Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நிர்பயா’க்களைக் காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? - மருதன்

நிர்பயாவை (இயற்பெயர் ஜோதி சிங்) மிகக் கொடூரமான முறையில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொன்றொழித்த ஆறு பேரில் ஒருவரான (4 பேர் சிறையில்; ஒருவர் இறந்துவிட்டார்) இளம் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்னும் செய்தி வெளிவந்தது முதல் ஒரு பெரும் திரளான கூட்டத்துக்குப் பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டுவிட்டது.

இந்த விடுதலையின் மூலம் இளம் குற்றவாளிகள் கணக்கில்லாமல் பெருகுவார்கள் என்றும், சமூக அமைதியும் கட்டமைப்பும் குலைந்துவிடும் என்றும் அவர்கள் கொந்தளிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய கோபம், இளம்குற்றவாளி விடுவிக்கப்பட காரணமாக இருந்த சிறார் சட்ட விதிகளின்மீது திரும்பியது. இன்னும் பல நிர்பயாக்கள் உருவாகக்கூடாது என்றால் சிறார் சட்டம் திருத்தப்படவேண்டும் என்னும் முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் மனசாட்சியைத் திருப்திபடுத்தும் வகையில்,  நேற்று மாநிலங்களையில் சிறார் நீதி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. புதிய திருத்தத்தின்படி இனி 16 முதல் 18 வயது கொண்டவர்கள் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்கள் முதிர்ச்சியடைந்தவர்களாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இளம் குற்றவாளிகள் என்று சொல்லி இனி யாரும் தப்பமுடியாது.

மசோதா குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது நிர்பயாவின் அம்மாவும் உடனிருந்திருக்கிறார். 'நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது என்று சொல்லமுடியாவிட்டாலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது திருப்தியளிக்கிறது' என்று அவர் அறிவித்திருக்கிறார். அவருடன் சேர்த்து பொதுமக்களின் உள்ளக்கொந்தளிப்பும் சற்றே அடங்கியிருக்கிறது. இந்த அசாதாரணமான சூழலில், உணர்ச்சிகள் அனைத்தையும் சில நிமிடங்கள் ஒதுக்கிவைத்துவிட்டு பிரச்னையின் மையத்தை நோக்கி நகர்ந்து செல்வோம். நிதானமாகவும் திறந்த மனதுடனும் உரையாட வேண்டிய நேரம் இது. இந்தப் புதிய மசோதாவை நீங்கள் ஒரு வெற்றியாகக்  கருதுகிறீர்களா? ஆம் எனில், இது யாருக்குக் கிடைத்த வெற்றி? இதன் மூலம் அடிப்படையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? இந்த மசோதா தனக்குத் திருப்தியளிக்கிறது என்று ஏன் நிர்பயாவின் அம்மா கருதுகிறார்? இந்த உணர்வை ஏன் நம்மில் பலரும் அவருடன் சேர்ந்து பகிர்ந்துகொள்கிறோம்?

ஊடகங்கள் கட்டமைத்த உணர்வுகள்!

ஏனென்றால் பிரச்னையின் மையப் புள்ளி,  விடுவிக்கப்பட்ட அந்த இளம் குற்றவாளிதான் என்று நாம் நம்புகிறோம். நம்முடைய இந்த நம்பிக்கை மாநிலங்களவையில் ஒரு சட்டத் திருத்த மசோதாவாக உருபெற்று, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டபோது நமக்குள் ஒரு சிறிய திருப்தி படரத்தொடங்கியது. இந்தத் திருப்தியை நமக்கு ஏற்படுத்தியதில் பெரும்பாலான ஊடகங்களிn பங்கு முக்கியமானது. குறிப்பாக, 24 மணி நேர ஆங்கில செய்தி சானல்கள். 'மக்களே... நாளை அந்தக் குற்றவாளி விடுவிக்கப்படப்போகிறார்; இதோ இன்று அவர் விடுதலையடைகிறார்; விடுதலையாகி போயே போய்விட்டார்...!' என்றெல்லாம் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்றி, நம் அறச்சீற்றத்தை உசுப்பிவிட்டு,  நம்மைப் பதற்றத்தில் தள்ளியவர்கள் அவர்கள்தாம்.

இப்படி பல சமயம் நம் உணர்வுகளை மீடியாவே வடிவமைக்கிறது. நாம் எதற்கு உணர்ச்சிவசப்படவேண்டும், எதற்குக் கோபப்படவேண்டும், எதற்கு அறச்சீற்றத்தை வெளிப்படுத்தவேண்டும் என்பதையெல்லாம் டிவி சானல்களே முடிவு செய்கின்றன. நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தியோடு ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியா கேட் பகுதியில் திரண்டதற்குக் காரணம் மீடியா. அந்த ஆயிரம் பேரை டிவியில் கண்ட லட்சக்கணக்கானவர்கள், மேலதிகக் கோபத்துடன் தவித்துக் குமுறினார்கள். பொதுமக்களின் இந்தத் தவிப்பும் கோபமும் மீண்டும் டிவியில் காட்டப்பட்டபோது, அவர்களுடைய கோபக் கனல் கோடிக்கணக்கானவர்களைப் பற்றிக்கொண்டது. 'குற்றவாளிகளைத் தேடிப்பிடித்துத் தூக்கில் போடு!' என்று இவர்களில் பாதி பேர் கோரினார்கள். 'தூக்கு வேண்டாம், ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்!' என்றார்கள் மிச்சமுள்ளவர்கள்.

ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயா வீசப்பட்ட நாள் தொடங்கி நேற்றைய மசோதா வரையிலான நிகழ்வுகளை அலசிப்பார்க்கும்போது ஒவ்வொரு கட்டத்திலும் மீடியாவே மிகப் பெரிய பாத்திரத்தை வகித்திருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு திரைக்கதையைப் போல் நேர்த்தியாகச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. நாம் அவர்களுக்கு ஒத்துழைத்திருக்கிறோம். அண்ணா ஹசாரேவுக்காக முன்பே நாம் மெழுகுவர்த்தி ஏற்றியதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம். அந்த மெழுகுவர்த்தியின் ஒளி அணைவதற்குள் அடுத்த மேட்டரை கவர் செய்ய மீடியா நகர்ந்து சென்றுவிட்டதும், நாமும் அடுத்த காரியத்தைப் பார்க்க நகர்ந்துவிட்டதையும் இங்கே ஒருமுறை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நேஷனல் ஹெரால்ட், அரவிந்த் கெஜ்ரிவால் ரெய்ட், அருண் ஜெட்லி, வெள்ளம், பீப் சாங், இளையராஜா என்று மேட்டருக்கா பஞ்சம் இங்கே?

24 மணி நேர டிவி சானல்களால் அதிகபட்சம் செய்யமுடிந்தது நம்மை மெழுகுவர்த்தியுடன் வீதிகளில் வலம் வர வைத்ததுதான். நம்மால் அதிகபட்சமாகச் செய்யமுடிந்ததும் இதுதான். இதுவே நமக்கு திருப்தியை ஏற்படுத்திவிட்டது. ஆனால், இந்தத் திருப்தி அபாயகரமானது. டிவியை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தியைக் கீழே வைத்துவிட்டு மேற்கொண்டு முன்னேறுவோம். உண்மையிலேயே பிரச்னை என்ன என்று அலசுவோம். அதன் அடியாழம் வரை சென்று விரிவாகப் பார்ப்போம்.

நிலப்பிரபுத்துவத்தின் விளைவுகள்!

இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது என்றபோதும் புவியியல் ரீதியில் இன்னமும் கிராமப்புறங்களே இங்கு அதிகம். இந்த நகர்மயமாக்கலும்கூட பிழையான முறையில் அமல்படுத்தப்பட்டு வருவதால் ஏழை-பணக்காரன், நகரம்-கிராமம், மேல்தட்டு-அடித்தட்டு, மையம்-விளிம்பு, ஆண்-பெண் என்று சமூகத்தில் எல்லாத் தரப்புகளிலும் முரண்பாடுகளும் மோதல்களும் கூர்மையடைந்துள்ளன.

நிர்பயாவின் பகுதியை எடுத்துக்கொள்வோம். புதுடெல்லி என்பது இன்று ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் குர்கான், நொய்டா, காஸியாபாத் போன்ற நகரங்களையும் உள்ளடக்கிய ஒரு தேசியத் தலைநகர் மண்டலமாக மாறியிருக்கிறது. மேற்சொன்ன இந்தப் பகுதிகள் நிலப்பிரபுத்துவ எண்ணம் கொண்ட பழைமைவாதிகளின் வசிப்பிடங்களாகவும் இருக்கின்றன. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த வேளாண் சமூகத்தினர். இவர்களிடம் ஏக்கர் கணக்கில் நிலம் இருக்கிறது, ஆனால் படிப்பறிவு இல்லை. மேற்கு உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய பகுதிகள் கவுரவக் கொலைகள், கப் சாதியினரின் பிற்போக்குச் சிந்தனைகள் ஆகியவற்றால் புகழ்பெற்றவை.

புதுடெல்லி விரிவடைந்து நிலத்தின் மதிப்பு வானத்தைத் தொட்டபோது, மேற்படி பழைமைவாதப் பிரிவினரின் செல்வம் பன்மடங்கு உயர்ந்தது. புதிதாகக் கிடைத்த இந்தப் பெரும் பணத்தை அவர்கள் மேல்தட்டு வர்க்கத்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றி செலவழிக்கத் தொடங்கினார்கள். அவர்களைப் பின்பற்றுவது தம்மை நவீனப்படுத்தும் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் மனதளவில் அவர்கள் பிற்போக்காகவே சிந்தித்தனர். இளம்பெண்கள் துணிச்சலாகப் பணியாற்றுவதையும், பார்ட்டிக்குச் செல்வதையும் கண்டு சகிக்காதவர்களாகவும், தங்களுடைய ‘மிருக உணர்வுகளைக்’ கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதவர்களாகவும் இவர்கள் இருந்தனர். இளம்பெண்களோடு நட்பு கொள்ளத் துடித்தார்கள். ஒத்துழைப்பு கிடைக்காதபோது, முறைகேடாக நடந்துகொண்டார்கள்.

நிர்பயாவைக் கொடூரமாகச் சிதைத்தவர்கள் நடுத்தர வர்க்கத்தையோ மேல்தட்டு வர்க்கத்தையோ சார்ந்தவர்கள் அல்லர், விளிம்பில் தங்கிருந்த சேரிவாசிகள். இவர்களில் கணிசமானவர்கள் பின்தங்கிய பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள். பெரும்பாலும் முறைசாரா பணிகளில் ஈடுபட்ட இவர்களில், உதிரித் தொழிலாளிகளும் விவசாயக் கூலிகளும் அதிகம் இருந்தனர். நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளும், பிற பிற்போக்கு பண்புகளும் இவர்களிடம் மண்டிக்கிடந்தன. டெல்லி போன்ற ஒரு பெருநகரம் இவர்களை அலைக்கழித்தது. டெல்லியில் காணப்படுவதைப் போன்ற சுதந்திரமான, நவீனப் பெண்களை இவர்கள் தங்கள் கிராமங்களில் கண்டதில்லை. ஆண்  நண்பர்களுடன் இயல்பாகக் கை கோத்து நடந்து செல்லும் இளம் பெண்களைக் காணும்போது அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. அந்தப் பெண்கள் தங்களுடைய நண்பர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதையும்,  ‘அவள் எல்லோருக்கும் கிடைப்பவள் அல்ல’ என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மற்றவர்களைப் போல் ஒரு பெண்ணை ஈர்க்கமுடியாமல் போனதைக் கண்டு அவர்கள் விரக்தி அடைகிறார்கள். அதனால் வயது வித்தியாசமின்றி பெண்களை மிருகத்தனமாகத் தாக்குகிறார்கள்.

மேல்தட்டு, அடித்தட்டு போன்ற வர்க்க வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்கம் செழித்து வளர்ந்துகொண்டிருப்பதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவச் சிந்தனையோட்டம் இன்னமும் வலுவாக இங்கே காலூன்றியிருப்பதுதான். பெண்களை ஆண்களைவிடத் தாழ்ந்த, எனவே ஆண்களுக்கு அடங்கியிருக்கவேண்டிய இரண்டாம் பாலினமாகவே அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் விருப்பத்துக்கு ஈடுகொடுக்கும், தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற இல்லத்தரசிகளையே அவர்கள் விரும்புகிறார்கள். போதுமான அளவுக்குக் குடும்பப்பெண்ணாக இல்லாதவர்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்குப் ‘பாடம் புகட்டவேண்டும்’ என்று நினைக்கிறார்கள். இந்த மனோபாவமே நிர்பயாவைச் சிதைத்திருக்கிறது. அதுவே அவரைக் கொன்றிருக்கிறது.

என்ன தீர்வு?

இந்த மனோபாவத்தை மெழுகுவர்த்தி மூலமாகவோ மசோதா மூலமாகவோ மாற்றமுடியாது. சமூகம் உற்பத்தி செய்துள்ள பிரச்னைகளை மீடியா உற்பத்தி செய்து தரும் தீர்வுகளைக் கொண்டு தீர்த்துவிடமுடியாது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைப் போலவே நிர்பயாவுக்கான போராட்டமும் முனை மழுங்கி திசைமாறிச் சென்றுகொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

பாலியல் பலாத்காரக் குற்றங்கள் பெருகிக்கொண்டிருப்பதற்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. நீதிபதி வர்மா கமிஷனின் பரிந்துரைகளை வாசிப்பதில் இருந்து அதற்கான முயற்சிகளை நாம் தொடங்குவது சரியாக இருக்கும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதன் மூலம் பாலியல் பலாத்காரத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்கிறது இந்தக் கமிஷன். அதே போல் இளம் குற்றவாளிகளை வயதில் முதிர்ந்தவர்களாகக் கருதி தண்டிப்பதிலும் பலனில்லை என்று அது குறிப்பிடுகிறது. அமெரிக்காவில்கூட இதை முயன்று பார்த்து, தோற்றிருக்கிறார்கள். எனவே புதிய மசோதாவையோ தூக்குத் தண்டனையையோ நாம் ஆதரிக்கவேண்டியதில்லை. குற்றங்களைக் கடுமையாக்குவதன் மூலம் மட்டுமல்ல, தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனையை உறுதி செய்வதன்மூலம் மட்டுமே குற்றத்தைக் குறைக்கமுடியும்.

பெண்கள் மீதான கொடூரமான குற்றங்கள் பற்றி இப்போதுதான் நாம் முதல் முறையாகக் கேள்விப்படுகிறோமா? ஒவ்வொரு முறை காலை காபி அருந்தும்போதும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குற்றச்செய்திகளை நாம் வாசிக்கிறோம். காதலை ஏற்க மறுக்கும் பெண்கள்மீது ஆசிட் வீசப்படுகிறது. வீடு, வீதி, பேருந்து, சிறைச்சாலை என்று பேதமின்றி எல்லா இடங்களிலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்கள். எல்லாவிதமான ஆயுதங்களாலும் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் முதல் கிழவிகள் வரை யாரும் இதிலிருந்து தப்பியதில்லை. நிர்பயா நமக்குப் புதிதல்ல.

1990ல் 41% பாலியல் பலாத்கார வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 30% ஆக குறைந்திருக்கிறது. 2011ல் 26.6% குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொருமுறை ஒரு குற்றவாளி சிறையில் அடைக்கப்படும்போதும் 3 பேர் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறார்கள். பெண்கள் மீதான குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டிருப்பதற்கான காரணத்தையும் அந்தக் குற்றங்கள் கணக்கிலேயே வராமல் போவதற்கான காரணத்தையும் நாம் சமூகத்திடம் தேடியாகவேண்டும். நம் சூழலே நம் சிந்தனைகளைத் தீர்மானிக்கின்றன. சமூக மாற்றத்தின்மூலமே சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.

ஆக, நாம் செய்யவேண்டியது என்ன? மேல்பூச்சு மாற்றங்களோ தாற்காலிகத் தீர்வுகளோ உதவாது என்னும் புரிதலுடன் அடிப்படை மாற்றங்களைச் செய்யமுன்வரவேண்டும். ஆணாதிக்கத்தையும் அதை வாழவைத்துக்கொண்டிருக்கும் சாதிய, நிலப்பிரவுத்துவச் சிந்தனை முறையையும் உடைத்தெறிந்தாகவேண்டும். இது சாத்தியப்படவேண்டுமானால் பழைய, பிற்போக்குச் சக்திகளையும் சிந்தனைகளையும் முழுக்கக் களையவேண்டியிருக்கும். கல்வி, சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று அனைத்துத் துறைகளிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தினால்தான் இது சாத்தியம்.

இது கடினமானது. ஆனால் நிர்பயாவுக்கு நீதி கிடைக்க இது ஒன்றுதான் வழி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close