Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால் சென்டர்: 'கூப்பிட்ட குரலுக்கு உதவலையே அம்மா!'

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைவதற்காக 'அம்மா அழைப்பு மையம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த மையத்தில், 1100 என்ற தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் தங்களது குறைகளை வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இலவசமாக தெரிவிக்கலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகளை கேட்டு அறிவதற்காக 138 அழைப்பு ஏற்பாளர்கள் இந்த மையத்தில் உள்ளனர்.

முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி வழியாக தெரிவிக்கப்பட்டு, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கும் பொது மக்களின் பெயர் விவரங்கள், குறைகள் பற்றிய தகவல் ஆகியவையும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, புகார் தெரிவித்தவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் அனுப்பப்படுகிறது.

முதல் நாளான நேற்று,  அம்மா அழைப்பு மைய எண் நம்பரான 1100-க்கு பலர் போன் செய்து, தங்களது குறைகளை தெரிவித்தனர். ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் போன் செய்து பல்வேறு விதமான தங்களது பிரச்னைகளை எடுத்துக் கூறினார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான போன் அழைப்புகள் வந்துள்ளன. அதில் வெள்ள நிவாரண தொகை கிடைக்கவில்லை என்றே புகார்களே அதிகம் வந்துள்ளன.

அம்மா அழைப்பு மையத்தின் இலவச எண்ணை பலர் தொடர்பு கொண்ட போது 'ஆன் லைன்ஸ் இன் திஸ் ரூட்ஸ் ஆர் பிஸி' என்றே பதில் வருகிறது.

இதுகுறித்து வணிக வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "வணிகவரித்துறை ஊழியர்கள், சீனியாரிட்டி குளறுபடி, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக, அம்மா அழைப்பு மையத்துக்கு 10 ஆயிரம் புகார்களை தெரிவிப்போம் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் அந்த துறை ஊழியர்கள் யாருமே அம்மா அழைப்பு மையத்தை போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் இருந்த வணிகவரித்துறை ஊழியர்கள் அம்மா அழைப்பு மையத்தை கஜினி முகமது போல தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். யாருக்காவது இணைப்பு கிடைத்தால் அங்கிருந்து அனுப்பப்படும் குறுச்செய்தியை (எஸ்.எம்.எஸ்) உடனடியாக நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அம்மா அழைப்பு மைய வட்டாரத்தில் கேட்ட போது, "ஒரே நேரத்தில் பலர் தொடர்பு கொள்வதால் இந்த பிரச்னை இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம்" என்றனர்.

காலை முதல் மாலை வரை இந்த எண்ணில் தொடர்பு கொண்டோம். அப்போதும், 'தாங்கள் டயல் செய்த எண் தற்சமயம் பிசியாக உள்ளதால் சிறிது நேரத்திற்கு பிறகு டயல் செய்யவும்' என்றே பதில் வருகிறது.


-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ