Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கெஜ்ரிவால் முதல் சகாயம் வரை... தனிமனித வழிபாடு சரியா? - மருதன்

முன்குறிப்பு: தலைப்பைப் படித்ததுமே ‘சகாயத்தை விமர்சித்து இன்னொரு கட்டுரையா?’ எனக் கொந்தளிக்க வேண்டாம். கட்டுரையை முழுக்கப் படித்த பிறகு ஒரு முடிவுக்கு வரவும்!

காயம் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் குரல் ஓரளவு வலிமை பெற்று வருவதைக் காணமுடிகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற பெரும்வெற்றியைத் தமிழகத்துக்கு இழுத்து வர சகாயம் உதவுவார் என்று சிலர் திடமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர் இவர், அந்தக் கட்சி இந்தக் கட்சி, அந்த அணி இந்த அணி என்று திரும்பத்திரும்பப் பார்த்து வெறுத்துப்போன பெரும்திரளான மக்கள், சகாயத்தை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சகாயம் செய்யவேண்டிய சகாயம் குறித்து கட்டுரைகளும் திறந்த கடிதங்களும் எழுதப்பட்டு வருகின்றன. திறமையான, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பெயர் பெற்றிருக்கும் சகாயம் அரசியலுக்கு வந்தால்,  உண்மையிலேயே ஆரோக்கியமான ஒரு மாற்றம் ஏற்படுமா? கடந்த கால சம்பவங்களைக் கொண்டு பார்க்கலாம்...
 
தலைவர்களும் தனிப்பட்ட பண்புகளும்!

நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவராக முன்னிறுத்தப்பட்டவர். அவருடைய நிர்வாகத் திறன்கள் போல, மார்பளவுகூட பெருமிதத்துடன் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் பலவீனத்தை இடித்துக் காட்டி, 'உங்களுக்குச் செயல்படும் தலைவர் வேண்டுமென்றால் மோடியைத் தேர்ந்தெடுங்கள்; வலிமையான மோடி இருந்தால் வலிமையான பாரதம் உருவாகும்' என்று  ஆரவாரத்துடன் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. மே 2014 தொடங்கி மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி,  இதுவரை எடுத்த உறுதியான, வலிமையான முடிவு என்ன? டெல்லியிலும் பிகாரிலும் மோடியின் வலிமையும் திறமையும் உறுதியும் ஏன் எடுபடவில்லை? அதிலும், பிகார் தேர்தலில் தரையளவு இறங்கி வந்து வகுப்புவாதத்தைக் கிளறி,  மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் நேரடியாக இறங்கிய பிறகும் ஏன் நிதிஷ் குமார் கூட்டணியை வெல்லமுடியவில்லை?

ஒரு வலிமையான தலைவரால் ஏன் செயல்படமுடியாமல் போகிறது என்பதற்கு நரேந்திர மோடியைவிடவும் மேலான இன்னொரு உதாரணம் இல்லை. மோடி ஒருவர் போதும் என்று அவரை மட்டுமே உயர்த்தி முதன்மைப்படுத்துவதன் போதாமையை, பாஜக டெல்லியிலும் பிகாரிலும் அடுத்தடுத்து உணர்ந்துகொண்டது.

தனிநபர் வழிபாடு, தொடக்கத்தில் சில பலன்களை அளிப்பதுபோல் தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் நீடித்த பலனை அளிக்காது என்பதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது.  தனிப்பட்ட முறையில் பல உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்த பிரதமர்களை நாம் பார்த்துவிட்டோம். இந்தியாவின் முதல் பிரதமரின் வியத்தகு ஆளுமையும் நிர்வாகத்திறனும், 1962 சீனப் போரைத் தடுத்துவிடவில்லை. எமர்ஜென்சி பிரகனடம் செய்ய முடிந்த ஒரே வலிமையான பெண் பிரதமரான இந்திரா காந்தியால், 'கரீபி ஹட்டாவ்...' (வறுமையை ஒழிப்போம்) என்றுதான் முழங்கமுடிந்தது; ஏழைகளைத்தான் அகற்றமுடிந்தது, ஏழைமையை அல்ல. அவருடைய மகனான ராஜீவ் காந்தியின் வசீகரத்தை ஃபோபர்ஸ் கபளீகரம் செய்தது. இந்தி பேசாத மாநிலத்திலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தந்தை என்று புகழப்பட்ட நரசிம்ம ராவின் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

புகழ்பெற்ற இந்தி கவிஞரும், மென்போக்கு கொண்ட இந்துத்துவர் என்று அழைக்கப்பட்டவருமான வாஜ்பாயால் நாடாளுமன்றத் தாக்குதலையோ, கார்கில் போரையோ தவிர்க்க முடியவில்லை. தன் ஆட்சிக்காலத்தில்,  தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஆளும் மாநிலத்தில் அரங்கேறிய குஜராத் 2002 கலவரங்களை,  குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட அவருக்கு வார்த்தைகள் கிட்டவில்லை. பின்னர் முஸ்லிம்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தவராகக் கருதப்பட்ட நரேந்திர மோடியின் மதியூகத்தையும், புஜபலத்தையும் மீறி இன்று பதான்கோட் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், அடுக்கடுக்காக ஊழல்கள் நிகழ்ந்தாலும் தன்னளவில் நேர்மையானவர் என்று அவருடைய அரசியல் எதிரிகளாலும் கருதப்படுபவரால் நாட்டை அல்ல, தன் கட்சியையேகூட கடுகளவும் மாற்றமுடியவில்லை என்பதே நிஜம்!

இந்த வரிசையில் இன்னொரு பரபர உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே ஆரம்பித்துவைத்த மாபெரும் போராட்டத்தையும், அதற்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திய ஒரு பெரும் நடுத்தர வர்க்க கூட்டத்தையும் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொண்டு, டெல்லியில் பெரும் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். அதை ஆம் ஆத்மியின் வெற்றியாக ஊடகம் கொண்டாடித் தீர்த்தது. மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் இளைஞர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் போன்றவர்களுக்கு கெஜ்ரிவால் ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் உறுதியான சாதனை என்று எதுவொன்றையும் டெல்லியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. தனது வெற்றிக்குப் பிறகு கெஜ்ரிவால் பலமுறை செய்தி வெளிச்சத்தில் தென்பட்டார். ஆனால் ஒருமுறைகூட நல்ல காரணத்துக்காக அல்ல. மோடி, கெஜ்ரிவால் இருவரும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன்கள் என்பதை மீடியாவும், மக்களும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உச்சத்தில் கதாநாயக வழிபாடு!

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி. ராமாராவ், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, நவீன் பட்நாயக், ஷீலா தீட்சித், அரவிந்த் கெஜ்ரிவால் என்று தொடங்கி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆளுமைத் திறன் கொண்ட, செல்வாக்குமிக்க தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலரும் தங்களுடைய தனிப்பட்ட ஆளுமையை ஒரு கருவியாகப் (பல சமயம் ஒரே கருவியாக) பயன்படுத்தி, அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள். (ஜோதிபாசு, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்ற இடதுசாரி கட்சித் தலைவர்களை மட்டுமே இந்தப் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கமுடியும். ஏனெனில், இடது கட்சிகள் உறுத்தலான தனிநபர் வழிபாட்டுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்).

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தத் தலைவர்கள் மேற்கொண்ட பணிகள் பலவும் கதாநாயக வழிபாட்டை மேலும் அதிகரிக்கவே பயன்பட்டன. இதை உணர்ந்த தலைவர்கள் நாயக வழிபாட்டை வளர்ப்பதற்காகவே கவர்ச்சிகரமான நலத்திட்டங்களை மேற்கொள்ளவும் தொடங்கினார்கள். இலவசங்களை அள்ளிக் கொடுப்பதன் மூலமும், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதன் மூலமும் ஒரே நேரத்தில் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டதோடு, தேர்தலில் வெற்றியையும் உறுதி செய்துகொண்டார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மத்திய, மாநிலத் தலைவர்கள் வகித்த பாத்திரத்தை ஆராயும் ஒருவருக்கு இந்த உண்மைகள் நன்கு புலப்படும்.

திருப்பதிக்குச் சென்ற கையோடு சென்னை வந்து என்.டி.ஆரை வணங்கிவிட்டுச் சென்ற பெரும் ஆந்திரக் கூட்டத்தினரை நாம் கண்டிருக்கிறோம். எம்.ஜி.ஆரை கிட்டதட்ட சிறு தெய்வமாகவே மாற்றிவிட்டார்கள். ரஜினி தொடங்கி அஜித் வரை பல நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யப்படுவதையும் காண்கிறோம். தங்கள் தலைவருக்காக உயிரைக் கொடுக்க இன்றும் ஒரு பெரும்கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. அபிமானத்தை வெளிப்படுத்த அவ்வப்போது அவர்கள் உயிரைக்கொடுக்கவும் தயங்குவதில்லை. உலகம் தழுவிய அளவிலும் இந்தக் கதாநாயக வழிபாட்டைக் காணமுடியும் என்றாலும், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த வழக்கம் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் கடவுளுக்கு இணையானவராகவும் அசாத்திய, அதிசய ஆற்றல்களைக் கொண்டிருப்பவராகவும் கட்டமைக்கப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றபோதும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆதரவாளர்கள் அடுத்தடுத்து உருவாக்கிய பெரும் எழுச்சிகள் தனிமனித வழிபாட்டை அதன் உச்சத்துக்கே எடுத்துச் சென்றது. அலகு குத்திக் கொள்ளுதல், தீ மிதித்தல், சிலுவையில் அறைந்துகொள்ளுதல், மொட்டை போட்டுக்கொள்ளுதல், உடலில் கொக்கிகளை மாட்டி தேர் இழுத்தல் உள்ளிட்ட கடவுள், சிறுகடவுள் வழிபாட்டு முறைகள் அனைத்தையும் தங்களுடைய அரசியல் தலைவிக்காக அவர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.

இந்தத் தனிநபர் வழிபாட்டைக் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் வளர்த்துவிட்டதில் அச்சு, காட்சி ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசியல் என்பதை அரசியல் தலைவர்கள் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும், விவாத நிகழ்ச்சிகளையும் ஊடகத்தினர் கட்டமைத்தார்கள். அரசியல் விமரிசகர்களும் ஆய்வாளர்களும்கூட இதைத் தாண்டி விரிவாகச் சிந்திக்கவில்லை. அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், அவர்களுடைய வெற்றி, தோல்விகள், குறைகள், போதாமைகள் ஆகியவற்றை மையப்படுத்தியே அலசல்களும் விவாதங்களும் நிகழ்ந்தன. தேர்தல் வந்துவிட்டால் கூட்டணிக் கணக்கு, வாக்கு வங்கி, கட்சித் தாவல்கள், தொகுதிப் பங்கீடுகள், கருத்துக் கணிப்புகள் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. விமரிசனங்களும்கூடத் தனி நபர்களோடு தொடங்கி தனி நபர்களோடு முடித்துக்கொள்ளப்பட்டன.    

நித்தம் நித்தம் இந்தச் செய்திகளை உள்வாங்கிக்கொண்ட மக்களும், அரசியலைத் தலைவர்களை மையப்படுத்தியே புரிந்துகொள்ளவும், விவாதிக்கவும் தொடங்கினார்கள். தி.மு.கவா... அ.தி.மு.கவா? விஜயகாந்த் யாரை ஆதரிப்பார்? நாஞ்சில் சம்பத்துக்குக் கொடுக்கப்பட்ட இனோவா என்னாகும்? டிராஃபிக் ராமசாமிக்கு மட்டும் வயதாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல தலைவராக உருவாகியிருப்பார். என்ன செய்தாலும் வைகோவுக்கு பாவம் அதிர்ஷ்டமே இல்லை! கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள்தான், ஆனால் அவர்களெல்லாம் ஜெயிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ரஜினி மட்டும் பாஜகவுக்கு வந்தால் ஒரே தூக்காகத் தூக்கிவிடமாட்டாரா கட்சியை? மாற்றுக் கோணத்தில் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டவர்கள்கூட இந்த எல்லைளுக்கு உட்பட்டேதான் சிந்தித்தார்கள். உதாரணத்துக்குச் சில. நோட்டோவுக்கு அதிகம் குத்தினால்தான் இந்த அரசியல்வாதிகளுக்குப் புத்தி வரும். அரசியல்வாதிகளே வேண்டாம், சகாயம் போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்கள் பதவிக்கு வருவதுதான் நல்லது. அன்னா ஹசாரே போன்ற காந்தியவாதிகளைத்தான் நம்பவேண்டும். கவர்னர் ஆட்சிதான் நல்லது. காமராஜர் ஆட்சியைக் கொண்டுவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆக, தேவை தலைவர் அல்ல, செயல்திட்டம்!

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் முதல்வர், இந்தியாவின் பிரதமர் இருவரும் தனிநபர் வழிபாட்டையும், அதை வளர்த்தெடுக்கும் அனைத்துப் பிற்போக்குப் பண்புகளையும் ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்கும்வரை இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவச் சமூகமாகவே நீடித்திருக்கும்.


அரசியல் தலைவர்கள் உயர்த்தப்படும்போது கொள்கைகள் மரித்துப்போகின்றன. கொள்கைளின் கழுத்தில் ஏறி நின்றுதான் தலைவர்கள் புகழ் வெளிச்சத்தை ஈர்க்கிறார்கள். இன்றைய தேதியில் திட்டவட்டமான சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கை எதையுமே வகுக்காமல் அல்லது பிரசாரம் செய்யாமல், ஒரு தலைவரால் தன் புகழை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் நின்று, ஊடகத்தின் வரவேற்பையும் மக்களின் வரவேற்பையும் ஒருசேர பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். கதாநாயக வழிபாடு தினம் தினம் வளர்த்தெடுக்கப்படுவதால் நிகழும் விபத்து இது. மதுவைக் காட்டிலும் அதிகமான போதையையும்,  நீண்டகால சேதத்தையும் அளிக்கும் இந்த வீர வணக்க உணர்வை மக்களிடமிருந்து ஒழிப்பதுதான் நம் முதன்மையான தேவை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. ஆனால் இதில் பெருமிதப்பட ஒன்றுமில்லை என்கிறார் அரசியல் கோட்பாட்டாளர் பிக்கு பாரேக். அதற்கு நான்கு காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

1) சமூக ஏற்றத்தாழ்வு மிகக் கடுமையாக நிலவுகிறது.

2) வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இல்லை.

3) அரசு என்பது மக்கள் நலன் சார்ந்த, மக்கள் முன்னேற்றத்தின்மீது மட்டுமே அக்கறைகொண்ட ஒரு நிறுவனமாக இல்லை.

4) ஏழைமை இன்னமும் ஒழியவில்லை.

ஜனநாயகத்தை அமைப்பது எளிது, குடியரசை நிறுவுவதுதான் கடினமானது என்கிறார் பாரேக். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம்; ஆனால் ஒரு குடியரசாக இல்லை. நாட்டின் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதால் மட்டுமே இதனைக் குடியரசு என்று சொல்லிவிடமுடியாது. சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டுவந்தால்தான் அது குடிமக்களின் அரசாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமையை அளிப்பது மட்டுமே ஜனநாயகத்தின் வேலை. அதை மட்டும்தான் ஜனநாயகத்தால் செய்யமுடியும். ஒரு குடியரசை  நிறுவ வேண்டுமானால் அங்குலம் அங்குலமாகப் போராடியே அதனை அடையமுடியும் என்கிறார் பாரேக். இந்த வழியில் இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டுமானால் நமக்குத் தேவை இந்தத் தலைவருக்குப் பதில் இன்னொரு தலைவர் என்னும் அதே பழைய வழிமுறை அல்ல. புதிய அணுகுமுறை!

தலைவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்னும் கருத்து பழைமையானது மட்டுமல்ல பிழையானதும்கூட. ஆனால் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து எல்லா ஆய்வாளர்களும் செய்து வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசரையும், அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் தெரிந்துகொண்டால் ரோம், கிரேக்கம், ஃபிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் தெரிந்துகொண்டது மாதிரி என்றுதான் அவர்கள் நம்பினார்கள். ஆனால் ரோமும், கிரேக்கமும், பிரான்ஸும் இந்த மூன்று தலைவர்களைக் காட்டிலும் மிகப் பெரியது; இந்தத் தலைவர்களின் செயல்பாடுகளால் இந்த நாடுகள் மாற்றமடைந்தது நிஜம் என்றாலும், அவர்களே இந்நாடுகளின் வெற்றி, தோல்விகளை முழுக்க நிர்ணயித்தார்கள் என்னும் முடிவுக்கு வருவது ஆபத்தானது.

வரலாறு மேலிழுந்து கீழாக உருவாவதில்லை. அடித்தளத்தில் உள்ள மக்களே வரலாற்றின் உந்து சக்தியாவார்கள். இதுவரை சமூகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள்  அனைத்தும் மக்களால், அவர்களுடைய போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகியுள்ளன. அரசியல் தலைவர்களால் எல்லைக்குட்பட்ட குறைந்தபட்ச மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

இப்போது நமக்குத் தேவை, அப்படிப்பட்ட ஒரு மாற்றம் அல்ல. ஒரு புரட்சிகர அரசியல், சமூகப் பொருளாதார மாற்றம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை யோசிக்கத் தொடங்குவதுதான் இப்போதுள்ள தேவை. அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது தலைவர் மயக்கத்தில் இருந்து விடுபட்டு கண்விழிப்பதுதான்!


பின் குறிப்பு: வாசகர்களே, கட்டுரையாளரின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து இருப்பின், அதை கமெண்ட் பாக்ஸில் பதியலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close