Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ரீ-என்ட்ரி? - அ.தி.மு.க-வின் அமாவாசை ஆச்சர்யம்!

தேர்தல் நாள் நெருங்க, நெருங்க வெளித் தெரியாத உள் காய்ச்சல், அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு ஏற்படுவது இயல்பு. தமிழக அரசியல் களத்தின் ரேசில் கடந்த நாற்பதாண்டு காலமாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வே  கோலோச்சி வந்த நிலையில்,  2014-வரை 5.1% வாக்குகளை கையில் வைத்திருக்கும் தேமுதிக வும்,  இந்த ரேசில் ஓடுகின்ற குதிரையாக ஆகிப் போனதில் இரண்டு கழகங்களுமே லேசாக ஆட்டம் கண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அ.தி.மு.க. வில் அடுத்தடுத்த களையெடுப்புக்கான வேலைகளை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  மீண்டும் கையிலெடுக்க ஆரம்பித்திருக்கிறார், அதுவும் முன்பை விட வேகமாக என்கிறார்கள்.

பகுதி, ஒன்றிய, பேரூர் கழகம் தொடங்கி பேரவை, மாணவரணி, இளைஞரணி, பாசறை, மாவட்டக் கழகம் வரை இந்த களையெடுப்பு இருக்கும் என்கிறார்கள். அ.தி.மு.க.வில்  மாவட்ட அளவில் தூண்களாக அறியப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  ஈரோடு முத்துசாமி, சேலம் செல்வகணபதி,  கருப்பசாமி பாண்டியன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோரும் சென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பி.கே.சேகர்பாபு போன்றோரும் இப்போது எதிர் முகாமில் இருக்கின்றனர்.

அவர்களை எதிர்த்து அந்தந்த பகுதிகளில் "திறமை" காட்ட அ.தி.மு.க.வில் போடப்பட்டிருக்கும் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு  போட்டிக் களத்தில் ஜொலிக்கவில்லை. அவர்களை மீண்டும் கட்சிக்குள் இழுத்துக் கொண்டு வரலாமா என்ற ஆலோசனையும் தனியாக நடப்பது தனிக்கதை.

பதற்றமும், பரபரப்புமாக  தேர்தல் நெருங்கிய பிறகு  'க்ளைமாக்ஸ்' சில்  மாற்று ஏற்பாடு செய்து கொண்டிருக்க  முடியாது என்று அ.தி.மு.க. தலைமை கருதுகிறது. இந்த சிக்கல்களை களைய,  ஒதுங்கியே இருந்தாலும் தொண்டர்களின் எண்ணவோட்டத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை வருகிற அமாவசை  (9.1.2016) தினத்தன்று கார்டனுக்குள்  ரீ- என்ட்ரீ கொடுக்கும் முடிவில் ஜெயலலிதா இருக்கக் கூடும் என்கின்றனர்.

அதற்கு முன்னோட்டம்தான் செங்கோட்டையனின் சீடரான பொள்ளாச்சி ஜெயராமனை,  கழக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக மாவட்டப் பொறுப்பிலிருந்து மாநிலப் பொறுப்பில் ஜெயலலிதா நியமித்தார் என்றும் இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொடுக்கின்றனர். தேர்தல் சுற்றுப் பயணங்களில்,  கையில் அட்டையால் தயாரிக்கப்பட்ட இரட்டை இலையைப் பிடித்துக் கொண்டு, ஜெயலலிதாவின் கார் நிற்கும் பாய்ன்ட் இதுதான் என்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றியவர் செங்கோட்டையன்...

டி.டி.வி.தினகரனைப் பொறுத்தவரை அவர் கையில் லக்கான் இருந்த காலத்தில் கட்சி தொடர்பான போஸ்டிங்குகள், பஞ்சாயத்துகள் தொடங்கி கட்சி மீட்டிங், ஜெயலலிதாவைச் சந்திக்க அப்பாய்ன்ட்மென்ட்   தேதி வாங்குவரை ஒரே ஆளாக தன்னுடைய வீட்டிலேயே வைத்து ஆப்ரேட் செய்து விடுவார். மேலும் யாரிடமும் எரிந்து விழாமல் பேசக் கூடியவர் என்றெல்லாம் அவர் குறித்த 'ரிப்போர்ட்' கார்டனில் தெளிவாக இருக்கிறதாம்...

எப்போதுமே அமாவசைகளில் சில தலைகள்தான் பொறுப்பிலிருந்து கழண்டு விழும். இம்முறை பொறுப்பு, தலைகளுக்குப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் தொண்டர்கள்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை 'இதுவும் கடந்து போகும்' என்பதே எப்போதும் நடந்திருக்கிறது...!

-ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ