Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானின் தங்கமுட்டையிடும் வாத்து தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 19)

தாவூத்திற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு என்ன...? ஏன் பாகிஸ்தான் தாவூத்திற்கு பாதுகாப்பு கொடுக்கிறது? பாகிஸ்தானின் தங்க முட்டையிடும் வாத்தாக தாவூத்தை வைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஒரே ஒரு சம்பவம்தான் தாவூத்தை இன்றளவும் மும்பைக்குள் நுழையவிடாமல் செய்து வருகிறது. அந்த சம்பவத்தை பயன்படுத்தி, பாகிஸ்தான் தாவூத்தை மேலும் முடக்கி வைத்து, தாவூத் மூலம் அவர்களுக்கு தேவையான பல்வேறு காரியங்களை சாதித்து கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை பல்வேறு மேற்க்கத்திய நாடுகள் தாவூத்தை 1990 களுக்கு பிறகு தீவிரமாக  கண்காணிக்க ஆரம்பித்து விட்டனர். 2001  செப்டம்பர்-11 ல் நடந்த அமெரிக்கா தாக்குதலில் 2800 க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். 5000 க்கும் அதிகமான நபர்கள் கை,கால்கள் என்று உடலில் பல்வேறு உறுப்புகளை இழந்து ஊனமாகி நின்றார்கள்.

60 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இறந்து இருந்தார்கள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து கடத்தல்காரர்கள், தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள் என்று அனைத்து நபர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். ஒட்டு மொத்த உலகமும் தீவிரவாத செயல்களுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது வந்தன.

இதனால் தாவூத் உலக நாடுகளுக்கு பறக்க முடியாமல் கூண்டுக் கிளி போல ஒரே இடத்தில் பதுங்க வேண்டிய சூழல் ஆகிவிட்டது. தீவிரவாத சக்திகளை ஒழிக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களை ஒதுக்கினார்கள். ஆனாலும் தீவிரவாதிகள் ‘அனல் காற்று’ போல அவர்கள் விருப்பட்ட இடங்களில்,  அவர்களது வேலையை காட்டி,  மக்களை கொத்துக்கொத்தாக கொலை செய்து, அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றிக்கொண்டு வந்தார்கள்.

மார்ச் 12, 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு நாள். ஹோட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், மார்கெட் என்று மக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகளை கிலோக்கணக்கில் பயன்படுத்தி 13 கார்களில் வைத்து தொடர் குண்டு வெடிப்புகளை வெடித்தனர். தொடர்ச்சியாக வெடித்த குண்டுகளில் மும்பை மாநகரமே ரத்தக்களறியானது. 257 நபர்களின் உடல்கள் வெடித்தது சிதறியது. இறந்துபோன பல்வேறு நபர்களின் முகங்கள் அடையாளம் தெரியாமல், வெகுநாட்கள் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 750 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த ஒரு சம்வத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது.

1992 டிசம்பர் ஆறாம் தேதி,  இந்துத்துவா கும்பல் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து தள்ளியது. அதன் தாக்கம் இந்து-முஸ்லிம் கலவரமாக மாறி நாடு முழுவதும் பெரும் கலவரங்களை உண்டு பண்ணியது. 2000 த்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  இந்தியாவில் இது போன்று ஏதாவது சம்பவம் நடக்காதா என்று காத்திருந்த பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ,  இந்தியாவின் ‘மதசார்பற்ற நாடியை’ பல்ஸ் பார்க்க ஆரம்பித்து. இந்தியாவின் இதயத்தில் குத்துவது என்று தீர்மானம் செய்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய அடிப்படை வாதிகளை இணைத்து,  பல்வேறு இடங்களில் கூட்டம் போட்டது.

'பாபர் மசூதியை இடித்ததை பெருமையாக கருதுவதாக சிவசேனா குரல் கொடுக்கிறது. அவர்களின் குரல் வளையை நெறிக்க வேண்டும். திருப்பி தாக்குவதே இதற்கு ஒரே முடிவு' என்று தீர்மானம் போட்டார்கள். இதற்காக முஸ்லிம் அடிப்படை வாதிகள் துபாய், லண்டன், கராச்சி என்று பல்வேறு இடங்களில் கூட்டம் போட்டு ஒரு முடிவை எடுத்தார்கள். அந்த முடிவுதான் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்.

பாகிஸ்தான் அரசே நேரடியாக தலையிட்டால் சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்கள் வரும் என்பதால்,  இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இருந்து, ஸ்லீப்பர் செல்போல 30  இளைஞர்களை தேர்வு செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் பாபர் மசூதி இடிப்புக்கு பழிதீர்க்கும் சம்பவமாக இருக்க வேண்டும் என்று சொல்லி துபாய், பாகிஸ்தானில் பயற்சி கொடுக்கப்பட்டது.

பாலஸ்தீனிய அமைப்பு, துபாய் அமைப்பு என்று பல்வேறு அமைப்புகள் இவர்களுக்கு  நிதி உதவி அளித்தார்கள். இந்த ஆபரேஷனுக்கு ‘பழி வாங்கும் முகம்’ என்று பெயர் வைத்து,  மும்பையை சேர்ந்த டைகர் மேமன், முகமது டோசா ஆகிய இருவரையும் தேர்வு செய்து ஆபரேஷன் பொறுப்பாளராக நியமித்தனர்.

இந்த சம்பவத்தை செயல்படுத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ பயங்கரமாக வேலை செய்து வந்தது. டைகர் மேமன் ஒரு சர்வதேச கடத்தல்காரன். தாவூத்தை விட அதி பயங்கர செல்வாக்கான நபர். தாவூத்திற்கும் டைகர் மேமனுக்கும் தொழில் போட்டிகள் இருந்து வந்தன. இருந்தாலும் இந்த காரியத்தை,  மும்பையில் தாவூத்தின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்று டைகர் மேமன்,  பாகிஸ்தான் உளவாளிகளிடம் சொல்லியதால், ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்த முக்கிய புள்ளிகள் தாவூத்திடம் பேச்சு வார்தைகள் நடத்தி வந்தனர்.

சோட்டா ராஜன் மகாராஷ்டிரா மாநில இந்து என்பதால், அவனுக்கு தெரிந்தால் அவன் போட்டு கொடுத்து விடுவான் என்று தாவூத்தின் நிழலாக வலம் வந்த அவனை கழட்டி விட்டார்கள். அவனுக்கு பதில் சோட்டா ஷகில் போய் வந்தான். ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள், சந்திப்புகள் நடந்த பிறகு டைகர் மேமனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தாவூத் ஒத்துக்கொண்டான்.

எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்த டைகர் மேமன் 1993 , பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவின்  ராய்காட் துறைமுகம் வழியாக ஒன்பது டன் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகள், குண்டுகள், துப்பாகிகள், தேவையான பொருட்கள் என்று பல்வேறு அபாயகரமான பொருட்களை மும்பைக்குள் கொண்டு வந்தான். கொண்டு வந்த வெடிபொருட்களை 15 இடங்களுக்கு பிரித்துக் கொடுத்தான். அதில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தாவூத்திற்கு சொந்தமான, அவனது கட்டுப்பாட்டில் இருந்த  இடங்கள். அங்கிருந்து 13 வெடிகுண்டுகளை தயார் செய்து அவற்றை கார்களில் நிரப்பி,  மும்பையின் அதிக மக்கள் நடமாடும் இடங்களில் வைத்தார்கள்.

இந்த விஷயங்கள் எல்லாம் தாவூத்திற்கு தெரியாது என்று சோட்டா ராஜன் சொன்னான். இடம் கொடுத்தோம் அவர்களுக்கு, ஆனால் அவர்கள் இது போன்ற படுமோசமான காரியத்திற்கு பயன்படுத்துவது யாருக்கும் தெரியாது என்று அவனுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகளிடம், அவர்களது விளக்கத்தை சொல்லி இருக்கிறான்.   

முதல் வெடிகுண்டு நண்பகலில் ஒரு மணிக்கு மேல், மும்பை பங்கு சந்தை வளாகத்தில் வெடித்தது. அடுத்தடுத்த ஐந்து நிமிடங்களில் பத்து இடங்களில் வெடித்ததால், மும்பை ரத்த வெள்ளத்தில் மிதந்தது. மும்பை விமான நிலையம், மாஹிம் பகுதி என்று ஒரு சில இடங்களில் வெடிக்காத குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. அந்த குண்டுகளும் வெடித்திருந்தால் சேதாரம் இன்னமும் அதிகமாக இருந்து இருக்கும்.

குண்டுகள் வெடிக்கும் ஒரு நாள் முன்பே டைகர் மேமன், அவனுடைய நான்கு சகோதரர்கள், அவர்களின் குடும்பம், அவனின் பெற்றோர் என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தான் சென்று விட்டனர். இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அப்படியே இருந்தன. டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமனின் பைக், மச்சானின் கார் என்று பல்வேறு பொருட்கள் மும்பை தாதர் பகுதியில் தனியாக இருந்ததை பார்த்த போலீசார், அவைகளில்  குண்டுகள் இருக்கும் என்று சோதித்து பார்த்து பிறகுதான் தெரிந்தது டைகர் மேமனின் குடும்ப சொத்துக்கள் என்று.

அவற்றை அவர்கள் வாங்க வராததால்,  சந்தேகம் வலுவடைந்து டைகர் மேமனின் வீட்டிற்கு போன பொழுது அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் இந்தியாவை விட்டு காலியான விபரம் தெரிந்தது.

இந்த சம்பவம் நடந்தபொழுது,  தாவூத் துபாயில் இருந்தான். இந்த குண்டு வெடிப்பின் சேதாரம் படு மோசமாக இருந்ததும், தாவூத் நிலை குலைந்து போனான். அவனுக்கு ஏகப்பட்ட கடிதங்களும், போன் கால்களும் பறந்தன. சொந்த நாட்டை காட்டிகொடுத்த, சொந்த இனத்தினை கருவறுத்த துரோகி, பொதுமக்களை அழித்தொழித்த பாவி என்று பகிரங்க குற்றசாட்டுகள்  நேரடியாகவே அவனது காதுகளுக்கும், கண்களுக்கும் போய் சேர்ந்தது. நிலை குலைந்து போன தாவூத் ஒரு முடிவு எடுத்தான்.

முதல் முறையாக அவன் செய்த செயல் அவனது மனதை கசக்கி நிம்மதியற்றவனாக ஆக்கியது. இந்த செயல்களுக்கு நான் தண்டனையை அனுபவிக்க தயராகிவிட்டேன் என்றும்,  இந்தியாவில் சரணடைய போவதாகவும் தெரிவித்த அவன், அவனுக்கு தெரிந்த மூத்த போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினான்.

அதற்குள் இந்திய அரசு,  துபாயில் இருக்கும் அவனை இந்தியாவில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு நாட்டு அரசிற்கு நெருக்கடியை கொடுத்தது. உலகம் முழுவதும் இருந்து மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பெரும் கண்டனக்குரல் எழுந்ததால், வேறு வழியின்றி துபாயில் இருந்து தாவூத் வெளியேற்றப்பட்டான். இந்தியாவின் கைகளில் சிக்கினால் சுட்டுக்கொலை செய்து விடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. உடனடியாக தாவூத் லண்டனில் இருந்த பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை தொடர்பு கொண்டான். பல்வேறு வாக்குறுதிகளுக்கு பிறகு ராம்ஜெத்மலானி தாவூத்திற்காக ஆஜரானார்.

வழக்கு நடந்து கொண்டு இருக்கும் பொழுதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த எதிர்ப்புகள்தான் இதுவரை தாவூத்தை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்து இருக்கிறது.

என்ன அது ?

- சண்.சரவணக்குமார்    
    

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...      

 

    

  


    

   

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close