Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாவூத்துக்கு பிடித்த நடிகை! ( தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர் -13)

காட்டன் மில்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் இஞ்சின்கள், புதியதாக எழுந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்புகள், முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் என்று மும்பை மாநகரம் பல வண்ணங்களில் மின்னத் தொடங்கியது. அழகான மாநகரமாக மும்பை பெரும் கட்டடங்களால் எழுந்து  நிமிர்ந்து கொண்டு இருந்தது.

மும்பை மாநகரம் உருவாதைப் போல பல்வேறு டான்களும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டு இருந்தனர். சோட்டா ராஜன், தாவூத்தின் பெயர்களை மையமாக வைத்துக்கொண்டு பல்வேறு புதிய 'தாதா'க்கள் மும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தனர். தாவூத்தின் தளபதிகள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டனர்.

அதில் சோட்டா ஷகீல் முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தான். அதற்காக அவன் பல்வேறு புதிய இளைஞர்களை வேலைக்கு இறக்குமதி செய்து இருந்தான். அவர்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து, ஆயுத டீல்கள், ரியல் எஸ்டேட், ஹவாலா பண பரிவர்த்தனை, சினிமாக்களுக்கு ஃபைனான்ஸ் தருவது, சினிமா பஞ்சாயத்துக்களை செட்டில் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தான். இதற்கான எல்லா அதிகாரங்களையும் ஷகீல், சௌத்யா, சரத் ஷெட்டி ஆகியோர் பிரித்துக்கொண்டனர்.

'சம்பவங்களை' முடித்துவிட்டு ஜெயிலுக்கு போகும் தாவூத்தின் ஆட்களை வெளியே எடுக்கவும், சிறையில் அவர்களின் தேவைகளை முடித்து கொடுக்கவுமே லட்சக்கணக்கில் செலவு செய்தார்கள். இதனால் போலீஸ், சிறை, நீதித்துறை என்று பல்வேறு வட்டாரங்களில் அவர்களுக்கு தொடர்புகள் மேலும் அதிகரித்தன. அதற்கு பரிசாக பணமும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களும், நகைகளும் கொடுக்கப்பட்டன. பண ஆசை இல்லாத அதிகாரிகளை வளைக்க பாலிவுட் நடிகைகளை பயன்படுத்தினர். இந்த டீலிங் நீதித்துறை வரை நீடித்து இருந்தது. நேர்மையான பல்வேறு அதிகாரிகளின் குடும்பங்கள் மிரட்டப்பட்டன.

மும்பையில் தாவூத் தனி அரசாங்கத்தை நடத்தி வருவது பரவலாக பேசப்பட்டது. அரசு அதிகாரிகள் பலர் அரசிடம் வாங்கும் சம்பளத்தை விட தாவூத் போன்ற தாதாக்களிடம் அதிக சம்பளத்தை வாங்கினார்கள். இதனால் அரசு,  தாவூத் போன்றவர்களை ஒழிக்க பல்வேறு முடிவுளை எடுத்தாலும் அது தோல்வியிலேயே முடிந்தது.

அரசு ஒடுக்க ஒடுக்க அதே வேகத்தில் மீண்டும் அசுர வளர்ச்சியில் மும்பையில் டான்கள் எழுந்து வந்தார்கள். இந்த முறை பல்வேறு தொழில் அதிபர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் மிரட்டி பணம் வாங்கினார்கள். அதனால் சினிமா நட்சத்திரங்கள் பலர் தாதாக்களிடம் 'நட்பு' பாராட்டினார்கள். சில கொலைகளின் எதிரொலியாக இந்து-முஸ்லிம் சண்டைகள் நடக்க ஆரம்பித்தன. அந்த சண்டை அப்படியே பரவி பொதுமக்கள் மத்தயில் இந்து-முஸ்லிம் கலவரமாக வீதிக்கு வரத் தொடங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல்வாதிகள் அவர்களின் ஆளுமையை காட்ட வெளியே வந்து, பஞ்சாயத்து பேச ஆரம்பித்தனர்.

சோட்டா ஷகீலுக்கு பி.ஜே.பியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் நாயக் மீது கடும் கோபம் வந்தது. நாயக்கின் செயல்கள் எல்லாம் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக இருப்பதாக நினைத்தான். அதனால் நாயக்கை கொலை செய்ய திட்டம் தீட்டினான் ஷகீல். அதற்கான பொறுப்பு ஷாஜித் என்பவனிடம் கொடுக்கப்பட்டது. அவன் பெரோஸ், ஜாவேத் ஆகியோர்களை வைத்து அதற்கான செயலில் இறங்கினான். அதற்கான நாளை குறித்துக்கொண்டு ஒரு பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தனர்.

பரபரப்பான மும்பை பாந்த்ரா சாலையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரியுடன் ராம்தாஸ் நாயக், தம் நண்பர்கள் இருவருடன் சென்றுகொண்டிருந்தபோது காரை மறித்து இரண்டு நபர்கள் சுட்டார்கள். கார் கண்ணாடிகள் சில்லு சில்லாக உடைந்து உள்ளே இருந்தவர்கள் மீது தெறித்து குத்தியது. நாயக்கின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியை துாக்குவதற்கு முன் ஏ.கே 47 துப்பாக்கியின் குண்டுகள் அந்த காரை துளைத்து எடுத்தன.

சில நிமிடங்களில் நாயக்கின் ரத்தம் காரில் இருந்து வழிந்து சாலையில் ஓடியது. உயிரை விட்டார் நாயக். காரின் உள்ளே இருந்த மற்ற  இரண்டு நபர்களும் குத்துயிரும், குலையிருமாக கிடந்தார்கள். இரண்டு நிமிடங்களுக்குள் அத்தனை சம்பவங்களும் அரங்கேறிவிட்டன.

கொலைகாரர்கள் யார் என்கிற விபரத்தை கண்டறிய முடியாமல் போலீஸ் திணறியது. அடுத்தடுத்த நாட்களில் இதுபோன்ற கொலைகள் சர்வ சாதாரணமாக மும்பையில் நடக்க தொடங்கின. மும்பையில் நடக்கும் எல்லா விசயங்களும் தாவூத்திற்கு முன்னரே சொல்லப்படும். சம்பவம் முடிந்ததும் தாவூத்திற்கு தகவல் கொடுக்கப்படும். ஆனால் தாவூத்,  துபாய் நகரத்தில் வானுயர்ந்த கட்டடத்தில் இருந்து கொண்டு வாழ்க்கையை ரசித்துக்கொண்டும், விருப்பப்பட்ட அழகிகளுடனும், இந்தியாவில் இருந்து துபாய்க்கு அழைத்து வரப்பட்ட பிரபல சினிமா நட்சத்திர அழகிகளுடன் இனிமையாக, ரம்யமாக பொழுதை கழித்துக்கொண்டிருந்தான்.

மும்பையில் பெரும்பாலான ஆண்களை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கட்டிபோட்ட பிரபல நடிகை அவர். சாப்பிடக் கூட நேரம் இல்லாத அளவிற்கு பிசியாக இருந்த நடிகை. முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து வந்தார். அவர் நடித்த எல்லாப்படங்களும் ஒரே நேரத்தில் ஹிட் அடித்தது. தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் தொகையாக பல லட்சங்களை அவரது காலடியில் கொட்டினர்.

நடிகையின் மேனேஜரும் நடிகைக்கு தெரியாமல் பணத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பல்வேறு நபர்கள் நடிகைக்கு நெருக்கடி கொடுக்கவும்,  நடிகையால் நெருக்கடியை தாங்க முடியவில்லை. எவ்வளவு அட்ஜஸ்ட் செய்தாலும் தொடர் நெருக்கடிகள் நடிகையை கிடுக்குப்பிடி போட்டன. பலரும் அந்தக் 'கனி'யை சுவைக்க விரும்பினர். இதில் இருந்து தப்பிக்க,  யாரோ சொன்ன கதையை நம்பி, துபாய்க்கு ஃபிளைட் பிடித்து தாவூத்தை சந்திக்க சென்றார்.

தாவூத்தை சந்திக்க முடியாமல் மூன்று நாட்கள் வரை காத்திருந்தார் நடிகை. உண்மை நிலவரம் பற்றி அறிந்து கொண்ட தாவூத்,  அவரை மாலை நேரம் ஒன்றில் சந்திக்க சம்மதம் தெரிவித்து, சந்திக்கும் இடத்தையும் சொல்லி விட்டான். துபாயின் மிக பிரபலமான ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் காத்திருந்தார் அந்த நடிகை.

அந்த அறை முழுவதும் சிகப்பு நிற ரோஜாக்களும், விதவிதமாக வாசனை திரவியங்கள் தெளிக்கப் பட்டும், அலங்காரம் செய்யப்பட்டும், மெல்லிய நறுமணம் ஏசி காற்றில் மிதக்கும்படி ரம்யமாக இருந்தது. காத்திருந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் தாவூத் அந்த அறைக்குள் வந்து சேர்ந்தான். நடிகைக்கு உள்ளூர பயம் இருந்தாலும் தாவூத்தை பார்த்ததும் அந்த பயம் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது.

தாவூத்தின் நேர்த்தியான உடை, பேச்சு, ஒரே வார்த்தையில் தனது பிரச்னையை போனில் செட்டில் செய்த செயல்கள் எல்லாம் அந்த நடிகைக்குள் ஒரு பெரிய பிரமிப்பை உண்டாக்கியது. எதுவும் பேசாமல் மௌனமாக நடக்கும் காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தவர்,  உள் மனதிற்குள் நிஜ ஹீரோவாக தாவூத்தினை வரித்துக்கொண்டார்.

தனது பிரச்னையை சுலபமாக முடித்து வைத்ததற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதுக்கு,  தாவூத் வெறித்துப் பார்த்தபடி மௌனத்தையே பதிலாக தந்தான். அடுத்த சில நிமிடங்களில் அந்த அறைக்கதவு சாத்தப்பட்டது.

எத்தனையோ நடிகைகளோடு பல்வேறு இரவுகளை கழித்த தாவூத்திற்கு இந்த நடிகை மீது மட்டும் கொஞ்சம் கூடுதல் பாசம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அந்த நடிகையை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தான். நல்ல டான்சர் ஆன அந்த நடிகை, பல்வேறு இரவுகளில் தாவூத் ஒருவனுக்காக பல நடனங்களை ஆடி தாவூத்தை குஷிப்படுத்தி இருக்கிறாள்.

தாவூத்திடம் நெருக்கமாக இருந்த காரணத்தினால்,  ஒரு முறை போலீஸ் அந்த நடிகையை விசாரணை செய்த பொழுது,  இருவருக்கும் இருந்த நெருக்கமான காதல் சம்பவங்களை ருசிகரமாக சொல்லி இருக்கிறார். இந்த சம்பவம் பத்திரிகைகளில் கிசு கிசுவாக எழுதப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு வளர்ந்து வரும் தாதாக்கள் அழகான நடிகைகளை காதலிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப்பட்டியல் பெரும் நீளமானவை.

டான்களை வளைக்க முடியாத போலீஸ், நடிகைகளை துருப்பு சீட்டாக பயன்படுத்த முடிவு செய்தது.

திமிங்கலங்களை பிடிக்க தூண்டிலை போட்டனர்... சிக்கியதா திமிங்கலங்கள்...?


- சண்.சரவணக்குமார்      

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close