Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உணவு போதும்... உடை போதும்... வேண்டும் கழிப்பிட வசதி!

கொட்டித்தீர்த்த கனமழையின் விளைவு சென்னை தண்ணீரில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை,  எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடுமா என்ற பீதியை பரவவிடுகிறது மக்களிடம். 

பாதிக்கப்பட்ட மக்களிடம் நிகழ்ந்த சேதத்தின் அடையாளத்தை விட இப்படி திரும்ப ஒருமுறை நிகழுமோ என்ற பீதியின் அறிகுறி அப்பட்டமாய் தெரிகிறது. மனிதநேயத்துடன் மக்கள் தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் உதவிகள்தான் நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது இம்மாதிரி சமயங்களில்.

தனிமனிதர்கள், அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் என எல்லா தரப்பிலிருந்தும் அடுத்தடுத்து கிடைக்கும் உதவிகள் மக்களை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கிறது. இவர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளால் இயற்கை தேவைகளை ஈடுகட்டமுடிகிறது. இயற்கை உபாதைகளுக்கு என்ன வழி?

அரையும் குறையுமாக இடிந்துகிடக்கும் வீடுகள், அதிலும் பரவி இன்னமும் வடியாத தண்ணீர்... பாதிப்புகளை சரிசெய்ய பரபரத்துக்கிடக்கும் மக்களிடையே,  பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளுக்கு  எங்கே வடிகால் தேடுவார்கள?

கடலுார் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்தில்  நிவாரண உதவிகள் வழங்கிக்கொண்டிருந்த ஒரு குழுவினர்,  அங்கிருந்த மக்களிடம் அனுசரணையாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த குழுவில் ஒருவருக்கும் அங்கிருந்த பெண்மணி ஒருவருக்கும் நிகழ்ந்த உரையாடல் இது....

"பிறகு சாப்டுக்குறோம்ப்பா"

"ஏம்மா...வேற எதா தேவையா...? பாய், தலகாணி, போர்வை, மாத்திரைகள் இப்டி எதா வேணுமா"

"அதெல்லாம் இருக்குப்பா"

"இப்டி நீங்க சொல்லும்போதே, வேற எதோ தேவைனு தெரியுது. அது என்னனு சொன்னாதானம்மா புரியும்..."

நீண்ட பேரமைதிக்குப்பின்...கலங்கிய கண்களுடன் தலை குனிந்து மெல்லியக் குரலில் அந்தம்மா சொன்னார்

“முதல்ல_நாங்க_பாத்ரூம்_போகணும்”


-சில்லிடுகிற தொடையளவு நீரில் நின்றிருந்தும் அவரை உடம்பு முழுக்கச் சுட்டிருக்கிறது அந்த வார்த்தைகள்.

இந்த சம்பவத்தை குறிப்பிடும் அந்த தன்னார்வலர், 'வீடு முழுக்கத் தண்ணீர், பார்க்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்,  இயற்கை உபாதைகளை எப்படி கழிப்பார்கள் என்பதை எப்படித்தான் மறந்துபோனோம் நாம். இது ஏதோ கீழ்கோடியில் அன்னவல்லி என்கிற குக்கிராமத்தில் அல்லல்படுகிற ஒரு பெண்மணியின் வாய்மொழி அல்ல. கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பேரிடர் பாதித்த மாவட்டங்களின் ஒட்டு மொத்த பெண்மணிகளின் வாக்குமூலம் அது" என ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

சென்னையிலும் இன்னும் பிற நகரங்களிலும் மொபைல் டாய்லெட்டுகள் சமீபத்தில் அரசால் அமைக்கப்பட்டன. இந்த நடமாடும் கழிப்பறைகள்தான் பாதிப்பின் அடுத்தகட்டத்தில் நிற்கும் மக்களுக்கு தற்போதைய அத்தியாவசியம். பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை ஒரே இடத்தில் குவித்திருக்கும் அரசு,  மிக கவனமாக அத்தனைபேருக்குமான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.

தங்கவைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த கழிவறை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு போதுமானதாகவோ, சுகாதாரமானதாகவோ இருக்க வழியில்லை. குறிப்பிட்டநேரத்தில் காலைக்கடனை முடிக்கும் வழக்கம் கொண்ட மக்களுக்கு அது பல சங்கடங்களை ஏற்படுத்தும்.

ஒரே சமயத்தில் அத்தனை பேரின் கழிவுகளும் ஒரே இடத்தில் சேகரமாவது,  வெள்ளம் வடிந்து வீடு திரும்பியபின்னும் அவர்களுக்கு வேறு பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக்காரணமாகிவிடும். ஆகையால் கழிப்பிட வசதி விஷயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

களத்தில் மக்கள் தங்கள் கரங்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து நிற்கும்போது பாதிக்கப்பட்டவர் களுக்கு எதையும் செய்துவிடமுடியும். கழிப்பறை வசதி போன்றவை, நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களால் மட்டுமே கட்டமைப்பு வசதிகளை கருத்தில்கொண்டு செயல்படுத்தமுடிகிற விஷயம். இதனால் அரசு இன்னமும் உணவு, உடை, மருந்துகள் என்ற தங்கள் இலக்கிலிருந்து அடுத்த கட்டமாக நடமாடும் கழிப்பறைகளை போர்க்கால அடிப்படையில் அமைக்கவேண்டும்.

தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களில், குறிப்பிட்ட மணித்துளிகளில் தற்காலிக டாய்லெட்டுகள் முளைப்பது என்பது தேர்தல் காலங்களில் நாம் கண்டு அதிசயித்த ஒன்றுதான். இம்மாதிரியான ஒரு அவசர சூழலைக்கருதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழிப்பிட வசதியை அரசு ஏற்படுத்த உடனே ஆவண செய்யவேண்டும்.

தற்போதைய தேவை 'எது' என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது!

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close