Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடுடா மேளம்... அடிடா தாளம்... இதுதான் ஜல்லிக்கட்டு கச்சேரி!

மிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. இறுதியில் 2015ல் ஜல்லிக்கட்டுக்கு தடை. கொந்தளித்தது தமிழகம். இந்தாண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி. குதூகலத்தில் தமிழகம். இந்த ஜல்லிக்கட்டு கடந்த வந்த பாதையை பார்ப்போம்.
 

ஜல்லிக்கட்டு போட்டி, ஏறுதழுவல் என்று அழைக்கப்படுகிறது. ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாடுகளை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப்பிடித்து வீழ்த்துவதற்கான விளையாட்டே ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு, தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறும். மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியப்படி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அவைகளுக்கு எந்தகட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவார்கள்.  வடதமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இருபுறமும் ஆண்கள் இழுத்துப்பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப்பணத்தை எடுக்க முயல்வார்கள். ஜல்லிகட்டில் விலங்குகளை துன்புறுத்துவதாகவும், தேவையற்ற உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாக சொல்லி அதற்குத் தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் விலங்குகள் நல வாரிய அமைப்பினர்கள்.

ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாக புகார் சொல்லி விலங்குகள் நலவாரியம் மூலம் 2008 ஜனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில தினங்களுக்கு முன் மேனகாகாந்தி வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு விதித்தது. ஒரு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மறுமுறையீடு செய்தது. இதற்காக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009 இயற்றப்பட்டது. இச்சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டது. ஆனால் அதை பின்பற்றவில்லை என்று கூறி விலங்குகள் நலவாரிய அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் ஜல்லிக்கட்டு தொடர்பாக சில ஆலோசனைகளை முன்வைத்தன.

* ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
* ரூ.20 லட்சத்தை வைப்புநிதியாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும்.
* போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
* தகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.
* ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.
* ஏற்கனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவையொட்டி  ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011-ல் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும், காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைந்தன. பொங்கல் முடிந்த பின்னரும் 2011ல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 ல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டை எதிர்த்து 2011ல் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது.

2011, ஜூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு ஜல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது. இந்தக்கட்டுப்பாடு இருந்தாலும்  உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012ம் ஆண்டு பொங்கலையொட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காக கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாக பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடத்தப்பட்டது. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டன; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம் விதித்த 77 கட்டளைகளில் சில...

*
காளைகளும், மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
* காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.
* காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.
* ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.
* காளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
* காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசு, ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப் படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்படுவதாக 2014ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ்கண்ணா மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைக்காமல் போனது. இந்த ஆண்டு எப்படியும் அனுமதி வழங்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துபவர்களும் வலியுறுத்தினர். அவர்களுக்கு பொங்கல் பரிசாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆக்ரோஷமான புலிக்குளம் காளைகள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிக்குளம் என்ற கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு என்று பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளை இனம் புலிக்குளம். இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோஷமானது. புலிக்குளம் இன பசுக்களின் பால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில்...

ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ ஆகிய நாடுகளில் காளைப்போர் முக்கியமான பொழுது போக்கு விளையாட்டாக நடைபெறுகிறது. காளைகளை ஆத்திரமூட்டி அரங்கத்துக்குள் விரட்டி சண்டையிட்டு கொல்வதே காளைப் போரின் நோக்கம்.

மதுரை மாவட்டம் மட்டுமல்ல...

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம், திருச்சி மாவட்டம் சூரியூர் போன்ற இடங்களிலும்  பொங்கல் பண்டிகையையொட்டி  இந்தப் போட்டி  நடத்தப்படுகிறது.

அதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர்,கெங்கவல்லி,கூளமேடு,செந்தாரப்பட்டி,தம்மம்பட்டி,கீரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகினறன.    

எப்போதெல்லாம் தடைகள்

* கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.

* 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, ஜல்லிக்கட்டை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்தது.

* 2008 ஜனவரி மாதம் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

* 2009 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகள் வகுத்து தமிழக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

* 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனவரி 15 முதல், 5 மாதங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

* 2011 மார்ச் மாதம் வாடிவாசல்களை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

* 2011 ஏப்ரல் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

* 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை 'விலங்குகள் காட்சிப்படுத்துதல்' பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

மீண்டும் மிரட்ட தயாராகும் காளைகள் சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... http://bit.ly/1ZR5tqY* 2012 ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி உட்பட 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

* 2013 அக்டோபர் மாதம் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

* 2014ம் ஆண்டு மே 7ம் தேதி, காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறவில்லை.

-எஸ்.மகேஷ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close