Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வருமா?

ந்த ஆண்டு  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக, மத்திய அரசு ஜனவரி 7-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில், மிருக வதை தடை அமைப்பான 'பீட்டா' முயற்சிகள் எடுக்க, உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு மீதான தன் தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

'''உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருப்பது இடைக்காலத் தடை என்பதால்.. மத்திய அரசு இந்த விஷயத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது. ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியும். அப்படி ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் அதை நாங்கள் ஆதரிப்போம்'  என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிஜேபி அரசின் நிலையை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

'ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த பொதுமக்கள் தயாராகத் துவங்கி விட்டார்கள். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதனால், உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஜனவரி 12-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்குப் பதில் சொல்வதைப்போலவே நிர்மலா சீதாராமனின் கருத்து அமைந்திருந்தது. நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல, இந்த விஷயத்தில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முடியுமா?

 2014-ம் ஆண்டு இந்த விஷயம் தொடபாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சற்று பார்ப்போம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் சொல்லப்பட்ட வாதங்களைக் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்  மிருக வதை தடுப்புச் சட்டத்தின் (1960) மூன்று பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, தனது தீர்ப்பை வழங்கியது. கலாசாரம், பாரம்பரியம் என்பதற்காக எல்லாம் காளைகள் கொடுமைப்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது என்று அதில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய அந்த மூன்று பிரிவுகள் இதுதான்:
 
1) மிருக வதை தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு: மிருகங்களை தனது பாதுகாப்பில் வைத்திருக்கும் எந்த ஒரு நபருக்கும், தனது பாதுகாப்பில் இருக்கும் எந்த மிருகங்களையும் யாரும் சித்திரவதை செய்யப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது.

2)  மிருக வதை தடுப்புச் சட்டம் 11-வது பிரிவு: மிருகங்களை எவரேனும் அடித்தாலோ, அதன் மீது ஏறினாலோ, வேகமாகத் துரத்தினாலோ, அதிக பாரம் ஏற்றினாலோ  சித்திரவதை செய்தல் என்று  அர்த்தமாகும்.

3)  மிருக வதை தடுப்புச் சட்டத்தின் 22-வது பிரிவு: மிருகங்களைக் காட்சிப்படுத்துதலைக் கட்டுப்படுத்துதல்: இந்தப் பிரிவில் சுட்டிக்காட்டியிருப்பதன்படி பதிவு செய்திருந்தாலே ஒழிய எவர் ஒருவரும்  மிருகங்களைக் காட்சிபடுத்தவோ, அதற்குப் பயிற்சிகள் கொடுத்து  வித்தைகள் காட்டவோ கூடாது.

'இந்த நிலையில் ஜனவரி 7-ம் தேதி  அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, மிருக வதைச் சட்டத்தின் 22-வது பிரிவை மட்டுமே கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அது இந்தச் சட்டத்தின் மற்ற இரண்டு பிரிவுகளை, அதாவது பிரிவு 3 மற்றும் 11-வது சட்டப்பிரிவுகளைக் கவனத்தில் கொள்ளவில்லை.'  என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கே.எம்.விஜயன். "ஆக, மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் இவர்கள் இருவராலும் இதில் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால், இந்தச் சட்டத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வது ஒன்றுதான் வழி" என்கிறார் விஜயன்.

இந்த சப்ஜெக்ட் பொதுப்பட்டியலில் இருப்பதால், மாநில அரசு இது தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றுவதற்கு முன்னரும் பின்னரும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவேண்டியது அவசியம் என்பதும் விஜயனின் கருத்து.    

இந்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான மோகன் பராசுரன், நிர்மலா சீதாராமனின் கருத்துகளை  ஒட்டி சில கேள்விகளை எழுப்பினார்.' ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு இது குறித்து அவசரச் சட்டம் இயற்ற முடியாது. ஆனால் மாநில அரசு இயற்ற முடியும்' என்கிறார் 'நிர்மலா சீதாராமன். அவர் சொல்வதைப்போலவே மாநில அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றினாலும், அதற்கு ஜனாதிபதி எப்படி ஒப்புதல் கொடுப்பார்? இது நீதிமன்றத்தில் உள்ள வழக்கு என்பது அவருக்குத் தெரியாதா?' இதை எல்லாம் தாண்டி ஒரு வேளை அவசரச் சட்டம் இயற்றப்பட்டாலும், நீதிமன்றம் அத்தகைய அவசரச் சட்டத்தை ரத்து செய்ய முடியும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அரசுக்கு அது மிகப் பெரிய தர்மசங்கடமாக இருக்கும்" என்கிறார் அவர்.

 ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு உச்ச நீதிமன்ற வக்கீல், 'வார்த்தைகளை மிக கவனமாக கையாண்டால் மாநில அரசு அவசரச் சட்டத்தை இயற்ற முடியும்' என்கிறார்.

'சட்டச் சிக்கல்கள் இருப்பதால்  ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்று எங்களுக்கு முன்னரே தெரியும். இருந்தாலும் பொதுமக்களிடையே இதற்கு மிகப் பெரிய ஆதரவு இருந்ததால்  சில முயற்சிகளை செய்தோம்' என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிஜேபி தலைவர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்தார்.

மிருக வதை தடுப்பு அமைப்பான ‘பீட்டா’வின்  தலையீட்டின் அடிப்படையிலேயே  உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அறிவிக்கைக்கு இப்போது இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த அமைப்பின்  நிறுவனரே, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகிக்கும் மேனகா காந்திதான். ஜனவரி 7-ம் தேதியிட்ட அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்னரே இது பற்றி அவருக்குக் கூறப்பட்டதுடன்... 'மவுனமாக இருக்கும்படியும்' அவர் அறிவுறுத்தப்பட்டார். இருந்தாலும், இந்த அறிவிக்கை வெளிவந்த பிறகு 'பீட்டா' அமைப்பு நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவும் வாங்கியிருக்கிறது.

பிராணிகள் நல வாரியத்தில் உயர் பதவியில் இருக்கும் பலரும் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு வழிவகை செய்த அறிக்கையைப் பார்த்ததும் பொங்கி எழுந்திருக்கிறார்கள். 'அரசின் இந்த முடிவு உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள்' என்று மத்திய அரசின் துணைச் செயலாளர் ஒருவர் இவ்வாரிய அதிகாரிகளை அடக்கினார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. 

ஜல்லிக்கட்டை நடத்தச் சொல்லி மதுரையில் சுற்றியிருக்கும் பல ஊர்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஆனால் நீதிமன்றத்தைப் பகைத்துக் கொள்ளும் மனநிலையில் ஆளும் பிஜேபி இல்லை. அதனால்தான் அது பொறுப்பை, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசிடம் விட்டுவிட்டது. தேர்தல் நெருங்குவதால்...வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜெயலலிதா நீதிமன்றத்தைப் பகைத்துக் கொள்வாரா?

தமிழாக்கம்

- ஆரோக்கிய வேல்
    

எடிட்டர் சாய்ஸ்

MUST READ