Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேலி, கிண்டல் மீம்ஸுக்கு விஜயகாந்தின் ரியாக்‌ஷன் என்ன?- பதில் சொல்கிறார் கேப்டன் மகன்!

விஜயகாந்த் பற்றி அனுதினமும் தினுசு தினுசாக சர்ச்சை கிளம்பினாலும், அவருடைய மகன்கள் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் தாங்கள் விருப்பப்பட்ட துறையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் சினிமாவில் நடிக்க, மூத்த மகன் விஜய பிரபாகரன் பேட்மிட்டன் அணியொன்றின் உரிமையாளர் ஆகியிருக்கிறார். ஐ.பி.எல், ஐ.எஸ்.எல் பாணியில் இறகுப் பந்தாட்டப் போட்டிகள் (ஷாட்டில் காக்) “பிரீமியர் பேட்மிட்டன் லீக்” என்ற பெயரில் நடக்கவிருக்கிறது.

அத்தொடரில் சென்னை சார்பாக பங்கேற்கும் “சென்னை ஸ்மாஷர்ஸ்” அணியை வாங்கியிருக்கிறார் விஜய பிரபாகரன். உற்சாகமாக விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கவிருக்கும் விஜயபிரபாகரனிடம் விளையாட்டு தவிர, பல விஷயங்கள் பேசியதிலிருந்து...

எப்படி பேட்மிட்டன் டீம் வாங்கணும்னு முடிவு செஞ்சீங்க?

’’பேட்மிட்டன் லீக் நடக்கப்போகுது, சென்னை டீமை வாங்கலாம்னு ஒரு நண்பர் சொன்னார். நாம வாங்கலாமானு அப்பாகிட்ட கேட்டேன். உடனே சரி சொல்லிட்டார். ஆனா, சென்னை வெள்ளத்தினால் எல்லா ஏரியாவிலும் டவர் கட். பேட்மிட்டன் கமிட்டியில் யார்கிட்டயும் பேசமுடியல. அவ்வளவுதான் கிடைக்காதுனு விட்டாச்சி. திடீர்னு ஒரு ஃபோன். ’டெல்லியிலிருந்து பேசுறோம். நாளைக்கு ஃபைனல் பண்றோம். நீங்க மட்டும்தான் இன்னும் வரலை’னு சொன்னாங்க. உடனே அடிச்சுப் பிடிச்சு டெல்லி போனோம்.  ஒரு டீமுக்கு மொத்தம் 10 ப்ளேயர்களை வாங்கலாம். தேசிய, சர்வதேச ப்ளேயர்கள்னு யாரையும் வாங்கலாம். எங்க டார்கெட் சிந்துதான். இந்தியாவுக்காக விளையாடுற இளம் பேட்மிட்டன் வீரர். மீதி 3 பேர் இந்தியன்ஸ், 6 சர்வதேச ப்ளேயர்களை வாங்கியிருக்கோம்!’’

சாய்னா நேவாலை சென்னை டீமில் எடுக்காம மிஸ் பண்ணிட்டீங்களே?

’’எல்லா டீமோட டார்கெட்டும் சாய்னா நேவால்தான். அதனால போட்டி பலமா இருக்கும். அதோட ரொம்ப இளைய வீரர்களை மட்டும் வாங்கலாம்னு திட்டம் போட்டிருந்ததால, சீனியர்கள் மேல கவனம் செலுத்தலை. அவ்வளவு ஏன், ’பெஸ்ட் ப்ளேயர்ஸ் லிஸ்ட்’ல இருக்கிற யாரையுமே சென்னை டீமுக்காக நாங்க வாங்கலை. இளம் வீரர்களை வைச்சி ஜெயிக்கலாம்னு கேம் பிளான்!’’

உங்க தம்பி சண்முகப் பாண்டியனையே சென்னை அணிக்கு அம்பாசிடர் ஆக்கிட்டீங்களே!

’’சென்னை டீம்ல எல்லோருமே இளைஞர்கள்தான். என் தம்பிக்கும் சின்ன வயசுலயே ஸ்போர்ட்ஸ்ல அதீத ஆர்வம். அதான் அவனையே அம்பாசிடர் ஆக்கிட்டோம்!’’

சென்னை அணி வாங்கியிருக்கீங்க. ஆனா, சென்னைல எந்தப் போட்டியும் நடக்கலை போல..?

’’சென்னை வெள்ள நிவாரணப் பொருட்கள் நேரு ஸ்டேடியத்தில் இருப்பதால் அங்க போட்டி நடத்தமுடியாதுனு சொல்றாங்க. டெல்லி நிர்வாகிகளே பல வாரமா முயற்சி பண்ணியும் தமிழக அரசாங்கத்துக்கிட்ட இருந்து சரியான பதில் இல்ல. மத்த எல்லா மாநிலங்கள்லயும் அனுமதி வாங்கிட்டோம். ஆனா, இங்கே மட்டும் அனுமதி கிடைக்கும்னும் சொல்லலை... கிடைக்காதுனும் சொல்லலை. அப்பா ஆரம்பத்துலேயே சொன்னார், ’நீ சென்னை டீம் வாங்கினா நிச்சயமா சென்னைல விளையாட அனுமதி தரமாட்டாங்க’னு. அப்போ எனக்குப் புரியலை. இப்போதான் புரியுது!’’ 

கிரிக்கெட் மாதிரி பேட்மிட்டன் ரீச் ஆகும்னு நினைக்கிறீங்களா?

இந்த லீக்குக்கு கூட இரண்டு பேராவது தமிழ்நாட்டு வீரர்கள் விளையாடணும்னு நினைச்சேன். ஆனா தமிழ்நாட்டு ப்ளேயர் யாருமே பேட்மிட்டன் லீக் லிஸ்டில் இல்லை. என்னோட நோக்கமே தமிழ்நாட்டு வீரர்கள் மட்டும்தான் எதிர்காலத்துல சென்னை ஸ்மார்ஸ் டீமில் இருக்கணும். இப்படி மாறிடுச்சினா தமிழ்நாட்டுல கிரிக்கெட் மாதிரி பேட்மிட்டனும் எல்லோருக்கும் பிடிக்கும். சியர்கேர்ள்ஸை ஆடவைச்சி விளம்பரப்படுத்துறதுலாம் எங்க ஐடியா கிடையாது. சென்னை ஸ்மார்ஸ் மூலமா ஆர்வமான ப்ளேயர்ஸை உருவாக்கணும். அதற்காக அகாடமி தொடங்கவும் யோசிச்சிட்டு இருக்கேன்.

நாய் வளர்ப்பிலும் ரொம்பத் தீவிரமா இருக்கீங்க...?

’’என் பிறந்த நாளுக்கு பரிசா அப்பா கொடுத்தது லக்கினு ஒரு நாய். அந்த நாய் வந்த பிறகு தான் “டாக் ஷோ”வில் கலந்துக்க ஆரம்பிச்சேன். இதுவரை எந்த இந்தியனும் உலகளவில் டாக் ஷோவில் கலந்துக்கிட்டது கிடையாது. நான்தான் முதல்ல கலந்துட்டு ஜெயிச்சிருக்கேன். அது என் இரண்டாவது உலகம்!’’

அப்பாவும் தம்பியும் நடிக்கிற ’தமிழன் என்று சொல்’ படம் பற்றி சொல்லுங்க!

’’தமிழின் தமிழர்களின் பெருமை பேசும் படம். அந்தளவுக்குத்தான் எனக்குத் தெரியும். அப்பா ஷூட்டிங் போயிட்டு இருக்காரு, ’சகாப்தம்’ படத்துக்கும் சரி... இந்தப் படத்துக்கும் சரி... நான் ஒரு ரசிகன் மட்டும்தான்!’’ 

கேப்டன் விஜயகாந்த் வீட்ல எப்படி?

வீட்டுக்கு வெளியேதான் அப்பா அரசியல்வாதி. வீட்டுக்கு வந்துட்டா அவர்தான் நாய்க்கு சாப்பாடு வைப்பார். என் கூட,  என் நண்பர்களோட அரட்டைனு செம ஜாலியா இருப்பார். வெளியேதான் அவரை வேற மாதிரி பேசுறாங்க. ஆனா, அப்பா ரொம்ப சாது!’’

ஆனா, சோஷியல் மீடியாக்களில் அப்பாவை வைச்சு நிறைய மீம்ஸ் வருதே...?

’’அப்பா எவ்வளவோ நல்லது பண்ணிருக்காரு. அதையெல்லாம் இவங்க பேசமாட்டாங்க. அதனால அந்த கிண்டலையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். அப்பாகிட்ட சொன்னாலோ, அதையெல்லாம் காமிச்சாலோ சிரிச்சுட்டுப் போயிடுவார். சீரியஸா எடுத்துக்க மாட்டார். சோஷியல் மீடியாவில் அப்பாவை தப்பா சித்தரிச்சா அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?’’

- அ.தமிழன்பன், பி.எஸ்.முத்து

விஜயபிரபாகரன் நேர்காணலை வீடியோ வடிவில் பார்க்க:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close