Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இப்படித்தான் நடக்குமோ?!

முன்குறிப்பு: இக் கட்டுரையில் இடம்பெறும் சம்பவங்களும் வர்ணனைகளும் முழுக்க கற்பனையே. ஆனால், அவை எதிர்காலத்தில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை! 

ரு பக்கம் விஜயகாந்தை கூட்டணிக்காக மக்கள் நலக் கூட்டணி கையைப் பிடித்து இழுக்க, மறுபக்கம் கருணாநிதி வாய்விட்டே வரவேற்பு கொடுக்கிறார். வழக்கம்போல விஜயகாந்த் முறுக்கிக் கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் கலகல அத்தியாயங்களை எட்டும். அதை நமது கற்பனையில் இப்போதே ஓட்டிப் பார்த்தோம். நீங்களும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்..!  

தே.மு.தி.க. அலுவலகத்தில் காலை 9 மணிக்கு உள்ளூர் பா.ஜ.க. தலைவர்களுடன்  காஃபி குடித்துக் கொண்டே ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை, 9.30 க்கு மக்கள் நல கூட்டணியோடு நீர்மோருடன் டெவலப்பாகி, 10 மணிக்கு ரோஸ்மில்க்கோடு திமுகவில் வந்து நிற்கிறது. இதுபோக, அதிமுக, காங்கிரஸ், ஜி.கே. வாசன்,  பாமக,  தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி என கேப்டனின் கால்ஷீட் அடுத்த ஒரு மாசத்துக்கு ஃபுல். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிற டொனால்ட் ட்ரம்ப்பே தனது வெற்றிக்கு கேப்டன்தான் ட்ரம்ப் கார்டு என்பதால், கேப்டனின் அப்பாய்ன்ட்மென்ட் கேட்டு காத்திருப்பதாக பிபிசி பதைபதைக்கிறது.

உள்ளூர் எட்டுப்பட்டி  பஞ்சாயத்தை பேசித்தீர்ப்பதற்கே கேப்டனுக்கு நேரமில்லாத காரணத்தால், ட்ரம்ப்பை டீலில் விட்டுவிட்டதாக 'நெம்ப'த்தகுந்த கோயம்பேடு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேப்டனின் அலுவலகத்தில் தமிழிசை அண்ட் கோ நீண்ட நேரமாக காத்திருக்கிறது. சற்றே பொறுமையாக உள்ளே வருகிறார் கேப்டன். தமிழிசை அண்ட் கோ வணக்கம் வைக்கிறார்கள். 'வெள்ள நிவாரணம்  எல்லாம் குடுத்து முடிஞ்சாச்சும்மா, நீங்க இனிமே உங்க ஏரியா கவுன்சிலரைத்தான் போய் பார்க்கணும்' என்கிறார் கேப்டன். தமிழிசைக்கு தூக்கி வாரிப்போடுகிறது. "கேப்டன்... நான் தமிழிசை, தமிழக பாஜக தலைவர், கூட்டணி சம்பந்தமா உங்ககிட்ட பேச வந்திருக்கோம்" என்கிறார் தமிழிசை.

சுதாரித்துக்கொண்ட கேப்டன்,  "இப்பதான் உங்களுக்கு நான் இருக்குறதே ஞாபகம் வந்துச்சா? டெல்லி யிலேர்ந்து யார் யாரோ வர்றாங்க, அந்தம்மாவைப் பாக்குறாங்க, ரஜினியை பாக்குறாங்க, விஜய் தம்பியைப் பார்க்குறாங்க, நம்மளை ஒருத்தர்கூட வந்துப் பாக்கலை, டெல்லில எல்லாம் ஸ்வெட்டர் டிசைன் டிசைனா கிடைக்கும்னு சொல்வாங்க, யாராவது வாங்கிட்டு வருவாங்கன்னு பார்த்தேன், ம்ஹூம். தேர்தல்ன்ன உடனே என்  ஞாபகம் வந்துடுச்சா..?" என கேப்டன் எகிற, "வாங்க கேப்டன் உள்ளப் போய் பேசுவோம்" என தமிழிசை சமாளிக்கிறார்.

கேப்டன் கொஞ்சம் யோசித்துவிட்டு, "சரி, ஒண்ணு பண்ணுங்க, எங்க கண்டிஷன்ஸ் என்னென்னன்னு சுதீஷ் சொல்வாப்ல, அந்தா இருக்குல்லா முதல் ரூம், அங்கப் போயி காஃபி குடிச்சுக்கிட்டே பேசி முடிவு பண்ணுங்க. வைகோ வர நேரமாச்சு" என்கிறார். வேறு வழியில்லாமல் தமிழிசை அண்ட் கோ, சுதீஷ் அண்ட் கோவுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்கிறது. சற்று நேரத்தில் வைகோ தன் சகாக்களுடன் உள்ளே நுழைகிறார்.

இருகரம் விரித்துக்கொண்டே விஜயகாந்த்தை  நோக்கி பேராவலோடு முன்னே செல்லும் வைகோ "ரோமானிய பேரரசின் தெய்வமான ஜுபிடர்  போல உங்களை நினைத்து வந்திருக்கிறான் இந்த வைகோ" என்கிறார். "ஜில்லுன்னு நீர் மோர் இருக்கு, ஆளுக்கு ஒரு தம்ளர் குடிச்சிட்டு, அந்தா இருக்குற இரண்டாவது ரூம்ல நம்ம பேச்சுவார்த்தை டீம் காத்திட்டிருக்கு. போய் உட்கார்ந்து பேசிட்டு வாங்க, என்னென்ன கண்டிஷன்ஸ்னுன்னு சொல்வாங்க" எனும்போது பக்கத்து ரூமில் இருந்து அலறல் சத்தம் கேட்கிறது. விஜயகாந்த சாவகாசமாக, "சுதீசு, அங்கென்னப்பா சத்தம்"? என்க, அங்கேயிருந்து வந்த பதில் "பேசிகிட்டு இருக்கோம் மாமா".

விஜயகாந்த் வைகோவிடம் "அது ஒண்ணுமில்ல, எங்க கண்டிஷன்ஸ் எல்லாம் சொன்னோம், அதான் பயந்துட்டாங்க போலருக்கு. ஃப்ர்ஸ்ட் ரவுண்ட் கண்டிஷன்ஸ் என்னான்னு நான் சொல்லிடறேன், நான்தான் முதல்வர் வேட்பாளர். 230 தொகுதில எங்க கட்சி போட்டி போடும், உங்க நாலு பேருக்கும் ஆளுக்கு ஒரு தொகுதி. உங்களுக்கு ஓகேன்னா அந்த இரண்டாவது ரூம்ல போய் உட்காருங்க" என்க, வைகோவைத்தவிர மற்ற மூவர் முகத்திலும் தளர்ச்சி. ஆனால், வைகோ விறுவிறுவென அந்த இரண்டாவது அறையை நோக்கி வேகமாக நடக்கிறார். அப்போது சரிந்துவிழும் தன்  துண்டை கம்பீரமாக தோளில் போடுகிறார்.

மூவரும் வேறு வழியில்லாமல் பின் தொடர்கிறார்கள். அவர்கள் உள்ளே செல்வதற்கும் அடுத்த அறையில் இருந்து தமிழிசை அண்ட் கோ வெளியே வருவதற்கும் சரியாக இருக்கிறது. ஓர் கணம் தமிழிசையின் பார்வை வைகோவின் மேல் நிலைகுத்தி நிற்கிறது. வைகோ அருகில் செல்லும் தமிழிசை "அண்ணே, என்ன இருந்தாலும் நீங்களும் நம்ம கூட்டணியில நாலைஞ்சு மாசம் இருந்தீங்கன்ற நல்லெண்ண அடிப்படையில சொல்றேன், தயவுசெய்து உள்ள போகாதீங்க" என்க, வைகோ பதில் சொல்லாமல் உள்ளே செல்கிறார்.

அவர்கள் உள்ளே செல்வதையேப் பார்த்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் செல்போன் அடிக்கிறது. செல்போனில், 'அணித்தலைவரே வணக்கம், நான் அன்புமணி பேசுறேன்" என்று குரல். விஜயகாந்த், "இப்பவாச்சும் நம்ம கூட்டணிக்கு நான்தான் தலைவர்னு ஒத்துக்கிட்டீங்களே" என சொல்ல, ’'அடடே நீங்க தவறாப் புரிஞ்சுகிட்டீங்க. கேப்டன்ற ஆங்கில வார்த்தையைத்தான் நான் தமிழ்ல சொன்னேன். மத்தபடிக்கு நம்ம கூட்டணிக்கு என்னைக்குமே நான்தான் முதல்வர் வேட்பாளர்.

பட்ஜெட் எல்லாம் போட்டு வச்சுருக்கோம். என் தலைமையிலான கூட்டணியை ஏத்துக்கிட்டு நீங்க நம்ம கூட்டணிக்கு வந்தீங்கன்னா, உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தர தயாரா இருக்கோம்" என்கிறார். "ஹலோ நீங்க நிலவரம் தெரியாமப் பேசுறீங்க, எங்க ரேஞ்சே தனி, இந்தமாதிரி என்கிட்ட நேர்ல பேசியிருந்தீங்கன்னா நடக்கிறதே வேற, உங்க நல்ல நேரம் போன்ல பேசிகிட்டு இருக்கீங்க" என்க லைன் கட்டாகிறது.

விஜய்காந்த் சேரில் அமர்ந்திருக்க, வாசற்கதவு தட்டப்படுகிறது. "எக்ஸ்க்யூஸ்மி கேப்டன்" என வெளியே இருந்து சத்தம். அருகில் இருக்கும் கட்சி நிர்வாகியிடம், "யாருப்பா அது, 'யூஸ் மீ'ன்னு அவுங்கள யூஸ் பண்ணிக்க சொல்லி கேட்கிறாங்க?" என்கிறார். நிர்வாகி மெர்சலாக, ஸ்டாலின் மருமகன் சபரீசனும் துரைமுருகனும் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே வருகிறார்கள். கேப்டன் அவர்களிடம், "மெதுவா கதவைத் தட்டத் தெரியாதா உங்களுக்கு? நீங்க தட்டுற தட்டுல கல்யாண மண்டபமே இடிஞ்சுடும் போலருக்கே" என்கிறார். "கேப்டன் தம்பிக்கு தலைவர் மாதிரியே குசும்பு... பழசை இன்னும் மறக்கலை போல... அதுக்காக என்ன, வேணும்னா அறிவாலயத்துல ஒரு பக்கத்தை நீங்களே புல்டோசர் விட்டு இடிச்சுக்கங்க. ஆனா, கூட்டணி மட்டும் வேணாம்னு சொல்லாதீங்க" என்கிறார் துரைமுருகன். 

பக்கத்து அறையிலிருந்து 'அய்யோ அம்மா' என அலறல் சத்தம். துரைமுருகன் "இது ரோமானிய பேரரசோட நெருங்கின சொந்தக்காரங்க சத்தம்  மாதிரி இல்ல இருக்கு?" என்க, திரும்பவும் அலறல் சத்தம். துரைமுருகன் "இது தம்பி  திருமாவோட சத்தம்... ஆஹா, அவுங்க முன்னாடியே வந்துட்டாங்களா, வெள்ள நிவாரண நிதி கணக்கெடுப்புக்கு வந்திருந்தாங்க. அவுங்ககிட்ட டோக்கன் வாங்கிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு, அதுக்குள்ள இந்த குரூப் வந்துட்டாங்களா?’’ என்கிறார். சபரீசன் முகம் வெளிர்கிறது. துரைமுருகன் "என்ன கேப்டன்... வச்சு செய்றீங்க போல. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம், நாங்க பனங்காட்டு நரி, எங்களுக்கு என்னென்ன கண்டிஷன்ஸுன்னு சொல்லுங்க"என்கிறார்.

விஜயகாந்த் "உங்க ஆஃபர் என்னன்னு நீங்க சொல்லுங்க" என்று கேட்க, துரைமுருகன்,  "எங்க கட்சி தலைமையில் கூட்டணி,  முதலமைச்சர் வேட்பாளர் எங்க கட்சியிலேர்ந்துதான், உங்களோட 'தமிழன் என்று சொல்' படத்தோட டிவிடியை தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகள்ல இலவசமா வினியோகம் செய்றோம். படத்தோட மொத்த ரைட்ஸையும் கலைஞர் டிவியே வாங்கிக்கும், இந்த மாதிரி ஒரு ஆஃபரை வேற யாராலையும் உங்களுக்கு தரவே முடியாது" என்கிறார். விஜயகாந்த் ஒரு புத்தகத்தைத் தூக்கி டேபிளில் வைக்கிறார்.

துரைமுருகன், "ஓ, நீங்களும் தேர்தல் அறிக்கை எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா, வெரிகுட்" என்க, விஜய்காந்த் "இது தேர்தல் அறிக்கை இல்லீங்க, உங்ககூட கூட்டணிக்கு எங்களோட டிமான்ட் எல்லாம் இதுல இருக்கு" என்கிறார். அதிர்கிறார் துரைமுருகன்.

விஜயகாந்த்,  "மத்தவங்களுக்கு எல்லாம் ரெண்டு மூணு பக்க கையேடுதான், உங்ககூட நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கில்லையா... அதான் புக்காவே போட்டுட்டோம். சாம்பிளுக்கு வேணும்னா சிலதை சொல்றேன் கேளுங்க. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், பிரேமாதான் இணை முதலமைச்சர், சுதீஷ் துணை முதலமைச்சர், எங்க ஆட்சி வந்தா....." துரைமுருகன் மயங்கி சாய்கிறார். சபரீசன் அவரை கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்கிறார்.

வெளியே வரும்போது வராண்டாவில் இருக்கும் மூவரைப் பார்த்துவிட்டு கலகலவென சிரிக்கிறார் துரைமுருகன்.  சபரீசனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன்ணே சிரிக்கிறீங்க" என்க, துரைமுருகன் "இல்ல... யாருக்குமே தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு முக்காடு போட்டுட்டு உக்கார்ந்திருக்காங் இவங்க. இவங்களை கேப்டன் என்ன பாடுபடுத்தப் போறாரோ தெரியலை. அதை நினைச்சுதான் சிரிச்சேன்" என்று சொல்லிக்கொண்டே, "என்ன ஓ.பி. சார், சவுக்கியமா?" என்க, முக்காட்டுக்குள்ளிருந்து ஒரு முகம்  வெளியே எட்டிப்பார்த்துவிட்டு தலையை அவசரமாக உள்ளிழுத்துக் கொள்கிறது.

துரைமுருகன் வாசலுக்கு வரும்போது அங்கே வளர்மதி, கோகுல இந்திரா தீச்சட்டியுடன் நிற்கிறார்கள். வேறு சிலரின் வெள்ளை சட்டை எல்லாம் அங்கப்பிரதட்சனம் செய்ததால் ஒரே அழுக்காக இருக்கிறது. துரைமுருகன் வளர்மதி அருகில் சென்று, "உங்ககூட கூட்டணிக்கு வருவார்னு என்ன நம்பிக்கையில இங்க வந்துருக்கீங்க?" எனக் கேட்க, வளர்மதி "நாங்க எங்ககூட கூட்டணி சேரச் சொல்லி கேப்டனைத் தேடி வரலை, உங்ககூட சேராதீங்கன்னு கேட்கத்தான் வந்தோம்" என்று சொல்லிவிட்டு கூட்டத்தை நோக்கி குலவைச் சப்தம் எழுப்ப,  கூட்டமே கைகளில் தீச்சட்டியுடன் கொந்தளிக்கிறது.

உள்ளே... கேப்டன் மொபைலில் ‘P.M Calling' என்று திரை ஒளிர்கிறது!  

- சீலன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close