Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு போட்ட அதிர்ச்சி தீர்மானம் ! (அணு உலை அரசியல் -பாகம் 19)

கூர்ந்த மதி நூறு கைகளை விடவும் பலமடங்கு வலிமை வாய்ந்தது’- தாமஸ் ஃபுல்லர்

ணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையுடன் இணைந்து அணு உலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கொஞ்சமும் பலன் கிடைக்கவில்லை. இதனால் போராட்டத்தின் தாக்கம் விரிவடைந்ததே தவிர சுருங்கவில்லை. நெல்லையில் ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஒவ்வொரு நாளும் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வந்து பல்வேறு அமைப்பினரும், அணு உலைக்கு எதிராக புகார்களை தெரிவித்தபடி இருந்தனர்.

தமிழக அரசு இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதே தவிர, அவர்களின் கோரிக்கை பற்றி பரிசீலிக்கும் மனநிலையில் இல்லாததற்கு அரசியல் பின்னணியே பலமான காரணமாக இருந்தது. தமிழகம் மின்வெட்டு காரணமாக தவிப்பில் இருந்தது.

பொருளாதார தேக்க நிலை காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட கடன்பெறும் நிலை உருவானது. மத்திய தொகுப்பில் இருந்து நியாயமாக கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண உதவிகள் பெயரளவுக்கு கிடைத்ததே தவிர தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கவில்லை.

இதனால் மத்திய அரசுக்கு பணிந்து செல்ல வேண்டிய நிலைமை மாநில அரசுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாகவே, அணு உலையை எதிர்த்து போராடும் மக்களில் ஒருவராக இருப்பதாக உத்திரவாதம் கொடுத்திருந்த முதல்வர் ஜெயலலிதாவும் தனது நிலைப்பாட்டை மாற்றினார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற மறுநாளே அமைச்சரவையை கூட்டினார். அதில், ‘கூடங்குளம் அணு உலையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றினார்.  இது போராடும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாக இருந்தது.

அதுவரையிலும் போராட்டக் குழுவினரின் பல்வேறு வகையான போராட்டங்களையும் பொறுமையாக வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அவர்களை எதிரிகள் போல பார்க்கத் தொடங்கியது அப்போதுதான். இடைத்தேர்தல் பணிக்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் திருப்பி அனுப்பப்படாமல் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டனர். தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த ‘ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்’ படையினரும் அழைத்து வரப்பட்டனர்.

பணி முடிந்தும் வீடுகளுக்கு செல்ல முடியாத ஆத்திரத்தில் இருந்த தமிழக மற்றும் வெளிமாநில போலீஸாரின் நடவடிக்கை, போராடும் மக்களை அச்சமூட்டும் வகையில் அமைந்தது. வெளியூர்களுக்கு சென்று திரும்பியவர்கள், கடைகளுக்கு சென்றவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் என சாலையில் செல்லும் அனைவரையும், ஏதும் கேட்காமலே கொத்துக் கொத்தாக அள்ளினார்கள். அவர்களை ரிமாண்ட் செய்து பாளையங்கோட்டை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர்.

இடிந்தகரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. உள்ளே இருந்து யாரும் வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த உதயகுமாரன், புஷ்பராயன், மைபா. ஜேசுராஜ் உள்ளிட்டோரை கைது செய்ய இந்த நடவடிக்கையில் காவல்துறை இறங்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

வழக்கம்போல மைபா.ஜேசுராஜ், தனது இருசக்கர வாகனத்தில் வெளியூருக்கு சென்று இடிந்தகரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் அவரை மறித்த போலீஸாருக்கு அவரை அடையாளம் தெரிய வில்லை. அதனால், பெயரை கேட்டு இருக்கிறார்கள். போலீஸாரின் திடீர் நடவடிக்கையை கண்டதும் சுதாகரித்துக் கொண்ட அவர், ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

ஆனாலும், அவரை கோட்டைவிட்ட ஆத்திரத்தில் இருந்த போலீஸார் வழிகள் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அவர் சிக்கவில்லை. கடல் வழியாக இடிந்தகரை கிராமத்துக்குள் நுழைந்து இருப்பார் என சமாதானம் சொன்னது, போலீஸ்.

போலீஸாரின் நடவடிக்கை தீவிரம் அடைவதை கேள்விப்பட்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் சாலை வழியாக இடிந்தகரைக்கு செல்ல முடியாதபடி வழிநெடுகிலும் போலீஸ் படை குவிக்கப்பட்டு இருந்து. அதனால், மக்கள் படகுகள் மூலம் இடிந்தகரை கிராமத்தில் குவிந்தனர். அதனை தடுப்பதற்காக கடலோர காவல்படையினர் படகுகளில் ரோந்து சுற்றினர். அவர்களின் விமானமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் இடிந்தகரை பகுதியில் பரபரப்பு கூடியது.

இதனிடையே போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் வழக்கம் போல அணு உலைக்கு எதிரான பிரசாரத்தை முடித்துக் கொண்டு இடிந்தகரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த போலீஸார் கைது செய்தனர். இது போன்று ஆண்கள், பெண்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் என இருநூறுக்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில், போராட்டக்குழுவை சேர்ந்த முகிலனை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அலைக்கழித்தது போலீஸ்.

பல காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் பரவியது. இதனால் அணு உலை எதிர்ப்பு வழக்கறிஞர்கள் சிலர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஹேபியஸ் கார்ப்பஸ் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அவசரமாக வள்ளியூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் அரசின் இந்த நடவடிக்கையால் பயந்துவிடுவார்கள் என நம்பியது காவல்துறை. ஆனால் அப்படி நடக்கவில்லை. ‘அணு உலைக்கு எதிராக காந்திய வழியில் போராட்டம் நடத்தும் எங்களை தீவிரவாதிகள் போல போலீஸார் சித்தரிக்கிறார்கள். இந்தபகுதியை முள்ளிவாய்க்கால் போல ஆக்கி விட்டாங்க. எங்களுக்கு அடிப்படை தேவைகள் எதுவும் கிடைக்க விடாமல் தடுக்கிறாங்க. சாலை போக்குவரத்தை தடுத்து விட்டார்கள்.

பால், குடிநீர், உணவுப் பொருட்களை கொண்டு வரவும் அனுமதி இல்லை. மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். தண்ணீர் கூட எங்களுக்கு கிடைக்கவிடாமல் செய்கிறார்கள். எங்களை சந்திக்க இங்கு வந்த வக்கீகளை கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்புறாங்க. எங்கள் கிராமத்தை தனித்தீவு போல மாற்றி விட்டார்கள்.நாங்கள் உள்ளூரிலேயே அகதிகளாக வாழ்கிறோம்’ என்று வேதனைப்பட்டனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட முகிலனை பல காவல்நிலையங்களுக்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து போலீஸார் சித்ரவதை செய்துள்ளனர். எப்படியோ அவர் தொலைபேசி மூலமாக அவரது மனைவியை தொடர்பு கொண்டு,  ‘போலீஸார் என்னை உயிரோடு விடுவார்களா என்பது தெரியவில்லை. என்னை சித்ரவதை செய்யுறாங்க’ என கதறி இருக்கிறார். அந்த தகவலை அவர் போராட்டக் குழுவினரிடம் தெரிவித்த பின்னரே, அவர் சார்பாக ஹேபியஸ் கார்ப்பஸ் மனுத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அவசியம் ஏற்படாமல் போலீஸாரே, முகிலனை கோர்ட்டில் ஆஜர் செய்தார்கள்.

இந்த அடக்குமுறைகள் காரணமாக இடிந்தகரை போராட்டத்தின் வேகம் கூடியது. 'கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வாபஸ் பெறவேண்டும். இந்தியா - ரஷ்யா இடையே ரகசியமாக ஏற்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு தொடர்பான ஒப்பந்தத்தை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். கடலியல், நிலவியல், நீரியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 30 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும்' என்பதை வலியுறுத்தி,  உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.

இந்த சூழலில் மக்கள் துன்பப்படுவதை காணச் சகிக்காத போராட்டக் குழுவினர், அவசரக் கூட்டத்தை கூட்டினர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த கடலோர கிராமங்களின் தலைவர்கள் அனைவரும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அதில் காவல்துறையின் நடவடிக்கை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இடிந்தகரை உள்ளிட்ட அனைத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு இருக்கும் சூழலில், ஏற்கெனவே கைதாகி சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் கூட கொடுக்க முடியாத நிலைமை இருப்பதை பற்றி பேசினார்கள். உள்ளே இருப்பவர்களை விடுவிக்கும் வழக்கு நடவடிக்கைக்காக,  நீதிமன்றம் செல்லும் வழியிலேயே கைதாகும் ஆபத்து இருப்பதால் அனைவருமே முடக்கப்பட்டு இருப்பது குறித்து விவாதித்தனர்.

இந்த நிலைமைக்கு காரணம், போராட்டக் குழுவை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே. அதனால் தாங்களாகே கைதாவது என போராட்டக் குழுவை சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன், மைபா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் முடிவு செய்தனர். ஆனால், அந்த முடிவுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சம்மதிக்கவில்லை. 'எந்த சூழ்நிலையிலும் போராட்டக் குழுவை சேர்தவர்கள் தாங்களாக சென்று கைதாக் கூடாது' என உறுதியாக வலியுறுத்தினர். அத்துடன், பொதுமக்களை மீறி போலீஸார் எப்படி ஊருக்குள் வந்து போராட்டக்குழுவினரை கைது செய்கிறார்கள் என்பதை பார்த்து விடுவோம் என சவால் விட்டனர்.

நிலைமை பரபரப்பாக இருந்ததால் காவல்துறை தென்மண்டல ஐ.ஜியான ராஜேஸ்தாஸ், கூடங்குளத்துக்கு வந்து முகாமிட்டார். மூன்று மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய அவர், ‘போராட்டக்குழுவை சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கி விட்டது. அவர்களாக வந்து சரண் அடையாவிட்டால் நாங்கள் அவர்களை கைது செய்ய வேண்டியிருக்கும். இதில் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம்’ என்று முடித்துக் கொண்டார்.
 
இதற்கிடையே, கடந்த ஐந்து மாதமாக வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் பணிக்கு திரும்பினர் இந்தைய அணுசக்தி ஆணையம் அணு உலையில் யுரேனியத்தை நிரப்ப அனுமதி கொடுத்ததால் கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் அதற்கான பணிகளை துரிதப்படுத்தினர். ஓரிரு வாரங்களில் பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த போராட்டக் குழுவினர் அதனை மாற்றினார்கள். 2012 செப்டம்பர் 9-ம் தேதி ‘கூடங்குளம் அணு உலையை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும்’ என அறிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் கூடங்குளம் செல்லும் சாலைகள் அனைத்தையும் சீல் வைத்தனர். அந்த வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊருக்குள் இருந்து யாரும் வெளியே செல்ல முடியவில்லை. இடிந்தகரை கிராமத்துக்கு செல்ல முயன்ற வெளியூர் நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

இடிந்தகரை செல்லும் சாலைகள் அனைத்தும் போலீஸின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ரேபிட் ஃபோர்ஸ் படையினர், கமாண்டோ வீரர்கள் மட்டும் அல்லாமல் நான்கு மாநிலங்களை சேர்ந்த காவல்துறையினர் என பத்தாயிரம் போளீஸார் குவிக்கப்பட்டனர். கடலோர காவல்படையின் விமானமும் கடலோரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டது.
 
நிலைமை தீவிரம் அடைந்ததால் சட்டம்&ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜார்ஜ் வந்து சேர்ந்தார். தென் மண்டல் ஐ.ஜியான ராஜேஸ்தாஸ் தலைமையில் இரண்டு டி.ஐ.ஜிக்கள், ஒன்பது எஸ்.பிக்கள், 40 டி.எஸ்.பிக்கள் கொண்ட அதிகாரிகள் களத்தில் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் அணு உலையை முற்றுகை இடச் செல்லக்கூடும் என கருதப்பட்ட வழியில் மணல் மூடைகளை அடுக்கி துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவல் இருந்தனர். சாலை ஓரத்தில் தென்னந்தோப்பில் 300 மீட்டர் நீளத்துக்கு பொக்லைன் மூலம் பதுங்கு குழியையும் போலீஸார் அமைத்தனர்.

இது தவிர, முதல் நாளிலேயே போராட்டக் காரர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பது பற்றிய ஒத்திகையும் நடந்தது. இத்தகைய பலத்த பாதுகாப்பையும் மீறி' முற்றுகையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள், போராட்டக்காரர்கள்.

எப்படி நடந்தது அது? போலீஸாரை அவர்கள் திசை திருப்பியது எப்படி? என்பது பற்றிய விவரங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்...

ஆண்டனிராஜ்
படங்கள்; எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close