Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டும் வழக்குகள்; கோவிலுக்குள் தஞ்சம் புகும் அரசியல் விஐபிக்கள்!

2015 - ஜெயலலிதா முதல் விஜய டி. ராஜேந்தர் வரை எந்த அரசியல்வாதியையும் அமைதியாக கடந்துசெல்ல வில்லை. அதகளப்படுத்திவிட்டது. நாத்திகர்கள் பலரை ஆத்திகர்களாக்கிவிட்டது. பதவியில் பல காலம் பசை போல ஒட்டிக்கொண்டிருந்தவர்களை சிறை வாசலை காணச் செய்துவிட்டது.

நெடிய அரசியல் அனுபவமும், பலமான அதிகார மையமாக கோலோச்சியவர்களையும் திஹார் உஷ்ணம் மீண்டும் தீண்டிப்பார்த்து விட்டது.

அரசியலில் திடீர் உச்சம் கண்டுவிட்ட விஜயகாந்த் தனது விநோத நடவடிக்கைகளால் வலைதள ரசிகர்களுக்கு வகையான உணவாகிவிட்டதும் இந்த ஆண்டுதான்.  இத்தனை பிரச்னைகள் வழக்குகள் என நிம்மதியை தொலைத்துவிட்ட அரசியல்வாதிகள் இறுதியாக தஞ்சம் புகுந்திருப்பது கோவில்களில்.

அந்தளவிற்கு நகமும் சதையும்போல அரசியல்வாதிகள் வழக்குகளோடு பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். 

தமிழகத்தின் பிரபலங்கள் யாராவது ஒருவராவது தினந்தோறும் எதாவது ஒரு பிரபல கோவிலின் பிரகாரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி அரசியல்வாதிகளால் பிரபலமடைந்துள்ளது தமிழகத்தில் சில கோவில்கள். சிம்பு பாடி வெளியான பீப் பாடல் எழுப்பிய சர்ச்சை இன்னமும் சூடு குறையவில்லை. தமிழகம் முழுவதும் எழுந்துள்ள இந்த எதிர்ப்பால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அடைக்கலமான இடம், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில்.

திரும்பிய திசையெல்லாம் கோவில்கள் நிறைந்த காஞ்சியில் விஐபிக்கள் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மட்டும் வரிசைகட்டுவது ஏன் தெரியுமா... அதன் ரகசியம் என்ன...

முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தாராம். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

அக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பினரை இக் கோவிலுக்கு அழைத்துவந்து சத்தியம் செய்ய சொல்வார்கள். காரணம் பொய் சத்தியம் செய்தால் அவர்களது குடும்பம் அழிந்துவிடும் என்பது இக்கோவிலின் மீதான பெரும் நம்பிக்கை. காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள் என்பது கோவிலின் தல வரலாறு. அதனால்தான் அரசியல்வாதிகளால் நிரம்பி வழிகிறது இக்கோவில்.

கடந்த வருடம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான கனிமொழி திகார் சிறையிலடைக்கப்பட்டார்.  அப்போது இக்கோவில் பற்றி கேள்விப்பட்ட ராஐாத்தியம்மாள் தனது ஆதரவாளர்களை அனுப்பி இக்கோவிலில் பூஜை நடத்தினார். கனிமொழி சார்பாக தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

எதேச்சையாக அடுத்த சில வாரங்களில் கனிமொழிக்கு ஐாமீன் கிடைத்தது. இது பூஜையின் பலனால்தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாக தகவல் பரவியது. திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போனதற்கு இவையெல்லாம் விட சான்றுகள் தேவையில்லை.

பெங்களூருவில் ஜெயலலிதாவின் வழக்கு சூடுபிடித்த சமயம் ஒரு காலை நேரத்தில் சத்தமில்லாமல் வந்து இறங்கியது ஓ.பி.எஸ் தரப்பு. விடிந்தும் விடியாத காலை நேரத்தில் அமைச்சர்கள் ஓ.பிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஒரே வாகனத்தில் வந்திறங்கினர்.

பிரகாரத்தில் அமர்ந்து முதல்வர் பெயரில் அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பூஜைக்குப்பின் முதல்வருக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் ஒரு மாலை அடங்கிய  மஞ்சள் நிற கைப்பை ஒன்றை பெற்றுக்கொண்டு சென்றனர் அவர்கள். செல்லும்போது அம்மா விவகாரம் நல்லபடி முடிந்தால் கோவிலின் சிதிலமடைந்த கொடிமரத்தை சரி செய்து தருவதாக அர்ச்சகர்களை உற்சாகப்படுத்திவிட்டு கிளம்பினர். 

அதன்பின் ஒருமுறை ஜெயலலிதாவின் சார்பாக சசிகலாவே நேரடியாக வந்து சென்றிருக்கிறார் இந்த கோவிலுக்கு. ஜெயலலிதாவின் வழக்கு என்ன ஆனதென்பது தமிழகம் அறிந்த வரலாறு.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சசிகலாவும் ஒருவர் என்றாலும், சசிகலாவிற்கு பெரிய துயரம் தந்த வழக்கு, ஜெயலலிதா அவரை தம் வீட்டிலிருந்து வெளியேற்றியது. சென்னை தி.நகரில் உள்ள சிவன் விஷ்ணு கோவிலின் அருகே உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு அவர் மாலை மயங்கும் நேரத்தில் பரபரப்பாக வந்து பூஜை செய்தது பலரும் அறியாத தகவல்.

அக்கோவிலின் சிறப்பு பிரிந்தவர்களை சேர்த்து வைப்பது. தம் உறவினர்களுடன் அவர் பூஜையில் ஈடுபட்டதை படம் எடுத்த புகைப்படக்காரர் அடுத்த ஒரு மாதத்திற்கு வேறு எந்த படத்தையும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு ரகசியம் காக்கப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளிப்பகுதியில் பார்வையாளர்கள் வெளியேறும் இடத்தில் உள்ள கோட்டை நாகாத்தம்மன்  கோவிலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழப்பதற்கு முன் இறுதியாக தலைமைச்செயலகம் வந்து திரும்பியபோது வழக்கமாக வாகனத்திலிருந்தபடியே கும்பிடும் ஜெயலலிதா முதன்முறையாக அன்றுதான் தன் ஷூவை கழற்றி வணங்கினார்.

இப்போது பீப் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு சிம்பு குடும்பத்தினரை படுத்தி எடுக்க, டி.ராஜேந்தரும் கடந்த வாரம் தஞ்சமடைந்தார் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில். அதுவரை உருக்கமாகவும் கண்ணீர் விட்டும் கதறிக்கொண்டிருந்த டி.ராஜேந்தர் கோவிலின் வாசலில் கொடுத்த பேட்டியை பார்த்தால் கோவிலின் சக்தி அங்கேயே கிடைத்துவிட்டது போலிருந்தது.

அரசியல் அரங்கில் ஜெயலலிதா விஜயகாந்த் மோதல் அறிக்கைகளால் அதகளப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் விஜயகாந்தைப்பற்றிய மீம்ஸ், ஸ்டேடஸ், கமெண்ட்  வீடியோக்கள் என ரணகளப்படுத்தினார்கள் முகநூல் போராளிகள். நொந்து நூலான விஜயகாந்த் நேரே சென்றது, நெல்லை மாவட்டம் விஜயாபதிக்கு அருகிலுள்ள விஸ்வாமித்திரர் கோவிலுக்கு.

மனைவி பிரேமலதாவுடன் விஸ்வாமித்திரர் கோவிலுக்கு ரகசியமாக வந்த விஜயகாந்த் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக இருந்து சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றார்.

நிம்மதி தேடி அரசியல்வாதிகள் எங்கெங்கோ செல்ல விஜயகாந்த் இந்த கோவிலை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பான காரணம் ஒன்று உண்டு. கோபத்திற்கு பேர்போன விஸ்வாமித்திரர் இக்கோவில் அமைந்துள்ள இடத்தில்தான் உக்கிரத்துடன் யாகம் செய்து தனது கோபத்தை தணித்ததாக வரலாறு.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்திற்கும், தலைமைக்கும் கொஞ்சம் முரண்பாடு எழுந்த நேரத்தில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துசென்றிருக்கிறார்.

அடுத்து சரத்குமார்

நடிகர் சங்க விவகாரத்தில் நாசர் தரப்பிடம் மண்ணைக் கவ்விய சரத்குமாருக்கு பதவியும் போய் நடிகர் சங்க விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கும் வரப்போவதாக செய்திகள் உலாவர, அரசியலிலும் திரையுலகிலும் ஒரே நேரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. இந்த நேரத்தில் அவரும் நிம்மதி தேடி ஓடியிருக்கிறார் திருப்பதிக்கு. இன்று காலை திருப்பதி தரிசனத்திற்காக வி.ஐ.பிக்கான வரிசையில் எல். 7 வரிசையில் மனைவி ராதிகா மற்றும் குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய கட்சிப்பிரமுகர் ஒருவருடன் அவர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

டென்ஷனாக மனநிலையில் தரிசனம் செய்த அவர் சிறப்பு தரிசனத்திற்காக காத்திருந்தபோது யாரிடமும் பேசாமல் கனத்த மவுனத்துடன் இருந்தாராம். தரிசனம் முடிந்து வெளியே வந்தபிறகே ரிலாக்ஸான மனநிலைக்கு வந்திருக்கிறார். அங்கிருந்த சாமி சிலைகளை பற்றி அருகிலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினார் என்கிறார்கள்.

உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமன்றி வடமாநில பிரமுகர்களும் இதேபோல் கோவில்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் நடந்த ஊழல் (ஆதர்ஷ் ஊழல்) வழக்கில் சிக்கி, பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டார்.

ஆன்மீகவாதிகளாலும் ஆச்சர்யமான வரலாறுகளாலும் புகழ்பெற்ற கோவில்கள், இப்போது மனவிரக்தியடைந்த அரசியல்வாதிகளால் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளை காக்க ஆயிரம் கோவில்கள் இருக்கிறது. ஆனால், அந்த அரசியல்வாதிகளிடமிருந்து பொதுமக்களை காக்க எங்காவது சிறப்பு கோவில் இருக்கிறதா?

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close