Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளக்ஸ் பேனரில் இது புதுசு... அதிமுகவினரின் அடேங்கப்பா 'டெக்னிக்'!

லைநகர் சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்ட நகரங்கள், கிராமங்களின் சாலைகள் என்று எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் பேனர்கள், வாழ்த்துப் பதாகைகள், ஆளுயர கட் அவுட்டுகள் இல்லாத நிகழ்வுகளோ, பொதுக் கூட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம்.

அதிலும் திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்கள், குழந்தைகள் பிறந்தநாள், மஞ்சள் நீராட்டு விழா என்று குடும்ப நிகழ்வுகளுக்குக் கூட பேனர்கள், பிளக்ஸ் தட்டிகள் அத்தியாவசியம் ஆகியுள்ள காலம் இது.

இந்த பேனர் கலாச்சாரம் அரசியல் கட்சிகளும், சினிமா ரசிகர்களும் கொண்டு வந்தவை என்றாலும் கிராமங்கள் வரை ஊடுருவியுள்ளது.  அடிக்கடி போக்குவரத்து நெரிசல், இருதரப்பு மோதல், விபத்துக்கள் நிகழ இந்த பேனர் கலாச்சாரம் அடிப்படை காரணமாக இருக்கின்றன என்பது யதார்த்தம். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம்  என்று முக்கிய கட்சிகள்,  தங்களின் தலைவர் பிறந்த நாள், பொதுக்குழு செயற்குழு என்று வாராவாரம் நடக்கும் நிகழ்வுகளுக்கு  பேனர், பிளக்ஸ் வைத்து பொதுமக்களை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். 

பொதுமக்கள் நடமாடும் சாலைகள்,  நடைபாதைகள், டிராஃபிக் சிக்னல்கள், பள்ளிக் கல்லூரி காம்பவுண்ட் ஓரங்கள், மெட்ரோ ரயில்  பில்லர்கள், மேம்பாலச் சுவர்கள் என்று எங்கு காணினும் பேனர்கள், வாழ்த்துப் பதாகைகள், பிரமாண்ட கட் அவுட்டுகள் என்று வைத்து நிரப்பி விடுவார்கள். அவர்கள் குறிப்பிடும் தலைவரின் நிகழ்ச்சிகள் நடக்கும்  3 நாட்களுக்கு முன்பும், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு 3 நாட்களுக்கும் ஆக ஏறத்தாழ ஒரு வாரம் சென்னை வாசிகளுக்கு பேனர் வாசம்தான்.

அதிலும் ஆளும் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கடந்த டிசம்பர் மாதம் 31-ம்  தேதி திருவான்மியூரில் நடைபெற்றது. அந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பாகவே முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் இருக்கும் போயஸ் தோட்டம்  தொடங்கி, ராதாகிருஷ்ணன் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், டைடல் பார்க்  சாலை, திருவான்மியூர் வரை மொத்தம் 12 கிலோமீட்டர் தூரம்,  சாலையின் இரண்டுபுறமும் பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு வளையங்கள், கொடிகள், வாழைமரங்கள் என்று அமைத்து 'அமர்க்களப்படுத்தியிருந்தனர்'.

வட்டம், கவுன்சிலர், மாவட்டம், எம்.எல்.ஏ, அமைச்சர், எம்.பிக்கள் என்று அதிமுக முக்கிய பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதாவை  வரவேற்றும், போற்றியும் வைத்த வானளாவிய பேனர்கள், 5 நாட்களாக பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. போயஸ் கார்டன் தொடங்கி திருவான்மியூர் வரை,  நடைபாதைகள் ஆங்காங்கே பேனர்களால்  வழிமறிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து பேனர்களிலும் முதல்வர் ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருந்தார். பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் எப்போது அதிமுக பேனர்கள் தலையில் விழுமோ என்று பயந்துகொண்டே சாலைகளில் ஊர்ந்து சென்றனர்.

இந்த பேனர் அட்டகாசங்கள் வீடியோவாக பதியப்பட்டு உச்சநீதிமன்றம் வரை புகாராகக் கொண்டு செல்லப்பட்டது தனிக்கதை. சில இடங்களில், தன்னார்வ அமைப்பினர் பேனர்களை அகற்ற முயன்றனர். அவர்களை அதிமுக தொண்டர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுத்தனர். அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல  முன்னாள் ஆளும் கட்சியான திமுகவும் அதிமுக பேனர் கலாச்சாரத்திற்கு கொஞ்சமும் சளைத்த கட்சியல்ல.

அதனை அவ்வப்போது நிரூபிக்கவும் தயங்காது. திமுக நிகழ்ச்சி, கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பிறந்தநாள் என்றால் அறிவாலயம் உள்ள அண்ணாசாலை முழுக்க கருப்பு சிவப்பு கொடிகளும், கருணாநிதி ஸ்டாலின் சிரிக்கும் பேனர்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும். அந்த சமயங்களில் பொதுமக்கள் பாடு திண்டாட்டம்தான். இது வழக்கமாகவே நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுந்தாலும்,  முடிவாக மீண்டும் இன்னொரு கட்சி பேனர் வைத்து  பழியை தட்டிச் சென்றுவிடுகின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டே திமுக தலைமை கடந்த 17 ம் தேதி,  வெளியிட்ட அறிக்கையில்,  " நம்முடைய கழகத்திலே உள்ள சிலர்,  தங்கள் தங்கள் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம்  பெருத்த வெறுப்பைத்தான் ஒட்டு மொத்தக் கழகத்திற்கும் உண்டாக்கி விடும். அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய  உருவப் படங்களைத்  தவிர வேறு யாருடைய உருவப் படங்களையும்;   கழக நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும் போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது.ஆனால் அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அது போல  விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால்,  பொதுமக்களும்,  பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க. வோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.  "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும்" என்ற பழமொழியை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே அத்தகைய போக்கினை கழகத்தினர்  உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 பிளக்ஸ் பேனர் மேனியா அரசியல் இயக்கங்களை எந்த அளவிற்கு பிடித்து ஆட்டுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  அதிமுக, திமுக போலவே மற்ற பல கட்சிகளும் பேனர்கள் மூலம் பொதுமக்களுக்கு தரும் தொல்லைகள் தொடர்கதையாகவே உள்ளன. பொது இடங்களில், சாலைகளில், நடைபாதைகளில் இது போல பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க தடைகள், விதிமுறைகள் இருந்தாலும் அவை எல்லாம் ஏட்டளவில் மட்டும்தான்; நடைமுறையில் கிடையாது. இதில் அதிமுகவினர் ஒருபடி முன்னே சென்று, பேனர்கள் பிரச்னைக்கு ஒரு நூதன தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அமைக்கப்பட்ட பேனர்களை கட் செய்து எடுத்துவிட்டு, பேனர்களை தாங்கிய மர சட்டங்களை அப்படியே அதே இடத்தில் வைத்துள்ளார்கள்.

கடந்த 20 நாட்களாக அதிமுக செயற்குழு,  பொதுக்குழு, புத்தாண்டு, எம்.ஜி.ஆர்.பிறந்த நாள், பொங்கல் விழா, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருகை, அதிமுக அலுவலகங்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறப்பு என்று  பல்வேறு  நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடந்து வருகின்றன. இதனால் போயஸ் கார்டன், ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை சாலை என்று முதல்வர் வாகனம் செல்லும்  பகுதிகளில் தினமும் பிளக்ஸ் பேனர்கள்  வைப்பதில் சிக்கல் இருக்கிறது என்று 'உணர்ந்த' அதிமுகவினர் பேனரை மட்டும் மாற்றிவிட்டு , மரச்சட்டங்களை அப்படியே வைத்து நூதன முறையில் பிளக்ஸ் பேனர் அமைத்து வருகின்றனர்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளும் அக்கட்சியின் மீது அதிருப்தியும் நிலவுகிறது. ஆனால் தொண்டர்கள்  பேனர் வைப்பதை மட்டுமே தங்களது குறிக்கோளாக வைத்துள்ளனர். இதனை தலைமையும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை  தொடர்ந்தால் பேனரில்லா கட்சிக்கே எங்கள் ஓட்டு என்று பொதுமக்கள் கூறும் நிலை வரும்.

அரசியல் கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.     

 

- தேவராஜன்

படங்கள்: சு.குமரேசன், மீ.நிவேதன்
         

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close