Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்கூட்டர் பிரச்னைக்கே விடுப்பு எடுக்கும் அதிகாரிகளுக்கு ஏரி நீரை திறப்பதில் ஏன் இத்தனை அலட்சியம்?'

"பெருமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறையினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து உள்ளார்கள்' என்று தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.

சரி... சென்னையில் பெய்த கனமழையின்போது பொதுப்பணித்துறை சரியாகவே செயல்பட்டது. இயற்கையினால்தான் இந்த உயிர்சேதமும், பொருள் சேதமும் நிகழ்ந்துள்ளது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஆறுகள், ஏரிகள், குளங்கள், தாங்கல், கால்வாய், வடிகால் போன்றவற்றின் ஆக்கிரமிப்புகளுக்கும், தூர்வாரப்படாததற்கும் பொதுப்பணித்துறை என்ன பதிலை அளிக்கப் போகிறது?. இது சம்பந்தமாக பல கோரிக்கைகள், மனுக்கள் பொதுப்பணித்துறையின் கவனத்துக்கு சென்றும், யாதும் நீக்கமற அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியன் என்பவரால் 2011-ம் ஆண்டு பொதுப்பணித்துறையிடம் கேட்கப்பட்ட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளே உதாரணம்...

1. கண்மாய், குளங்கள், ஏரிகளில் நிறைந்திருக்கும் குப்பை, மண் ஆகியவற்றை அகற்ற ஏன் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை?

2. பருவநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் தண்ணீர் தேவை பெருகி வருகிறது. அதற்கு என்ன நடவடிக்கைகள் நீர்வள ஆதார துறையின் கீழ் எடுக்கப்பட்டிருக்கிறது?

3. ஆறுகள் மாசுபடுவதை தடுக்க ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை?

4. பருவகால மழையின்போது தண்ணீரை திறந்து விட்டுவிட்டால், தண்ணீரை எப்போது சேமிப்பீர்கள்?

5. பராமரிப்பு, புனரமைப்பு செய்யப்படாததற்கு, ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லையா?

6. உங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 'ஐம் வார்ம்' என்ற திட்டம் குளறுபடியாக உள்ளதே? அதை ஏன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

7. தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நீர் மேலாண்மை பிரச்னை எப்போது சீரடையும்?

8. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவு, அது கட்டும்போது இருந்தவை. இப்போது படிந்திருக்கும் மண், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றாமல், பழைய கொள்ளளவு அளவை தவறான தகவலாக மக்களுக்கு சொல்வது ஏன்?

9. அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளில் தனியார்கள் தண்ணீர் திருடுவதால், பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?

10. உங்கள் துறையின் பதில் உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அளிக்கப்படுவது ஏன்?

11. நிலத்தடி நீரை வர்த்தக ரீதியாக பயன்படுத்தக்கூடாது என்றிருக்கும்போது அதை தொடர்ந்து அனுமதிப்பது ஏன்? பிறகு வீடுகளுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்? இதற்கு உங்கள் பதில்?

12. நீர்த்தேக்கம் அமைக்கும்போது இருந்த கொள்ளளவு அளவை மட்டுமே சொல்கிறீர்கள்? தற்போது மண், ஆக்கிரமிப்புகள், குப்பைகள் இருந்து வருகின்றன? இப்போது நீர்த்தேக்கத்தின் உண்மையான கொள்ளளவு எவ்வளவு?

'நீங்கள் குறை சொல்வது போன்ற கேள்விகளையே கேட்டுள்ளீர்கள். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது' என மேற்கண்ட பெரும்பான்மையான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது பொதுப்பணித்துறை.

"மேற்கண்ட கேள்விகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் வருகிறதா இல்லையா என்பது விஷயமல்ல. ஆனால், கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை. பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டவை. அதற்கு முடிந்தவரை, கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். பணிகள் நடைபெற்று வருகிறது. அல்லது செய்து முடித்துவிட்டோம் என்ற பதிலை அளித்திருக்கலாம். ஆனால் முற்றிலும் நிராகரிப்பது, இவர்களுடைய தவறுகளை மறைக்கவே.

கனமழைக்கு தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழைக்கு 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் பேர் தங்களின் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் இந்த மழைக்கு பலியாகியிருக்கிறார்கள்.

தமிழகம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழையை சந்தித்திருந்தாலும், இதை எளிமையாக கையாண்டிருக்கலாம். ஆனால், நீர் நிலைகளின் மீது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் கோட்டைவிட்ட பொதுப்பணிதுறைதான் இந்த சேதங்களுக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று கொந்தளிக்கிறார் நீர் மற்றும் ஆற்றல் வள மேலாண்மை பொறியாளர் பாலசுப்ரமணியன்.

"கடந்த 10 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையின் ஓர் அங்கமான நீர்வள ஆதாரத்துறை நீர்நிலைகளை காக்கும் பொருட்டு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டு வருகிறேன். சென்னை உள்ளிட்ட ஏரிகளில் படிந்திருக்கும் வண்டல் மண், ஆகாயத் தாமரை, பிளாஸ்டிக் குப்பைகளை தூர்வாருவது குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால், வடிகால்களின் ஆக்கிரமிப்புகளின் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போன்றவை குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை, தகவல் உரிமை ஆணையம் மூலம் விண்ணப்பித்து கேட்டேன். இதுவரை உரிய பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. அந்த கேள்விகளை அப்போதே கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் சென்னைக்கு இந்த நிலை வந்திருக்காது.

2005-ம் ஆண்டு மதுரை, அண்ணா நகர் பகுதியில் நிலம் வாங்கியிருந்தேன். நிலத்துக்கு பக்கத்தில் வைகை ஆற்றின் உபரிநீர் வழிந்தோடும் வாய்க்கால் இருந்தது. இதில் வழிந்தோடும் தண்ணீர் வண்டியூர் தெப்பக்குளத்துக்கு செல்லும். இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்திருந்தனர். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஆக்கிரமிப்பாளரை விரட்டி, அந்த வாய்க்கால் மீட்கப்பட்டது.

நீர் செல்லும் தடங்கள், ஆறுகள் ஆகிய பொதுச் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகள் பற்றி பொதுப்பணித்துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. அதை குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறார்கள். அதனால்தான் 2005-ல் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறையின் கவனத்துக்கு என்னுடைய கேள்விகளை கொண்டு சென்றேன்.

தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்திலிருந்தே இதுகுறித்து பொதுப்பணித்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகிறேன். பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் பொதுப்பணித் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்படும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்பேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சிகள் மாறினதே ஒழிய, எந்த நடவடிக்கையையும் எடுக்க யாரும் முன்வரவில்லை.

மதுரை சம்பவத்துக்கு பிறகுதான், சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் பாதுகாப்பு குறித்து தகவல் உரிமை ஆணையம் மூலம் கேட்டேன். உரிய பதிலே இல்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், நீர்த்தேக்கங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வண்டல் மண் படிந்து கிடக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி என்றால் அதில் 10 அடி வரைக்கும் வண்டல் மண்ணே தேங்கி நிற்கிறது. கரைகளை பலப்படுத்தியும் பல ஆண்டுகள் ஆகிறது. நீர் வழிந்தோடும் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வீடுகளும், அலுவலகங்களும் கட்டப்பட்டுள்ளன. பூண்டி நீர்த்தேக்கத்தின் நிலையும் இதுதான். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் அடையாறு வழியாகவும், பூண்டி ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாகவும் வெளியேறுகிறது. ஆனால் அடையாறு, கூவம் நதிகளையொட்டி ஆக்கிரமிப்புகள் மலிந்தவண்ணம் இருக்கிறது.

இப்படியிருக்கும் நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி சென்னையை மிதக்க வைத்துள்ளனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். அதிகாரிகளுக்கு, 'ஏரியில் எவ்வளவு தண்ணீரை தேக்க வைக்க முடியும்,  நீர் வழிகளில் ஆக்கிரமிப்புகள் எவ்வளவு இருக்கிறது, திறந்துவிடப்படும் தண்ணீரோடு, மற்ற ஏரிகளின் தண்ணீரும் கலந்து செல்லும் என்பது போன்றவை தெரியும். அப்படியிருந்தும் அதற்கு தகுந்தாற்போல் தண்ணீரை முன்கூட்டியே திறந்துவிட்டிருக்க வேண்டுமல்லவா? ஸ்கூட்டர் பிரச்னை என்றாலே அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு சரிசெய்யும் அதிகாரிகள், ஒரு ஏரி முழுவதுமுள்ள தண்ணீரை வெளியேற்றுவதை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என்பது கூட தெரியாத விஷயமா? இதுவொரு செயற்கை பேரிடரே அன்றி, இயற்கை பேரிடர் அல்ல.

சுதந்திரத்துக்கு முன்னரே உருவாக்கப்பட்ட இந்த ஏரிகளை, சுதந்திரத்துக்கு பிறகு கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இந்த நிலைக்கு சென்னை தள்ளப்பட்டிருக்கிறது.

நீர் நிலைகளை தூர்வாரும் 'மராமத்து' என்ற முறை தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, சுதந்திர காலம்வரை முறையாக தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஏரிகள் பொதுப்பணித்துறையின் கீழ் சென்றதும், மராமத்து என்ற வார்த்தையே இல்லாமல் போய்விட்டது. மாறி மாறி வந்த அரசுகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. மக்களும் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள்.

சென்னையை சுற்றி இருக்கிற நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவான 11 டி.எம்.சி. தண்ணீரை ஏரிகளின் முறையான பராமரிப்பு இருந்தாலே சேமித்துவிட முடியும். இதை விட்டுவிட்டு கடந்த ஆண்டில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 1 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க 330 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கு தற்போது 50 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைக்க விவசாயிகளின் 800 ஏக்கர் பட்டா நிலங்கள் அழிக்கப்பட்டு, அந்த விவசாயிகளும் வாழ்வாதாரம் இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் கமிஷனுக்காக புது புது நீர்த்தேக்கங்களை அமைக்க அரசுக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். ஆம், அ.தி.மு.க. ஆட்சி என்றால் 45 சதவிகித கமிஷனும், தி.மு.க. ஆட்சி என்றால் 18 சதவிகித கமிஷனும் அங்கீகரிக்கப்படாத கமிஷன் தொகையாக கைமாறுவதாக பொதுப்பணித்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒப்பந்ததாரர்களே இந்த கமிஷன் வாங்கும் முறையை எதிர்த்து போராட்டம் நடத்தியதும் இந்த ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது.

பொதுப்பணித்துறை புது புது கட்டடங்கள், பாலங்கள் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தில், 1 சதவிகிதம் கூட நீர்வள ஆதாரத் துறையின் கீழ் வரும் 14,098 ஏரிகளின் புனரமைப்பு, பராமரிப்பு பணிகளின் மீது காட்டுவதில்லை.

ஆக்கிரமிப்புகள் தடுப்புச் சட்டம் 2007-ன் படி நீர்நிலைகள் ஆக்கிரமிப்போரின் மீது பொதுப்பணித்துறையின், நீர்வள ஆதாரத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

அடிப்படையிலேயே சென்னை மாநகரம் நீர்பிடிப்புள்ள பகுதி. அதற்கு தகுந்தாற்போல் தண்ணீர் சேமிப்பிற்கும், வடிகாலுக்கும் உரிய திட்டங்களை தீட்டி செயல்பட்டிருக்க வேண்டுமல்லவா? அமெரிக்காவில் கூட கடுமையான மழை பெய்கிறது. புயல் வருகிறது. எப்படி? அங்கேயெல்லாம் மழை பெய்தால் முறையாக தண்ணீர் வழிந்தோடி விடுகிறது என்பதை ஆட்சியாளர்கள் ஒருகணமாவது யோசித்திருப்பார்களா? பொதுப்பணித்துறையில் புரையோடும் லஞ்சமும், அலட்சியமுமே சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் அழிந்ததற்கு காரணம்.

ஏரி, குளங்கள், கால்வாய் பகுதிகளில் அரசு கட்டடங்கள் அமைத்தால், எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பொறியாளர்கள் அரசுக்கு தெரிவிப்பதில்லை? பிறகெப்படி தனியார் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளால் தடுக்க முடியும்?

இது தமிழ்நாட்டில் மட்டுமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது டிஜிட்டல் யுகம். நீர்வள ஆதாரத் துறையின் அதிகாரபூர்வமான இணையதளம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தின் முக்கியமான ஏரிகள், அணைகளின் நீர்மட்டம் குறித்து தகவல் பதிவேற்றப்படுகிறது. அதுவும் உருப்படியாக இல்லை. தகவல்கள் முழுமையாக இல்லை. பிறகெப்படி பொதுமக்களுக்கு முறையான தகவல்கள் கிடைக்கும். செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் தகவல்கள் முறையாக பதிவேற்றப்பட்டிருந்தால், தகவல்கள் விரைவாக சென்றடைந்து மக்கள் தற்காத்து கொள்வதற்கு வாய்ப்பிருந்திருக்கும்.

'நீரின்றி அமையாது உலகு...'

ஆம்... நீருக்குத்தான் நாம் முன்னுரிமை கொடுத்திருந்தோம். அது வருவதற்குரிய பாதைகளும், வெளியேறுவதற்குரிய பாதைகளும், சேமிப்புக்கு உரிய பகுதிகளும் முறையாக பிரிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இன்றிருக்கும் அரசுகளோ, அதிகாரிகளோ இதை உணர்ந்ததாக தெரியவில்லை. இப்போதே விழித்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்த தவறிவிட்டால், இன்னொரு பேரிடருக்கு தமிழகம் தயாராகி கொள்ள வேண்டியதுதான்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...
இறுதியில் தர்மமே வெல்லும்...' என்ற வார்த்தையை இப்படி மாற்றிச் சொல்லலாம்.

'நீர்நிலைகளின் வாழ்வுதனை ஆக்கிரமிப்புகள் கவ்வும்...
இறுதியில் நீர்நிலைகளே வெல்லும்...'  " என மேலும் சொல்லி முடித்தார் பாலசுப்ரமணியன்.

-த.ஜெயகுமார்
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close