Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்றோர்களே... சான்றோர்களே... தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்!

தோ ஒரு சாதியை பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டு,  தன்னையும் “தங்கள் ஆட்களையும்” தவிர மற்ற அனைவருமே தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடனேயே வலம் வந்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

’தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்’ என்ற தலைப்பு உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். மன்னிக்கவும். இது எனது சொந்த கருத்தல்ல. இரண்டு முறை JRF தேர்ச்சி பெற்று அறிவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஒரு ஆய்வு மாணவரின் கருத்து. கார்ல் சாகனை போல அறிவியல் எழுத்தாளராக விரும்பிய ஒரு கற்பனையாளனின் கருத்து. நட்சத்திரங்களையும் இயற்கையையும் உயிருள்ளவை என விரும்பி நேசித்த ஒரு இயற்கையாளனின் கருத்து. தையல் வேலை செய்து தன்னை காப்பாற்றி வந்த தாயின் துயர் துடைக்கவும்,  தன சகோதரனை காப்பாற்றவும் கூடுதல் நேரம் உழைத்து படித்து முன்னேற துடித்த ஒரு வீரனின் கருத்து. இப்போது கூறப்போவது உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கலாம். இது ஒரு தலித் மாணவனின் கருத்து. ஆம். ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துக் கொண்ட தலித் மாணவரின் வார்த்தைகள் இவை...

 


ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்த மாணவர் ஒருவர்,  ஞாயிற்றுக்கிழமையன்று விடுதி அறையில், அம்பேத்கர் அமைப்புக் கொடியில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் பெயரை நான் இங்கு குறிப்பிடாததற்கு ஒரு காரணம் உண்டு. உங்களுக்கு பெயரா முக்கியம்? என்ன குலம், கோத்திரம், சாதி, மதம் என்பது மட்டுமல்லவா முக்கியம். அதனால் இங்கு, இறந்தது ஒரு தலித் மாணவர் என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

சாதிக் கொடுமை என்றால் ஏதோ கிராமப்புறங்களில் நிலவிய/ நிலவும் தீண்டாமை மட்டும்தான் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், மன்னிக்கவும். நவீனம், நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு அன்றாடம் நாம் மேம்படுத்திக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பல்கலைகழங்கள் என அனைத்து இடங்களிலும் சாதி தன் வேர்களை படர்ந்து விரிந்து உயிர்கொல்லியாக மாறி வருகிறது என்பதே நிதர்சனம். சாதி இன்றும் எங்கும் இருக்கிறது. யாரிடம் நட்பாக பேசுகிறோம் என்பது தொடங்கி,  யாரைத் திருமணம் செய்ய தூண்டப்படுகிறோம் என்பது வரை அனைத்தையும் மறைமுகமாக இயக்கும் இந்த சாதிய விசை ஒரு உயிரைக் குடித்து விட்டது.

பல்கலைகழகத்திற்குள்ளேயே மாணவர் அமைப்புகளும் சாதி, அரசியல் கட்சிகள் போல செயல்படுவது புதிதல்ல. ஹைதராபாத் பல்கலைகழகத்திலும் ஒவ்வொரு சாதிக்கும், அரசியல் கட்சிக்கும் தொடர்புடைய எண்ணற்ற அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் மாணவர் இயக்கத்தை எதிர்த்த  அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ABVP) அமைப்பினர், பல்கலைக்கழகத்திற்கு வெளியே RSS அமைப்பின் ஆதரவைப் பெற்றவர்களாம். பட்டமளிப்பு விழாவிற்கு அங்கவஸ்திரம் மற்றும் காவித் துணி அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி. அதுவும் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே வாங்கியிருக்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் மனம் போல சட்டங்கள் கொண்டு வர சர்ச்சைகள் வெடித்துள்ளது.

தங்கள் முகநூல் பக்கங்களில், அம்பேத்கர் அமைப்பைச் சேர்ந்த தலித் மாணவர்களை பற்றி அவதூறு பரப்பியதாகத் தெரிகிறது. அது உண்டாக்கிய பிரச்னைகளே பின்னர் பூதாகரமாக வெடித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு,  கடந்த மாதம் விடுதியில் இருந்து ஐந்து தலித் மாணவர்கள் விடுதியில் இருந்து  நீக்கப்பட்டுள்ளனர். நூலகம், உணவுக்கூடம், விடுதி என எங்கேயும் நடமாட அனுமதி மறுக்கப்பட்டு,  கடந்த பத்து நாட்களுக்கு மேலாக  வெளியிருப்பு போராட்டம் மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் ஒருவரே இறந்து போன ரோஹித்தும். பல்கலைகழகத்திலிருந்து இவருக்கு வரவேண்டிய ஏழு மாத உதவி தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. இவர் டிசம்பர் மாதம் துணை வேந்தருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில்,  'தலித் மாணவர்களை பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கும்போதே, தூக்கில் தொங்க கயிறையும் கொடுத்து விடுங்களேன்'  என எழுதியுள்ளார்.


இவ்வாறு தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது புதிதல்ல. 2008 பிப்ரவரி மாதம், இதே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மாரடைப்பால் இறந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அது இயற்கை மரணம் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது. காரணங்களை ஆராய்ந்த போது,  ஆராய்ச்சி துறையில் இருந்த ஆசிரியர்கள் அனைவரும் உயர்சாதியை சேர்ந்தவர்கள்.  ஆதலால் தலித் மாணவர்களுக்கு வழிகாட்ட ஒப்புக்கொள்ளவில்லை எனவும், இதனால் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு பாடத்தில் தேர்ச்சிபெறாமல் போகவே, மனம் உடைந்து செந்தில் தற்கொலை செய்து  கொண்டார் என்றும் கூறப்பட்டது.


சில நாட்களுக்கு முன் ஒரு தேசிய நாளிதழில் வெளிவந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில்,  ஆரம்பக் கல்வி கூட கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளில் 49 சதவீதம் தலித் குழந்தைகளும், பழங்குடி இனக் குழந்தைகள்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறிலிருந்து பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளில், 60 லட்சம் பேர் பள்ளிக்கு சென்று கல்வி பெற முடியாமல் இருப்பதாகவும், அதில் பாதி தலித் மற்றும் பழங்குடியினர் எனவும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புற பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு தனி இடம், தனி அணுகுமுறை என சத்தமில்லாமல் நடக்கும் வன்முறையை கண்டும் காணாமல்தானே இருக்கிறோம்? மற்ற எந்தப் பிரிவினரை ஒப்பிடும்போதும், தலித் மாணவர்கள்தான் அதிகளவில் பள்ளியில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். இதையெல்லாம் மீறி படிக்க நேர்ந்தால் பல்கலைகழகங்களில் சாதிப் பெயரில் நடப்பது உச்சக்கட்ட உக்ரம். இதைப் பற்றியெல்லாம் கூட அறிந்துகொள்ளாமல், இட ஒதுக்கீட்டை பற்றின அடிப்படை புரிதல் கூட இல்லாமல், பலரும் மனம் போன போக்கில் இடஒதுக்கீட்டை விமர்சிக்கிறோம்.

கால மாற்றத்துக்கேற்ப இடஒதுகீட்டில் சில சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்தான். இன வெறியிலும், கீழ்த்தனமான சாதிய வெறியிலும் மூழ்கி ஆட்சிபுரியும் அரசியல் கட்சிகள்,  இதற்கு முன்வரப்போகின்றவா? கல்வி தரும் பல்கலைகழகங்களில் கூட உயிர்த்தெழுந்து உயிரைக்குடிக்கும் சாதிய வன்முறையை வேரறுக்க, நாம் என்னதான் செய்ய போகிறோம்? அதற்கெல்லாம் முன்,

“என்னுடைய பிறப்பு ஒரு மோசமான விபத்து
என்னுடைய குழந்தைப் பருவ தனிமையிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை”

என்று எழுதி வைத்துவிட்டு,  தன் உயிரை மாய்த்துக் கொண்ட என் சகோதரனின் சாவிற்கு என்ன பதில் தரவிருக்கிறது இந்த சமுதாயம்? ஏதோ அமீர்கானின் சகிப்பின்மை குறித்த சர்ச்சையை போல ஒரு பட்டிமன்றமாக இதையும் நடத்திவிட்டு போகத்தானே காத்திருக்கிறது? பல போராளிகளின் இழப்புகளை மறந்தது போலவே இதையும் மறந்து விட்டு கடக்கதானே போகிறது?

இல்லையேல் “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என சமுதாய பொறுப்புணர்வே இல்லாமல் பாட்டு பாடிக் கொண்டு இருக்கபோகிறோமா?

சகோதரனே, நீ  நிழல்களிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி சென்றுவிட்டாய். அங்கேனும் உனக்குரிய மதிப்பும் அங்கீகாரமும் கேட்காமலே கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்!

-கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ