Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழை வெள்ளம்: இலவசமாக அட்டஸ்டேசன் வழங்கும் வழக்கறிஞர்!

" எங்க வீடு...எங்க  இருந்தீங்க, உங்களை யாருக்காவது தெரியுமா.. அட்ரஸ் புரூப் எதாவது இருக்கா...?" என்ற கேள்விகளால் வெள்ளம் கொடுத்த வேதனையை விட அதிகமான வேதனை பெரும்பாலான மக்களின் புலம்பலில் ஒலிக்கிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு "சான்றுரைப்பு" (அட்டஸ்டேசன்) அவசியமாக தேவை. ஆனால், சான்றுரைப்பு கொடுக்கிற இடத்தில் நிற்கிற நீண்ட வரிசை,  வெள்ள பாதிப்பு மக்களுக்கு சோர்வைக் கொடுத்துவிட இன்று , நாளை என்று அதையும் வாங்க முடியாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், "வெள்ள நிவாரணத்துக்கான அட்டஸ்டேசன் வேண்டுமா... என்னிடம் வாங்க... இலவசமாக தருகிறேன்!"  என்று அழைத்தழைத்தே இதுவரை இரண்டாயிரம் பேருக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார் 70 வயதான சென்னை ஹைகோர்ட் அட்வகேட் வி.ராமலிங்கம்.

ஹைகோர்ட்டின் ஆவின் கேட் எதிரே, ஓப்பன் காரில் கேஸ்  கட்டுகளுடன் வழக்குத் தொடர்பான பைல்களையும் பார்த்துக் கொண்டு, தேடிவருகிற பொதுமக்களுக்கு 'நோட்டரி பப்ளிக் ஓத்ஸ்' என்ற அரசின் ஸ்டாம்ப் முத்திரையைக் குத்திக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் பெரியவர் ராமலிங்கம்.

"அய்யா.. இப்பத்தான் இப்படியா... இல்லை, நீங்க எப்பவுமே இப்படியா?" என்றதும் சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

" வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நான் போட்டுக் கொடுக்கும்  நோட்டரி அட்டஸ்டேசன் கையெழுத்தால் பயன் இருந்தால் போதும், அதுவே பெரிய சந்தோஷம்.  நான் இப்பத்தான் இப்படியில்லை.. எப்பவுமே இப்படித்தான்.  மாணவப் பருவத்திலிருந்தே இப்படி 'சர்வீஸ்' மனநிலையில் இருந்ததால்தான் எனக்குப் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் போல இருக்கிறார்கள்... ஆமாங்க ரொம்ப லேட் மேரேஜ்."

"காலையிலேயே வந்து விடுகிறீர்களா... இதனால, உங்கள் அன்றாடப் பணி பதிக்கப்படவில்லையா ?"

" பல்லாவரம்தான் வீடு, காலையிலேயே இங்கு வந்து விடுகிறேன். இதுவரையில் இரண்டாயிரத்துக்கு குறையாமல் இந்த மக்களுக்கு நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க முடிந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது."

"உங்கள் சர்வீஸ் இது மட்டும்தானா ?"

"அன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்தான் பூர்வீகம். அங்கிருந்து 1976-ல் சென்னை பல்லாவரம் பகுதிக்கு வந்து விட்டேன். ஊரில் எந்த  அடிப்படை வளர்ச்சியும் அப்போது  இல்லை. அங்கிருந்த அடிப்படை வசதியற்ற  ஏழை மக்களை ஒன்று திரட்டி  1983-ல் உருவாக்கப்பட்டதுதான் இப்போது இருக்கும் சஞ்சய்காந்தி நகர். அதற்காக கம்யூனிஸ்ட் தோழர் கூத்தக்குளி சண்முகம் இன்னும் சிலருடன்  தலைமைச் செயலர் திரவியம்  மற்றும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப்  நேரில் போய்ப் பார்த்தோம், உதவினார்கள்.  ஊர் உருவானது.

'நியூஸ்டார் கான்வென்ட்'ன்னு  ஒரு பள்ளியைத் தொடங்கி அதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வியை இலவசமாக போதித்துக் கொண்டு வருகிறோம். சட்டம் படித்த பின்னர்  கொஞ்ச காலம் செக்ரட்டேரியட் எம்ப்ளாயியாக இருந்தேன். அங்கே பல ஆண்டுகள்  பணியாற்றியும்  பணி நிரந்தரம் ஆகாமல்  தவிப்பில் இருந்தவர்களுக்காக  போராடி வென்றேன். இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை."

"கோர்ட் வாழ்க்கை எப்படியிருக்கிறது ?"


"நான், ஹை கோர்ட்டில் 'ரிட்' ஸ்பெஷலிஸ்ட். ஆமாம், நிறைய கேஸ்கள் வரும், நிறைய ஜூனியர்கள் எனக்கு இருக்கிறார்கள்.  கேஸ் கொடுக்கும் மக்களிடம் வாங்கும் பீஸ் குறைவு. ஆனால்,  ஜூனியர்களுக்கு நான் கொடுக்கும் சம்பளம் அதிகம். ஓய்வு நீதிபதிகள் சேகர், குலசேகரன் போன்ற பல நீதிபதிகள் என்னை விரும்பும் காரணத்தால் என்னிடம் இப்போதும் ஜூனியர்களாக இருக்கிறார்கள். நிறைய சீனியர் கவுன்சில்கள், பார் கவுன்சில் நிர்வாகிகள் இந்த பட்டியலில் உண்டு. ரொம்பவும் ரசித்துதான் இந்த வேலையை 1987-ல் இருந்து முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறேன்" என்றவரிடம்  அடுத்த ஆள் அட்டஸ்டேசனுக்காக வந்துவிட,  நம்மை விட்டு விட்டு வந்தவர்களின் பெயர் முகவரியை கேட்க ஆரம்பிக்கிறார் ராமலிங்கம்.


-ந.பா.சேதுராமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ