூட்டம் போட்டோம். பொதுக்கூட்டம் நடக்கும் அன்று வெடிகுண்டு வீசுவோம் என்று சிலர் அறிவித்திருந்தனர். பதற்றமான சூழலில் அந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியவர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இந்த கூட்டத்தை நடத்துகின்றோம் என்று நான் பேசினேன்.

இன்னொரு சம்பவம் சாத்தூரில் நடந்தது. சாத்தூர் உள்ளாட்சி அமைப்பில் ஊழல் நடைபெற்றது. இதைக் கண்டித்து சாத்தூரில் பொதுக்கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டம் நடப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் நாங்கள் துணிச்சலாக அங்கு பொதுக்கூட்டம் போட்டோம். பொதுக்கூட்டம் நடந்து கொண்டிந்தபோதே, சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எங்களை தாக்க முயன்றனர். கூட்டத்தில் இருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும், எங்களைத் தாக்க முயன்றவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் என்னால் மறக்க முடியாது.
   
உங்களைக் கவர்ந்த மேடைப் பேச்சாளர்கள் யார்?

தவத்திரு குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி. ஆகியோருடைய மேடை பேச்சு எனக்குப் பிடிக்கும். எங்கள் இயக்கத்தலைவர்களில் சங்கரய்யாவின் பேச்சு கருத்துச் செறிவுடன் இருக்கும். முடிக்கும்போது டச்சிங், தோழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும்படி சங்கரய்யா பேசுவார். ஆர். உமாநாத் நிறைய தகவல்களுடன் பேசுவார். பி.ராமமூர்த்தி உலக அரசியலில் தொடங்கி, உள்ளூர் அரசியலில் முடிப்பார். இவர்களது பேச்சுக்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

உங்கள் பார்வையில் இப்போது மேடை பேச்சு எப்படி இருக்கிறது?


முன்பெல்லாம் மக்களின் எண்ணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச்சாளர்கள் மேடையில் பேசுவார்கள். ஆனால் இப்போது மக்கள் விரும்புகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி, மனதை மலினப்படுத்தும் பேச்சுக்களை பேசுகின்றனர். மலினப்படுத்தும் வகையில் பேசுவது நாளைடைவில் சலிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சில தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஆரோக்கியமான முறையில் பேசி வருகின்றனர். இது வரவேற்கதக்கது.

கட்சிகளின்  சாதாரண பேச்சாளர்கள்கூட பொலிரோவிலும் பென்ஸிலும் போய்வர ஒரு முன்னாள் எம்.எல்.ஏ, நீண்ட கால அரசியல் பேச்சாளரான நன்மாறன் இன்னமும் தன் பழைய டிவிஎஸ் ஃபிஃப்டியில்தான் பயணிக்கிறார். 

பல வருடங்களுக்கு முன் ஒரு மேடை. 'லிபியா அருகே போர்க்கப்பலை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. கடாபி அதனைக் கண்டித்தார். அதைப் பற்றிச் சொல்லும்போது “ஐயா..! நீங்க பாட்டுக்கு உங்க வீட்டுல இருக்கீங்க.. எவனோ ஒருவன் தினமும் காலைல உங்க வீட்டு வாசலில் வந்து தண்டாலும், பஸ்கியும் எடுத்தா உங்களுக்கு எப்படி இருக்கும்” என்று கேட்டார். கூட்டத்தில் சிரிப்பலை அடங்க நேரம் பிடித்தது.

மிக ஆழமான விஷயத்தைக்கூட மிகுந்த எள்ளலுடன் சட்டென புரிய வைப்பார் என்பதால் மேடைக் கலைவாணர் என்ற பேர் நன்மாறனுக்கு உண்டு

தொடரும்...

- கே.பாலசுப்பிரமணி

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close