Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரைக் கொடுத்து ஒரு உயிர் போராட்டம்! ( கூடங்குளம் அணு உலை அரசியல்: பகுதி -21)

‘எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மனதிற்கு வாய்ப்புகள் சாதகமாகவே அமையும்’
-
லூயி பாஸ்டர்


அணு உலைக்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அணு உலையை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். இதனை தடுக்க அரசு நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், போலீஸார் எதிர்பார்க்காத வகையில் கடலுக்கு அருகிலேயே நடந்து,  அணு உலைக்கு அருகில் சென்று விட்டனர். இது தமிழக போலீஸாருக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இந்த நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அத்துடன் முடிந்தது என நினைத்தனர். அதனால், மாலையிலேயே அனைத்து படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் அதிலும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தனர். அன்று இரவு முழுவதும் குழந்தைகள், பெண்கள் என அனைவருமே கடலோரத்தில் தங்கி விட்டனர். பாம்பு உள்ளிட்ட கொடிய விஷ ஜந்துக்கள் இருந்தபோதிலும் அவர்கள் அங்கேயே தங்கியதை போலீஸார் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் நிறுத்தாத போராட்டக்காரர்கள், மறுநாள் காலையிலேயே அந்த இடத்தில் பந்தல் அமைக்கும் பணியை தொடங்கினர்.

அணு உலைக்கு அருகில் நடக்கும் இந்த செயலை பார்த்து அதிர்ந்தது காவல்துறை. இப்படியே விட்டால் நாள் கணக்கில்,  முற்றுகைபோராட்டத்தை அணு உலைக்கு அருகில் அமர்ந்தபடியே நடத்தி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட போலீஸார், அதிரடியாக களத்தில் இறங்கினர். அந்த இடத்தில் இருந்து 10 நிமிடங்களில் கலைந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், போலீஸாரின் மிரட்டலுக்கு மக்கள் செவிகொடுக்கவில்லை. இதனால் எரிச்சலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மீண்டும் எச்சரித்தனர்.

பொதுமக்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள், வயோதிகர் என பாகுபாடு பார்க்காமல் தடியடி நடத்திய போலீஸாரை திருப்பி தாக்க, பொதுமக்களிடம் எதுவுமே இருக்கவில்லை, கடல் மணலைத் தவிர! பொதுமக்கள் மணலை அள்ளி வீசியதால் கோபமடைந்த போலீஸார்,  கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத போராட்டக்காரர்கள், கால்போன திசையில் தப்பி ஓடினர். நிறைய பேர் கடலுக்குள் குதித்து நீந்தியபடி சென்றனர். முன் வரிசையில் இருந்த குழந்தைகளும் பெண்களும் செய்வது அறியாமல் தவித்து போனார்கள். போராட்டத்தில் தீவிரம் காட்டியவர்கள் மட்டும் அல்லாமல் கண்ணில் தென்பட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துச் சென்று கைது செய்தது போலீஸ். போலீஸார் நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அவர்களை கைது செய்தது காவல்துறை.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளைர்களை கைது செய்தால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என நம்பிய போலீஸார், தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவர்களை தேடினார்கள். சில குண்டுகள் போராட்டக் குழுவை நோக்கி வீசப்பட்டன. அதனால் சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள், போராட்டக் குழுவினரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதில் வேகம் காட்டினார்கள். உள்ளூர் மீனவர்கள் சிலர் துரிதமாக செயல்பட்டு உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் படகுகள் மூலமாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சில தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களும் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். தாக்குதலுக்கு பின்னர், ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அத்துடன், சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.   
 
போராட்டக் குழுவினரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.  இதனிடையே, காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் தேசிய அளவில் விவாதத்துக்கு உள்ளாகியது. அதனால் இது பற்றி விளக்கம் அளித்த போலீஸார், "போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளில் மேலும் முன்னோக்கி நகர்ந்து சென்றனர். அணு உலையின் மதில் சுவர் வரை சென்று முற்றுகையிட அவர்கள் முயற்சி செய்ததால்,  அதனை தடுப்பதற்காக தடியடி நடத்தினோம். நாங்கள் அப்படி செயல்படாவிட்டால் போராட்டக்காரர்கள் அணு உலைக்கு அருகில் போயிருப்பார்கள்" என்றார்கள்.

தடியடிக்கு பின்னரும் போலீஸாரின் கோபம் குறையவில்லை. போராட்டம் நடந்த ஓராண்டு காலத்தில் ஒருநாள் கூட இடிந்தகரை பக்கம் வந்து சென்றிருக்காத எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அன்றைய தினம் ஆயிரக்கணக்கான போலீஸாருடன் இடிந்தகரைக்குள் நுழைந்தனர். அங்கு எதிரில் தென்பட்ட அனைவரையும் சகட்டுமேனிக்கு அடித்து துவைத்ததுடன், கைது செய்து அழைத்து சென்றனர். அத்துடன் இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் போட்டு வைத்திருந்த பந்தலை பிரித்து எறிந்து,  கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த தாக்குதல் பற்றி பேசிய பொதுமக்கள், "நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். எந்த ஆயுதமும் வைத்து இருக்கவில்லை. வெள்ளைக் கொடியுடன் அறவழியில் போராடிய எங்களை தீவிரவாதிகளை சுற்றி வளைப்பது போல போலீஸார் வளைத்து கொடூர தாக்குதல் நடத்தினார்கள்.
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தாக்குதல் நடத்தியதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளையும், துப்பாக்கி சூட்டையும் நடத்தி முடித்து விட்டார்கள்.

யாரையும் பேச்சுவார்த்தை நடத்த அழைக்காமல்,  போராட்டத்தை நசுக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து இந்த சம்பவத்தை நடத்திட்டாங்க. நிறைய பேரை அடித்து உதைத்து  இழுத்துட்டு போயிருக்காங்க. போராட்டத்துக்காக சர்ச் முன்பாக நாங்க போட்டிருந்த பந்தலை,  எஸ்.பி விஜயேந்திர பிதரி தலைமையில் சென்ற போலீஸார் பிரித்து எறிந்து இருப்பதை பார்க்கையில், இவர்கள் நோக்கம் எல்லாம் எங்கள் போராட்டத்தை ஒடுக்குவது மட்டுமே என்பது தெரியுது"  என்றார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களின் மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள மீனவ அமைப்பினரும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் காவல்துறையினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டத்தை கண்டித்து தூத்துக்குடியில் மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், தூத்துக்குடியிலிருந்து புறப்படும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலையும் தடுத்து நிறுத்தினர். பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் அடைய வைத்த பிறகு தாமதமாக அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இது போல பல்வேறு கிராமங்களிலும் போராட்டம் வெடித்தது. நாகர்கோவில்- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் பெரும் கலவரம் மூண்டது.

போலீஸாரின் செயலை கண்டித்து அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை உருவானது. போலீஸாரும் வருவாய்த்துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை.

இதனால் அங்கு,  போலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்தோணிராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் போராடும் மக்களிடம் கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியது.

நிலைமை விபரீதம் அடைந்ததால் விழித்துக்கொண்ட தமிழக அரசு, இந்த போராட்டத்தை சிலர் திட்டமிட்டு தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியது. முதல்வர் ஜெயலலிதாவே அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார். முதல்வர் வெளியிட்ட இந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை பற்றியும், துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்,  பலத்த போலீஸ் கெடுபிடியையும் மீறி இடிந்தகரை கிராமத்துக்கு வருகை தந்தது தொடர்பாகவும் அடுத்த வாரம் பார்க்கலாம்...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன் 

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 

 

 

 

 

 


 

 

எடிட்டர் சாய்ஸ்