Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி நிலைமை சென்னைக்கு வராமல் இருக்க...இந்த 6 வழிகளை கடைபிடிப்போமா?

லகின்  மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா? இந்தியத் தலைநகர் டெல்லிதான். ஒவ்வொரு வருடமும் டெல்லியில் 30 ஆயிரம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

டெல்லியில் இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு வாழும் அனைத்து நபர்களுக்கும் ஏதாவதொரு மோசமான நோய் கண்டிப்பாக வந்துவிடும். டெல்லி மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறுவதைத் தவிர்க்க காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு இப்போதுதான் விழித்துக் கொண்டு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கும் நீதிமன்ற உத்தரவு தேவைப்படுகிறது. டீசல் வாகனங்களை டெல்லியில் பதிவு செய்யத் தடை, 2000 சி.சி. கொண்ட எஸ்.யூ.வி வகை உயர் ரக கார்கள் இயக்க தடை, டாக்ஸிக்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்குள் சி.என்.ஜிக்கு மாற வேண்டும் என ஏக கெடுபிடி.

டெல்லி எதிர்கொள்ளும் இந்த சிக்கல், இன்னும் சில ஆண்டுகளில் சென்னைக்கும் நேரலாம். அடுத்தடுத்து தமிழக நகரங்களும் எதிர்கொள்ளலாம்.      

’’காற்று நாளுக்கு நாள் மாசடையும் பட்டியலில் மிக வேகமாக முன்னேறி வருகிறது சென்னை. சென்னையில் கார்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருப்பது காற்று மாசு அதிகரிப்புக்கு பிரதான காரணம். காற்று மாசு என்பது கிட்டதட்ட ஒரு செயற்கைப் பேரழிவு. அது மெல்ல மெல்ல மக்களைக் கொல்லும். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, வருங்காலத்தில் வாழத்தகுதியற்ற நகரமாக மாறிவிடக்கூடாது என விரும்பினால் காற்று மாசு மட்டுமல்ல, நிலம், நீர் ஆகியவற்றையும் காக்க வேண்டும்.  அதற்கு ஆறு விஷயங்களை உடனடியாக  செய்ய ஆரம்பிக்க வேண்டும்!’’ என்று எச்சரிக்கிறார் சுற்றுசூழல் ஆர்வலர் மற்றும் களச் செயல்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

அவருடைய பரிந்துரைகள் பின்வருமாறு...

1. கழிவு நீர் கட்டுப்பாடு! 

கழிவுநீர் மேலாண்மை  குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இப்போது கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. சென்னையில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நல்ல நிலத்தடி நீரே தாரளமாக கொடுக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு கழிவுநீரை அரசே ஒரு முறை சுத்திகரித்து தரலாம். தேவைப்பட்டால் தொழிற்சாலைகள் இரண்டாவது முறையாக மீண்டும் சுத்திகரித்து அந்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். தொழிற்சாலைகள் நமக்கு அவசியம்தான்; அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அதே சமயம் மிகவும் மோசமான அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சில வகை தொழிற்சாலைகள் நமக்கு தேவைதானா என்று யோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் அரசு  தொழில் கொள்கையை மாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மனிதக் கழிவுகள், குப்பைகள் போன்றவற்றில் இருந்து பயோகாஸ்  பிளான்ட் முறையில் மின்சாரம் எடுத்து பயன்படுத்துவதை எந்த அளவுக்கு சாத்தியப்படுத்தமுடியும் என்பதையும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

2. வேறு வழியே இல்லை... மரம் வளர்ப்போம்!  

மரங்கள் வளர்ப்பது அவசியம். ஏதோ ஒரு பகுதியில் செடிகளை நடுவதும், இன்னொரு பகுதியை ஒட்டுமொத்தமாக அழித்து மொட்டையாக்கி விடுவதையும் தவிர்க்க வேண்டும். சென்னை நகரம் முழுவதும் மரங்கள் இருக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் மூன்று நன்மைகள் நமக்கு உண்டு.

 * காற்று மாசடைவது குறையும். இதனால் நச்சு வாயுக்கள் நம்மை நேரிடையாக தாக்குவது குறைந்து மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் இருந்து தப்ப முடியும்.

 * மண் வளம் பெருகும். மரங்கள் மண்ணின் தரத்தை அதிகரிக்கும். மரங்களின் வேர்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மண்ணை இறுக்கமாகப் பிடித்து கொள்ளும். இதனால் ஒரு மழை பேய்ந்தால், மண் உருண்டோடி நிலம் மாசடைவது தடுக்கப்படும்.

 * புவி வெப்பமயமாதலை குறைக்கும். கோடை காலம் மட்டுமல்ல குளிர்காலங்களில் கூட சில சமயங்களில் சென்னை வெப்பத்தை  நம்மால் தாங்க முடிவதில்லை. அந்த அளவுக்கு நாம் நமக்கு மேலேயே  மண்ணை வாரி போட்டிருக்கிறோம்.

3. கட்டடக்கழிவுகளில் கவனம்!  

எங்கெல்லாம் கட்டடங்கள் திடீரென அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் கட்டடக் கழிவுகள்  அதிகமாகவே இருக்கும். கடந்த 15 ஆண்டுகளில்தான் வேளச்சேரி முதலான பல இடங்களில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்னை முழுவதும் பல  இடங்களில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டு இருக்கின்றன.  இடித்த கட்டடங்களில் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் எங்கே கொட்டப்படுகிறது? அது என்ன ஆனது என யாராவது தேடியிருக்கிறீர்களா? கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு உண்டான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்.

தவிர ஒரே சமயத்தில் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மணல் தேவை அதிகரித்திருக்கும். அப்போது மணல் சுரண்டலும் அதிகமாகவே இருக்கும். இதனால் மறைமுகமாக ஆறும் மாசடையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திண்டுக்கல்லிலோ, தூத்துகுடியிலோ வசிக்கும் ஒருவர் அங்குள்ள பல ஏக்கர் நிலங்களை விற்றுவிட்டு, சென்னையில் பல லட்சம் முதலீடு செய்து லேக்வியூ அப்பார்ட்மெண்ட் ஒன்றை தவணை முறையில் வாங்கி, அதற்கு வாழ்நாள் முழுக்க உழைப்பது எல்லாம் புத்திசாலித்தனம்தானா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்!

4. பிளாஸ்டிக் தவிர்ப்போம்! 

காலையில் பல் விளக்குவதில் ஆரம்பித்து இரவு பரோட்டாவுக்கு சால்னா வாங்கிச் செல்வது வரை நீங்கள் ஒரு நாளில் எத்தனை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என யோசித்து பாருங்கள். கண்ணாடிக் குவளை, எவர்சில்வர் குவளை, டிபன் பாக்ஸ் போன்றவை மறைந்து பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டப்பர்வேரில் குழந்தைக்கு மதிய உணவுக்கு கொடுத்து அனுப்புவதையெல்லாம் கெத்து என நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் வறட்டு ஜம்பங்கள். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகுதான் புற்றுநோயின் வீரியம் அதிகரித்திருக்கிறது. செரிமான பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. முதலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தன்னளவில் ஒழிப்பதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றைச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் நீர், நிலம், காற்று ஆகிய மூன்றும் மாசடையும்.

5. எலெக்ட்ரானிக்ஸ் (இ) வேஸ்ட்

இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமே சந்திக்கும் பெரிய தலைவலி இ- வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள். மொபைல் போன், மெமரி கார்டு, பென் டிரைவ், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, லேப்டாப் என நாம் பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியும் அனைத்தும் இ-வேஸ்ட் தான்.

எலெக்ட்ரானிக்ஸ் போர்டுகளை மறு சுழற்சி செய்யும் வாய்ப்பு  இதுவரை இல்லை. இ- வேஸ்ட்களில் இருந்து பல நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கிறது. இதுவும் நிலத்தையும், நீரையும் மாசுபடுத்துகிறது. 100% டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற மனோபாவத்தை நாம் மாற்ற வேண்டும்.

அவசியமற்ற, ஆடம்பரத்துக்காக உருவாக்கப்படும் டிஜிட்டல் பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும். செல்போன் இப்போது எல்லோர் கையிலும் வந்துவிட்டது, இப்போதைய காலகட்டத்துக்கு செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதுதான், ஆனால் ஆண்டுக்கொரு முறை மொபைலை மாற்றுவதை நம்மால் நிறுத்த முடியும். எலெக்ட்ரானிக் சந்தைகளை பொறுத்தவரையில் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் இன்ஸ்டன்ட் வைரல் ஆக வேண்டும் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மொபைலில் வாழ்நாள் நீட்டிப்புக்கு கொடுப்பதில்லை. அவர்களின் விருப்பமே, அவர்கள் ஒவ்வொரு முறை புது மொபைலை அறிமுகபடுத்தும்போதும், நாம் ஓடோடிச் சென்று ஏற்கனவே இருக்கும் மொபைலை விட்டுவிட்டு, புது மொபைலை வாங்க வேண்டும் என்பதுதான். பகட்டுக்காக நாம் செய்யும் சில விஷயங்களை குறைத்துக் கொண்டாலே இ-வேஸ்ட்டை தடுக்க முடியும்!

6. காலாட்படையாக மாறுவோம்!

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்களும், நூற்றுகணக்கில் கார்களும் மக்களால் வாங்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்களின் எண்ணிக்கை சென்னையில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பகட்டுக்காக ஓரிருவர் பயணிக்க ஆறு பேர் பயணிக்கும் அளவு வசதி கொண்ட கார்களை பயன்படுத்துவது தேச விரோத குற்றத்துக்குச் சமம். டெல்லியில் அதைக் குற்றமாகவே அறிவித்துவிட்டார்கள். நாமும் தவறை உணர்ந்து திருந்த வேண்டிய காலகட்டம் இது.

எப்போது ஒரு சமூகம் தனிநபர் வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறதோ அது முன்னேறாத சமூகமாக கருதப்படும். பொதுத்துறை வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும். காற்று மாசுக்கு டீசல் வாகனங்கள் மிக முக்கியக் காரணம் என்பதை உணரவேண்டும். அரசும், மக்களும் ஒன்று சேர்ந்து கார்களை புறக்கணித்தால்தான் சுற்றுச்சூழல் மேம்படும்.
சமூகத்தில் மாற்றம் எப்போது துவங்கும் தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவுக்கு மாசுபடுத்தும் செயல்களை நிறுத்தும்போதுதான்!

- பு.விவேக் ஆனந்த்

காற்று மாசு காரணமாக  ஏற்படும் நோய்களில் முதன்மையானது சி.ஒ.பி.டி எனும் மூச்சுக்குழாய் அடைப்பு நோய். மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது அதில் உள்ள நச்சுக்கள் நுரையீரலை தாக்கி  மூச்சு திணறலை ஏற்படுத்தும்.

சி.ஒ.பி.டி பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ க்ளிக் செய்து படிக்கவும்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=109877

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close