Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மோடி களமிறக்கிய 'இருவர்'

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமைத்த கூட்டணி, தமிழகத்தில் பலம்பொருந்தியதாக கருதப்பட்டு தேர்தலை சந்தித்தது. ஆனால் முடிவு அதற்கு நேரமாறாகப்போனது.

பாஜக அமைத்த அந்த கூட்டணியால் பா.ம.க அன்பு மணி,  பா.ஜ.க பொன் ராதாகிருஷ்ணன் என இருவருக்கு மட்டுமே டெல்லிக்கு விமானம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டணியின் துவக்கத்திலேயே அப்பா, மகன் இருவரின் ஜல்லிக்கட்டால் அதிருப்தியில் இருந்த பா.ஜக. மேலிடம்,  மத்தியில் வென்றபின் அந்த எரிச்சலில் பா.ம.கவிற்கு பதவி தர மறுத்துவிட்டது.

பெரிய பிம்பமாக பார்க்கப்பட்டு, பின்னாளில் தேர்தல் முடிவில் ஒன்றுமில்லை என்றானபின், தேமுதிகவிற் கும் மோடியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. இதனால் பாஜக கூட்டணி என்பது  பளபளப்பு குறைந்து குற்றுயிரும் குலையுமாக இருக்கிறது இப்போது. ஆனாலும் கட்சி ரீதியாக பா.ஜ.க தமிழகத்தில் பளபளப்பாகவே உள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் ஒருமித்த குரலாக ஒலித்த கூட்டணிக்குரல்,  சட்டமன்ற தேர்தலில் சன்னமாக கேட்கவே வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது அரசியல் வட்டாரத்தில்.

இந்நிலையில் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலைப்போலவே பா.ஜ.க,  தன் பங்குக்கு மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமான கூட்டணி அமைக்கும் தங்களின் முயற்சி வெற்றி பெறாமல் போனாலும், பா.ஜ.க அதிரடியாக முடிவுகளை எடுக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த அதிரடி முடிவுகளுக்குப் பின்னணியாக மோடியின் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது குஜராத் முதல்வராகவும், இந்திய பிரதமராகவும் மோடி உருவெடுக்க அவர் கையாண்ட சமூக வலைத்தள பிரசாரம்தான் அது.

சமீப காலங்களாக தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும்,  தங்கள் கட்சியை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சமூக வலைத்தளங்களில் களம் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தின் மிக மூத்த தலைவரான கருணாநிதி இந்த வயதிலும் தன் கட்சி செயல்பாடுகளை பதிவிட்டுக்கொண்டிருக்கிறார் தன் பெயரிலான முகநூலில். மோடியின் வெற்றி ரகசியம் என்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள்தான் என்ற அழுத்தமான எண்ணம், தமிழக கட்சிகளின் மனதில் பதிவாகிவிட்டதன் விளைவு இது. அத்தனை நம்பிக்கையை தந்திருக்கிறது சமூக வலைத்தளங்கள்.

முந்தைய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்,  தங்கள் அறைகூவலுக்கு செவிசாய்க்கவில்லையென்றால் தமிழக பாஜகவும் இந்த திசையில்தான் பயணிக்கப்போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின் றன. அதன் முதல் காட்சிதான் கடந்த வாரம் அரங்கேறியது.

'சமூக வலைத்தளங்களில் பாஜகவின் செயல்பாடு' என்ற தலைப்பில் கடந்த ஞாயிறன்று, பாஜகவின் அகில இந்திய ஊடக பொறுப்பாளரும், டெல்லி பாராளுமன்ற உறுப்பினருமான மீனாட்சி லேகி தலைமையில் தமிழக பாஜக  அலுவலகமான கமலாலயத்தில், ஒரு கருத்தரங்கம் நடந்தது. சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கருத்தரங்கில் தமிழக சட்டமன்றத தேர்தலை மனதில் கொண்டு சமூக வலைத்தளங் களை எப்படி தங்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

பாஜகவின் தமிழக ஊடக பங்கேற்பாளர்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் தமிழகத்தின் அத்தனை மாவட்டங் களிலிருந்தும் தலா ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், பாஜகவின் அகில இந்திய நேஷனல் சோஷியல் மீடியாவின் பொறுப்பாளர் அமித் மாளவியாவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட இருவருமே, அகில இந்திய அளவில் பாஜகவிற்கு ஊடக மற்றும் சமூக வலைத்தள பிரச்சாரத்தில், கடந்த காலங்களில் சிறந்த பங்களிப்பு செய்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணரமுடியும். 

அழைப்பாளர்கள் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படாத அந்த கூட்டத்தில், பாஜக தன் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தங்கள் திசையை தீர்மானித்துக்கொண்டதாகவே சொல்லப்படுகிறது. கூட்டத்தின் துவக்கத்திலேயே நிர்வாகிகளில் ஒருவர், தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பற்ற வைக்க,  பரபரப்புடன் துவங்கியது கூட்டம்.

தமிழக நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் முறை, பதில் சொல்லும் முறை, எதற்கு பேச வேண்டும், எப்படி பேசக் கூடாது, பத்திரிக்கையாளர்களை யார் யார் சந்திக்கவேண்டும், சீண்டலான கேள்விகளுக்கு நழுவுவது எப்படி, மத்திய அரசின் திட்டங்களை எப்படி கொண்டுசெல்வது, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார் மீனாட்சி லேகி.

மீனாட்சி லேகி தன் உரையில், “ நாம் அகில இந்திய கட்சி என்பதால் தமிழகத்திற்கு என தனி விதிமுறைகளை கையாளாதீர்கள். தலைவர் அல்லது தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர் மட்டுமே இனி கட்சியின் கொள்கை முடிவுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கவேண்டும். பத்திரிக்கையாளர்களிடம் பேசுவது ஒரு கலை. பத்திரிக்கையாளர்களில் சிலர் பரபரப்பு ஏற்படுத்தவேண்டுமென்றே கேள்விகளை எழுப்புவர். அதை புரிந்துகொண்டு பதில் தரவேண்டும். நாம் சொல்கிற பதில், நாளை நமக்கே பிரச்னையை தந்துவிடும். அம்மாதிரி கேள்விகளை பேசாமல் கடந்துவிடுவது உத்தமம்.

பிரச்னைக்குரிய கேள்விகளுக்கு ரியாக்ட் செய்யாமலோ அல்லது காதில் வாங்காமலோ சென்றுவிடுவது ஒரு நல்ல தலைவருக்கு அழகு. சிக்கலான கேள்வியை தவிர்க்க முடியவில்லையென்றால், தங்கள் அருகில் யார் இருக்கிறார்கள் என்பதை ஒரு கணம் மறந்துவிட்டு, நேராக யாரையும் பார்க்காமல் உங்கள்  ஒத்துழைப்பிற்கு நன்றி என அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும். சாதாரண பேட்டியாக இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்களை தொடர்புபடுத்தியே பதில் அளியுங்கள்.

தமிழகம் மொழி உணர்வும் கலாச்சார அடையாளங்களும் நிறைந்த மாநிலம் என்பதால், பெரும்பாலும் தமிழில் பேசுங்கள். இனி பத்திரிக்கைகளுக்கு கூட தலைமையில் இருந்து  பெறும் அறிக்கைகளை உடனடியாக தமிழாக்கம் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வையுங்கள்.

கேள்வி எரிச்சலடையச் செய்தாலும் புன்னகையுடன் பதில் அளியுங்கள். உங்கள் எரிச்சல் உணர்வு முகத்தில் தெரிந்துவிட்டால், மறுநாள் செய்தியின் தலைப்பு மாறிவிடக்கூடும்.  தொலைக்காட்சி விவாதங்களில் சத்தமாய் பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். கேள்விகளை உள்வாங்கிக்கொண்டு பதில் சொல்லுங்கள். எந்த கேள்விகளுக்கும் மத்திய அரசின் திட்டங்களை இடையே செருகுங்கள். எதிர்க்கட்சி அதை செய்யாததையும் குறிப்பிடுங்கள்.

பா.ஜ.க தரப்பில் இந்த விவாததத்தில் பங்கெடுக்க ஆளில்லை என்று சொல்லாத அளவிற்கு,  ஒவ்வொரு வரும் விஷயஞானத்துடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் ” என்று வகுப்பெடுத்த மீனாட்சி லேகி, இறுதியாக " உங்களுக்கு இதுதொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் என் பழைய வீடியோக்களை யு டியூப்பில் பாருங்கள்" என்று தனக்கும் பிரசாரம் செய்து  முடித்தார். உரையின் முடிவில் தொலைக்காட்சி பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார் லேகி.

சமூக வலைத்தள பிரசாரம் குறித்து பேசிய அமித் மாளவியா, சமூக வலைத்தளங்களின் இன்றைய வளர்ச்சியை குறிப்பிட்டு, தமிழக பாஜக இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

“சாதாரணமாக நான்கு பேரிடம் நாம் சொல்கிற விஷயங்களை 4 லட்சம் மக்களுக்கு, அதே நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் கொண்டு சேர்ப்பிக்கமுடியும். வருங்காலத்தில் பிரச்சார மேடையை விட இந்த சமூக வலைத்தளங்கள் மக்களை சந்திக்க பெரிய மீடியமாக மாறிவிடும். பா.ஜ.க,  அகில இந்திய அளவில் பெற்ற வெற்றிகளுக்கு சமூகவலைத்தளங்களின் பங்களிப்பு அதிகம். இன்றே கட்சியின் ஒவ்வொரு அங்கத்தினரும் ட்விட்டர், ஃபேஸ்புக் என கணக்கை துவங்குங்கள். வெறுமனே சுயபுராணமாக இல்லாமல் கட்சி ரீதியான உங்கள் செயல்பாடுகளை அதில் பதிவிடுங்கள்.

மத்திய அரசின் திட்டம் ஒவ்வொன்றையும் விவரமாக குறிப்பிடுங்கள். அந்த திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில்,  அந்த திட்டத்திற்கான கிரடிட்டை அந்த துறையின் அமைச்சருக்கோ வெளியில் தெரியாத ஒருவருக்கோ தராதீர்கள். “இந்த திட்டத்தை கொண்டுவந்த தமிழக பாஜகவிற்கு நன்றி" என பதிவிடுங்கள். பா.ஜ.கவின் அகில இந்திய திட்டத்திற்கும் தமிழக பாஜகவையே குறிப்பிட்டு வாழ்த்துசொல்லுங்கள். அப்போதுதான் மக்களிடம் நெருக்கமான நட்பை பெற முடியும். நாம் நன்மதிப்பை பெறமுடியும்.

கட்சிப்பணியாக எங்கு சென்றாலும் அந்த பணி, அதற்கான புகைப்படங்களை பதிவிடுங்கள். உங்களுக்கு அந்த ஊரின் முக்கிய பிரபலம் அறிமுகம் என்றால்,  மறக்காமல் அவருடனான தங்கள் நட்பு, அவருடனான புகைப்படங்களை பதிவேற்றுங்கள். அது அப்பகுதி மக்களிடம் நெருங்க நல்ல வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

கூட்டத்தின் முடிவில் உற்சாகமான தமிழிசை சவுந்தர்ராஜன், “மீனாட்சி லேகியின் பேச்சு தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மீனாட்சி என்ற அவரது பெயரே அதற்கு  சாட்சி” என நெகிழ்ந்தார். அன்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியிலும் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றதோடு பல கட்சிகள் வரலாம் சில கட்சிககள் வெளியேறலாம் என அழுத்தமான பதிலை அளித்தார். தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ் வலைதளங்களில் பாஜக தீவிரமாக இயங்குவதன்மூலம் வெற்றி காணலாம் என்றார்.

பாஜகவின் அகில இந்திய நிர்வாகிகள் இருவரை தமிழகத்தில் களமிறக்கியுள்ள அகில இந்திய பாஜக தலைமை, தெளிவான சிந்தனையுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவருவது தெரிகிறது. பணியாற்றும் பகுதியில் பிரபலமான நபரின் அறிமுகம் இருந்தால், அவருடனான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அந்தப்பகுதி மக்களுடன் நெருக்கமாக முடியும் என்ற அமித் மாளவியாவின் அறிவுரையும், பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் தனது முகநூல் பக்கத்தில்,   நடிகர்  ரஜினியுடன் மோடி இருக்கும் படத்தை புரொபைல் படமாக வைத்திருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது.

தேர்தல் சுனாமியில் விஜயகாந்தின் தேமுதிக, பாஜக கூட்டணியில் இடம்பெறாமல் போகும் சூழல் உருவானால், பாஜகவிற்கு மக்களை ஈர்க்கும் பிரபலம் ஒருவரின் உதவி தேவைப்படலாம். வழக்கம்போல் ரஜினி என்ற மீன் நழுவிப்போனாலும், குறைந்தது ரஜினியின் நண்பர்கள் நிறைந்த கட்சி என்ற பிம்பமாவது பாஜகவிற்கு மக்கள் ஆதரவை திரட்டும் என தமிழக பாஜக நம்புகிறது. அதுதான் முரளிதர்ராவ் முகநுால் சொல்லும் சேதி.

தமிழக பாஜக, தேர்தலுக்கான தங்கள் ஆயுதத்தை தேர்ந்தெடுத்து பயணிக்கத்துவங்கிவிட்டது புரிகிறது.

இந்தியாவை வென்ற மோடியின் வலைதள வியூகம் தமிழகத்தில் எடுபடுமா? என்பது தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தெரியவரலாம்!

- எஸ்.கிருபாகரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close