Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவிலேயே எடுபடாமல் போன இஸ்லாமிய துவேஷம்! - மருதன்

வர் ஹிட்லரா... முசோலினியா? -முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. 'இரண்டும் இல்லை; அவர் ஒரு காமெடியன் மட்டுமே' என்கிறார்கள் சிலர். 'அதுவும் இல்லை, அவர் ஒரு உராங்குட்டான்' என்கிறார்கள் வேறு சிலர்.

டொனால்ட் டிரம்பின் ஆளுமை, அரசியல் பார்வை, சமூகக் கருத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த ஒப்பீடு,  அடிப்படையிலேயே பிழையானது என்பது தெரிகிறது. உராங்குட்டான் ஓர் அரிய குரங்கினம். அதற்கு வெறுக்கத் தெரியாது. டொனால்ட் டிரம்ப் அரிதானவர் அல்லர். மேலும், அவருக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி, வெறுப்பு மட்டுமே. ஒரே ஓர் உதாரணம், அவருடைய இந்தச் சமீபத்திய அறிவிப்பு -  ‘முஸ்லிம்களுக்கு இனி அமெரிக்காவில் அனுமதி இல்லை!’

யார் இந்த டொனால்ட் டிரம்ப்? 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். பல்வேறு சிறிய, பெரிய நிறுவனங்களின் தலைவர். ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று புகழ்பெற்றவர். ஓட்டல், ரிசார்ட், காசினோ, கோல்ஃப் கோர்ட் என்று பலவற்றையும் வாங்கிக் குவித்தவர். அமெரிக்காவைத் தாண்டி உலகின் பல நாடுகளில் இவருடைய சொத்துகள் சிதறிக்கிடக்கின்றன. மேனேஜ்மெண்ட் குரு என்றும் அறியப்படுபவர். வெற்றிக்கு வழிகாட்டும் ஹிட் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தபோது இவர் மட்டும் பளிச்சென்று மின்னிக்கொண்டிருந்தார். 

இவர் சொல்பேச்சு கேட்டு நடந்தால் ஒரு பைசா இல்லாதவர்கள்கூட மல்டி மில்லியனராக உயர்ந்துவிடலாம்; எறும்புகூட காண்டாமிருகம் போல் வளர்ந்துவிடும். டொனால்ட் டிரம்ப் அல்லது அவருடைய ஆட்களை அணுகி பேச்சுக்கொடுத்தால் இன்னும் நூறு அற்புதக் கதைகள் கிடைக்கும். உண்மையில் 1991 ல் முதல்முதலில் அமெரிக்காவில் திவாலான கார்ப்பரேட் நிறுவனம் இவருடையதுதான். இவர் பல நிறுவனங்களை நடத்திவருவது உண்மைதான், ஆனால் அவற்றில் பல தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. இவர் புத்தகம் எழுதியது உண்மைதான், ஆனால் அது ஹிட் என்று அவர் சொல்லித்தான் அமெரிக்காவுக்கே தெரியும். தவிரவும், இவர் பேச்சைக் கேட்டு எந்தக் கட்டெறும்பும் இதுவரை ஓரங்குலம்கூட வளர்ந்துவிடவில்லை.

ஆனால் அவருக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. தான் கால் பதித்த அனைத்துத் துறைகளையும் ஒரு வழி செய்துவிட்டே வெளியேறுவது டொனால்ட் டிரம்பின் வழக்கம். அந்த வரிசையில் அரசியலை மட்டும் விடுவானேன் என்று  ஜூலை 2015ல் அவருக்குத் தோன்றியபோது,  அவருக்கும் அமெரிக்காவுக்கும் சேர்த்து ஒரு புதிய கெட்ட காலம் ஆரம்பமானது. இந்த அறிமுகத்தோடு டிரம்பின் அறிவிப்புக்கு வருவோம்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் நம்பர் 1 சிக்கல் என்ன? தீவிரவாதம். இப்போதைய நம்பர் 1 தீவிரவாத அமைப்பு எது? ஐ.எஸ்.ஐ.எஸ். அவர்கள் யார்? இஸ்லாமியர்கள். இப்போது முதல் கேள்விக்கு மீண்டும் வருவோம். இன்று உலகம் எதிர்கொள்ளும் நம்பர் 1 சிக்கல் என்ன? டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை தர்க்க ரீதியான விடை, தீவிரவாதம் அல்ல; இஸ்லாம். எனவே பொத்தாம்பொதுவாக தீவிரவாதத்தை எதிர்க்காமல், கச்சிதமாக டார்கெட்டை முடிவு செய்து போர் தொடுத்தால்தான் வெற்றி சாத்தியம் என்கிறார் டிரம்ப். அதற்கு, ஐஎஸ்ஐஎஸ், தாலிபன், அல் காய்தா என்று கண்டபடி கவனத்தைச் சிதறடிக்காமல் தீவிரவாதத்தின் ஆன்மாவாக இருக்கும் இஸ்லாத்தின்மீது போர் தொடுக்கவேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இப்படிச் சொன்னதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இந்தப் போரை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்றும் போன வாரம் தெளிவாக விவரித்தார். ‘நம்முன் உள்ள பிரச்னையை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளவேண்டும். இஸ்லாமியர்கள் அமெரிக்காவை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு ஜிகாத் மட்டுமே குறிக்கோள். அதை மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். மனித வாழ்வை அவர்கள் மதிப்பதில்லை. பிரச்னை அவர்கள்தாம் என்பதை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் அவர்களால் நமக்குப் பெருத்த அபாயமே ஏற்படும். நம் நாட்டை அவர்கள் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருப்பார்கள்.’

இஸ்லாம் ஏன் ஆபத்தான மதம் என்பதையும் டிரம்ப் விளக்கியுள்ளார். ‘ஷரியத் சட்டங்கள் படுகொலைகளை அங்கீகரிக்கிறது. இஸ்லாத்தை ஏற்காதவர்களைக் கொல்லலாம், தலையைச் சீவலாம், இன்னும் நினைத்துப் பார்க்கமுடியாத கொடுமைகளை எல்லாம் செய்யலாம் என்று அது சொல்கிறது. அவர்களால் அமெரிக்கர்கள், குறிப்பாக அமெரிக்கப் பெண்கள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படியானால் அமெரிக்கா என்ன செய்யவேண்டும்? அமெரிக்காவின் எல்லைகளை இழுத்து மூடவேண்டும். இனி முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் வரக்கூடாது! அவர்களுக்கு அரசு தடை விதிக்கவேண்டும்.’


பாரபட்சமின்றி இந்தத் தடையை அனைத்து முஸ்லிம்களுக்கும் நீட்டிக்கவேண்டும் என்கிறார் டொனால்ட் டிரம்ப். 'முதலில் புதிதாக வரும் ஆபத்துகளைத் தடுக்கவேண்டும். அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து அவர்களில் யார் யாரெல்லாம் முஸ்லிம்கள் என்று பார்த்து அவர்களுக்குத் தடை விதிக்கவேண்டும். பல முஸ்லிம்கள் சுற்றுலா பயணிகள் என்று சொல்லிக்கொண்டு விசா கேட்பார்கள். சரி போகட்டும் என்று அனுமதித்துவிடக்கூடாது. கவனமாக அவர்கள் கோரிக்கைகளை நிராகரிக்கவேண்டும். சரி, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அமெரிக்க முஸ்லிம்களின் கதி? அவர்கள் நிச்சயம் பயணம் முடிந்து வீடு திரும்புவார்கள் அல்லவா? அவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல அமெரிக்கக் குடிமக்களும்தான், இல்லையா? அவர்களை எப்படிக் கையாள்வது? அவர்களை விட்டுவிடலாம்' என்கிறார் டிரம்ப்.


ஆனால் இந்த அளவுக்கு பெருந்தன்மை கொண்ட ஒருவரால் டொனால்ட் டிரம்ப்பாக இருக்கமுடியாது அல்லவா? 'அமெரிக்கர்கள் என்னும் போர்வையில் வலம் வரும் முஸ்லிம்களை எதிர்கொள்ள அவரிடம் வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஃபாக்ஸ் நியூஸ் சானலிடம் அறிவித்திருக்கிறார் டிரம்ப். அமெரிக்காவில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்கள், அவர்களுடைய முகவரி என்ன, அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், அவர்களுடைய குடும்பத்தில் எத்தனை பேர் என்று எல்லா தகவல்களையும் திரட்டவேண்டும். ஒரு டேட்டாபேஸ் உருவாக்கி அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும்' என்கிறார் டிரம்ப்.

அமெரிக்கர்களாக இருப்பதாலேயே முஸ்லிம்கள் நல்லவர்களாகவும் இருந்தாகவேண்டும் என்று அவசியம் இல்லையாம்.


எதற்காகத் திடீரென்று டொனால்ட் டிரம்ப் இப்படி இஸ்லாமியர்கள்மீது போர் தொடுத்திருக்கிறார்? கடந்த டிசம்பர் 2-ம் தேதி,  கலிஃபோர்னியாவில் சுகாதாரப் பணியாளர்களுக்காக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பயிற்சி முகாமில்,  ஒரு தம்பதி திடீரென்று நுழைந்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலைத் தொடுத்த அமெரிக்கர்கள் இருவரும் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர். அவர்கள் அமெரிக்கர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும்தான் என்பதை பிடித்துக்கொண்டார் டொனால்ட் டிரம்ப்.

இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன? அந்தத் தம்பதியினருக்கு எப்படி, எங்கிருந்து ஆயுதங்கள் கிடைத்தன, அவர்களுக்கும் வேறு தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்குமா? இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கை இருக்கிறதா என்பதையெல்லாம் அமெரிக்கா இன்னமும் விசாரித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தத் தாக்குதலைக் கவனத்துடன் கையாண்டார்.

‘இந்தத் தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்காக இஸ்லாமியர்களை இத்துடன் தொடர்புபடுத்தவேண்டாம். நடைபெறுவது அமெரிக்காவுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான போர் என்று சொல்வதன்மூலம் நாம் நமக்குள்ளேயே மோதலை ஏற்படுத்திக்கொள்கிறோம். ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்பு நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இதைத்தான்.’ டொனால்ட் டிரம்பைப் போல் இஸ்லாத்தைத் தீவிரவாதத்தோடு அடையாளப்படுத்த ஒபாமா மறுத்தார். ‘இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் பில்லியன் கணக்கான மக்களில் பெரும்பாலானோர் அமைதி வழியையே நாடுபவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.’

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது என்றும்,  குறிப்பாக அமெரிக்க முஸ்லிம்கள் மீது முத்திரை குத்தி அவர்களை அந்நியப்படுத்தக்கூடாது என்றும் உடனடியாகத் தெளிவுபடுத்தினார் ஒபாமா.

‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலைக்காரர்கள். அவர்கள் இஸ்லாமியர்களில் ஒரு துளியினர் மட்டுமே. உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்களை நிராகரித்துவிட்டனர். அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான தேசபக்த முஸ்லிம்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வெறுப்பு சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள். முஸ்லிம் அமெரிக்கர்கள் நம் நண்பர்கள். நம்முடன் சேர்ந்து பணியாற்றுபவர்கள். நம் நாட்டுக்காக, நம் மக்களுக்காகப் போராடி உயிரையும் கொடுக்கச் சித்தமாகயிருப்பவர்கள் அவர்கள்.’

அவ்வளவுதான், துள்ளியெழுந்த டொனால்ட் டிரம்ப்,  ‘அவ்வளவுதானா... அல்லது இன்னும் ஏதாவது பாக்கியிருக்கிறதா? இவர் வேலைக்கு ஆகமாட்டார். நமக்கு உடனடியாக ஓர் அதிபர் தேவைப்படுகிறார். சீக்கிரம்!’  என  மின்னல் வேகத்தில் ட்விட்டரில் பொங்கினார்.

அவர் சொல்லவருவது, 'நானே உங்கள் மீட்பர். வரும் தேர்தலில் என்னை அதிபராகத் தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவை நான் கரை சேர்ப்பேன்! '  என்பதுதான்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கட்டம் வரை அமெரிக்காவில் பெரும் ஆதரவு இருந்தது. பல்வேறு மீடியா சர்வேக்கள் அவரை ஒரு பாப்புலர் தலைவராகவே அடையாளப்படுத்தின. தீவிர வலதுசாரிகள் மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் ஆதரவும்கூட அவருக்குக் கணிசமாக இருந்தது என்றே அங்குள்ள பத்திரிகைகள் எழுதின.

அதற்குக் காரணம் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த, ‘அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு மட்டுமே! வந்தேறிகளுக்கு இங்கே இனி இடமில்லை! அமெரிக்காவின் வளத்தை அந்நியர்கள் கொள்கை கொண்டுபோவதை இனியும் அனுமதிக்கமாட்டோம்!’ என்ற சில கவர்ச்சிகரமான, ஆனால் ஆபத்தான முழக்கங்கள்தான்.

பொருளாதார தேக்கநிலை, வேலைகள் பறிபோகும் ஆபத்து ஆகியவற்றால் அஞ்சிக்கொண்டிருந்த பெரும் பிரிவினருக்கு டொனால்ட் டிரம்பின் தீவிர தேசபக்த, தீவிர வலதுசாரி, தீவிர அந்நிய எதிர்ப்பு முழுக்கங்கள் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தன. பெருகும் ஐஎஸ்ஐஎஸ் அபாயம், சிதறிக் கொண்டிருக்கும் சிரியா, கலிஃபோர்னியா குண்டுவெடிப்பு என்று தங்களைச் சுற்றி நிகழும் அபாயங்கள் அவர்களை வெகுவாகக் குழப்பின.

டொனால்ட் டிரம்ப் இந்தக் குழப்பமான சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

'அமெரிக்காவில் அமைதியும் செல்வமும் நிலைத்திருக்கவேண்டுமானால்,  அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், அமெரிக்கர்களின் வேலைகள் பறிபோகாமல் இருக்கவேண்டுமானால்,  அமெரிக்கா தன் எதிரிகளை அழிக்கவேண்டும்' என்றார் அவர். அவர் அடையாளம் காட்டிய அந்த எதிரிகள், இஸ்லாமியர்கள், அகதிகள் மற்றும் சிறுபான்மையினர்.

இந்த மூவரையும் டார்கெட் செய்து வெறுப்பைக் கக்கத் தொடங்கினார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்பானிக் சமூகத்து மக்கள் 11 மில்லியன் பேரையும் நாட்டில் இருந்து விரட்டியடிக்கவேண்டும் என்றார். மெக்சிகோவில் இருந்தும், பக்கத்து நாடுகளில் இருந்தும் மக்கள் குடியேறாமல் இருக்கும்படி அமெரிக்க எல்லைகளைச் சுற்றி மாபெரும் சுவர்களை அமைப்பேன் என்றார். கைத்தட்டல்கள் பெருகப் பெருக, உற்சாகமும் வெறியும் தலைக்கேற, தன் வெறுப்பின் அளவைக் கூட்டிக்கொண்டே போனார் டிரம்ப்.

இவர் வேடிக்கையானவரா ஆபத்தானவரா என்று கண்டுபிடிக்கத் தெரியாமல் குழம்பித் தவித்த அமெரிக்கா,  இறுதியில் இஸ்லாமியர்கள் பற்றி அவர் அடித்த கமெண்டை கேட்டதும் சட்டென்று மயக்கம் கலைந்து விழித்துக்கொண்டது.

வெள்ளை மாளிகை தொடங்கி, டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் வரை அனைவரும் டொனால்ட் டிரம்பைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்தார்கள். இவரை இன்னமும் கட்சியில் வைத்திருந்தால் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று டிரம்பின் ரிபப்ளிகன் கட்சியே உணர்ந்துகொண்டது.

டொனால்ட் டிரம்ப் இப்பொழுதும் தன் நிலையில் உறுதியாக இருக்கிறார். ரிபப்ளிகன் கட்சி இல்லாவிட்டால் என்ன? சுயேச்சையாகப் போட்டியிடுவேன். நிச்சயம் வெற்றி பெறுவேன் என்கிறார்.

டொனால்ட் டிரம்பை அமெரிக்கா நிச்சயம் தோற்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது மட்டுமே போதாது. இன்னும் பல நூறு டிரம்புகளை அடுத்தடுத்து உருவாக்கவல்ல வெறுப்பு அரசியலையும் சேர்த்தே அமெரிக்கர்கள் தோற்கடித்தாகவேண்டும்.

அதற்குத் தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close