Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸை திசைதிருப்பிய போராட்டக்காரர்கள்! ( அணு உலை அரசியல்: பாகம் -20)

‘நான் 10,000 புதிய கண்டுபிடிப்புகளை வெற்றிகரமாக உருவாக்கியபோதிலும் அவை எதுவுமே செயல்படவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் நான் இதுவரை தோல்வி அடையவில்லை’ 

- தாமஸ் எடிசன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், போலீஸ் உதவியுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. அணு உலையில் யுரேனியம் நிரப்ப தேசிய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்ததை போராட்டக்காரர்கள் எதிர்த்தனர்.

இதுவரை இடிந்தகரையில் மட்டுமே நடந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அணு உலை முற்றுகை போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியானது. இதனை முறியடிக்கும் வேலையில் காவதுறையினர் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

அணு உலையை முற்றுகையிட வேண்டுமானால் இடிந்தகரையில் இருந்து சாலை வழியாகச் செல்ல வேண்டும். அந்த பாதை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஒருவேளை போராட்டக்காரர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர்களுக்கு லோக்கல் போலீஸார் தகவல் கொடுத்து இருந்தனர். உள்ளூர் போலீஸார் மற்றும் உளவுத்துறையினரின் தவறான தகவல்களால் குழம்பிப் போய் இருந்தார்கள், உயர் அதிகாரிகள். அதனால், வழியெங்கும் மணல் மூடைகளை அடுக்கி துப்பாக்கி போலீஸார் காவல் இருந்தனர். சாலை ஓரத்தில் தென்னந் தோப்பில் 300 மீட்டர் நீளத்துக்கு பொக்லைன் மூலம் பதுங்கு குழியையும் போலீஸார் அமைத்தனர்.

போலீஸார் நினைத்தது ஒன்று.. ஆனால், நடந்தது வேறு. கடைசி நேரத்தில் தாங்கள் செல்லும் வழியை மாற்றிக் கொண்ட போராட்டக்காரர்கள் கடலோரத்தில் பீச் வழியாக அணு உலையை நோக்கி சென்றனர்.  இதை போலீஸார் எதிர்பார்க்கவே இல்லை. சாலை வழியாகச் சென்றால் நான்கைந்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியநிலையில், கடலோரமாகவே நடந்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டரில் அணு உலை!

10,000 போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், ஒரு காவலர் கூட இல்லாத கடலோர மணலில் நடையைக் கட்டினர் மக்கள். முன் வரிசையில் சென்ற குழந்தைகள் மற்றும் பெண்களின் கைகளில் வெள்ளைக் கொடி பறந்தது. இப்படி ஒரு மாற்று வழி இருப்பதே தெரியாததால் அதிர்ச்சி அடைந்தது போலீஸ். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத காவல்துறை அதிகாரிகள், உடனடியாக அனைத்துப் பிரிவு காவல்படையினரையும் கடலோரம் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், கடலோரம் மணல் குவியலாக இருந்ததால் வாகனங்கள் செல்ல இயலவில்லை.
 
நடந்தாவது சென்று, போராட்டக் குழுவினர் அணு உலைக்கு சென்று முற்றுகையிடுவதை தடுங்கள் என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் காவல்துறையினர் மணலில் கால்கள் புதைய நீண்ட தூரத்துக்கு நடந்தும் ஓடியும் வந்தார்கள். அணு உலையானது வெறும் 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் நிலையில் மக்களை வழிமறித்தனர் போலீஸார். உடனடியாக போராட்டக் குழுவினர், கடற்கரையில் செங்கழனி ஓடை என்கிற இடத்தில் மணலில் அப்படியே அமர்ந்து விட்டனர்.

இதனையடுத்து போலீஸார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வருடமாக நடந்த போராட்டத்தின் போது இடிந்தகரை கிராமத்தை எட்டிக் கூட பார்க்காத நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதரி ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த கடற்கரை மணலுக்குள் சென்றனர்.

போராட்டக் குழுவை சேர்ந்த ஒரு சிலரை மட்டும் அவர்கள் தனியாக அழைத்தார்கள். போராட்டக் குழுவினர் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் பொதுமக்கள் அவர்களை அனுப்ப தயாரில்லை. ‘எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்க. தனியாக யாரையும் உங்ககிட்ட அனுப்ப மாட்டோம். நீங்க அவர்களை கைது பண்ணீடுவீங்க...’ என்றதோடு அவர்களை அனுப்பவும் மறுத்து விட்டனர்.

இதனால் கலெக்டர் செல்வராஜ் அவர்களிடம், ‘‘அணு மின் நிலையம் பற்றி உங்களிடம் தவறான கருத்துக்களை சிலர் சொல்லி இருக்காங்க. அணு உலையால் எந்த பாதிப்பும் வராது. அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரின் வெப்பத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அதனால் கடலுக்கும், உங்கள் தொழிலுக்கும் எந்த பாதிப்பும் வராது.

சென்னை ஐகோர்ட் அணு மின் நிலையத்தை செயல்படுத்த உத்தரவிட்டு இருக்கு. அதனை எல்லோரும் மதிக்க வேண்டும். உங்களுக்கு இந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்றால் மேல்முறையீடு செய்யுங்க. ஆனால், நீங்க சட்டத்தை மதிக்காமல், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்தப் பகுதியில் போராட்டம் நடத்துவது சரியல்ல’’ என்றார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி-யான விஜயேந்திர பிதரி, ‘‘உங்கள் கருத்துக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். ஆனாலும் உங்களது எதிர்ப்பு என்பது சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும். உங்கள் சந்தேகத்தை போக்குவதற்காக அமைக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் குழுக்களும் அணு உலை பாதுகாப்பானது என்று தான் சொல்லி இருக்கு. கோர்ட்டும் அணு உலைக்கு ஆதரவாகவே தீர்ப்பு சொல்லி இருக்கு. அதனால் சட்ட விரோதமாக கூடுவதை தவிர்த்து உடனடியாக இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டத்தினர் அனைவரும் அணு உலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த தென் மண்டல ஐ.ஜி ராஜேஷ்தாஸ், ‘உடனே இங்கே இருந்து கலைந்து செல்லுங்கள். இந்த போராட்டத்தை அனுமதிக்கவே முடியாது. நான் நினைத்தால் இந்த போராட்டத்தை தூண்டிவிடும் உதயகுமாரனை தூக்கிடுவேன்...’ என்றதும்,  கூட்டத்தினர் அனைவரும் ஆவேசமாகி ஆளாளுக்கு தடித்த வார்த்தைகளை அள்ளி வீசினர். இதனால் கோபமடைந்த ராஜேஷ்தாஸ், அந்த இடத்தை விட்டு ஆவேசத்துடன் வெளியேறினார்.

மதிய வேளையில் குழந்தைகளும் பெண்களும் வெயிலின் உக்கிரம் தாங்காமல் சுருண்டனர். இதனை அறிந்த பக்கத்து கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் கொண்டு வந்தனர். அப்போது, பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர்கள், தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதை பார்த்த கிராமத்து பெண்கள், அவர்களுக்கும் மனிதாபிமானத்துடன் தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்.

'அணு உலையில் யுரேனியம் நிரப்ப மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே முற்றுகை போராட்டத்தை கைவிடுவோம்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியாக தெரிவித்து,  அந்த இடத்தை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தனர். மாலையில் போலீஸ் படையின் பெரும்பகுதி விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடலோரத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அங்கேயே இரவில் தங்கினர்.

அடுத்த நாளில் தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் சந்திக்கப் போகிறோம் என்பது தெரியாமல்,  கடலோரத்தில் வசிக்கும் பாம்புகள் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட ஜந்துக்களுடன் அவர்கள் இரவைக் கழித்தனர்.  விடிந்ததும் நடந்தது என்ன? என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

 

 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close