Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரணத் தொழிற்சாலை (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 15)

ரண்டு கண்களும் பொங்கிய நிலையில் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழந்தையின் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கிவிடும். மத்தியப் பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது இந்தப் புகைப்படம். மேலும் 'இது மிகப்பெரிய தொழில்துறைப் பேரழிவு' என்று ஒட்டு மொத்த உலகையும் அலற வைத்த இந்தப் புகைப்படம் போட்டோகிராபர் பப்லோ பர்த்தலமேயுவால் (Pablo Bartholomew) எடுக்கப்பட்டது.

1979 கால கட்டங்களில் தொழில்துறைகளில் இந்தியாவில் வந்து முதலீடு செய்யுமாறு அயல்நாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்றது. இதன் அடிப்படையில் யூனியன் கார்பைடு (Union Carbide) என்ற நிறுவனம் செரின் (Serin) என்ற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்கான தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி அதில் இந்திய அரசுக்கு 22% பங்குகள் என்று ஒப்பந்தமிடப்பட்டது. ஏற்றுமதி மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக இந்தியாவின் இதயப்பகுதியான மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக நகரின் மையப்பகுதியில் சிறிய தொழிற்சாலைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டையை தேர்ந்தெடுத்தனர். அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் 'யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்' (Union Carbide India Limited (UCIL)) என்ற பெயரில் தொழிற்சாலையை உருவாக்க அனுமதி அளித்தது அரசு. அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எந்த காலத்திலும் ஒரே நிலைப்பாடுதான். அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் விசுவாசமாக இருப்பது மட்டுமே.

சுமார் 67 ஏக்கரில் பிரமாண்டமாக உருவானது தொழிற்சாலை. உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அங்கேயே அமைக்கப்பட்டது. முக்கிய மூலப்பொருளான மெத்தில் ஐசோசைனேட் (methyl isocyanate) உற்பத்தி செய்யும் முறை மிகவும் அபாயகரமானது. ஆனால், எந்தவித சலமும் இன்றி 'பசுமைப் புரட்சி' என்ற கொள்கையோடு(!?) உற்பத்தியைத் தொடங்கி, கோடிக்கணக்கில் லாபங்களை ஈட்டியது. அதேசமயம்  இதன் ரசாயனக் கழிவுகள் போபாலின் நிலத்தடி நீரை சத்தமில்லாமல் பதம் பார்க்கும் வேலையை செய்யத் தொடங்கியது.

இந்நிலையில், 1984-ம் ஆண்டு வாக்கில் விவசாயம் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்ட கடன் சுமையால் மக்கள் பூச்சுக் கொல்லி வாங்குவதை நிறுத்திக் கொண்டனர். விளைவு அதன் உற்பத்தி குறைந்தது. இதனால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமை இந்தத் தொழிற்சாலையை விற்க முடிவெடுத்தது. ஆனால், அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்பதால் அங்கிருந்த இயந்திரங்களை அப்படியே வேறு நாட்டுக்கு எடுத்து சென்று அங்கு தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டது.

இந்தக் குழப்பங்களில் தொழிற்சாலையில் இருந்த பாதுகாப்பு உபகரணங்களை உபயோகப்படுத்தாமலும், அதனைப் பராமரிக்காமலும் கைவிட்டனர் தொழிற்சாலை நிர்வாகத்தினர். அபாயகரமான நச்சுத்தன்மையை வெளியேற்றக் கூடிய ஒரு தொழிற்சாலை நலிவடைந்து, அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் மௌனம் காத்து விட்டன மத்திய அரசும், மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும்.

1984 டிசம்பர் 3-ம் தேதி. தொழிற்சாலையின் '610' என்ற எண்ணைக் கொண்ட ஒரு தொட்டியில் மட்டும் பாதுகாப்பு அளவை விட அதிகமாக நாற்பது டன் மெத்தில் ஐசோசைனேட் வைக்கப்பட்டு இருந்தது. இதன் கொதிநிலை 31.1 டிகிரி என்பதால் எப்போதும் இதை குளிர்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். நிறமும் மணமும் இதற்கு இல்லை என்பதால் கசிந்து காற்றில் கலந்தாலும் கண்டுபிடிப்பது கடினம். அபாயமான இந்த வாயுகள் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால், தொழிற்சாலையில் அன்று இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரிகளாக வைக்கப்பட்டிருந்தது. இதனால், அழுத்தம் தாங்காமல் மெத்தில் ஐசோசைனேட் கசிந்து காற்றில் கலந்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தது.

உழைத்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போபால் மக்கள் திடீரென ஏற்பட்ட கண், தொண்டை எரிச்சல், கடுமையான இருமல் காரணமாகவும் எழுந்தனர். எதனால் இப்படி நடக்கிறது என்று அவர்கள் யோசிப்பதற்குள்ளாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தனர்.

ஏதோ விபரீதம் நடக்கின்றது என்று அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்து தங்கள் குழந்தைகளை துக்கிக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தவர்கள், வீதியெங்கும் கொத்துக் கொத்தாக இறந்து விழுபவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அய்யோ என்று அலறுவதற்குள் அவர்களும் சுருண்டு விழ, அடுத்தடுத்த நிமிடங்களில் போபால் நகரத்தின் வீதிகள் முழுவதும் மனிதப் பிணங்களால் நிரம்பியது. இவர்களுடன் ஆடு, மாடுகள் போன்றவைகளும் இறந்து வீழ்ந்தன. விடிவதற்குள் ஒட்டுமொத்த போபால் நகரமுமே சுடுகாடாக மாறிவிட்டிருந்தது.

சம்பவம் நடந்த உடனேயே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 3,800 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே தொழிற்சாலையை ஒட்டிய குடிசைப் பகுதி மக்கள். அனைவரும் அலறியடித்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடினர். என்ன நடந்தது என்று யூகிக்க முடியாததால், உடனே எந்த வகையில் மருத்துவம் செய்வது என்று தெரியாமல் திணறினர் மருத்துவர்கள். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த தினங்களில் எட்டாயிரத்தைத் தாண்டியது. சுமார் ஐந்து லட்சம் மக்கள் கண் பார்வை இழப்பு, சிறுநீரகம் போன்ற பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். 

இந்த விபத்திற்குப் பிறகு உலக அளவில் தொழில்துறை பேரழிவின் முகமாக மாறியது போபால். 1997-ம் ஆண்டு மொத்தம் 15,342 பேர் இறந்ததாக மத்தியப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இருபத்தி ஐந்தாயிரத்தைத் தாண்டும் என்கின்றன சமூக அமைப்புகள்.

''நீங்கள் அழைத்ததால்தான் வந்தோம். தொழிலும் நலிவடைந்துவிட்டது. நாங்கள் என்ன செய்வது?” என்ற இறுமாப்புடன் இந்தக் கொடூர விபத்திற்குப் பொறுப்பேற்காமல் அமைதியாக இருந்தது யூனியன் கார்படு நிறுவனம். மேலும், அப்போது பஞ்சாபில் தீவிரமாக இருந்த காலிஸ்தான் போராட்டக் குழுவினர்தான் இதற்குக் காரணம் என்று திசை திருப்பப் பார்த்தது தொழிற்சாலை நிர்வாகமும், அரசும்.

இந்த விபத்து நடந்த உடனே யூனியன் கார்பைடின் தலைவரான வாரன் ஆண்டர்சன்  (Warren Anderson) கைது செய்யபட்டார். ஆனால், அடுத்த ஐந்தே நாட்களில் டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுக்கப்பட்டார். வெளியில் வந்தவுடன் அரசின் ராஜ மரியாதை உதவியுடனும் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். பலமுறை இந்திய நீதிமன்றங்கள் இவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்த போதிலும் இவரை இந்தியா அழைத்து வர முடியவில்லை. போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது அமெரிக்கா. இறுதிவரை பிடிபடாமலே 90 வயதில் இறந்தும் போனார் அவர். ஆனால், அவருடன் கைது செய்யப்பட்ட எட்டு மேல் மட்ட அதிகாரிகளையும் 26 வருடங்களுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு குற்றவாளிகள் என்று அறிவித்து வரலாற்று சிறப்புமிக்க (?!) தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம். அனைவருக்கும் இரண்டு வருட தண்டனை என்பதுதான் அது.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 470 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், யூனியன் கார்பைடு நிறுவனம் இதை ஏற்க மறுத்ததுடன் அறிவியல் ஆய்வுகளையும் திருட்டுத்தனமாக மாற்றி அமைத்தது. மேலும், இன்றைய தேதி வரை எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று உலகத்திற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்தவும் இல்லை. விபத்து நடந்து 31 ஆண்டுகள் ஓடிவிட்ட போதிலும் இன்னும் அம்மக்கள் புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் அந்தத் தொழிற்சாலையில் 350 டன் நச்சுக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமல்தான் இருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.

போட்டோகிராபர் பப்லோ பர்த்தலமேயு 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். இந்த விபத்து நிகழும்போது பப்லோ காமா (Gamma) என்ற பிரெஞ்சு புகைப்பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதனால் சம்பவம் நடந்த உடனேயே அதை பதிவு செய்ய டெல்லியில் இருந்து விமானம் மூலம் இவரும், போட்டோகிராபர் ரகுராயும் போபாலுக்கு சென்றனர்.

காற்றில் விஷ வாயு கலந்திருக்கிறது என்ற போதிலும் பப்லோ பிணங்கள் செல்லும் பாதையில்லேயே சென்று அவைகளைப் பதிவு செய்தார். அப்போது இந்தக் குழந்தையின் சடலத்தைப் புதைப்பதை பாப்லோ கலர் ஃபிலிமிலும், ரகுராய் கருப்பு வெள்ளை ஃபிலிமிலும் புகைப்படம் எடுக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது துயரம் தாங்காமல் தாங்கள் இருவருமே அழுது விட்டதாக பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இருவருமே ஒரே நேரத்தில் எடுத்திருந்தாலும், போபாலில் நடந்தக் கொடூரத்தை பப்லோவின் புகைப்படம் மட்டுமே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது என்ற காரணத்தினால் வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதினைப் பெற்றது. இவர்கள் இருவரில் இந்தப் புகைப்படதை எடுத்தது யார் என்ற விவாதம் இன்றளவும் உலக அளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு முறை வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதும், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வாங்கிய இரண்டாவது போட்டோகிராபர் என்ற பெருமை பப்லோவிற்கு உண்டு.

புகைப்படம் பேசும்...

ஜெ.முருகன்

முந்தைய தொடர்களைப் படிக்க...

 


Displaying World-shocking-Photos_11.jpg

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close