Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரிந்துரைக் கடிதங்களால் கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்!- இது புது 'வெள்ளை வேட்டி' மிரட்டல்

வ்வொரு நாளும் அரசியல் கட்சியினரிடமிருந்து வரும் பரிந்துரைக் கடிதங்களால் வழக்கமான அத்யாவசிய பணிகளை செய்ய முடியவில்லை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெளிப்படையாகப் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

முதுநிலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை பேராசிரியர்கள் தரப்பில் பேசியபோது ஊசியாய் குத்தியெடுத்தன அவர்களின் கேள்விகள்...

 "சார்.. எந்தப் பேஷண்டுக்கு எவ்வளவு சீக்கிரம் டிரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லித்தர அரசியல்வாதிகள் யார் ? பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பேஷண்ட்டின் உறவினர்கள் எத்தனையோ சமயங்களில் புரிந்து கொள்ளாமலே எங்கள் மீது ஆத்திரத்தைக் கொட்டி விடுவார்கள். ஒரு சிலர் உச்சக்கட்டமாக எங்களை அடிக்கக் கூட பாய்ந்துள்ளனர்.. அதையெல்லாம்  கூட நாங்கள், இது அவர்களின் பாசத்தின் எதிரொலி என்று எண்ணிக் கொண்டு அவர்களை  எச்சரித்துவிட்டு, எங்கள் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவோம். எங்களைப் பொறுத்தவரையில் எந்த சூழ்நிலையிலும் ஒரு மனித உயிரைக் காப்பாற்றியே தீரவேண்டும். அது மட்டும்தான் நோக்கம்!

உயிரில் சாதா உயிர், வி.ஐ.பி. உயிர், வி.வி.ஐ.பி. உயிர் என்றெல்லாம் இருப்பதாக எங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. இது புரியாமல் தினமும் பத்து பரிந்துரைக் கடிதங்களோடு வந்து "சீக்கிரம் முடிச்சுக் கொடுங்க’ என்று நிர்பந்திக்கிறார்கள். அவர்களின் வார்த்தையிலேயே எவ்வளவு 'நெகடிவ்' அர்த்தம் வெளிப்படுகிறது பாருங்கள்.

பரிந்துரை கடிதங்களோடு வருகிறவர்களுக்கு மழை வெள்ளம் இப்போது கூடுதல் காரணமாகி விட்டது. ’ஹெல்த் மினிஸ்டரோட ஸ்பெஷல் பி.ஏ., சொல்லி விட்டாரு’ என்பதில் ஆரம்பித்து இருக்கிற அத்தனை மினிஸ்டர்,  பி.ஏ,, மாவட்டச்  செயலாளர்களின் பரிந்துரைக் கடிதங்களோடு ஒரு குரூப்பே அரசு மருத்துவமனைகளில் சுற்றுகிறது. ஒருநாள் காய்ச்சலுக்கே பரிந்துரை கடிதங்களுடன் வருகிறார்கள். "டேக் நெசசரி இம்மீடியேட் ஆக்‌ஷன் ஃபார்  ஸ்பெஷல் பி.ஏ ........ மினிஸ்டர் " னு போட்டு லெட்டரை நாங்கள் பார்க்கலைன்னா, அன்னைக்கு நாங்க லீவுன்னு அர்த்தம்" எனக் குமுறுகின்றனர் அரசு மருத்துவர்கள்.

தனியார் மருத்துவமனைகளில் இதே போன்ற பரிந்துரைக் கடிதங்களைக் கொண்டு போய் காட்டமுடியுமா? அரசு மருத்துவமனைகளில் டீன்கள்தான் கையெழுத்துப் போட்டுத் தருகிறார்களா, அல்லது அவர்கள் கையெழுத்தை இவர்களே லெட்டர் ஹெட்டில் போட்டு வைத்துக் கொள்கிறார்களா என்று கணிக்க முடியாத அளவிற்கு டீன் கையெழுத்திட்ட ’லெட்டர் ஹெட்’ களுடன் பலர் உலவுகிறார்களாம்.

’’ஒரு குரூப்பாக  காலை பத்து மணிக்கே ஆஸ்பிடலுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் அழைத்து வருபவர்களுக்கு சுண்டு விரலில் பிளேடு சின்னதாக கீறி லேசாக ரத்தம் எட்டிப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் நேராக வருகிற இடம் எது தெரியுமா?  உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஐ.சி.யு வார்டுக்குத்தான். அதுவும் அந்த வெள்ளை நிற செருப்புகளை வெளியே கழற்றி விடாமலே வருவார்கள். தீவிர சிகிச்சையில் இருக்கிற ஒருவரை 'பெட்' டை விட்டு கீழே இறக்கச் சொல்லி கட்டாயப் படுத்துவார்கள்.. ஐ.சி.யு.வில் அதிர்ந்து கூட பேச முடியாத எங்களின் உண்மையான மனநிலையை அவர்களை விட வேறு யாருமே அறிந்து வைத்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு குரலைக் கொடுப்பார்கள்...வேறு வழியில்லாமல் நாங்களும் பெட்டை மாற்றிக் கொடுத்து விடுவோம். அவர்கள் போன பிறகு அந்த சுண்டு விரல் விபத்துக்காரரிடம் பேசி அவரை நார்மல் வார்டுக்கு மாற்றி விடுவோம்.. இந்தக் கொடுமைகளுக்கு என்றுதான் விடிவுகாலம் என்று தெரியவில்லை!

அரசு மருத்துவமனைகளில் ஆலோசனைக் குழு என்று கரைவேட்டிகளோடு ஒரு கும்பல் ஒவ்வொரு பில்டிங்குகளாக ஏறி இறங்குவதும் அன்றாடக் காட்சிகள். ரூலிங் பார்ட்டியில் எந்த போஸ்டிங்கும் கொடுக்க முடியாத ஆட்களைத் திருப்திப்படுத்த இப்படி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்னு போஸ்டிங் போட்டு விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பரிந்துரைக் கடிதங்களோடு ரெகுலராக வருகிறவர்கள் போக இவர்களும் இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் மினிஸ்டர், டீன் பரிந்துரைக் கடிதங்களை கொண்டு வருவதில்லை.. ஆலோசனைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் அப்படீன்னு இவர்களே  'லெட்டர் ஹெட்' டை சொந்தமாக போட்டுக்கறாங்க.. இன்னும் சொல்லணும்னா, இவங்க விசிட்டிங் கார்டை கையில் கொடுத்து சில பேஷண்டுகளை ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.. இந்த அநியாய கொடுமைங்களுக்கு முடிவு என்னைக்குத்தான் வருமோ தெரியலை" என்று மேலும் கொந்தளிக்கின்றனர் மருத்துவர்கள்.

அரசு பொது மருத்துவமனைகளை தாண்டி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையிலும்,  ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவ வட்டாரத்திலும் இந்த லெட்டர் ஹெட் கரை வேட்டிகள் பலர் 'குளிர்' காய்கின்றனர் என்கின்றனர். இதில் மருத்துவர்களின் லேட்டஸ்ட் சோகம் அவர்களை  லேசாக அச்சுறுத்துவதும், பின் ஸ்ட்ராங்காக மிரட்டுவதும்தான்.

 "அரசு மருத்துவர்களை பணியின் போது தாக்கினாலோ, மிரட்டினாலோ கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று நடைமுறையில் உள்ள சட்ட எச்சரிக்கையை இந்த 'துண்டுச் சீட்டு' ஆசாமிகள் கொஞ்சமும் மதிப்பதே இல்லை என்கிறார்கள் பெரும்பாலான மருத்துவர்கள்.

தமிழகத்தில் மிக சமீபமாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள், டீன்கள் அடிக்கடி இட மாற்றம் செய்யப்படுவதற்கும் இந்த பரிந்துரைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அரசு மருத்துவ வட்டாரங்கள்.

ஹ்ம்ம்...  என்னத்த சொல்ல!

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close