Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்புவதற்கா?

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் "சாதனை வி்ளக்க இலட்சிய பேரணி "யை  தொடங்கியுள்ளது ஆளும் கட்சியான அதிமுக. இது,  வரும் தேர்தலில் அதிமுக தனித்துக் களம் காண எடுத்து வைத்துள்ள முதல் அடி என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்,  சிறு சிறு இயக்கங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு,  மோடி அலையை முறியடித்து 37 தொகுதிகளில் வென்றதுபோல, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற, முதல்வர் ஜெயலலிதா அதிரடி வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 3 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், எதிர்க்கட்சியான தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்பதில் மதில்மேல் பூனையாகவே இருக்கிறது. திமுக தரப்பும், மக்கள் நலக் கூட்டணியும், மத்தியில் ஆளும் பாஜகவும் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. ஆனால் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜயகாந்த்,  யாருடன் கூட்டணி என்பதை முன்கூட்டியே சொல்லாமல் இருப்பதை ஒருவித அரசியல் வியூகமாகவே கருதுவதால்,   திமுக, கடுகடுப்புடனேயே அவரை பார்த்து வருகிறது. இருப்பினும் மெல்லவும் விழுங்கவும் முடியாத நிலையிலேயே அக்கட்சி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாத மத்தியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,  தமிழகம் முழுக்க 'நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்'  தொடங்கி, டிசம்பர் 29 ம் தேதி வரை  சென்னை நீங்கலாக,  தமிழகத்தின் பிற மாவட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.  இந்த மக்கள் சந்திப்பின் போது ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா ஆட்சி குறித்தும், முந்தைய திமுக ஆட்சி குறித்தும் ஒப்பிட்டுப் பேசி, தேர்தல் பிரசாரம் போலவே கூட்டங்களை நடத்தினார். இன்று (புதன்) சென்னையில்  நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் நிறைவு சந்திப்பை நிகழ்த்துகிறார்.

அதே போல பாமகவும், திமுகவிற்கு முன்னதாகவே அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மண்டல மாநாடு நடத்தியும்,  துண்டுப் பிரசுரம் வெளியிட்டும் தேர்தலுக்கு தயாராகியுள்ளது.

இதனிடையே மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்,  கூட்டணி பற்றி வாய்திறக்காமல் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளிலும், ஒரு சில போராட்டங்களை நடத்தியும்,  தமிழக அரசியல் அரங்கில் வலுவான இடம்பிடிப்பதில் முனைப்புக் காட்டுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக,  தமிழகத்தைப் பொறுத்தவரை பலமில்லாமலேயே காட்சி அளிக்கிறது.  கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது,  தங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாரிவேந்தர் தலைமையிலான  இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதிலும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை கூட்டணியில் இணைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள  தமிழக பாஜக தலைவர்களின் இரு குழுக்கள்,  கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் எப்படியும் தேர்தல் நேரத்தில்,  திமுகவோடு கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்பதால் அக்கட்சியின் பிரசாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. 

இந்நிலையில், ஆளும் அதிமுக  234 தொகுதிகளிலும் இன்று "சாதனை வி்ளக்க  இலட்சிய பேரணி" யை  தொடங்கி,  களத்தை சுறுசுறுப்பாக்கியுள்ளது.

இந்தப்பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் என முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, அதிமுகவின் 5 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு அச்சிடப்பட்டுள்ள விளக்க கையேடுகளை பொதுமக்களுக்கு விநியோகித்து, பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அதேபோல அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில்,  வரும் 9 ம் தேதிமுதல் 26ம் தேதிவரை மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிமுகவின் செயல்பாடு திமுக,  பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளைப்போன்று பலமானதாக இல்லை என்பதை உணர்ந்து, அதிமுகவின் தகவல் தொழிநுட்ப பிரிவு,  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரத்யேக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தக் கூட்டங்களில், அதிமுக அரசின் தொலை நோக்கு திட்டங்கள், சமூக வலைத் தளங்களை அதிமுக வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் யுக்திகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள  அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் #Mission234 என்று குறிப்பிடப்பட்டு செய்திகள், அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன. 

அதிமுக,  மத்தியில் ஆளும் பாஜகவோடு இணக்கமான நிலையில் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கி,  இலை அலையை மீண்டும் நிரூபிக்கவே  அக்கட்சியின் தலைமை  விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த வாரம் சென்னை திருவான்மியூரில் நடந்த  அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசுகையில், கூட்டணி விசயத்தில், சட்டமன்ற தேர்தலின் போது சூழலுக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இது, தான் விரும்பும் சூழல் தமிழ்நாட்டில் தற்போது இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும், அதிமுக உடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்று சில அரசியல் கட்சிகளை, குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியை  சிந்திக்க வைக்கும் தந்திரமாகவும் இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

மக்கள் நலக்கூட்டணி,  அதிமுக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியும், முடிவெடுக்கவிடாமலும்  இழுத்தடிக்க வைப்பதன் மூலம்,தனது கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணி உருவாகாமல் தடுக்க முடியும். இதனால் தேர்தல் நெருக்கத்தில் மற்ற கட்சிகள் திண்டாடும் தருணத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போன்றே ஒரு சில உதிரி கட்சிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தனித்தே களம் காணலாம் என்ற எண்ண ஓட்டம் ஜெயலலிதாவுக்கு இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் மாத மழைவெள்ளம் அதிமுக அரசுக்கு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அது மழை வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே வெளிப்பட்டது. அதனையும் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட சில தேர்தலுக்கே உண்டான சில 'கவனிப்புகள்' மூலம் சரிக்கட்டிக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருப்பதால் தனித்து போட்டியிட அதிமுக தயங்காது.

இருப்பினும் திமுக, காங்கிரஸ், தேமுதிக என்று பலம் வாய்ந்த கூட்டணி அமைந்தால் அப்பொழுது வேண்டுமானால், பொதுக்குழு கூட்டத்தில் பேசியதுபோல் மக்கள் நலக்கூட்டணியையோ அல்லது அதில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை மட்டுமோ ஜெயலலிதா, தனது கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

ஜெயலலிதா அவ்வப்போது வெளிப்படுத்தும் அதிரடி மற்றும் அசாத்திய  துணிச்சல் சில நேரங்களில் அவருக்கு வெற்றியையும், சாதகமான நிலையையும் ஏற்படுத்தி உள்ளது போன்றே, சில நேரங்களில் அவரையும் கட்சியையும் நெருக்கடியிலும் தள்ளி உள்ளது.  அதே போன்று இந்த தேர்தலில் ஜெயலலிதா எடுக்கும் முடிவு அவருக்கும், அவரது கட்சிக்கும் எத்தகைய நிலையை உருவாக்கும் என்பது தேர்தல் நெருக்கத்திலேயே தெரியவரும்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ தொடங்கலாம் என்பது. அதே போன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பும் அடுத்த மாதம் வர வாய்ப்பு உள்ளது. அப்படி இந்த இரண்டு வழக்குகளில் எந்த தீர்ப்பு வந்தாலும், அது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கூட்டணி வியூகம் எப்படி வேண்டுமானாலும் மாறிப்போக வாய்ப்பு உண்டு.

- தேவராஜன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close