Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடல் தந்த எழுத்தாளர்: படகு ஓட்டிக் கொண்டே நாவல் படைத்த மீனவர்!

தனது கடல் தொழில் அனுபவங்களை நாவலாக குமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் எழுதியிருக்கிறார். அவரை தேடி முட்டம் படகு துறைமுகத்திற்கு சென்றபோது படகில் சில பணிகளை செய்து கடலுக்கு மீன்பிடிக்க போக ஆயத்தமாகி இருந்தார். அவரிடம் அறிமுகமாகப்படுத்திக் கொண்டு பேச, அவரும் திடீரென மிமிக்கிரி செய்து பேசத் தொடங்கினார்.

"என் பேரு அருள்ராஜ், நான் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தொழிலுக்கு வந்து விட்டேன். சின்ன வயசுல அம்மா, அப்பாவும் இறந்துவிட்டார்கள். அதனால தான் கொஞ்சம் கஷ்டம். கடல் தொழிலை பலரும் எனக்கு சொல்லி தந்தார்கள். ஏன்னா கடலை பொறுத்தவரை, அனுபவசாலி சொல்லித் தந்தா கேட்கணும். ஒவ்வொரு ஊரா தொழிலுக்கு போயிருக்கேன். அதுல கிடைச்ச அனுபவங்கள் என் மண்டைக்குள்ள அப்படியே ஸ்டோராகி கிடந்துச்சி, இப்போ நான் கடலுக்குள் போனால் பத்து, பதினைந்து நாள் கழித்துத்தான் கரைக்கு வருவேன். கடலுக்கு போனா கரையில உள்ள மக்களோடு எந்த தொடர்பும் இருக்காது. செல்போன் சிக்னலும் கிடைக்காது. அப்படி ஒரு வாழ்க்கை தான் நாங்க வாழ்கிறோம். மூன்று வருடங்களுக்கு முன்னால ஆனந்த விகடன் விருது வாங்கின "செள்ளு" புத்தக வெளியீட்டுக்கு நான் போயிருந்தேன். அதன் பிறகு ஊரில் மிமிக்கிரி பண்ணிட்டுருந்தேன். அப்போது, பராசக்தி வசனத்தை என் சொந்த டயலாக்கை பயன்படுத்தி வித்தியாசமாக பேசினதை பார்த்து என் நண்பர் ரோஸ்பெர்ட்டும், என் அக்கா மேரி கிறிஸ்பெலும் நீ புத்தகம் எழுது, உன்னால முடியுமுனு ஊக்குவிச்சாங்க. என்ன கதை எழுதலாம் என்று யோசிச்சி பாத்தேன். எங்க மீனவ மக்கள் கடலுக்கு போகுவதே ஒரு போராட்டம் தான், அதையே கதையா எழுதி விடுவோம் என்று முடிவு செஞ்சேன். உடனே எனக்கு எழுத நேரம் கிடைக்காதே, என்னால முடியுமானு யோசிச்சேன். அப்புறமா மீன்பிடி தடைக்காலமான 45 நாள் உட்கார்ந்து மூன்று வருடங்களாக எழுதி முடிச்சேன். அதுதான் இந்த "கடல்நீர் நடுவே" என்கிற நாவல்.

இதுல முழுக்க முழுக்க கடலையும், கடல் தொழிலையும் மையப்படுத்திதான் எழுதியிருப்பேன். சின்ன வயசுல நாடகம் எழுதி நடிச்சதால, எழுத கஷ்டமா இல்ல. கட்டுமரத் தொழிலு, படகு தொழிலு, சுறா வேட்டை தொழிலுனு ரொம்ப வித்தியாசமாக எழுதி இருக்கிறேன். நாவலில் வருகிற கதாபாத்திரம் எல்லாம் கற்பனைதான். எங்க தொழில் முறைய மையப்படுத்தி எழுதி இருக்கிறேன். குறிப்பாக காற்று அடிக்குற திசை, நட்சத்திரம், நிலா, சூரியனை பார்த்து நாங்கள் நிற்கிற இடத்தை கணித்து போகிறது, என முக்கியமா என்னென்ன மீன் வகைகள் எப்பப்போ கிடைக்குமுனு கதை ஓட்டத்திலேயே சொல்லிருப்பேன். கதை கிளைமாக்சுல கேரளாவில் கடலில் ஒரு மீனவரை காப்பாற்றினதை தத்ருவமா சொல்லி இருப்பேன். அந்த சமயத்துல அரசாங்க லாஞ்சுக்கூட பாதியில நின்றுவிட்டது, ஒரே காற்றும் புயலும் அதுல மழை வேற இருட்டிட்டு. ஆனாலும் எதையும் பார்க்காமல் அந்த மீனவனை தேடி அலைஞ்ச்சி கண்டுப்பிடிச்சேன்.
 

அப்போ போறப்போ பெரிய ஆபத்து பகுதியில தான் போனேன். என் போட்டு உடையலாம், இல்ல நாங்க சாகலாம்னு இருந்த சூழலுல நான் சவாலா நெனைச்சிட்டு போனேன். ஏன்னா பொண்டாட்டிக்கு புருசன காட்டனுமே, பிள்ளைக்கு தகப்பனை காட்டனுமே. பெத்தவளுக்கு பிள்ளைய காட்டனுமேனு எனக்கு ஒரு வைராக்கியத்துல தேடி கண்டுபிடிச்சேன். அது அப்போ கேரளாவுல எல்லா பத்திரிகையிலும் செய்தியா வந்துச்சி. கடல் தொழிலுல லாபமும் இல்ல நஷ்டமும் இல்ல. கதை எழுதின பிறகு ஒவ்வொருத்தருக்கும் படிக்க கொடுத்தேன். படித்தும் காண்பித்தேன். நல்லா இருக்கு என்று சொன்னார்கள். உடனே என் அண்ணன் மகன் ஆண்டனி மூலமா பதிப்பகத்தில் கொடுத்தேன். பதிப்பாளர் அருள்ராஜூம் நல்லாருக்குனு புக்கா அடிச்சி வெளியிட்டாங்க. எனக்கு மீன் பிடிக்கதான் தெரியும், புக் அடிக்க தெரியாது. இப்போ பலரும் போனில் வாழ்த்துகிறார்கள். நாவலாசிரியர் என்றும் சொல்கிறார்கள். ரொம்பவும் சந்தோசமா இருக்கிறது. பொதுவா பலரும் கரையில் இருந்துட்டு கடல பார்த்தும், கடல் அனுபவத்தையும் எழுதிருக்காங்க, ஆனா நான் எங்க தொழில் முறைய மையமா வெச்சி எழுதி ஜெயிச்சிட்டேன். பொதுவா கரையில உள்ள மக்களுக்கு மீனவனாலே குடிப்பானு ஒரு அபிப்ராயம். ஆனா நான் இதுவர குடிச்சதுல்ல, எங்கூட தொழிலுக்கு வருகிறவர்கள் குடிக்க கூடாதுனு அறிவுரை கூறுவேன். அடுத்த கதையும் கடல் சார்ந்து தான். ஏன்னா, எங்கம்மா கூட இருந்ததை விட கடலம்மா மடியில தான் தினமும் இருக்கிறேன். அவ மீன் மட்டுமில்ல, கதையும் எனக்கு தாரா. பரந்து விரிஞ்ச இந்த கடல் தாய்க்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது" என்று கூறிவிட்டு கடல்நீரால் முகத்தை கழுவினார் "கடல்நீர் நடுவே " நாவலாசிரியரான மீனவர் அருள்ராஜ்.

-த.ராம்

படங்கள்: ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ