Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டு: கொள்கையும் கிடையாது... குந்தாணியும் கிடையாது...!

ந்த உலகத்தில் இருக்கிற அத்தனை ஜீவராசிகளையும் காப்பாத்துவதற்காகவே அவதாரம் எடுத்தது போல, ’ஒரு நாளும் இதை அனுமதிக்க மாட்டோம். ஜல்லிக்கட்டு என்பது உயிர் வதை. சுப்ரீம் கோர்ட் போயாவது தடுத்து நிறுத்தியே தீருவோம்’ என்று கூப்பாடு போட்டு காரியம் சாதிக்கும் பிராணிகள் நலவாரியத்தினரே.... உங்கள் கடமையுணர்ச்சியை கண்டு வியக்கிறோம்!

 

அட, ஜீவகாருண்ய சிங்கங்களே... மாடு மட்டும்தான் பிராணியா... ஆடு, கோழி, மீன், நண்டு, இறால் இதெல்லாம் என்ன பாவம் செய்தது உங்களுக்கு? டன் டன்னாக வெட்டித் தின்கிறார்களே அதைப் பற்றியெல்லாம் பேசமாட்டீர்களா... வீதியில் நடந்தால், பத்தடிக்கு ஒரு கடை வீதம் ஆடுகளை உரித்து தொங்கவிட்டிருக்கிறார்களே... அதைப்பற்றியெல்லாம் பேசமாட்டீர்களா? கோயிலுக்கு கோயில் கடாவெட்டி பலி கொடுக்கிறார்களே... அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவே தெரியாதா? ஊருக்கு ஊர் கோழிப்பண்ணைகளை வைத்து தினம்தோறும் லட்சம் லட்சமாய் கோழிகளைக் கொல்கிறார்களே அதைப்பற்றி பேசமாட்டீர்களா?

இன்னும் முயல், காடை, கௌதாரி என்று வரிசையாக பண்ணை வைத்து வியாபாரம் செய்கிறார்களே?

அப்புறம் இந்த கொசுக்கள் என்ன பாவம் செய்தன... அதற்கு மேட், காயில் என்று வைத்துக் கொல்வது மட்டும் அல்லாமல், கையால் வேறு அடித்துக் கொல்கிறார்களே... பிசாத்து துளி ரத்தம்தானே குடிக்கிறது அதற்காக கொசுக்களை கொல்லலாமா? பன்றிகளை வெட்டி வெட்டி தின்கிறார்களே... அதற்கு எதிராக ஒரு நாளும் உங்களுடைய குரல்கள் ஓங்கி ஒலிப்பதில்லையே.

உலகமகா ஜீவகாருண்ய தலைவி மேனகா காந்தி, ஒரு பதவி கிடைத்தால் போதும் என்று எங்காவது ஒட்டிக் கொண்டு வீராவேசம் பேசுவார். ஆனால், தெரு நாய்களைத் தேடித்தேடி கொலை செய்து கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசமாட்டார். உள்ளூர் நாய்களைத் தேடித்தேடி கொலை செய்யும் அதேசமயம், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், பிட்புல் என்று விதம்விதமாக வந்திறங்கும் வெளிநாட்டு நாய்களுக்கு மட்டும் ராஜ உபசாரம் நடக்கிறதே!

இது ஒருபக்கமிருக்க... இந்த ஜல்லிக்கட்டு அனுமதி தொடர்பாக தமிழகத்தில் எத்தனை அரசியல் களேபரங்கள் நடக்கிறது! 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்ததால், இந்த ஆண்டு பொங்கலை மோடி பொங்கலாக கொண்டாட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆன்றோர், சான்றோர் மற்றும் பெரியோர்கள், தாய்மார்களால் ‘பொன்னார்’ என்று அன்போடு அழைக்கப்படும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். உடனே... பாய்ந்து கொண்டு, 'இப்படி ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் மாடுகளைத் துன்புறுத்துவது, அநியாயம்' என்று பதில் கொடுத்திருக்கிறார் பெரியாரின் கொள்கைகளை அடிமாறாமல் பின்பற்றி வரும் திருவாளர் கி.வீரமணி.

'ம்க்கும் இந்த ஆளுக்கு ஓட்டு தேவையில்லை...அதனால ஆயிரம் பேசுவார். இதெல்லாம் கதைக்காகாது' என்று உள்ளுக்குள் உறுமியபடியே, 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்த அண்ணன் மோடி அவர்களுக்கு நன்றி. வீரத்தமிழன் மோடிக்கு வாழ்த்துக்கள்' என்றெல்லாம் தமிழகத்திலிருக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடுவில், 'நீ மட்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்துட்டா, நான் வேட்டியே இல்லாம ரோட்டுல நடக்கிறேன். இல்லாட்டி நீ வேட்டி இல்லாம நடக்கணும்' என்கிற ரேஞ்சுக்கு சவால்விட்ட கதர்சட்டைத் திலகம், பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை பலரும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பவுமே தமிழ்நாட்டின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத டெல்லி கதர் சட்டைக் கூட்டத்திலிருந்து இளங்கோவனுக்கு கூடுதல் குடைச்சலாக... 'ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு' என்கிற ரேஞ்சுக்கு கருத்துச் சொல்லியிருக்கிறார்... காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

சரி விஷயத்துக்கு வருவோம்...
   
இப்படி ஆளாளுக்கு எதை எதையோ பேசி, புகழ்ந்து பொளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகளுக்கெல்லாம் கொள்கை, குந்தாணி என்று ஏதாவது இருக்கிறதா என்பதுதான் என் சந்தேகமே!

இந்த ஜல்லிக்கட்டு விஷயத்தில் வீரத்தமிழர்களுக்கு ஆதரவாக எதையோ சாதித்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இதே பி.ஜே.பி-தான்... மாட்டுக்கறிக்கு எதிராக பெரும் பிரச்னையை செய்து கொண்டிருக்கிறது. ’மாட்டுக்கறி தின்பது மாபாவம். மாடுகளைக் கொடுமைப்படுத்துவது, கோமாதாவுக்கு செய்யும் துரோகம்’ என்றெல்லாம் கூப்பாடு போடும் பிஜேபி,  அதற்கு லாலி பாடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா அமைப்புகள், மற்ற மற்ற அமைப்புகள் எல்லாம்... ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளைக் கொடுமைப்படுத்துவதற்கு மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள்? எல்லாம் வீரத்தமிழர்களின் ஓட்டுக்களைக் குறி வைத்து என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஆனால், எங்கள் வீரத்தமிழன் ஏற்கெனவே ஏகப்பட்ட 'ரிசர்வேஷன்கள்' செய்யப்பட்டு கிடக்கிறான். அம்மா, அய்யா, கறுப்பு எம்.ஜி.ஆர், இன்னும் சிலபல உதிரித் தலைவர்கள் மற்றும் சாதித்தலைவர்கள் என்று கட்டுண்டு கிடக்கிறான். ’ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்த எங்களுக்கே உங்கள் ஓட்டு’ என்று நாளைக்கு மோடி என்னதான் கூப்பாடு போட்டாலும், ’தலைவா, ஊறுகாய் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்’ என்று டாஸ்மாக் பாரில், பக்கத்து டேபிளில் இருந்து கிடைக்கும் ஓசி ஊறுகாய்க்கு தாங்க்ஸ் சொல்வது போல சொல்வானே தவிர, எங்கள் வீரத்தமிழன் ஒரு நாளும் ஏமாந்துவிடமாட்டான். அவனையும் அவன் சார்ந்துகிடக்கும் கட்சி மற்றும் சாதிகளை ஒரு நாளும் பிரிக்கவே முடியாது மிஸ்டர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி!

இதையே எங்கள் தமிழின தளபதி அண்ணன் வீரமணியிடம் கேட்டால், ’இது பெரியார் பிறந்த மண்... இங்கே உங்கள் மோடி மஸ்தான் வேலை எல்லாம் செல்லவே செல்லாது’ என்று தன் பாணியில் வீரம் பேசுவார். ஆனால், இவர் இப்படி பேசிக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க, இவருடைய பாட்டன் பெரியார் வழிதொட்டு உருவான கட்சிகளெல்லாம் மாறி மாறி பி.ஜே.பி-க்குத்தான் பலகாலமாக காவடி தூக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் அவ்வப்போது வசதியாக மறந்துவிடுவார்.

இதற்கு நடுவே இவரின் ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, வைகைப்புயல் வடிவேலுவின் காமெடியை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்றது...மாட்டுக்கறி சாப்பாடு போல! ’ஜல்லிக்கட்டு நடத்துவதால், மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன’ என்று கொந்தளித்திருக்கிறார் வீரமணி. இப்படி இன்று ஜீவகாருண்யம் பேசும் இந்தத் தலைவர்தான், சில மாதங்களுக்குப் முன்பு பெரியார் திடலில் வைத்து ஊருக்கே மாட்டுக்கறி விருந்து வைத்தார். அப்போது எங்கே போனது இவருடைய மாடு பாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை பிஜேபி தலைவர் ஹெச்.ராஜா சொல்வதுபோல, இவர் விருந்து வைத்த மாடுகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்ட மாடுகளாகவும் இருக்கலாம் போல.

அதேசமயம், காரைக்குடியில் பால்பண்ணை வைத்து, பசுவின் பாலை படிப்படியாக கறந்து விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கும் அண்ணன் ஹெச்.ராஜா அவர்களுக்கு ஒரு கேள்வி... ’காலகாலமாக நீங்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோமாதா பாசம் இப்போது எங்கே போனது? பசுக்களைக் கொல்வது பாவம் என்று மாட்டுக்கறி தின்பவர்களுக்கு மாற்றி மாற்றி உபதேசம் செய்வதும்... வளர்ப்பதற்காகவோ... அல்லது வளர்க்க முடியாமல் போனதால் கறிக்காகவோ விவசாயிகள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு சென்றால், அதை மறித்து வைத்துக் கொண்டு ஏதோ நீங்கள்தான் இந்த உலகத்தைப் படைத்தது போல கூப்பாடு போடுகிறீர்கள்.

அநியாயத்தையெல்லாம் தட்டிக்கேட்பது போல அவ்வப்போது ஆக்ட் கொடுக்கும் கம்யூனிஸ்டுகள் வாய் முழுக்க இப்ப பிளாஸ்திரியைப் போட்டு ஒட்டிட்டாங்க போல. மாட்டுக்கறிக்கு எதிரா பி.ஜே.பி. கொடி பிடிக்கறப்பவெல்லாம், அதுக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த கம்யூனிஸ்டுகள், இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக, பிளாஸ்திரியை ஒட்டிக்கொண்டு அலைகிறார்கள். ம்... மாரியாத்தா கோயிலுக்கு கூழ் காய்ச்சி ஊத்துவது... கோயில் திருவிழாவுக்கு டிஸ்கோ டான்ஸ் நடத்துவது என்று துவங்கி ஓட்டுக்காக சிலபல வேலைகளை இந்த சிவப்பு பார்ட்டிகளும் செய்துகொண்டிருக்கும்போது, கோயில்களில் கடா வெட்டுவதையும்... ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் காளைகளின் கழுத்து ஒடிப்பதையும் மட்டும் எப்படி தட்டிக்கேட்க தைரியம் வரும் சிவப்புகளுக்கு.

இதெல்லாம் கிடக்கட்டும். இப்படி கண்டபடி கேட்டு எல்லாருக்கும் குடைச்சல கொடுக்கறியே... நீ யாருனுதான் புரியல. எங்க எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டித்தீர்க்கிறே... எங்களுக்கு கொள்கை, குந்தானியெல்லாம் கிடையாது. சரி என்னதான் உன்னோட கொள்கை. மனுஷன்னு பொறந்தா ஏதாவது ஒரு கோஷ்டியில சேர்ந்துதானே ஆகணும். கறுப்பு, கதர், சிவப்பு, காவி, பச்சை, வெள்ளைனு ஏதாச்சும் ஒரு கலர் இல்லாம இருக்க முடியாதே... இதுல நீ எந்த கலர்?

உங்களுக்கெல்லாம் ஒரு கலர் இல்லாம இருக்கவே முடியாது. அப்படி இல்லாவிட்டாலும்கூட மேலே தார் எடுத்து ஊற்றியோ... சந்தனத்தை கரைத்து ஊற்றியோ ஒரு கலரை உருவாக்காமல் ஓயாமாட்டீர்கள். ஏனென்றால், இதை வைத்துத்தானே பல நூற்றாண்டுகளாக பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதேசமயம், உங்களையெல்லாம் வைத்துதான் நாங்களும் பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது. அதனால், எனக்கும் ஒரு கலர் வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் தவறே இல்லை. எனக்கு ’பச்சோந்தி கலர்’ என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் நான் கேள்விகளாக கேட்பதைப் பார்த்துவிட்டு... ’இவன் தமிழனே இல்லை... தமிழின விரோதி’னு மட்டும் சொல்லிடாதீங்க... ’அய்யய்யோ... நான் தமிழன்ங்க... சத்தியாம நான் தமிழனுங்கோ...!’

அடப்பாவிகளா... மனிதனைப் படைத்தது இயற்கை. அவன் எதை சாப்பிட வேண்டும்; எதை விளையாட வேண்டும்; எதைக் கும்பிட வேண்டும்; எதைக் குடிக்க வேண்டும்; எதைக் கும்பிடாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் போடுவதற்கும், தூண்டிவிடுவதற்கும் நீங்கள் எல்லாம் யார்? ஊருக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது. எல்லோரையும் கட்டிக்காப்பாற்ற வேண்டும். எதையெல்லாம் கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து பல விஷயங்களை தீர்மானிக்கத்தானே... நாட்டமை தொடங்கி, நாடாளும் பிரதமர் வரை கட்டியமைத்திருக்கிறோம். ஆனால், அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, ஊருக்குள்ள பிரச்னைகளை உண்டாக்குவதற்காகவே கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் என்று எல்லா பதவிகளையும் பயன்படுத்துகிறீர்களே!

உங்களையெல்லாம் அடக்க ஒரு மெகா மகா ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டிய நிலைமையில்தான் நாடு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

பாரம்பரியம் பேசும் வீரத்தமிழர்களும்... ஓட்டு வேட்டையாடுவதற்காக 'தமிழர் பாரம்பரியம்' என்று பேசி அவர்களையெல்லாம் உசுப்பேற்றும் அரசியல்வாதிகளும் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். உங்கள் பாரம்பர்யம் மாட்டிடம் மட்டும்தானா? காலகாலமாக பனை மரத்திலிருந்தும், தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்கிக் குடித்துக் கொண்டிருந்தானே எங்கள் மறத்தமிழன். அதையெல்லாம் ஒழித்துவிட்டு இன்றைக்கு அய்யா, அம்மா மற்றும் அவர்களுடைய அடிப்பொடிகள் பலரும் ஃபாரின் சரக்கு தொழிற்சாலை நடத்துவதால், ஊர் முழுக்க ஃபாரின் சரக்கை ஓடவிட்டிருக்கிறீர்களே... அதில் மட்டும் ஏன் பாரம்பர்யம் பேசுவதில்லை.

ஆகக்கூடி ஆளாளுக்கு ஓட்டுக்காகவும், துட்டுக்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தோடு ஓடியாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதானே உண்மை.
’அய்யய்யயோ... மொத்தத்தையும் படிச்சா... ஜல்லிக்கட்டு வேணுமா... வேணாமா நீ என்னதான் சொல்ல வரேனு ஒரே குழப்பமா இருக்கே?’ என்றுதானே கேட்கறீர்கள்.

எனக்கும் அதேததான்... ஹிஹிஹி!

- ஜூனியர் கோவணாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close