Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?'

பெருவெள்ளம் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை... தலைநகர் சென்னையிலும் புறநகர் சென்னையிலும் இன்னமும் வெள்ளம் வடியாத வீதிகள் நிறையவே இருக்கின்றன. அதேப்போன்று உதவிகள் முழுமையாய் போய்ச் சேராத மக்கள் வசிக்கும் பகுதிகளும் அதிகமாய் இருக்கின்றன.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வெள்ள நிவாரண நடவடிக்கை எப்படி இருந்தது? என்று மாநகராட்சி தரப்பில் கேட்டால் 'மிக, மிக சிறப்பாக அமைந்திருந்தது' என்றேதான் பதில் வரும். ஆனால், 'அடிப்படை  தேவைகளில் ஒன்றான பெட்ரோமாக்ஸ் லைட் கூட வாடகைக்கு  எடுத்து வேலை பார்க்கிற அளவுக்குத்தான் மாநகராட்சியின்  போக்கு இருந்தது' என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் மாநராட்சியின் பல்வேறு தொழிற்சங்கத்தினர்.

"இது என்ன கலாட்டா... விபரமா சொல்லுங்களேன்...!"  என்று கேட்டபோது, சென்னை மாநகராட்சியின் தமிழ் மாநில தொழிற்சங்கத்தின் தலைவர் ஜி.ஹாத்தீம்பேக் இது குறித்து பேசினார்.

மாநகராட்சியில் பெட்ரோமாக்ஸ் பயன்பாடு என்பது நடைமுறையில் இருக்கிறதா ?

"ஹெட் ஆபீஸ் என்று மாநகராட்சி ஊழியர்களால் அழைக்கப்படும் ரிப்பன் பில்டிங்கில் 'ரிலீஃப் மெட்டீரியல்' வைப்பதற்கென்றே  மிகவும் பாதுகாப்பான நிறைய இடங்கள்  இருக்கின்றன. ஆனால், சாதாரணமான விஷயமாக நினைக்கின்ற மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பெட்ரோமாக்ஸ் லைட்டுகள், சேற்றுப்புண் மருந்துகள் போன்ற முக்கியமான பொருட்கள் அந்த கிடங்குகளில் இருந்ததா என்று கேட்டால்  யாருக்கும் பதில் சொல்லத் தெரியாது.

அசாதாரணமான நேரங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை  பள்ளிகளிலும், சமூக நல கூடங்களிலும்தான் அரசு தங்க வைக்கும். அப்போது எமர்ஜென்சிக்காக  ஜெனரேட்டரையும்  கொண்டு போய் விடுவார்கள். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், உடனே கெரசினை ஊற்றி ஜெனரேட்டரை இயங்க வைத்து விடுவார்கள்.

பள்ளிகள், சமூகநலக் கூடங்களின் காலி இடங்களில் வைத்து சமையல் பணிகள் பெரும்பாலும் இரவு வேளைகளில்தான் நடக்கும், அந்த இடத்திற்கும் எமர்ஜென்சிக்காக பெட்ரோமாக்ஸ் லைட்டுகளைத்தான் வைப்பார்கள்.

இப்போது வந்தது போல் பெரு வெள்ளம் வந்தால் மியாட் ஆஸ்பிடலில் நடந்தது போல்தான் ஜெனரேட்டர்களிலும் வெள்ளம் புகுந்து  அதை செயல்பட விடாமல் முடக்கி விடும். இது போன்ற சூழ்நிலைகள் வரலாம் என்பதை முன்னரே கணித்து மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவைகளோடு பெட்ரோமாக்ஸ் விளக்குகளையும் 'ரிலீஃப் மெட்டீரியல்' பொருட்களை வைக்கக் கூடிய கிடங்கில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் பெட்ரோமாக்ஸ் பயன்பாட்டில் இருக்கிறதா என்று கேட்டால், 'அது எங்கியோ துபாய் பக்கத்துல இருக்கறதா சொன்னாங்க' என்று சொல்லக் கூடிய அளவிலேதான் பெட்ரோமாக்ஸ் இருக்கிறது."

ஜெனரேட்டர் இருக்கும் போது, பெட்ரோமாக்ஸ் எப்படி அவசியமாகப்படுகிறது ?

" சென்னையில் 200 மாநகராட்சி வார்டுகள் (15 மண்டலங்கள்) இருக்கின்றன. ஒரு வார்டில் குறைந்த பட்சம் 5 இடங்களிலும் பெரிய வார்டுகளில் 10 இடங்களிலும்  மக்களை தங்க வைத்து மாநகராட்சி சார்பில் உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறிய வார்டுகள் என்ற கணக்கில் பார்த்தால் கூட நமக்கு தேவைப்படுவது, ஆயிரம் பெட்ரோமாக்ஸ் லைட்டுகள். ஒரு பெட்ரோ மாக்ஸ் லைட்டின் விலை 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தரமாகவே கிடைக்கிறது. ஒரு மேண்டல், ஒரு லிட்டர் கெரசின் போதும், ஒரு பெட்ரோமாக்சை பல மணி நேரத்துக்கு எரிய வைக்கலாம்.

பேரிடர் சமயங்களில் பொதுமக்களை அரசு தங்க வைக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் தற்காலிகத் தீர்வாக, உணவும், உறங்க ஒரு இடமும் கிடைத்தாலே போதுமே என்றளவில் மக்கள் நிம்மதி பெற்று விடுகின்றனர்.தலைமையிடமான ரிப்பன் பில்டிங்கிலிருந்தே ஒவ்வொரு வார்டுக்கும் உணவு தயாரிப்புக்கான பொருட்கள், ஜெனரேட்டர்கள் தேவைக் கேற்றபடி அனுப்பி வைக்கப் படுகின்றன. ஃபவர் கட் ஆகிவிட்டால் இருக்கவே இருக்கிறது ஜெனரேட்டர் என்ற அளவில்தான் மாநகராட்சியின் செயல்பாடு இருக்கிறது.

பெருமழையின் போது, ஜெனரேட்டர்களில் நீர் புகுந்து விட்டால் ஜெனரேட்டரை இயக்க முடியாது. பொதுவாக ஜெனரேட்டரை இயக்கவே அதிக நேரம் பிடிக்கும் என்கிற போது நீர் புகுந்த ஜெனரேட்டரை சர்வீசுக்கு கொடுக்காமல் பயன்படுத்தவே முடியாது. அது போன்ற வேளைகளில் கட்டாயம் தேவைப் படுவது பெட்ரோமாக்ஸ்தான்."

ஜெனரேட்டர் தேவையே இல்லை என்கிறீர்களா ?

" மிகவும் முக்கியமான இடங்களில் ஜெனரேட்டர் காலை வாரி விட்டு விடும் என்பதை  அதிகாரிகள் அறிந்தே வைத்துள்ளனர். அதனால்தான், வாடகைக்கு வீடு பிடிப்பது போல பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை வாடகைக்கு பிடித்து விடுகிறார்கள்.

ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டின் விலை ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆனால்  நாள் வாடகை 150 முதல் 200 ரூபாய். அது மட்டுமல்ல, 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுக்காமல் பெட்ரோமாக்ஸ் லைட்டை வாடகைக்குத் தரமாட்டார்கள். இந்த சீசனில் மட்டும் அப்படி பல நூறு பெட்ரோ மாக்ஸ் லைட்டுகளை சென்னை மாநகராட்சியால் வாடகைக்கு எடுத்து,  ஊழியர்களின் தலையில் வைத்து அதிகாரிகளின் பின்னால் ஓட விட்டிருக்கிறார்கள்.

மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் சூபர்வைசிங் போகிற இடங்களில் நீங்கள் பார்க்கலாம்.  பெட்ரோமாக்ஸ் லைட்டை கையில் தூக்கிக் கொண்டு ஊழியர்கள் பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பார்கள். ஜெனரேட்டரை அப்படி தூக்கிக் கொண்டு போக முடியாதே. கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், மிக முக்கிய நிகழ்ச்சிகள், பழைய சினிமாக்களில் பெட்ரோ மாக்ஸ் பயன்பாட்டை நீங்கள் பார்க்க முடியும்"  என வேதனையும், கோபமுமாக கொட்டி தீர்த்தார் ஹாத்தீம்பேக்.


சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் மட்டத்தில் இது குறித்து கேட்டோம்...

"அதெல்லாம் ஒரு காலம் சார்... இரண்டாயிரம் பெட்ரோமாக்ஸ் லைட்டுங்களை கொண்டு வந்து ரிப்பன் பில்டிங்கில் வைத்துக் கொள்வதற்கு எங்கே இடம் இருக்கிறது? மேலும் அதெல்லாம் ரொம்பவும் ஓல்டு பேஷன் டெக்னாலாஜி... இப்ப செட்டாகாது" என்கின்றனர்.

நல்லவேளை 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா'ன்னு கேட்காமல் விட்டார்கள்.


 -ந.பா.சேதுராமன்
 


 

எடிட்டர் சாய்ஸ்