Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோஹித் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? - மருதன்

புழுதியில் இருந்து நட்சத்திரத்துக்குத் தாவிச் சென்றுவிட்டார் ரோஹித் வெமுலா. எஞ்சியிருந்த அவர் உடல் ஒரு போராட்டக் குறியீடாக மாறிவிடுமோ எனும் அச்சத்தில் காவல் துறையினர் அதனைப் பாய்ந்து கைப்பற்றி, ரகசியமாக எரியூட்டி முடித்துவிட்டனர். 'என் நண்பர்கள், எதிரிகள் இருவரையும் தொந்தரவு செய்யவேண்டாம்; நான் எடுத்த முடிவுக்கு நானே காரணம்' என்று முறைப்படி எழுதி வைத்துவிட்டு விடைபெற்றுக்கொண்ட ரோஹித்தை இந்தச் சமூகம் முறைப்படி விடைகொடுத்து அனுப்பவில்லை.அறிவியலின் எல்லைகளை நீட்டித்துப் பார்க்கத் துடித்த அமெரிக்க எழுத்தாளர் கார்ல் சாகனைப் போல் ஆக விரும்பியிருக்கிறார் ரோஹித். பிரபஞ்சத்தில் நாம் ஒரு துளி மட்டுமே. கண நேரத்தில் மறைந்துவிடக்கூடியது நம் வாழ்க்கை. நீண்டு, நிலைத்து இங்கே தங்கியிருக்கவேண்டுமானால்  நம்முடைய மோசமான உள்ளுணர்வுகளையும் பழங்கால வெறுப்புகளையும் நாம் வென்று, கடந்து சென்றாகவேண்டும் என்பது கார்ல் சாகனின் பார்வை. அறிவியலை நேசித்த அதே சமயம், கடவுளின்மீதும் ஒரு கண் வைத்திருந்தார் கார்ல் சாகன். கடவுள் இல்லை என்று உறுதியாக நிராகரிப்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் அவர். இந்து மதத்தின்மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பு இருந்திருக்கிறது. ஆனால் வெறுமனே நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து கடவுளை அவரால் ஏற்கமுடியவில்லை. நம்புவதைவிட அறிந்துகொள்வதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.

ரோஹித்தின் விருப்பமும் அதுவேதான். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி மாணவராக அவர் இணைந்தபோது அவருடைய கனவுகள் கிளை பரப்பி விரிவடைந்திருக்கவேண்டும். பல்கலைக்கழகத்தின் கதவுகளைக் கடந்து விரிந்திருக்கும் சமூகத்தையும் அதன் நிகழ்வுகளையும்கூட ஆர்வத்துடன் அறிந்துகொள்ள விரும்பியிருக்கிறார் ரோஹித். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் என்று அவர் வாசிப்பு விரிவடைந்தபோது சமூகத்தில் தென்பட்ட சாதிய, வர்க்க பிளவுகளையும் அவற்றின் அடிப்படைகளையும் அவர் அறிந்துகொள்ள நேர்ந்தது. இந்தப் புரிதல் தவிர்க்கவியலாதபடி அவரை ஒரு கலகக்காரராக மாற்றியமைத்தது.இதுவரை கிடைத்துள்ள செய்திக் குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால், ரோஹித் ஏழைமையான பின்னணியில் இருந்து படிப்படியாக முன்னேறி உயர்ந்திருக்கிறார். அவர் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் தன்னளவில் அவர் தலித் அரசியலை வரித்துக்கொண்டு அதனை ஆதரித்து நின்றதால் அவரையும் அவ்வாறே அடையாளப்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். தையல் கூலிப் பணத்தைக் கொண்டு அவர் அம்மா அவரைப் படிக்க வைத்திருக்கிறார். மார்க்சியத்தால் கவரப்பட்டு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து, ஒரு கட்டத்தில் விலகி
அம்பேத்கர் மாணவர் கூட்டணியில் (ஏஎஸ்ஏ) சேர்ந்திருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டபோது எதிர்க்குரல் எழுப்பியிருக்கிறார். இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்தும் ஓர் இந்தி படத்தை (முசஃபர்நகர் அபி பாக்கி ஹை) ஆதரித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மாட்டிறைச்சி விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

அதே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர்கள் ரோஹித்தையும் அவர் நண்பர்களையும் வெறுக்க ஆரம்பித்ததில் வியப்பில்லை. ரோஹித் போன்றவர்களால் வளாகத்துக்குள் வன்முறை புகுந்துவிட்டது என்று கூச்சலிட்டார்கள். ’எங்கள் மாணவர் தலைவரைத் தாக்கிவிட்டார்’ என்று புகார் செய்தார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்திவைக்கப்பட்டது. விடுதியில் இருந்தும் அவர்கள் விரட்டப்பட்டனர். ரோஹித் தன் நண்பரிடம் இருந்து கடன் வாங்கி வாழ்வை ஓட்டவேண்டியிருந்தது.

உடனே தற்கொலையை நாடிவிடவில்லை ரோஹித். பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆதிக்க, பிற்போக்கு ஏபிவிபி அமைப்பையும், அந்த அமைப்புக்குச் சாதகமாக இயங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் எதிர்த்து இயன்றவரை போராடியிருக்கிறார். கனவிலிருந்து போராட்டத்துக்குத் தாவ முடிந்த அவரால் நீண்டகாலம் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. ஒரு சில தனி நபர்களுக்கு எதிரான போராட்டமாக அது இருந்திருந்தால் அநேகமாக ரோஹித் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அவர் போராட வேண்டியிருந்தது, நூற்றாண்டுகளைக் கடந்து இறுகி கெட்டிப்பட்டுப் போயிருக்கும் இந்து சாதி அமைப்பு முறையை எதிர்த்து என்பதால் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். 

அந்த வகையில், ரோஹித்தின் தற்கொலையை நீண்ட போராட்ட வரலாற்றின் ஓர் அத்தியாயமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் தற்கொலையைப் பற்றிய ஓர் அடிப்படை புரிதல் அவசியம்.

தற்கொலை : சமூகத்தின் பங்கு என்ன?

நான்கு காரணங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்கிறார் பிரெஞ்சு சமூகவியலாளர் எமில் டேர்க்கேம்.

*    என்னால் இந்தச் சமூகத்துடன் இணைய முடியவில்லை, நான் இந்தச் சமூகத்துக்குத் தேவைப்பட மாட்டேன், எனக்கு உதவ யாரும் இல்லை என்று நம்புபவர்கள் முதல் வகையினர்.
 *    என் உயிரை விடவும் என் நோக்கம் உயர்ந்தது, பெரியது என்று கருதி தற்கொலை செய்துகொள்வது இரண்டாவது வகை. மதத்துக்காகவும் நாட்டுக்காகவும் உயிர் நீத்தவர்களையும் தற்கொலைப் பேராளிகளையும் இந்த வகையில் சேர்க்கலாம்.
 *    தன்னைச் சுற்றி நிகழும் மாற்றங்களையும் குழப்பங்களையும் புரிந்துகொள்ள இயலாமல் தத்தளித்து தற்கொலையை நாடுபவர்கள் மூன்றாவது வகையினர்.
 *    இப்படி வாழ்வதைவிட இறப்பதே மேல் என்று கருதுபவர்கள் கடைசி வகையினர். உதாரணத்துக்கு, சிறையில் கிடந்து வாழ்நாள் முழுக்க வாடுவதைவிட நொடியில் இறப்பது வலி குறைந்தது என்று நினைப்பவர்கள்.இந்தக் காரணங்களைக் கவனமாகப் பார்க்கும்போது தற்கொலைக்கான காரணங்களைத் தனி மனிதர்களின் வாழ்வில் மட்டும் தேடவேண்டியதில்லை என்பது புரிகிறது. இது குறித்து முதல்முறையாக ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்ந்து எழுதிய எமில் டேர்க்கேம் ஓர் அடிப்படை உண்மையை வலியுறுத்திச் சொல்கிறார். தற்கொலை என்பது தனிநபர் நிகழ்வல்ல, அது ஒரு சமூக நிகழ்வு. எனவே அதற்கான காரணங்களை சமூகத்திலும் ஆராயவேண்டும்.
   
காதல் தோல்வியால் மடிபவர்கள் தொடங்கி வயிற்றில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வெடித்துச் சிதறுபவர்கள் வரை பலர் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தற்கொலை முடிவை எடுத்துவிடுவதில்லை. கடன் செலுத்தமுடியாமல் பூச்சிமருந்து சாப்பிட்டு இறந்துபோகும் விவசாயிகளின் மரணத்தைத் தற்கொலை என்று எழுதி ஃபைலை மூடிவைத்துவிடமுடியுமா? ஹிட்லரின் நாஜி கரங்களில் இருந்து விடுபட வழியின்றி தன் உயிரை மாய்த்துக்கொண்ட வால்டர் பெஞ்சமின் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் என்று எழுதி வைப்பது அறமாகுமா? இத்தகைய தற்கொலைகளை ஒரு போராட்ட வடிவமாகவும் ஓர் அரசியல் பிரகடனமாகவும் அல்லவா பார்க்கவேண்டும்?

தற்கொலைக்குத் தள்ளிய இந்துத்துவம்!

கார்ல் சாகன் குறிப்பிட்ட பழங்கால வெறுப்புகளை இந்தச் சமூகம் துறந்துவிடவில்லை என்பதற்கு ஒரு கண்முன் உதாரணம் இந்துத்துவம் என்னும் வெறுப்பு அரசியல் சித்தாந்தம். கடைக்கோடி ஏபிவிபி தொடங்கி ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக வரையிலான பிற்போக்கு மதவாத அமைப்பினரை ஒன்றிணைக்கும் தத்துவம் இதுவே. மனிதர்களுக்கு இடையில் பகையையும் பிளவுகளையும் அதிகப்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைவதொன்றே இந்துத்துவத்தின் ஒரே லட்சியம். பாஜக ஆர்எஸ்எஸ் சங் பரிவாரங்கள் கட்டமைக்க துடிக்கும் இந்து ராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமல்ல அடித்தட்டு தலித் மக்களுக்கும்கூட இடமில்லை என்பதை ரோஹித்தின் மரணம் நமக்கு பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

மாட்டிறைச்சி ஆதரவு, ஆதிக்க சாதி எதிர்ப்பு, யாகூப் மேமன் தூக்குத் தண்டனை எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்ததற்காக தேசவிரோதி என்னும் முத்திரை ரோஹித்துக்கு இந்துத்துவர்களால் குத்தப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கோரிய தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ரோஹித் உள்ளிட்ட 5 மாணவர்களை தேசவிரோதிகள் என்றுதான் அழைத்திருக்கிறார். ரோஹித் மட்டுமல்ல, அவர் தன் ஆதர்சமாக வரித்துக்கொண்ட அம்பேத்கரும்கூட தேச விரோதி என்றும் துரோகி என்றும் அவர் காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார்.

1931ம் ஆண்டு நடைபெற்ற அம்பேத்கர் காந்தி சந்திப்பையும் அவர்களுக்கு இடையிலான உரையாடலையும் இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். ’தலித்துகள் இந்துக்களே, அவர்கள் எங்கள் சகோதரர்களே’ என்று இன்று உதட்டளவில் பலர் அறைகூவல் விடுப்பதைப் போல் அன்று காந்தியும் அவருடைய காங்கிரஸ் கட்சியினரும்கூட முணுமுணுத்திருக்கிறார்கள். ஆனால் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு என்பதை அம்பேத்கர் காந்தியிடம் வெளிப்படையாக அறிவித்தார்.

‘காங்கிரஸ் இந்தப் பிரச்னைக்கு ஒரு பெயரளவு அங்கீகாரம் கொடுத்தது என்பதற்கு மேல் இதற்காக எதுவும் செய்யவில்லை... காங்கிரஸ் தன் கொள்கைகள் என்று சொல்லிக் கொள்பவற்றில் மனமார்ந்த ஈடுபாட்டுடன் இருப்பதில்லை. இதில் உண்மையான ஈடுபாடு காங்கிரசுக்கு இருந்திருக்குமானால் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகச் சேருவதற்குக் கதரை அணியவேண்டும் என்பதைக் கட்டாயம் என்று ஆக்கியிருப்பது போல், தீண்டாமை ஒழிப்பையும் ஒரு நிபந்தனையாக அது கட்டாயம் ஏற்படுத்தியிருக்கும்.’

அம்பேத்கர் தொடர்ந்தார்.

‘உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் என் குற்றச்சாட்டு இதுதான். பிரிட்டிஷ் அரசு தன் மனப்போக்கை மாற்றிக்கொள்ளவில்லை மாற்றிக்கொள்ளவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். எங்கள் பிரச்சினையைப் பொறுத்த அளவில் இந்துக்கள் தங்கள் மனப்போக்கினை மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை என்று நானும் கூறுகின்றேன். எவ்வளவு காலத்திற்கு அவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்களோ அந்நாள்வரை நாங்களும் காங்கிரசையோ, இந்துக்களையோ நம்பமாட்டோம். சுயஉதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை. இதைப் பற்றி நான் மிகவும் கடுமையான முறையில் வெளிப்படையாகவே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். விரைவில் மறைந்துபோகும் மாய உருவங்களைப்போல மகாத்மாக்கள் என்பவர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களால் எந்த உயர்வும் ஏற்படுவதில்லை என்பதை வரலாறு கூறுகிறது.’

அம்பேத்கரின் வாழ்கை வரலாற்றை எழுதியுள்ள தனஞ்செய் கீர் கீழ்வரும் உரையாடலையும் பதிவு செய்திருக்கிறார்.

அம்பேத்கர் : காந்திஜி, எனக்குத் தாய்நாடு இல்லை.

காந்தி : (அதிர்ச்சியுற்று அவர் பேச்சை இடைமறித்து) உங்களுக்குத் தாய்நாடு இருக்கிறது...அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு இல்லை என்றே மீண்டும் கூறுவேன். இங்கே நாங்கள் நாய்களைவிட, பூனைகளைவிட இழிவாக நடத்தப்படும்போது இதை என்னுடைய சொந்தத் தாய்நாடு என்று எப்படி நான் அழைக்கமுடியும்? இதை என் சொந்த மதம் என்று எப்படி எண்ணமுடியும்? இங்கே குடிப்பதற்குக்கூட நாங்கள் தண்ணீரைப் பெறமுடியாதே! சுயமரியாதை உணர்வுள்ள எந்தவொரு தீண்டப்படாதவனும் இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்கமுடியாதே? இந்த நாடு எங்கள் மீது எண்ணற்ற அநீதிகளையும் இழிவுகளையும் சுமத்தியுள்ளது. ஆகவே அறிந்தோ அறியாமலோ இந்த நாட்டின் பேரில் விசுவாசம் கொள்ளாத நிலைக்கு நாங்கள் இரையாகிட நேர்ந்தால் அதற்கான பொறுப்பு இந்நாட்டையே சாரும்.

அம்பேத்கர் மீது மட்டுமல்ல அவரை ஆசானாக ஏற்றுக்கொண்ட தலித்துகள் மீதும் இந்த நாடு எண்ணற்ற அநீதிகளையும் இழிவுகளையும் சுமத்தியுள்ளது. என் பிறப்பே எனக்கொரு சாபம் என்று தன் தற்கொலை கடிதத்தில் மிகத் துல்லியமாக ரோஹித் வெமுலா அறிவித்திருந்தது அதனால்தான்.

அன்று காந்தியைக் கொன்ற அதே இந்துத்துவம்தான் அம்பேத்கர் வழிவந்த ரோஹித்தையும் இன்று கொன்றிருக்கிறது. காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வெறுப்பு அரசியல்தான் இன்று ரோஹித்தைத் தூக்கில் மாட்டிக் கொன்றிருக்கிறது. தன் மற்றொரு கையால் அதே இந்துத்துவம் அம்பேத்கரையும் தலித்துகளையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் வஞ்சகமாக முயன்று வருகிறது. இந்த ஆபத்தான முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டியது நம் கடமை.

இன்னும் பல ரோஹித்துகள் உருவாவதைத் தடுக்கவேண்டுமானால் இந்துத்துவத்துக்கு எதிரான பெரும்போரை ரோஹித் விட்ட இடத்திலிருந்து நாம் ஆரம்பித்தாகவேண்டும். தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினர் ஆகியோரோடு பெரும்பான்மை இந்து மக்களும் அணிதிரண்டு இந்துத்துவத்தை முறியடிக்கவேண்டும். ஹிட்லர் யூதர்களுக்கு மட்டுமே எதிரி என்று கருதி அமைதி காத்த பெரும்பான்மை ஜெர்மானியர்கள் பிற்காலத்தில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. அந்த வரலாற்றுப் பிழையை இந்துக்கள் இழைக்கக்கூடாது. வெறுப்பு அரசியல் எந்த வடிவில் வந்தாலும், யாருக்கு எதிராக வந்தாலும் அதை எதிர்த்து வீழ்த்தவேண்டும்.

ரோஹித் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இதைத்தான்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close