Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வெள்ளத்தை இந்தக் குழந்தைகள் எப்படிப் பார்க்கிறார்கள்?

சென்னை வீதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் அது, பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் அச்சத்தை விதைத்துச் சென்றிருக்கிறது.

சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு முதல் வருமானத்துக்கு வழி செய்த பொருள் வரை அனைத்தையும் கலைத்துப் போட்டுச் சென்றிருக்கிறது. இது உண்டாக்கிய மன அழுத்தத்திலிருந்து யாரும் எளிதில் மீண்டுவிட முடியாது. அதனாலேயே 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மட்டும் போதாது; அவர்களுக்கு மனநல ஆலோசனையும் அவசியம்'  எனக் கரிசனக் குரல்கள் எழுகின்றன. இது பொருளாதாரக் கவலை குறித்து யோசிக்கும் பெரியவர்களுக்கு.

எதையும் குபீரென கொண்டாடும், சட்டென மறக்கும் குழந்தைகள் இந்தப் பெருவெள்ளப் பாதிப்பை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?

அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதி குழந்தைகளைச் சந்தித்து,  அவர்களிடம்  மழை, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டேன்.

அவர்களின் அனுபவம்...அவர்களின் வார்த்தைகளிலேயே...
    
திவ்யதர்ஷினி:

 

"போன வாரம் நிறைய தண்ணி வந்தது. நாங்க இருக்க வீடு  மொத்தமும் தண்ணிக்குள்ள போய்டுச்சு. இதோ இந்தப் பாலம் மேலதான் முதல்ல நின்னு பார்த்தோம். அப்புறம் இதுவும் முழுங்கிடுச்சு. அவ்ளோ தண்ணி. தண்ணியெல்லாம் போனதும் வந்தோமா... எங்க வீடும் கொஞ்சம் வீடும்தான் அடிச்சுட்டுப் போகாம இருந்தது. இதுக்கு எங்க தாத்தாதான் காரணமாம். அவருதான் வீட்ட நல்லா கட்டிருக்காரு. அம்மாகிட்ட சொல்லி நான் ஸ்கூல் புக்கெல்லாம் பைல போட்டு எடுத்துகிட்டேன். அதனால தப்பிச்சது. பெரியவளா ஆனதும் படிச்சு டாக்டர் ஆகி எல்லோருக்கும் ஊசி போடுவேனே..!" எனச் சொல்லிவிட்டு வரையத் துவங்கினாள்.

 

முடித்துவிட்டு நிமிர்ந்து சிரித்தவள், "இந்த மரம் இருக்குல்ல... இது மட்டும் அடிச்சுட்டுப் போயிடுச்சு!’’ என தன் ஓவியத்தைக் காட்டிச் சிரிக்கிறாள்.

ஸ்ரீமதி:

 

"நான் ஒண்ணாவது படிக்கிறேன். எனக்கு பொம்மைதான் வரையத் தெரியும். பரீட்சை அட்டையெல்லாமும் அடிச்சுட்டுப் போயிருச்சு.

 

என்கிட்டே ஒரு கரடி பொம்மை இருந்துச்சு. அதுவும் காணல!’’  என வருத்தப்பட்ட ஸ்ரீமதியின் ஓவியத்தில் கரடி பொம்மை தண்ணீரில் மிதக்கிறது!

சூர்யா:

 

"என் பேரு சூரியா. வெள்ளம்னால நிறைய தண்ணி வந்துச்சா... அதனால நாங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டோம். அங்க நிறைய போலீஸ் அண்ணாதான் சோறுலாம் கொண்டு வந்து கொடுத்தாங்க. நிறைய பேரு கப்பல்ல ஊருக்குப் போனாங்க. மெழுகுவர்த்திலாம் வைச்சுட்டு நிறைய பேரு மாடி மேல நின்னுக்கிட்டு இருந்தாங்க.

 

வீட்டுக்கு கீழ எல்லாமும் நிறைய தண்ணியா இருந்தது!’’ -விறுவிறுவென வரைந்த சூரியாவின் ஆசை போலீஸ் அதிகாரி ஆக வேண்டுமென்பதாம்.

ஸ்ரீநிதி:

 

"வெள்ளம் வந்தப்போ நிறைய வீடு அடிச்சுட்டுப் போயிருச்சு. நானு, அப்பா, அம்மாலாம் நிறைய தண்ணில நடந்து போனோம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு... கமலி. ஆனா, ஸ்ரீநிதினு கூப்பிட்டாதான் எனக்குப் பிடிக்கும்.

 

நீங்களும் அப்படியே கூப்பிடுங்க!’’ என சொல்லிய ஸ்ரீநிதியின் ஓவியத்தில்,  அவளுடைய குடும்பத்தினர் மட்டும் இருக்கிறார்கள். சுற்றிலும் வெள்ளம்!

கீர்த்தனா:

"எனக்கு வரையத் தெரியாதே..." என முதலில் தயங்கியவளிடம், "உனக்குத் தெரிஞ்சத வரைஞ்சு கொடும்மா" என அம்மா நம்பிக்கையூட்டியதும் ஆர்வமாக முன்வந்தாள்.

 

"மழை ரொம்ப பெய்ஞ்சது. நிறைய தண்ணி வரும்னு சொன்னாங்க. வீடுலாம் அடிச்சுட்டுப் போயிருச்சு. ஓடும் அடிச்சுட்டுப் போய்டுச்சு. நாங்க காலி பண்ணிட்டுப் போய்ட்டோம். அப்புறம் எல்லாத்தையும் காய வைச்சுட்டு ரோட்லதான் சமைச்சு சாப்டறோம்!’’ என  உணர்ச்சியற்ற குரலில் சொல்லிக் கொண்டே வரைந்தாள்.

ஓவியத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் கூரையில் அமர்ந்திருப்பது... அவளேதான்!
 
சுமித்ரா:

 

"வெள்ளம் வந்ததால நிறைய அடிச்சுட்டுப் போயிடுச்சு. ஆனா, குப்பை மட்டும் சேர்ந்துடுச்சு. அதான் இந்தப் படத்துல வரைஞ்சுருக்கேன். நிறைய குப்பையும், சேறுமா இருக்கிறதால இங்கே ரொம்ப பேருக்கு உடம்புக்கு சரி இல்லாம ஆகிடுச்சு. அதனால நான் படிச்சு பெரிய ஆள் ஆனதும் டாக்டர் ஆகப் போறேன்!" என குழந்தைதனம் மாறாத குரலில் சொல்கிறாள்.துளிர்களின் இந்த நம்பிக்கையை எந்தப் பெரு வெள்ளத்தாலும் அசைக்க முடியாது!

- படங்கள், கட்டுரை- க.பாலாஜி  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close