Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனிதாபிமானத்தை பொழியவைத்த கனமழை!

யல்பு வாழ்க்கை முடங்கியது, புரட்டிப்போட்டுவிட்டது என பத்திரிக்கைகள் எழுதும் பிரம்மாண்ட வார்த்தைகளின் அர்த்தத்தை தமிழக மக்கள் இப்போதுதான் நேரடியாக உணர்ந்திருப்பார்கள். குறிப்பாக சென்னை மக்கள்.

அடிப்படை தேவைகள் கிடைக்காமல் சென்னை நகரெங்கும் மக்கள் கூட்டம் தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் அலைமோதுகின்றன. கட்டியிருக்கும் துணியோடு ஒரு சிறு பையை மட்டும் எடுத்துக் கொண்டு சொந்த ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையோடு கும்பல் கும்பலாக மக்கள் பேருந்துகளுக்காகவும் ரயில்களுக்காகவும் காத்திருக்கின்றனர்.

மழைவெள்ளம் பல கோடி மதிப்பிலான பொருட் சேதத்தையும், பல நூறு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மழையால் என்ன நேர்ந்திருக்கிறதோ இல்லையோ  சென்னை மக்களின் மனிதாபிமானம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இதுதான் நம்ம சென்னை என்று பெருமிதம் கொள்ளும் அளவு இருந்தது மீட்பு பணியின் வேகம்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பது  நாம் வரிசையில் நின்று ஒட்டு போட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்ல; பெரும்பாலும் நமக்கு பரிச்சயமில்லாத அல்லது எதிர்பார்த்திராத முகங்கள்.

திக்கற்று தெருவில் நிற்போர் என்று யாரையும் விடாமல் அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வலர்களும், இணையவாசிகளும், ராணுவமும், சித்தார்த், ஆர்.ஜே பாலாஜி போன்ற திரையுலக பிரபலங்களும் களத்தில் இறங்கி செயல்படுகின்றனர். இளம் நடிகர்கள் பலரும் பல லட்சம் தொகையை நிவாரண நிதிக்காக
அளித்துள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் படகுகளை கொண்டு மக்களை காப்பற்றும் மீனவர்கள், இடுப்பளவு வெள்ளத்தில் பேருந்துகளை மக்களுக்காக இயக்கி செல்லும் மாநகர பேருந்து ஊழியர்கள், பெங்களூருவில் இருந்து பேருந்துகளில் அனுப்பப்படும் உதவி பொருட்கள் என எங்கு திரும்பினாலும் நெகிழ்ச்சியான அனுபவங்கள்.

பொழுதுபோக்கு என்றும் பலரின் வெட்டியான செயல்பாடு எனவும் விமர்சிக்கப்பட்ட சமூக இணைய தளங்கள் எத்தகைய பணியாற்றியது என இந்த பேரிடர் சமயத்தில் தெரிந்துகொள்ள முடிந்தது. உதவி தேவை, தண்ணீர் தேவை, மருந்துகள் தேவை என ஆயிரக் கணக்கில் பகிரப்பட்ட தகவல்களும், வேண்டுதல்களும் தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளாத நிலையிலும் சென்னை மழை இணைய உலகில் இன்னும் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் தங்கள் வாழ்வில் பார்த்திருக்கும் வெகு சில பேரழிவுகளில் இதுவும் ஒன்று. பதினைந்து நாட்களுக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் இழுத்து மூடப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை பத்திரமாக இருக்க அறிவுறுத்தி விடுமுறை அளித்திருக்கிறது. நம்மால் இயன்ற சிறு உதவியேனும் செய்ய வேண்டும் என இளைஞர்கள் களத்தில் குதித்துள்ளனர். இது ஒரு புது நம்பிக்கையை தருகிறது.

இளைஞர்கள் எந்நேரமும் இணையங்களில் பொழுதைக் கழிக்கும் பொறுப்பற்றவர்கள் அல்ல என அவர்களும், தங்கள் பங்களிப்பின் மூலம் நிரூபித்துள்ளனர்.

எல்லோர் சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பதுபோல் மக்களை நோக்கி, மக்கள் தங்கள் மனிதாபிமானத்தை பறைசாற்றிக்கொண்டிருக்க, நேற்று  சென்னையை சுற்றி வந்த கார் ஒன்று சாலைகளில் தங்கள் பணிநிமித்தம் நின்றிருந்த காவல்துறையினருக்கு உணவும், பிஸ்கெட் பாக்கெட்டுகளும் கொடுத்து நெகிழ வைத்தனர். இந்த சம்பவங்கள் , இந்த துயர் அல்ல இன்னும் எத்தனை பேரழிவுகளை சந்திக்க நேர்ந்தாலும் ஒன்றாக செயல்பட்டால்,  மீண்டு வரமுடியும் என்ற உத்வேகத்தை
தருகிறது.

சென்னையில் துரிதமாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப உதவுவதுபோல்  மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் போன்ற மாவட்டங்களில் மீட்பு பணியை வேகப்படுத்த உதவினால் இன்றைய தலைமுறையினருக்கு போடலாம் இன்னும் பெரிய சபாஷ்!

சென்னையைச்  சிதைத்த மழை..உணவளித்து மக்களைக் காத்த மனித நேயர்கள்... புகைப்படத் தொகுப்பு http://bit.ly/1LSfuuf

இந்தப் படங்களைப்  பகிர்வதின் நோக்கம் மனித நேயத்தை மேலும் வளர்க்கவும், பலமாக்கவும். உதவிகிட்டவும்..  மேலும் படங்களுக்கு... http://bit.ly/1LSfuuf- கோ. இராகவிஜயா

(மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close