Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 கோடி ரூபாய் சூதாட்டம்: தடையை மீறி ஜரூராகும் சேவல் சண்டை!

மிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாக கருதப்படும் ஜல்லிக்கட்டை  நடத்தலாம் என்று மத்திய அரசும், கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்புகளை மாற்றி மாற்றி கொடுத்திருக்கும் நிலையில்ம் சத்தமே இல்லாமல் சேவல் சண்டைக்கு போய்வர  ஒரு பெரிய டீமே தயாராகிக் கொண்டிருக்கிறது. சென்னையில் செவ்வாய்ப் பேட்டை இதன் தலைமையகம். ஆந்திராவில், சூலூர்பேட்டை.

தடை இருக்கிறது

கவனிக்க வேண்டும், சேவல் சண்டைக்கு ஆந்திர ஐகோர்ட்டும் தடை விதித்திருக்கிறது, உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருக்கிறது. ஆனால், தடைகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு சண்டைக்கு தயாராக சேவல்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்...


கண்காணிப்பில் போலீசார்

இந்த சேவல் சண்டையில் ஆண்டுதோறும் பங்கேற்க டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்களுடன், அரசியல் பிரபலங்களும், பிரபல செல்வந்தர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இது ஓப்பனாக இருந்தது, கோர்ட் தடை விதித்தபின், ரகசியமாக இதில் (தவறாமல்) கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலுடன், ஆந்திராவில் மட்டுமல்ல, தெலங்கானா மாநிலத்திலும் இதே சேவல் சண்டையானது அதே சூதாட்ட மையமாக பல இடங்களிலும் மையம் கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைக்கவே, இரு மாநில போலீசாரும் ரகசிய கண்காணிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நரசபுரம், மேற்கு கோதாவரி, பீமாவரம், ராஜமுந்திரி போன்ற இடங்கள்தான் இப்போதைக்கு முக்கிய பாய்ன்ட் என்ற தகவலையடுத்து போலீசாரின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியிருக்கிறது.

500 கோடி ரூபாய் பந்தயப் பணம்

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தவர்தான் சேவல் சண்டையில் அதிக ஆர்வம் காட்டுகிறவர்கள். சேவல் சண்டையின் போது போட்டிக் களத்தில் மட்டுமே குறைந்த பட்சம் 500 கோடி ரூபாய்க்கு பந்தயப் பணங்கள் கட்டுக் கட்டாக உருளுவது பிரமாண்ட சூதாட்டத்தின் உச்சம். தவிர, வீடு, பேக்டரி, பண்ணை நிலம், சினிமா தியேட்டர் போன்றவைகளையும் பந்தயப் பொருட்களாக அக்ரிமெண்ட் போட்டு ஆடுகிற அளவு ஆட்டத்தில் வெறித்தனம் குறையாமல் இருப்பார்கள்.

சாகும் சேவல்கள்

ஜல்லிக் கட்டு விழாவில் பெரும்பாலும் காயம்படுவது காளையை அடக்க முயலும் வீரர்கள்தான். சேவல் சணடையில் மனிதர்களின் பங்களிப்பு ஒன்றும் இருக்காது. ரத்தம் சொட்டச் சொட்ட சேவல்கள்தான் மோதிக் கொண்டு சாகும். தலை தொங்கி பூமியில் முட்டி நிற்கிற சேவல் தோற்றதாக அறிவிக்கப்பட்டுவிடும். அத்தோடு, வெற்றிச் சேவலுக்கு உரியவரிடம் தோற்ற சேவல் ஒப்படைக்கப்பட்டு விடும். அதை அதே இடத்திலேயே கழுத்தை அறுத்து, வளர்த்து பயிற்சி கொடுத்தவரே வெற்றி பெற்றவரிடம் ஒப்படைத்து விடுவார். இது சில சில இடங்களில் மாறுபடும். தோல்வியை மட்டும் ஒப்புக் கொண்டு விட்டு வளர்த்த சேவலுக்கும் ஒரு விலை கொடுத்து, அதை அறுக்காமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள்... ஆனால், ஒரு முறை தோற்ற சேவலை மீண்டும் சண்டையில் பயன்படுத்த மாட்டார்கள்.

சென்னை சேவல் சந்தை

பெரும்பாலான சண்டைச் சேவல்கள் புகழ்பெற்ற சென்னை பல்லாவரம் சந்தையிலும், சென்னை பிராட்வே மாசிலாஞ்சாவடி சந்தையிலும் ஓப்பனாகவும், ரகசியமாகவும் ஏலத்திற்கு வருகின்றன.வெள்ளைக் கொண்டை வெள்ளை சேவல், கத்திவெட்டு சேவல், முள்ளு சேவல் போன்ற ரகங்கள் வடமாவட்ட மக்களின் வளர்ப்பில் பிரசித்தம். ஆந்திராவிலோ, நெமிலி, டேக்கா, காக்கி (காக்கிநாடா பூர்வீகம்), பெனாலி போன்றவைகள் பிரசித்தம்.

பொதுவாக ஆந்திரத்து சண்டை சேவல்கள் உருவத்தில், எடையில் பெரிதானவை. தமிழகத்து சேவல்கள் ஆந்திர சேவல்களை விட உயரமானவை, எடை குறைவானவை. அதே நேரத்தில் பயிற்சியாளர் சொல்லிக் கொடுப்பதை துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு அப்படியே களத்தில் குதித்து சண்டை போடும் திறனில் தமிழ்நாட்டு சேவல்கள் டாப். இதனால், ஆந்திராவில் நடத்தப் படுகின்ற  சேவல் சண்டையில் தமிழ்நாட்டு சேவல்களின் வருகையை பெரிதும் எதிர்பார்ப்பது வழக்கம்.

சேவலுக்கு தீனி

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவைகளை நன்றாக அரைத்து உள்ளுக்கு கொடுத்து அந்த உணவு செரிமானம் ஆகும் அளவுக்கு   பயிற்சியும் கொடுத்து அதன்பின் சேவல்களுக்கு வாத்தியார் எனப்படுகிற எக்ஸ்பர்ட் மூலமாக நீச்சல் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.   பொங்கல், தீபாவளி, ஆங்கிலப் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களை பிரித்து ஆண்டு தோறும் பத்து முறையாவது சேவல் சண்டை நடத்தப்பட்டு விடுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே போட்டிக் களத்தில் நிற்கும்  இத்தகு சண்டை சேவல்களின் ஆரம்பகட்ட விலை 50 ஆயிரம் ரூபாய். 5 லட்சம் வரை ஏலம் போகிற சேவல்களும் இதில் உண்டு.
ஹூம்... சேவல் சண்டைக்கு ஒரு வசதி இருக்கு. அது சைசுக்கு மறைச்சுக் கொண்டு போயி சண்டையில விட்டுட்டு நடக்கவே இல்லையேன்னு சொல்லிடலாம்... காளைகளை எங்கே கொண்டு போய் மறைக்கிறது... இதிலும் தமிழன் அவுட்டுதானா ?

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ